உருவ வழிபாடு

இரண்டு இஸ்லாமியர்கள் ரமண மகரிஷியிடம் வந்து கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் விக்கிரங்களை வழிபடுவது முறையா?” என்று கேட்டனர்.

பகவானின் பதில் பின்வரும் உரையாடலில்

மகரிஷி: கடவுளை விட்டு விடு. ஏனெனில் அவரைப் பற்றி நமக்குத் தெரியாது. உனக்கு உருவம் இருக்கிறதா?

பக்தர்: ஆமாம். இந்த உடல்தான் நான். எனக்குக் குறிப்பிட்ட பெயர் இருக்கிறது.

மகரிஷி: அப்படியானால் நீ குறிப்பிட்ட உயரம், தாடி, அவயவங்கள் கொண்ட மனிதன் அல்லவா?

பக்தர் கண்டிப்பாக!

மகரிஷி: அப்படியானால் இதேமாதிரி உன்னை நீ தூக்கத்திலும் காண்கின்றாயா? மேலும், நீ உடலென்றால் மரணத்திற்குப் பிறகு ஏன் உடலைப் புதைக்கின்றார்கள்? உடல்தான் புதைக்கப்படுவதை மறுக்க வேண்டும் அல்லவா?

பக்தர்: இல்லை. நான் இந்த ஜடவுடலில் இருக்கும் சூக்ஷ்ம ஜீவன்.

மகரிஷி: இப்பொழுது நீ உண்மையாகவே உருவமற்றவன் என்று உணர்கின்றாய். ஆனால் தற்பொழுது உடலை நீதான் உடல் என்று நினைக்கின்றாய். உருவமற்ற நீ உன்னை உருவாகக் கருதும்போது ஏன் கடவுளை உருவம் கொண்டவராக எண்ணி வழிபடலாகாது? என்றார்.

Related image

மனக்குரங்கு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது ” என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன . தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. ஐயோ புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே. குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார். சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு என்றார். குரங்கோ ஐயய்யோ பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் என்றது. அவர் மீண்டும் சொன்னார் பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது அட நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா. குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது. இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே என்றபடி ஞானி கடந்து போனார்.

நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம். கவலைகளை விட்டொழியுங்கள்.
மகிழ்ச்சியாய் இருங்கள்.

ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும்.

நாயன்மார்கள்

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

கங்கை

கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா?என்பதுதான் அந்த கேள்வி. அதற்க சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி என்ன செய்யவேண்டும் என்று கூறினார். அதன்படி சிவன் வயதான ரிஷி போலவும், பார்வதி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவன் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதிதேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார். கங்கையில் குளித்துவிட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவனை வெளியே தூக்க வந்தபோது பார்வதிதேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர். அப்பொழுது ஒருவன் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தான். பார்வதி தேவியார் அவனையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவன் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடி வருவதாகவும் தன்னுடைய பாவமெல்லாம் கங்கையில் கரைந்து விட்டது என்று உரைத்து அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினான். அவனது பதிலைக் கேட்டு சிவனும், சக்தியும் மகிழ்ந்து அவனுக்கு சுய உருவில் காட்சி தந்து ஆசி கூறி மறைந்தனர். இதிலிருந்து நம்பிக்கையோடு கங்கையில் நீராடுபவர்களுக்குத்தான் அவர்களது பாவம் போகும் என்ற உண்மையை பார்வதி தேவியார் உணர்ந்து கொண்டார். கங்கையில் நீராடுவது மட்டுமல்ல, எந்த ஒரு செயலின் பலனும் அதைச் செய்வர் கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே கிடைக்கும்.

Related image

அபிராம பட்டர்

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம்.

இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆநந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார்.

திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.

அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே

என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.

திருவாவடுதுறை கோமூதீஸ்வரர் ஆலயம்

திருவாவடுதுறை கோமூதீஸ்வரர் கோவிலின் முழுத்தோற்றம். கோவிலின் மேலிருந்து எடுத்த புகைப்படம். தனிச்சன்னதியில் அருளும் திருமூலர். பல கற்களினால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்தி. இக்கோவிலில் இருக்கும் மரத்தடியில் தான் திருமந்திரம் பாடல்களை திருமூலர் 3000 ஆண்டுகள் தவம் இருந்து எழுதினார்.