பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு பகவானின் அழகிய சிற்பம். இடம் தேசிய அருங்காட்சியகம். இந்தோனேசியா.
Author: Saravanan Thirumoolar
கபால விநாயகர்
மண்டை ஓடுகளின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பகவான் விநாயகரின் 13 ஆம் நூற்றாண்டு சிற்பம். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சிங்கோசரி என்ற இந்து கோயிலில் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது நெதர்லாந்தின் லைடன் வோல்கன்குண்டே அருங்காட்சியகத்தில் உள்ளது.
அதிபதி கணபதி
கபால சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள கணங்களின் அதிபதி கணபதி. இடம் தேசிய அருங்காட்சியகம் பாங்காக்.
நாராயணபால் விஷ்ணு கோயில்
இந்திராவதி ஆற்றின் மறுகரையில் நாராயணபால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு புராதனமான அற்புதமான விஷ்ணு கோவில் உள்ளது. கோயில் நிறுவப்பட்ட பின்னர் நாராயண்பூர் என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் நாராயணபால் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. சுமார் 70 அடி உயரம் கொண்ட சிவப்புக் கல்லால் ஆன இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 11 ஆம் நூற்றாண்டில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியாளர் சிந்தக் நாக்வன்ஷ் மன்னர் ஜகதீஷ் பூஷனால் இக்கோயில் கட்டப்பட்டது.
இக்கோவிலுக்குள் சுமார் 8 அடி உயர கல்வெட்டு உள்ளது. கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்துக்களில் உள்ளன. இதில் கோயில் கட்டுவதற்கு அருகில் உள்ள கிராம மக்கள் மன்னருக்கு உதவியதாக பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிவலிங்கம் சூரியன் சந்திரன் பசு மற்றும் கன்று வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.
சக்திபீடம் 13. வைஷ்ணவி – ஜம்மு காஷ்மீர்
சக்தி பீடத்தில் 13 ஆவது கோயில் வைஷ்ணவி கோயிலாகும். இக்கோயில் மூலஸ்தானத்தில் இருக்கும் இறைவியை அன்னை ராணி என்றும் வைஷ்ணவி தேவி என்றும் வைஷ்ணோ தேவி என்று அழைக்கப்படுகிறாள். இக்கோயில் வைஷ்ணவி சக்தி பீடமாகும். இங்கு அம்மன் சிலை வடிவில் இல்லாமல் அரூபமாக அருள்பாலிக்கிறாள். தேவியின் மண்டை ஓடு விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. ஞானபாகமான தலை மண்டை ஓடு விழுந்தபடியால் இந்த சக்தி பீடம் அனைத்து சக்தி பீடங்களிலும் நித்திய ஆற்றல் பெற்றதாகவும் தாய் தெய்வமாகவும் போற்றப்படுகிறது. வரங்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கும் கை போன்ற அமைப்பு இங்கு உள்ளது. இதனை சுட்டிக் காட்டி வேறு சில புராண நூல்களில் வலது கை இங்கே விழுந்ததாக உள்ளது. இக்கோயில் அன்னை வைஷ்ணோ தேவி கோயில் என்றும் வைஷ்ணவி தேவி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். வைஷ்ணோ தேவி மலைக் கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கத்ரா எனும் நகரத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் இமய மலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமய மலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூட மலையின் உச்சியில் இந்த குகையில் இருக்கிறது. மூன்று சிகரங்களைக் கொண்ட மலை ஆகையால் திரிகூட மலை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த குகை 30 மீட்டர் நீளத்தையும் 1.5 மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த குகையின் முடிவில் சூலத்தின் மூன்று முனைகள் போல மூன்று பாறைகள் சுயம்புவாக உள்ளது. இந்த பாறைகள் முப்பெரும் தேவியர்களான லட்சுமி சரஸ்வதி பார்வதி ஆகியோரின் அருவ வடிவமாகும். இந்தியாவில் மிகவும் அதிகமான பக்தர்கள் வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனரின் தலைமையில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோயில் நிர்வாகக் குழு இக்கோயிலின் நிர்வாகத்தை கண்காணிக்கிறது. இந்த நிர்வாக குழுவிற்கு திண்ணை வாரியம் என்று பெயர்.
லட்சுமி சரஸ்வதி பார்வதி மூவரும் இந்த உலகில் அதர்மத்தை ஒழித்து உலகை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தமது சக்திகளில் சிலவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஹோம குண்டத்தில் வைத்தார்கள். அந்த சக்திகள் ஒன்றிணைந்து பெரிய ஒளிப்பிழம்பாக மாறியது. அந்த ஒளிப்பிழம்பின் வெள்ளத்தில் இருந்து அழகிய பெண் ஒருவள் தோன்றினாள். அவள் அந்த மூன்று தேவிகளின் முன்னிலையில் சென்று என்னை எதற்காகப் படைத்தீர்கள். நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள். நீ தென் இந்தியப் பகுதியில் இருந்த ரத்னாகர் என்ற தேவி உபாசகருக்கு மகளாகப் பிறந்து அந்த மனிதப் பிறப்பில் அனைவரும் ஏற்கும் பெண்ணாக இருந்து கொண்டு மக்களை நல்வழிப் படுத்தி உலகில் ஆன்மீக எண்ணத்தை மக்களிடையே வலுப்படுத்த வேண்டும் என்றும் அதன் பின் அவள் விஷ்ணுவை கண்டு அவருடன் அவள் கலந்து விடுவாள் என்றும் கூறினார்கள். அடுத்த நிமிடமே பூமியில் அவர்கள் குறிப்பிட்ட ரத்னாகரின் மனைவி கர்ப்பம் அடைந்தாள். அந்த கர்பத்தில் இருந்த அணுவில் வைஷ்ணவி கலந்து விட அவளே பத்து மாதத்திற்குப் பின்னர் அவர்களுக்குப் பெண்ணாகப் பிறந்தாள். குழந்தை திரிகுடா என்ற பெயரால் அழைக்கப் பட்டாள். சிறு வயது முதலேயே ஒரு வித்யாசமானப் பெண்ணாகவே வளர்ந்து வந்தவள் ஆன்மீக விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தாள். ஒரு கட்டத்தில் தனியே அமர்ந்து வீட்டின் ஒரு மூலையில் தியானம் செய்யத் துவங்கினாள். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும் தன் தந்தையிடம் அனுமதி வாங்கி ஆற்றங்கரை அருகே கடுமையான தவம் மேற்கொண்டாள்.
திரிகுடாவின் பிறப்பின் ரகசியத்தை அறியாத அவளுடையப் பெற்றோர்கள் அவள் செயலைக் கண்டு மனம் கலங்கினார்கள். எவ்வளவோ முயன்றும் அவர்களால் அவளை குடும்ப வாழ்க்கைக்கு திரும்ப கொண்டு வர இயலவில்லை. பண்டிதர்கள் சிலரிடம் அது பற்றிக் கேட்ட போது அவர்கள் ஜாதகங்கள் மற்றும் தாந்த்ரீக மந்திர முறைகளில் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து விட்டு இவள் ஒரு தெய்வப் பிறவியாகவே இருக்க வேண்டும். ஆகவே அவள் செல்லும் வழியிலேயே விட்டு விடுங்கள். அவளது செய்கைகளை தடுக்க வேண்டாம் என்று அறிவுரைக் கூறினார்கள். அதன் பின் கானகத்திற்குச் சென்ற வைஷ்ணவி வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. அங்கேயே தங்கி விட்டாள். பெற்றோர்களால் அவளைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக் கொண்டு திரிகுடா தவம் செய்த கடற்கரைப் பக்கம் வந்தார். ஆழ்ந்த தியானத்தில் இருந்த திரிகுடா ராமரைக் கண்டாள். ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்றும் உணர்ந்தாள். தான் விஷ்ணுவை கண்டதும் அவருடன் கலந்து விடுவோம் என்று முன்பே மூன்று தேவியர்களும் சொன்னது நினைவுக்கு வந்தபடியால் ராமரிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டாள். ராமர் தனது யுக காரியம் முடியவில்லை என்றும் நீ உலக நன்மைக்காக வந்த காரியத்தையும் நீ முடிக்க வேண்டும். உனது காரியம் அனைத்தும் முடிந்த பின் கலியுகத்தின் பின்னால் என்னை வந்து சரணடைவாய் என்றும் கூறினார். மேலும் அவளிடம் வட இந்தியாவில் உள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத் தொடரில் உள்ள குகையில் சென்று தவம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ராமரின் கட்டளைப்படி தவத்தை மேற்கொண்டாள். மேலும் ராமர் ராவணனை வெற்றி கொள்ள வேண்டும் என்று நவராத்திரி அன்று ஒன்பது நாளும் திரிகுடா விரதம் இருந்தாள். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே வட இந்தியாவில் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மக்கள் ராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை தற்போதும் வைத்திருக்கிறார்கள். ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக் கொண்ட ராமர் திரிகுடா தேவி முன் தோன்றி கலியுகத்தில் தான் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப் போவதாகவும் அது வரை இந்த உலகில் இருந்து தீமையை அழித்து நன்மையை செய்வாய் என்றும் திரிகுடா என்ற பெயரை அவளின் தவத்தின் பலனால் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பாய் அனைத்து உலகமும் உன்னை அன்னை வைஷ்ணவி தேவி என்று உனது புகழைப் பாடும் எனவும் வரமளித்தார். அதன் படி திரிமுடா வைஷ்ணவி தேவி என்ற பெயரைப் பெற்றாள்.
வைஷ்ணவி தேவி குகைக்கு சென்று தவத்தில் ஈடுபட்ட பின்பு நடந்தவைகாக இரண்டு புராண கதைகள் சொல்லப் படுகிறது. முதல் புராண வரலாறு
பண்டிதர் ஸ்ரீதர் என்பவர் தற்போதைய கத்ராவில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹன்சாலி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தார். வைஷ்ணவி தேவியின் தீவிர பக்தராக இருந்தார். ஒரு முறை அன்னை வைஷ்ணோ தேவி அவர் கனவில் தோன்றி பண்டாரா என்ற விருந்தைப் படைக்குமாறு கேட்டுக் கொண்டார். (பண்டாரா விருந்து என்பது ஆண்டிகள் மற்றும் பக்தர்களுக்கு உணவளிக்கும் விருந்து) பண்டிதரும் நல்ல செயல்தானே செய்வோம் என்று எண்ணி அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களையும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களையும் விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். செல்லும் வழியில் பைரவ் நாத் என்ற பெயர் கொண்டவரை விருந்திற்கு அழைத்தார். பைரவ் நாத் ஸ்ரீதரிடம் எவ்வாறு அனைவருக்கும் உணவு கொடுத்து இந்த விருந்தை நிறைவு செய்வாய். இதில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதனால் ஏற்படக் கூடிய பாவங்களையும் விளைவுகளையும் சுட்டிக் காட்டி அந்த விருந்து நிகழாதபடி ஸ்ரீதரின் தன்னம்பிகையை குலைத்தான். ஸ்ரீதரின் குடிசை சிறியது. மக்கள் கூட்டம் அதிகமாக வந்தால் அமரக் கூட இடம் இருக்காது. மேலும் அத்தனை பேருக்கும் உணவு கொடுக்க முடியுமா என்ற கவலையும் சேர்ந்தது. இதனால் கவலையுடன் சோர்ந்து அமர்ந்தார் ஸ்ரீதர். அப்போது மீண்டும் அவர் கனவில் தோன்றிய அன்னை வைஷ்ணோ தேவி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடக்கும் கவலை வேண்டாம் என்று கூறினாள்.
பண்டார விருந்து நாளுக்கு முந்தைய இரவில் ஸ்ரீதருக்கு தூக்கம் வரவில்லை. அவர் தனது விருந்தாளிகளுக்கு குறைந்த வசதிகளுடன் எப்படி உணவளிப்பது மற்றும் தனக்கு இருந்த போதிய இட வசதியில் அவர்களுக்கு எப்படி உணவளிப்பது என்ற சிந்தனையில் இரவு முழுவதும் தூங்காமல் போராடிக் கொண்டிருந்தார். காலை வரை தனது பிரச்சினைகளுக்குத் திருப்திகரமான தீர்வைக் கொண்டு வர முடியாமல் தவித்தார். நிகழ்வை நடத்தாமல் தவிர்த்து விடலாமா என்றெல்லாம் யோசித்தார். அடுத்த நாள் தன் குடிலுக்கு வெளியே பூஜை செய்ய ஆரம்பித்தார். மதியம் வந்ததும் உணவருந்த விருந்தினர்கள் வரத் தொடங்கினர். அவர் பூஜையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதைக் கண்டு வந்தவர்கள் எங்கு இடம் கிடைக்குமோ அங்கெல்லாம் வசதியாக அமரத் தொடங்கினார்கள். விநோதமாக ஸ்ரீதரின் சிறிய குடிசைக்குள் மிகப் பெரிய எண்ணிக்கையிலான விருந்தினர்கள் தங்கள் இடத்தில் வசதியாக அமர்ந்தார்கள். இன்னும் நிறைய இடம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. பூஜை முடிந்ததும் ஸ்ரீதர் தனது குடியைசை சுற்றிப் பார்த்தார் ஏராளமான விருந்தினர்கள் வந்திருந்ததைக் கண்டார். விருந்தாளிகளுக்கு உணவளிக்க முடியாது என்று எப்படிச் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது வைஷ்ணவி தேவி இளம்பெண் வடிவில் தன் குடிசைக்குள் இருப்பதைக் கண்டார். வைஷ்ணவி தேவி அனைத்து விருந்தினர்களுக்கும் அவரவர் விருப்பப்படி உணவு பரிமாறினாள். பண்டார விருந்து சிறப்பாக நடைபெற்றது. அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க வைஷ்ணவி தேவி அருகில் உள்ள பூமியில் ஒரு பாணத்தை விட்டாள். உடனே அந்த இடத்தில் இருந்து நீரூற்று பெருகியது. இவ்வாறு தோன்றிய நீருற்று ஆறாக பெருகியது. இந்த ஆற்றின் பெயரே பாண கங்கை ஆகும். பாண கங்கை ஆற்றின் கரைகளில் தேவியின் காலடிச் சுவட்டுகள் பதிந்துள்ளது. இப்போதும் அச்சுவடுகள் இருப்பதை காணலாம்.
நடைபெற்ற விருந்தில் அதிசய நிகழ்வுகள் எப்படி நடைபெற்றது என்று கேட்டு அறிந்து கொள்ள இளம்பெண் வடிவில் இருந்த வைஷ்ணவி தேவியை தேடினான். ஆனால் அவள் அங்கு இல்லை தேடினார். வைஷ்ணவி தேவியை எங்கும் காணவில்லை. ஒரு வெறுமை உணர்வு ஸ்ரீதரை ஆட்கொண்டது. மீண்டும் அவளைக் காண வேண்டும் என்று உணவு தண்ணீரைக் கூட உட்கொள்வதை விட்டுவிட்டு விரதம் இருந்தார். வைஷ்ணவி தேவி மீண்டும் தோன்ற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு தனது வீட்டின் ஒரு அறையில் தன்னை மூடிக்கொண்டார். அப்போது வைஷ்ணவி தேவி அவரது கனவில் தோன்றி திரிகூட மலையின் மடிப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள புனித குகையில் தன்னைத் தேடுமாறு கூறினார். புனித குகைக்குச் செல்லும் வழியைக் காட்டி உணவு சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள் என்று வற்புறுத்தினாள். பண்டிட் ஸ்ரீதர் தனது விரதத்தை முடித்துக் கொண்ட பின்னர் மலைகளில் உள்ள புனித குகையை கண்டுபிடிக்க சென்றார். ஒவ்வொரு முறையும் அவர் வழி தவறுவது போல் தோன்றிய போது அவரது கனவில் தோன்றி வழிகாட்டினாள். இறுதியில் அத்கவரி என்ற இடத்தின் அருகில் உள்ள கர்ப் ஜூன் எனப்படும் குகையில் தனது இலக்கை அடைந்து வைஷ்ணவி தேவியின் தரிசனத்தை கண்டார். இங்கேயே இருந்து உலக மக்களுக்கு அருள் புரிந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸ்ரீதரின் வேண்டுகோளுக்கு இணங்க வைஷ்ணொ தேவி தன்னை மூன்று சூலங்களுடைய (தலைகள்) கல்லாக உருமாற்றம் செய்து கொண்டு அங்கேயே இருந்து அருள் பாலித்தாள். அங்கேயே ஒன்பது மாதங்கள் தங்கி அவளை வழிபட்டார்.
வைஷ்ணவி தேவியின் கையால் மரணமடைந்தால் முக்தி என்று நம்பினார் ஸ்ரீதர். அதற்காக அவளை கோபமுட்டுவதற்கான செயலை செய்ய ஆரம்பித்து அவளை கோபமுட்டினார். ஸ்ரீதரின் எண்ணத்தை அறிந்த வைஷ்ணொ தேவி தனது மகா காளி உருவத்தை ஸ்ரீதருக்கு தரிசனம் கொடுத்து மிகவும் ஆக்ரோஷத்துடன் ஸ்ரீதரின் தலையைத் துண்டித்தாள். துண்டித்த மண்டை ஓடானது பைரவ் காடி என்று அழைக்கப்படும் குகையில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் சென்று விழுந்தது. இந்த நிகழ்வு தர்பார் என்ற இடத்திலுள்ள குகை வாயில் அருகே நிகழ்ந்தது. இறக்கும் தருவாயில் ஸ்ரீதர் தன்னை மன்னிக்கும் படி வைஷ்ணவி தேவியிடம் வேண்டிக் கொண்டார். ஸ்ரீதரின் எண்ணப்படி அவருக்கு முக்தி அளித்தாள் வைஷ்ணவி தேவி. மேலும் வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்த பின் அருகிலிருக்கும் இவரின் கோவிலுக்கும் செல்பவர்கள் மட்டுமே தங்களின் புனித யாத்திரையின் பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தையும் கொடுத்தாள். ஸ்ரீதரின் தலை விழுந்த இடம் பைரவ்நாத் என்று அழைக்கப்படும் காலபைரவர் கோயில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு மேல் உள்ளது. பண்டிதர் ஸ்ரீதர் தனது இறுதிக்காலம் வரையில் இந்த மலை குகையில் வைஷ்ணவி தேவியை பூஜீத்து தவம் செய்து வாழ்ந்தார் என்ற கருத்தும் உள்ளது.
இரண்டாவதாக ஒரு புராண கதை சொல்லப்படுகிறது. குடா இளம் பெண்ணாக காட்டில் தவம் செய்து கொண்டிருந்த போது அந்த காட்டுப் பகுதியில் இருந்த தாந்திரிகரான பைரோன் நாத் இளம் பெண்ணான குடா வைஷ்ணோ தேவியை கண்டதும் அவளை தன்னுடைய மனைவியாக அடைய வேண்டும் என்று வெறித்தனமாக அவளை கட்டாயப் படுத்தினான். அதற்காக தன்னுடைய மந்திர தந்திர தாந்திரிகம் அனைத்தையும் பயன்படுத்தினான். அப்போது ராமரைக் கண்ட குடா அவரின் வழிகாட்டுதலின் படி இந்த இமயமலையில் உள்ள இந்த குகையில் வந்து தவம் செய்ய ஆரம்பித்தாள். அவள் இருப்பிடத்தை கண்டு பிடித்து அங்கும் தொல்லைகள் கொடுக்க துவங்கினான் பைரோன் நாத். ஒருநாள் தனது வைஷ்ணவி தேவி உருவத்தை எடுத்த குடா பைரோன் நாத்தின் தலையை துண்டித்து சம்ஹாரம் செய்தாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும் தலை பைரவகாடி என்ற அருகில் உள்ள மலையில் போய் விழுந்தது. தேவியிடம் இறக்கும் தருவாயில் மன்னிப்பு கேட்ட பைரவ்நாத் தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கொடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். அதன்படி அவனுக்கு அருள நினைத்த வைஷ்ணவி தேவி நீ இந்த குகை வாசலிலேயே கிடப்பாய் என்றும் தனது குகைக் கோவிலை நாடிவரும் பக்தர்களின் பாதம் உன் மீது படும். உனது பாவம் தீரும் போது நீ முக்தி அடைவாய் என்று வரம் அருளினாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பி செல்லும்போது பைரவ் காடிக்கு போய் அவள் தலை விழுந்த இடத்தில் உள்ள கோயிலையும் வழிபட்டு செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணோ தேவி இருந்த குகை இன்று வைஷ்ணோதேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.
இக்கோயில் துவாபர யுகத்திற்கு முற்பட்டதாகும். மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் ஆரம்பிக்கும் முன்பாக கிருஷ்ணர் அர்ஜூனிடம் வைஷ்ணவி தேவியை வணங்கி தவம் செய்து அருள் பெற்று வருமாறு கூறினார். அதன்படி அர்ஜூனன் கிருஷ்ணனின் வழிகாட்டுதலின் படி இந்த மலை குகையை கண்டு பிடித்து இங்கு தவம் செய்து வழிபட்டான். அவன் தவத்தில் மகிழ்ந்த அன்னை தேவி வைஷ்ணவி தேவி அவன் முன் தோன்றி போரில் வெற்றி பெற வரங்களைக் கொடுத்து ஆசி கூறினாள். பாண்டவர்களே முதன் முதலில் கோல் கண்டோலி மற்றும் பவன் ஆகிய இடங்களில் அன்னை வைஷ்ணவி தேவிக்கு கோவில்களை கட்டிதாக வரலாறு உள்ளது. திரிகூட மலையை ஒட்டிய ஒரு குகையில் ஐந்து கல் கட்டமைப்புகள் உள்ளன. இவை ஐந்து பாண்டவர்களின் பாறை சின்னங்கள் என்று கருதப்படுகிறது. சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங் இக்கோயிலில் வழிபட்டதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளது.
திரிவிக்கிரம பெருமாள்
சங்கு நாராயண பெருமாள் திருக்கோவில் பக்தாப்பூர் நேபாளம்.
தடாதகைப்பிராட்டியார் – மும்முலை அம்மன்
ஸ்ரீ மீனாட்சி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் ஒர் அரிய சிற்பம் இவ்வாலயத்தூணில் அழகுற அமைக்கப் பட்டுள்ளது. இடம்: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில். கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும் பின்னர் 12-13 ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு திரு அகத்தீஸ்வரமுடையார் என்ற பெயர் கொண்ட சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது.
வராஹ அவதாரம்
தர்மசாலா ஜெய்பூர் நகரை சேர்ந்தது வராஹ அவதார சிற்பம். இந்த 10 ஆம் நூற்றாண்டு காலத்தைக் கொண்ட இந்த சிற்பம் தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநில அருங்காட்சியகத்தில் உள்ளது.