குருநாதர் கருத்துக்கள் #1.17

கேள்வி: மழை கொடுப்பது யார் வருணனா?

இதை யாம் சிறிது மறுக்க வேண்டும். நன்றாக சிந்தித்தால் மழை நமக்கு அளிப்பது சூரிய பகவான் ஆவார் என்று அறிதல் வேண்டும். பூமியில் இருக்கும் நீர் தனை ஆவியாக்கி மேல் எடுத்துச் சென்று மேகங்களாக மாற்றி சில இடங்களில் மழை பொழிய வைக்கின்றான். பின்பு இந்நாட்டில் இச்சமயத்தில் இவ்வளவிற்கு வெப்பம் இருந்த போதிலும் மழை ஏன் இல்லை? என்று ஓர் வினாவும் எழும்புகின்றது. இதற்குப் பொருள் எளிது. இம்மழை மேகங்கள் எங்கு தர்மம் நிலை நாட்டுகின்றதோ அங்கு செல்லும் என்பதே பொருள்.

இதற்குச் சிறிதாக உதாரணங்கள் யாம் அளிப்போம். ஆகம ரீதியில் சிறப்பாக இன்றும் ஆலய வழிபாடுகள் நடக்கும் தலம் பரசுராம ஷேத்திரம் என்பதும் அங்கு மழை எப்பொழுதும் பொழியும் என்கின்ற நிலையும் உண்டு. இரண்டாவதாக கர்நாடகா எனும் பிரதேசத்தில் பலப்பல ஆண்டுகளாக ஆலயங்களில் அன்னம் அளிக்கப்படுகின்றது. இது அன்னதான சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதன் வழியாக அங்கும் மழை பொழிகின்றது. ஓர் குறுகிய காலத்திற்கு முன்பாகவே இந்நாட்டிலும் இத்தகைய தானங்கள் மீண்டும் துவங்கியுள்ளார்கள் என்பதும் சிறிது காலமாகவே வழிபாடுகளில் சிரத்தை காட்டுகின்றனர் என்றும் இங்கு எடுத்து உரைத்தோமே. இனி வரும் காலங்களில் இங்கும் நன்றாக மழை பொழியக் காணும் என்றென கூறுகின்றோம்.

யம சண்டிகேசுவரர்

தமிழகத்தில் சில சிவாலயங்களில் சண்டிகேசுவரராக யமதர்மர் உள்ளார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் போன்ற சிவாலயங்களில் யமதர்மர் சண்டிகேசுவரராக உள்ளார். இவருக்கு யமசண்டிகேசுவரர் என்று பெயர். அனைத்து சிவத்தலங்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே சிவ தியானத்தில் ஆழ்ந்திருப்பார். திருவாரூரில் மட்டும் இரண்டு சண்டிகேஸ்வர்கள் உள்ளார்கள். முதலாமவர் ஆதி சண்டிகேஸ்வரர். இவர் தியானத்தில் இருப்பார். மற்றொருவர் யம சண்டிகேஸ்வரர். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்பதால் யமனுக்கு இவ்வூரில் வேலை இல்லை. இவ்வூரில் பிறந்தவர்களின் காலக் கணக்கை சண்டிகேஸ்வரரே கவனிக்கிறார். ஆகவே இங்கு யமதர்மர் சண்டிகேஸ்வரர் ஆனார் என்கிறது தல புராணம்.

இராவணன் அனுக்ரஹ மூர்த்தி

இறைவன் இராவணனுக்கு அருளிய வடிவம் இராவண அனுக்கிரகமூர்த்தி. பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் இலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லக் கூடிய தேரினை வைத்திருந்தான் இராவணன். ஒரு முறை கயிலை மலை வழியாக இராவணன் தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதிக்காமல் மலையைப் பெயர்க்க எண்ணி மலையை அசைத்தான். மலை அசைவதைக் கண்ட உமையவள் அஞ்சினாள். இதை உணர்ந்த சிவபெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர் நீண்ட ஆயுள் வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார். தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் முதல் சிற்பம் நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி. இரண்டாவது படம் எல்லோரா குகை கோயில் சிற்பம்

குருநாதர் கருத்துக்கள் #1.16

பொதுவாக வெப்பம் அதிகம் என்று பலர் கூறுவதைக் கேட்டோம். மனிதனின் உள்ளிருக்கும் வெப்பத்தை விட இந்த வெப்பம் பெரிதா? என்று யாம் கேட்கிறோம். உள்ளிருக்கும் அனைத்தும் வெப்பம் அளிப்பதாகவே காண்கின்றோம். இவ்வெப்பத்தின் காரணமாக மனிதனின் சிந்தனை குலைந்து போவதையும் கண்டோம். இவ்வெப்பம் எதனால் உண்டாகுகின்றது என சிந்தித்தல் வேண்டும். வெளியாகக் காணும் வெப்பம் கதிரவனால் என்று உறுதியாக கூற இயலும். உள்ளில் இருக்கும் வெப்பம் எதனால் தோன்றுகிறது என வினாவக் கண்டால் இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஓர் கதிரவன் தானா? பல கதிரவர்கள் உள்ளிருந்து ஆட்டிப் படைக்கின்றனர் என்றும் இங்கு எடுத்தரைப்போம். இதில் முதன்மையான அதிக வெப்பம் அளிக்கும் காரணம் என்ன என வினாவக் கண்டால் இதற்கு மூல காரணமாக யாம் காண்பது தேவையற்ற எதிர்பார்ப்புக்கள் என்று கூறுவோம். எதிர்பார்ப்புகளின் விளைவாக பலப்பல தவறுகள் செய்கின்றனர் மானிடர் என்றும் கூறி இங்கிருக்கும் அனைவரையும் யாம் சுட்டிக் காட்டவில்லை என்றும் அறிதல் வேண்டும். இது ஓர் பொது விளக்கமாக எடுத்துக் கொள்வீர்களாக.

முதலாவதாக ஆண் குழந்தை வேண்டும் என எதிர்பார்ப்பு பெண்ணாக பிறந்தால் ஆ என்ன துக்கம்? ஏன் என்றால் அந்தப் பெண் அனைவரையும் விழுங்கி விடுவதாக எண்ணுகின்றனர். இவ்விதம் இல்லை கலியுகத்தில் பெண்ணே பெரிது என்று கூறுவோம்.

இரண்டாவதாக பெற்றக் குழந்தை இந்தக் கல்வி கற்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அக்குழந்தைக்கு என்ன விருப்பம் என்று எவரும் சிந்திப்பதில்லை. அந்த ஆன்மா எந்த நாட்டம் செல்கின்றது என்று எவரும் சிந்திப்பதில்லை. இது ஓர் பெரும் வெப்பமாக யாம் காண்கின்றோம்.

மூன்றாவதாக அக் குழந்தை அவ்வழியே செல்லாது வேறு வழி நாடும் போது ஆ என்ன துயரம் மீண்டும் வருத்தமே இதன் வழியாக எதிர்பார்ப்பு போய் விட்டது என் வாழ்க்கை போய் விட்டது என்று பெற்றோர் கருதுவார்கள். இதுவும் வெப்பத்தை உண்டாக்குகிறது.

நான்காவதாக இன்னாரைத்தான் நீ திருமணம் புரிதல் வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என குழந்தை கூறுகிறது பிடிக்காவிட்டால் என்ன சொத்து இருக்கின்றது என்று கூறுகின்றனர். இவ்விதம் பல வகையான சச்சரவுகள் அகம் தனில் வீண் விவாதங்கள் அனைத்தும் நடந்து ஓர் உஷ்ணமே உண்டாக்குகின்றது. விளைவு பூகம்பம் அமைதி போய் விட்டது. இதற்கு ஆண்டவனை ஓர் வழி கேட்போம். என்ன கேட்கப் போகின்றீர்கள்? நாம் உனக்கு அபிஷேகம் செய்கின்றோம் எனக்கு அமைதியைக் கொடு என்று உடனடியாக இங்கு ஓர் ஒப்பந்தம் ஓர் வியாபாரம் நடைபெறுகின்றது. உனது அபிஷேகம் ஆண்டவனுக்கு எதற்கு ஐயா? என பூசாரி வினாவுவான் என எதிர்பார்கின்றோம் ஆனால் அதுவும் அவ்விதம் இல்லை. ஓர் இருநூறு ரூபாய் தட்சணையாக நீ வைத்து விடு அனைத்தும் சிறப்பாக ஆண்டவன் மன்னிப்பான் என்று கூறுகின்றனர். பணம் செலுத்தி செலுத்தி மனிதனின் வாழ்க்கையே வியாபாரமாகி விட்டது. இவ்விதம் அனைத்தும் வியாபார ரீதியில் நீ இது தருகிறாயா நான் அது தருகிறேன் என்பது சாதாரண ஓர் காரியமாகி விட்டது.

குருநாதர் கருத்துக்கள் #1.15

கேள்வி: எல்லாம் வல்ல இறைவனாம், அனைத்தும் படைத்தவனாம், நல் எண்ணம் படைத்தவனாம், என்றெல்லாம் புகழ்த்தும் போது ஏன் நலத்துடன் தீயதும் படைத்தான்? என வினாவக் கண்டோம்.

இதற்கான விடை தீயது இல்லையேல் நலமறிய இயலாது என்பதேயாகும். நிழலின் அருமை தெரிதல் வேண்டுமென்றால் வெயிலின் கொடுமையும் காணுதல் வேண்டும் அறிதல் வேண்டும் என்றும் கூறுவோம். உங்களுக்கு யாம் ஒரு நாணயம் அளித்தோம் என்றால் அதில் இரு பக்கம் இருத்தல் வேண்டும் என்பது இயற்கையின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நல்லது எனக் கூறிக்கொண்டால் தீமையும் இருத்தல் வேண்டும். தீமையே இல்லாவிடின் தீயவன் இல்லாவிடின் எவனை நல்லவன் என அழைப்பீர்கள்? இத்தகைய நிலையில் ஒருவனுக்குச் சர்வாங்க சூலத்தால் (உடல் முழுவதும் சூலத்தால் குத்துவது போன்ற வலி) பாதிக்கப்பாட்டால் அது இல்லா நிலையில் ஆனந்தம் கொள்ள இயலாது. இது இறைவனின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நலம் இருந்தால் தீமையும் காணும். தீமையை அறிந்து அதிலிருந்து விலகி வருதல் வேண்டும் என்பது மனிதனின் சுய அறிவு ஆற்றலின் விளைவாகின்றது. இத்தகைய நிலையில் நமக்குத் துன்பம் தரும் அனைத்தும் நாம் விட்டு நீங்குகின்றோம். உதாரணமாக அக்னியில் கையை விடுவதில்லை. ஏனெனில் அது சுட்டு விடும். துன்பம் தரும் காரியங்களில் ஈடுபடுவதில்லை ஏனெனில் அது துன்பத்தை தரும். இவ்விதம் இவற்றையெல்லாம் விட்டு நீங்குகின்றோம். ஆயினும் ஆனந்தம் கொடுக்கும் பலவற்றை விட நாம் எண்ணுவதில்லை. அதுபோல் இதுவும் தீமையென தீயவற்றை உணர்ந்து படிப்படியாக இவைகளிலிருந்து விடுதலை பெற நல்வழியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிங்கீஸ்வரர்

மூலவர் சிங்கீஸ்வரர். உற்சவர் பஞ்சமூர்த்திகள், நடராஜர், சிவகாமி அம்பாள், பிரதோஷநாயர், சந்திரசேகர். அம்பாள் புஷ்பகுஜாம்பாள். மூலவர் மற்றும் அம்பாள் கோபுரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் ஸ்வேத பத்ம புஷ்கரிணி கமல தீர்த்தம். ஊர் திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு. ஶ்ரீதேவி பூதேவி ஆதிகேசவபெருமாள் சன்னதி உள்ளது. சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் அவதரிதவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரம். சரஸ்வதி ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரைத் தண்டினால் சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும் உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும் சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது.

சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடிய போது சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது இசை பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால் சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவ நடனத்தைக் காண முடியாமல் போனதால் அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது இசை பக்தியை பாராட்டிய சிவன் பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும் பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்று அழைக்கப்பட்டத. பின்னர் மெய்ப்பேடு என்று அழைக்கப்பட்டு தற்போது மப்பேடு என அழைக்கப்படுகிறது.

கோயில் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வட கிழக்கு மூலையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீர பாலீஸ்வரர் மற்றும் வையாழி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கிபி 976 இல் இக்கோயில் கட்டப்பட்டது. இவர் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரர். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கிபி 1501 இல் கோவில் ராஜ கோபுரம் மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார். மேலும் வடகிழக்கு மூலையில் உள்ள பாலீஸ்வர மரகத பச்சைக் கல்லால் ஆன சன்னதியை புதுப்பித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு குகஸ்ரீ சுந்தரேச சுவாமிகள்(ஆத்தூர்-சேலம்) முன்னிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் சத் சங்கம் பெயரில்,நால்வர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் போது ஆலயத்தின் பிரதான கோபுர உச்சியில் கிபி 1947 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் இரண்டாம் ஆதித்திய கரிகால சோழனால் கட்டப்பட்டதையும் உறுதி செய்கின்றது. கோயிலில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சம்ஸ்கிருத மொழி மற்றும் நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் எழுதப்பட்டிருந்தது. செப்பேடுகளை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெ டுக்கப்பட்டுள்ள செப்பேடுகள் 1513 ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறு பெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன.

குருநாதர் கருத்துக்கள் #1.14

கேள்வி: மோட்ச நிலைகள் என்பது என்ன?

பலரும் மோட்சம் என்பதைப் பலவகையில் சிந்தனை செய்கின்றனர். உதாரணமாக மோட்சத்தின் விளக்கத்தை ஒருவர் கூறும்போது கேட்டோம். மோட்சம் என்பது சொர்க்கவாசம் என்றும் அங்கு பேரானந்தம் காண்போம் என்றும் வேண்டியது கிடைக்கும் என்றும் ஓர் விளக்கத்தைக் கேட்டு வியப்படைந்தோம். இது குழந்தைகள் கூறுவது போல் எமக்குத் தோன்றியது. மற்றொருவர் மோட்சம் என்றால் பிறவி இல்லாமல் சொர்க்கவாசம் பிறவி இல்லாமை தெய்வ நிலை என்று கூறினார். இதுவும் தவறானது. உண்மையான மோட்ச நிலை என்னவென்றால் இதற்கு ஆங்கில வார்த்தையை யாம் உபயோகித்தல் வேண்டும். மோட்சம் என்பதற்கு எளிதாக யாம் கூறும் ஆங்கில வார்த்தை LIBERATION என்பதாகும். இதற்குச் சரியான தமிழாக்கம் விடுதலை என்கின்றதாகும். விடுதலை என்றால் எதிலிருந்து விடுபடுதல் என்று சிந்தித்தல் வேண்டும். விடுதலை என்றால் பொதுவாக உடலில் இருந்து விடுதலை பெறுதல் வேண்டும் என்கிற தவறான தத்துவம் உண்டு. உடலில் இருந்து விடுதலை கண்ட போதிலும் இந்த ஜென்மத்தில் கொண்ட ஆசாபாசங்களினால் மறு பிறவி எடுத்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. அப்பொழுது உடலில் இருந்து விடுபடுதல் மோட்சம் அல்ல.

மோட்சம் என்பது இந்த ஜென்மத்தில் தத்தளிக்கும் காரணங்களை நீக்குதல் வேண்டும் என்பதாகும். இவை யாவை என்றால் முதன்மையில் ஆசாபாசங்களாகும். இரண்டாவது பற்றுதல் (பந்தங்கள்) ஆகும். பற்றுதல் நீங்கிடவே மற்ற அனைத்தும் குறையும். சிந்தித்தோம் என்றால் நாம் பிறவி எடுத்தல் வேண்டும் ஏனெனில் இவையாவும் அனுபவித்தல் வேண்டும். இவ்வாறு விட்ட குறையும் நீக்குதல் வேண்டும் என்றெல்லாம் மானிடர்கள் எண்ணுவதுண்டு. இவை யாவும் மோட்ச நிலை அளிப்பதில்லை. யாதும் வேண்டாம் என்கின்றது மட்டும் மோட்ச நிலையை அளிக்குமா என்றால் அதுவும் இல்லை என்பதே எமது கருத்தாகின்றது. ஆத்மாவிற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நன்கு உணர்ந்தால் அதுவே மோட்சநிலை அளிக்கும் என்பது பொது கருத்தாகின்றது. ஆத்மாவிற்கும் நமக்கும் என்ன தொடர்பு என சிந்தித்து ஆழ்நிலை சென்று விட்டால் நம் ஆத்மாவே நாம் என்கிற ஒரு விளக்கம் கிடைக்கும். அகம் பிரம்மாஸ்மி என்கின்ற முழு விளக்கம் கிடைக்கும். இது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது கிரியைகள் செய்வது வேள்விகள் செய்வதினால் அனைத்தும் கிடைக்கப் போவதில்லை. ஆத்ம விசாரம் (நான் யார்) என்பது செய்தல் வேண்டும். இவ்விதம் செய்து வர ஆத்மாவுடன் ஒன்றிப் போகும். அதுவே உண்மையான விடுதலை. அத்தகைய நிலை நமக்குக் கிட்டினால் மோட்ச நிலை அடைந்தோம் என எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவ்வினாடி முதல் நமக்குப் பிறவியில்லா பெரும் வழி கிடைக்கும் என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.

குருநாதர் கருத்துக்கள் #1.13

கேள்வி: வானம் போல் தியானம் செய் என்று கூறுகின்றனர் அதன் பொருள் என்ன?

பொதுவாக மானிடன் வழிபடும் போது வானத்தை நோக்கி கை கூப்புகின்றான். இதற்குக் காரணம் என்ன என அறிதல் வேண்டும். மற்ற மதத்தோர் வானகத் தந்தை என்றும் அழைக்கின்றனர். இறைவன் வானத்திலிருந்து இறங்கி வருகின்றவனா என்றெல்லாம் குழப்பம் காண்பது நியாயமே. இதற்கு யோக நெறியில் விளக்கம் கண்டால் எளிதாகப் புரியும் என்று கூறுகின்றோம். மனித உடல் எனக் கண்டு கொண்டால் வானமானது சகஸ்ரரத்தின் மேலாகும். எப்பொழுது மனிதனின் எண்ணங்கள் அச்சகஸ்ரர நிலையை எட்டுகின்றதோ அன்று அவன் இறைவனை அடைந்தான் எனக் கூற இயலும். இத்தகைய நிலையில் வானத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும் அவ்வானத்தை நோக்கி மக்கள் வழிபடுகின்றனர் என்றும் எடுத்துரைத்தோம். இதற்கு மற்றொரு காரணம் உண்டாம் ஆதி காலங்களில் வெளிச்சம் தரும் சூரியனே தெய்வம் என்று மக்கள் எண்ணிட மேல் நோக்கியே வணங்கினர். இச்சம்பிரதாயமானது இக்காலத்தில் தொடங்கியது என்றும் கூறுகின்றோமே. இன்று யாம் இதை மட்டும் கூறுவோம். இருப்பினும் இங்கு கூடியுள்ளோர் இதற்கு மேலான விளக்கங்களை சிந்தித்தல் வேண்டும் என்றென ஆர்வமாக இருக்கின்றோம்.

குருநாதர் கருத்துக்கள் #1.12

கேள்வி: கர்ம வினை என்று சொல்கிறார்கள். கர்மம் என்றால் செயல். செயலுக்கு உண்டான வினை அதற்குரிய விளைவு உடனடியாக இருக்கிறது இந்தக் கலிகாலத்தில். இருந்த போதிலும் வேதங்கள் சொல்லுவதாவது நீங்கள் போன ஜென்மத்தில் செய்தது தான் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுகிறீர்கள் என்று அது ஏன்? வேதம் சொல்வது சரியா? அல்லது நாம் பார்ப்பது சரியா?

ஒரே நேரத்தில் மூன்று விதைகள் விதைக்கின்றோம். ஒன்று கீரை இரண்டாவது நெல் மூன்றாவது பனை. மூன்றும் ஒரே நேரத்தில் தான் விதைக்கின்றோம். கீரையானது பதினைந்து நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. நெல்லானது அதனுடைய பலனை ஆறு மாதத்தில் கொடுக்கிறது. ஆனால் பனையானது மூன்று தலைமுறைகள் கழித்துத் தான் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. அதனால் நாம் என்ன வினையைச் செய்கின்றோமோ அதனைப் பொறுத்துத்தான் அதனுடைய விளைவுகள் இருக்கும். ஆதலால் இந்த ஜென்மத்தில் செய்வது உடனடியாக கிடைக்கின்றது. ஜென்மாந்திரமாக வருவது பெரிய வினை. இக்காலத்தில் கிடைப்பது உடனடியாக மாற்றக்கூடிய வினைகள். இதை வைத்துத்தான் அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று வினையை வைத்துப் பொதுவாகச் சொல்லியிருக்கின்றார்கள். பெரும் வினையென்றால் தாமதித்துத்தான் விளைவுகள் இருக்கும்.