பதஞ்சலி முனிவர்

பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர். தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர்

நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம். என்கிறார்.

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றி வரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும் மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றார் ஒரு சீடர். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம் துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம் என்றார். குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா? என்று கேட்டார் இன்னொரு சீடர். பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்றார் பதஞ்சலி முனிவர்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே என்று கண்ணீர் வடித்தார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனை நாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.

பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் எழுதிய மூன்று நூல்கள்: யோகத்தினை விளக்கும் யோக சாஸ்திரம், மொழி இலக்கணமான மஹாபாஷ்யம், ஆயுர் வேத்மாகிய சரகம் என்ற ஆத்திரேய சம்ஹிதை. மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்திருக்கின்றார். இராமேஸ்வரம் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்திற்குள் தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.

சோமசுந்தரப் பெருமான்

சிற்றரசர்களால் வணங்கப்பட்டு நீதிநெறியுடன் குபேரனைப் போல் அரசாட்சி செய்து வந்தான் பாண்டிய நாட்டை ஆண்ட விக்கிரமபாண்டியன். தன் தந்தையின் உத்தரவுப்படி கோயில் கட்டி வெகு சிறப்பாக தினந்தோறும் பூஜை செய்து வந்தான். நாடும் பிணியற்று சுபீட்சமாக இருந்து வந்தது. எங்கும் மகிழ்ச்சியும் திருவிழா பூஜையும் தொடர்ந்த வண்ணமிருந்தது. அப்போது காஞ்சியை சோழன் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பாண்டியன் மீது ஏகப்பட்ட பொறாமை. பாண்டியனை எப்படியாவது வென்றாக வேண்டும் என்றே அவன் மூளை சிந்தித்த வண்ணம் இருந்தது. இதற்காக சக்கியம், கோவர்த்தனம், கிரெளஞ்சம், திரிகூடம், அஞ்சனம், விந்தியம், ஹேமகூடம், காஞ்சி குஞ்சரம் என எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பி வரச்செய்தான். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னனைச் சந்தித்தனர். மன்னன் தலையை மயில்முடி தோகையால் தொட்டு வருடி வாழ்த்தினார்கள். அப்போது அவர்களிடம் நான் பாண்டிய நாட்டை ஜெயிக்க விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரினால் வெல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆதலால் ஆபிசாரப் பிரயோகம் செய்வித்துத் தான் விக்கிரமனை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளேன். பாண்டியனை அழிக்க கைங்கரியம் செய்து உதவீனீர்களானால் நாட்டில் சரி பாதி இராஜ்ஜியத்தை உங்களுக்கு தருகிறேன் என ஆசை வார்த்தைகளால் உயர்த்தினான் சோழன்.

சமணர்கள் சைவர்களின் விரோதிகள். சோழ மன்னன் இவ்வாறு சொன்னதும் அவர்கள் பாலாற்றின் கரையில் கூடி பெரிய பெரிய ஓம சாலைகளையும் ஹோமகுண்டங்களையும் அமைத்தனர். ஹோம குண்டத்தில் நச்சு மரங்களின் கட்டைகளை வார்த்தனர். தீ வளர்த்து வேம்பு எண்ணெயில் தோய்த்த உப்பாலும் நல்லெண்ணெயில் ஊறச்செய்த மிளகாய்களையும் இட்டனர். விலங்குகள் பறவைகள் இவற்றின் ஊனாலும் ஹோமங்களை செய்தனர். யாகத்தின் பலனாய் மேகங்கள் கூடி இடி இடித்தது, இடி புறப்பட்ட இடைவெளியினுல் துதிக்கையில் ஒரு உலக்கையைத் ஏந்திகிக் கொண்டு பெருத்த யானையொன்று பெரும் பிளிறலுடன் தோன்றி வந்தது. யானை அடியெடுத்து நடந்து வந்தபோது பூமியின் பரப்பளவு நடுங்கியது. அது அதன் காதுகளை சிலிர்த்த போது மேகங்கள் கலைந்து அலைந்து விலகின. தந்தங்களால் மலையைப் பிளந்து கொண்ட வண்ணம் யாகசாலையில் ஹோமம் செய்து கொண்டிருந்த சமணர்களின் அருகே வந்து நின்றது. நீ சென்று மதுரையையும் அதன் அரசனையையும் அழித்துவிட்டு வருவாயாக என யானையிடம் ஏவினார்கள் சமணர்கள். மீண்டும் பேரொலியை பிளிறிய வண்ணம் புறப்பட்டது. இச்சத்தத்தினைக் கேட்ட மற்ற மிருகங்கள் மிரண்டு விலகியோட யானை தென் திசை நோக்கி விரைவாக ஓடியது. செய்தியறிந்தான் விக்கிரமன். உடனே ஆலயத்திற்கு ஓடிச் சென்றான். ஈசனிடம் முறைசெய்து வேண்டினான். மகா மேருவை வில்லாக ஆக்கினாய், மகாவிஷ்ணுவை அம்பாக தேர்வு செய்தாய், பூமியைத் தேராக உருக்கிருக்கிக் கொண்டாய், வாசுகியை நாணாக்கினாய், வேதங்கள் நான்கினையும் குதிரைகளாக்கினாய், பிரம்ம தேவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டாய், இப்படியெல்லாம் செய்து முப்புரத்தையும் எரிக்கப் புறப்பட்ட மகாதேவனே, இத்தனையுடன் புறப்பட்ட உனக்கு சமணர் அனுப்பிய யானை உனக்கொரு பொருட்டா, என்னையும் மதுரை மக்களையும் நீயின்றி எவர் காப்பார்? எனப் பலவாறு வேண்டி தொழுது முறையிட்டழுதான்.

மன்னா என அசரீரி ஒலித்தது. வெளிச்சுவரின் உட்புறம் கீழ் பக்கமாக பதினாறு கால் கொண்ட அட்டாள மண்டபமொன்றை அதிவிரைவில் கட்டி முடி. வில் வீரனாக வந்து நீ கட்டிய அம்மண்டபத்தின் மேலமர்ந்து கொண்டு யாம் யானையை வதை செய்வோம் என அசரீரி கூறக் கேட்கவும் மன்னன் அகமகிழ்ந்தான். உடனடியாக போர்க்கால அடிப்படையில் மண்டபத்தை கட்டி முடித்தான். அதன் மேல்தளத்தில் இரத்தினத்தால் இழைத்த பொற் பீடமொன்றையும் நிறுவி வைத்தான். கருமை நிறத்துடன் சிவப்பு பட்டுடுத்தி பதினாறு வயதோனவனாய் இடுப்பில் கத்தியுடனும் இடக்கையில் நாணேற்றிய வில்லுடனும் வலக்கையில் கூரான அம்பைத் தாங்கியவாறும் காதுகளில் சங்குக் குண்டலங்களுடனும் கழுத்தில் முத்தாரமுமாய் பீட உச்சியில் ஒரு வில் வீரனாகத் தோன்றி நின்றார் இறைவன். எதிரே யானை நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட சுவாமி விட்ட அம்பு விர்ரென பாய்ந்து யானையின் உயிரை ஒரு நொடியில் மாய்த்தழித்து விட்டது. அந்த இடமே ஆனைமலை எனப் பெயர் பெற்றது. பிரகலாதன் தவம் செய்து சித்தி பெற்ற இடமும் கூட இதுதான். பாண்டியன் வீரன் உருவிலிருந்த ஈசனைப் பலவாறு துதித்து விட்டுப் பட்டென்று ஈசனது இரு கால்களையும் சிக்கென்று பற்றிக் கொண்டான் பாண்டிய மன்னன். எப்பேற்பட்ட சங்கடங்களையும் சட்டென நீக்க இங்கேயே எழுந்தருள வேண்டும் எனவும் விண்ணப்பித்தான். இறைவனும் அப்படியே இருப்பதாக வாக்களித்தார். விக்கிரமபாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க பதினாறு கால அட்டாள மண்டபத்தில் அட்டாள வீர மூர்த்தியாய் காட்சி கொடுக்கின்றார் சோமசுந்தரப் பெருமான்.]

இல்லறம் நல்லறம்

செல்வந்தன் ஒருவன் தன் மாளிகையில் உறவுகளை எல்லாம் உதறிவிட்டு தாசிப் பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். அவ்வழியே வந்த ஞானி அவனை எதிரில் சந்தித்தார். ஞானி செல்வந்தரிடம் உனது மனைவி மக்கள் உறவுகள் அனைவரையும் விட்டு இங்கு ஏன் இருக்கிறாய் என கேட்டார் சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளமாக உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை எனப் பெருமையடித்துக் கொண்டான்.

புன்சிரிப்போடு அதைக் கேட்ட ஞானி வா சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம் என்றார். கடுமையான வெயிலில் போக வேண்டுமா என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்படவில்லை. ஞானி கேட்டார் என்ன தேடுகிறாய்? நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன். ஏன் உன் நிழல் உள்ளதே அதில் நீ ஒதுங்கிக்கலாமே? சுவாமி என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்? என்னப்பா இது நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை உன் செல்வங்களே உன்னைக் காப்பாற்றும் என்று சற்று முன்புதானே கூறினாய்? இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே? என்றார். ஏராளமான செல்வம் இருக்குன்னு கர்வத்தில் யாரையும் உதாசினபடுத்தாதே. இருக்கும் பொழதும் இறக்கும் பொழுதும் நம் நலம் விரும்பிகள் நாலு பேர் நிச்சயம் நமக்கு தேவை. வெறும் செல்வத்தால் மட்டும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகளையும் நல்ல நட்புகளையும் மதித்து இணைத்து வாழ கற்றுக்கொள் என்றார். செல்வந்தன் உண்மையை உணர்ந்தான். மனைவி மக்களுடன் இணைந்தான்.

Image result for ஞானி செல்வந்தன்

திருமூலர்

திருக்கயிலாயத்தில் திருமூலருடைய பெயர் சுத்த சதாசிவர். சுந்தரநாதர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது. திருமால் பிரம்மா இந்திரன் முதலிய தேவர்க்கு நெறி அருளும் அசையா சக்தியாக இருக்கும் இறைவனேயே குருவாகப் பெற்றவர் இவர். இறைவனின் திருவருளால் அவரின் திருவடியில் இருந்த எட்டு யோகிகளுள் ஒருவராக இருந்தார். அவர்களது பெயர்கள் 1. சனகர் 2. சனந்தனர் 3. சனாதனர் 4. சனற்குமாரர் 5. சிவயோக மாமுனிவர் 6. பதஞ்சலி 7. வியாக்கிரமர் 8. திருமூலர் பாடல் 67 இல் இதற்கான குறிப்பு உள்ளது. இவர் அட்டமா சித்திகளை கைவரப்பெற்றவர் ஆவார். இவருக்கு 7 சீடர்கள் உள்ளார்கள். அவர்களது பெயர்கள் 1. மாலாங்கன் 2. இந்திரன் 3. சோமன் 4. பிரமன் 5. உருத்திரன் 6. காலாங்கி நாதன் 7. கஞ்ச மலையன் பாடல் 69 இல் குறிப்பு உள்ளது. எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் உடலுடன் இறைவனின் திருவடிக்குக் கீழே இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) அமர்ந்திருக்கிறார். (பாடல் 80 இல் காண்க) தன்னுடைய அமிர்தபாலால் 9 கோடி யுகங்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்திருக்கிறார். (பாடல் 82 இல் காண்க) 70 கோடி 100 ஆயிரம் ஆகமங்கள் மொத்தம் உள்ளது. (பாடல் 60 இல் காண்க) இந்த ஆகமங்களை 9 பகுதியாக பிரிந்து இறைவன் இவருக்கு உபதேசித்தார். (பாடல் 62 63 இல் காண்க) அப்போது இறைவனின் திருநடனத்தை கண்டு அந்த பேரின்பத்திலேயே 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்கிறார். (பாடல் 74 இல் காண்க)

திருமூலர் தான் 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் எப்படி இருந்தேன் என்று பின்வருமாறு விளக்குகின்றார். இறைவனின் திருவடிகளை தொழுத போது இறைவனின் மீது காட்டிய பக்தியினால் இறைவனே தன்னோடு இருந்ததினால் 1 கோடி ஆண்டுகள் தன்னால் பேரின்பத்தில் இருக்க முடிந்தது என்று கூறுகின்றார். (பாடல் 75 இல் காண்க) 1 கோடி ஆண்டுகள் பேரின்பத்தில் இருந்த பின் இறைவனே திருமூலரை எழுப்பி நீ பெற்ற ஆகமங்களை உலகில் உள்ளோர் உய்வவதற்காக இதனை எடுத்துச் சொல் என்று உணர்த்தினார். (பாடல் 76 இல் காண்க) இதனை தமிழில் எடுத்துச் சொல் என்று கட்டளையிட்டார். (பாடல் 81 இல் காண்க) 1. இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவும் 2. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும் (பாடல் 85 இல் காண்க). 3. இந்த உலகம் உய்வதற்காகவும் இறைவன் உலகத்தில் வைத்திருக்கும் ரூபங்களை பார்க்க எண்ணம் கொண்டும் 4. அகத்தியரை காணவுமே இந்த உலகத்திற்கு திருமூலர் வந்தார். இறைவன் இருக்கும் இடத்திற்கும் இந்த உலகத்திற்கும் நடுவில் சூட்சும வழி ஒன்று இருக்கிறது அதன் வழியாக இந்த உலகத்திற்குள் தனது உடலுடன் வந்தேன் என்று திருமூலர் சொல்கிறார். (பாடல் 83 இல் காண்க)

திருமூலர் பசுபதிநாத் திருக்கேதாரம் கங்கைக் கரை வழியாக தென்னாட்டிற்கு காளஹஸ்திக்கு வந்தார். அங்கிருந்து திருவாலங்காடு பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை தரிசித்து விட்டு அங்கிருக்கும் முனிவர்களோடு கலந்துரையாடினார். அங்கிருந்து திருவதிகை வந்து அங்கிருக்கும் இறைவனை தரிசனம் செய்கிறார். அங்கிருந்து திருப்புலியூரில் இறைவனின் ஆனந்த நடன தரிதனத்தை கண்டு சில நாட்கள் அங்கே தங்குகிறார். அங்கிருந்து காவிரி நதிக்கரைக்கு வந்தார். அங்கிருந்து திருவாவடுதிறை வந்து இறைவனை வணங்கி சிறிது நாட்கள் தங்குகிறார். பின்பு அகத்தியரை பார்க்க வேண்டும் என்று அகத்தியர் இருக்குமிடம் நோக்கி கிளம்புகிறார்.

திருமூலர் பொன்னி நதிக்கரை வழியாக சென்று கொண்டிருக்கும் போது ஆடு மற்றும் பசுக்களின் கதறல் சத்தம் கேட்கிறது. சத்தத்தைக் கேட்ட திசை நோக்கி சென்றார். மூலன் என்ற பெயர் கொண்ட இடையன் அப்போது தான் தனது வினை முடிந்த காரணத்தினால் இறந்து கிடக்கிறான். அவனது உடலை காண்கிறார். அவனது உடலை சூற்றி வருத்தத்துடன் சுற்றி நிற்கும் பசுக்களையும் ஆடுகளையும் காண்டார். பசுக்களும் ஆடுகளும் கண்ணீர் விட்டபடி அந்த உடலைச் சுற்றி சுற்றி வந்து அவனை நக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இடையன் எழுந்தால் தான் பசுக்கள் ஆடுகளின் வருத்தம் போகும் என்று எண்ணிய அவர் அதன் வருத்தத்தை போக்கும் வகையில் அட்டமா சித்தியில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி தன் உடலை ஓர் இடத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு மூலனின் உடலில் சென்றார். பசுக்கள் ஆனந்தமடைவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த சுத்த சதாசிவர் திருமூலர் என்னும் பெயரைப் பெற்று பசுக்களையும் ஆடுகளையும் மேய்த்து விட்டு மாலை ஆனதும் பசுக்கள் இருக்கும் ஊரான சாத்தனூருக்கு அனைத்து ஆடுகளையும் பசுக்களையும் அழைத்து செல்கிறார்.

திருமூலர் சாத்தனூர் வந்ததும் பசுக்களும் ஆடுகளும் தங்களது இல்லத்திற்கு தானாகவே சென்று சேர்ந்து விடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். பசுக்களும் ஆடுகளும் ஊருக்குள் வந்து விட்டது இன்னும் தனது கணவர் வீட்டிற்கு வரவில்லையே என்று தன் கணவரைத் வெளியே வந்து தேடுகிறார். தன்னுடைய கணவர் வெளியிலேயே நின்று பசுக்கள் ஆடுகள் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இதனைக் கண்ட மூலனின் மனைவி வீட்டிற்குள் வாருங்கள் என்று திருமூலரின் கையை பிடித்து அழைக்க முயற்சித்தாள். அப்போது திருமூலர் நான் உனது கணவன் இல்லை. உனது கணவன் உடலில் இருக்கும் சிவயோகி நான். உனக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றார். திருமூலரின் வார்த்தைகளை கேட்ட மனைவி அவரது வார்த்தைக்கு கட்டப்பட்டார் போல் தனியாக தனது வீட்டிற்குள் வந்தாள். திருமூலர் அந்த ஊரில் இருக்கும் ஒரு மடத்தில் தங்கி விட்டார். மூலனின் மனைவிக்கு இரவு முழுவதும் தூங்காமல் வருந்தத்துடன் இருந்தாள். காலை விடிந்ததும் ஊரில் உள்ள அந்தணர்களிடம் செய்தியை சொல்லி தன் கணவனை வீட்டிற்கு வரச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டாள். சாத்தனூர் இறைவனை அறிந்த அந்தணர்கள் அதிகமாக வாழும் ஊராக இருந்தது. அந்தணர்கள் பலர் ஒன்று சேர்ந்து மூலன் இருப்பிடத்திற்கு வந்து மூலனை வீட்டிற்கு ஏன் செல்ல மறுக்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் மூலன் இல்லை. மூலன் நேற்றே இறந்து விட்டான். அவனது உடலில் இருக்கும் சித்தயோகி நான். கூடு விட்டு கூடு பாய்ந்து இந்த உடலில் இருக்கிறேன். வருத்தத்துடன் இருந்த பசுக்கள் ஆடுகளுக்காக இந்த மூலனின் உடலுக்குள் வந்தேன். விரைவில் இந்த உடலையும் விட்டு எனது உடலுக்குள் சென்று விடுவேன் என்றார். இதனை அந்த ஊர் அந்தணர்கள் நம்ப மறுத்தார்கள். தன் சொல்லை மெய்ப்பிக்கிறேன் என்று கூறி அருகாமையில் பார்த்தார். அங்கு இறந்த ஒரு ஆடு இருந்தது. உடனே இந்த உடலை விட்டு ஆட்டின் உடலுக்கு சென்ற திருமூலர் மீண்டும் மூலனின் உடலுக்கு வந்தார். இதனைக் கண்ட அந்தணர்கள் வந்திருப்பவர் மூலன் இல்லை சித்த யோகி என்பதை உணர்ந்து மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டார்கள். பின்பு வந்திருப்பவர் சித்த யோகி என்பதை அறிந்து கொண்ட அந்தணர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டு தங்களின் சந்தேகங்களை நிவர்ந்தி செய்து கொண்டார்கள்.

திருமூலர் சாத்தனூரில் இருந்து கிளம்பி மீண்டும் பொன்னி நதிக்கரைக்கு வந்து தன் உடல் மறைத்து வைத்த இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு தன் உடலைக் காணவில்லை. தன் உடலைத் தேடிய திருமூலர் தன் உடல் கிடைக்காததால் தன்னுடைய ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்று பார்க்கிறார். இந்த உடலிலேயே இருந்து வேதங்களையும் ஆகமங்களையும் தமிழில் தொகுத்து அளிப்பதற்காக இறைவன் தன்னுடைய உடலை மறைத்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்து இறைவனின் எண்ணத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

திருமூலர் இறைவனின் திருவடியில் தன் எண்ணத்தை வைத்து அங்கிருந்து கிளம்பி செருக்கை அழிக்கும் திருவாவடுதுறை இறைவன் இருக்கும் இடத்திற்கு வருகிறார். கோவிலில் இருக்கும் பரந்து விரிந்த படர் அரசு மரத்தின் கீழே இறைவனின் நாமத்தை ஓதிக்கொண்டே தியானத்தில் அமர்ந்தார். (பாடல் 79 இல் காண்க). வருடத்திற்கு ஒரு முறை விழித்து தான் தியானத்தில் உணர்ந்ததை பாடலாக எழுதினார். இப்பாடலுக்கு மந்திர மாலை என பெயரும் கொடுத்தார். (பாடல் 86 இல் காண்க). இது போல 3000 வருடங்கள் தியானம் இருந்து வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல்களை எழுதினார். இறைவனைப் பற்றியும் இறைவன் அருள் புரியும் விதத்தையும் உலகம் செயல்படும் விதத்தையும் இந்த உலகத்தில் உயிர்கள் இருக்கும் பிறவியை அறுத்து இறைவனிடம் எப்படி சேரலாம் என்பது பற்றியும் நான்கு வேதங்களில் உள்ளவற்றையும் தியானத்தில் உணர்ந்து அதனை தமிழில் பாடல்களாக எழுதினார். பல சூட்சுமமான செய்திகளை மறைமுகமாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல பாடல்களில் அருளியிருக்கிறார். இப்பாடல்களை மாலையாக கோர்த்து இறைவனுக்கு மாலையாக திருமூலர் சாற்றினார். இதற்கான குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சிதம்பரம் வந்தடைந்து தன் குருவான இறைவனுடன் கலந்து விட்டார்.

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000). திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது 3000 வருடங்கள். அதன் பிறகு தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 637 முதல் 653) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞானசம்பந்தர் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றது என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார். அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அருளிச் செய்தார். அவருக்கு பின்பு வந்த சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். அவருக்குப்பின் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை முப்பத்து ஒன்றாவதாகச் சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

திருமூலர் எழுதிய திருமந்திர மாலை பாடல்களை உலகத்தவர்களால் முதலில் தமிழ் மூவாயிரம் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும் தந்திரங்களும் மனித சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தாரகள். திருமூலர் பரம்பொருளாகிய இறைவனைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரத்தில் பாயிரம் தலைப்பு தவிர்த்து ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர்கள் என்பது திருமூலரின் திருவாக்கு.

சர்வ மங்கள குருதேவா
சிவப்ப்ரியா மகாதேவா
ஞானரூபா அருள் தேவா
சத்குருவே நமோநமக

திருமூலர் திருவடிகளே சரணம்

முக்தி

நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் எங்கே செல்கிறீர்கள் என்றான். நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே எங்கே செல்கிறீர் என்று கேட்டான். நாரதரோ நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று அவனும் கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார்.

சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன், நாரதரே என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீரா என்றான். ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார் என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா எல்லாம் வீணாகிப் போனதே என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டான். நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா நாரதரே என்றான் அவன். ஆம் கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார் அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான் என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது மகனே இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது. அவனது விடா முயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனைப் பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. அந்த வைராக்கியமே அவனை முக்திக்கு அழைத்துச் சென்றது. தினம் கடவுளை வணங்குவேன் எத்தனை துயர் வந்தாலும் கடவுளை நாம ஜபம் செய்யாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என வைராக்கியத்தோடு ஆண்டவனிடம் சரண் அடைய வேண்டும்.

ராவணன் கேட்ட தட்சணை

ராமனின் பாதம் பட காத்திருந்த சேது பாலத்தை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வேண்டியனவற்றை தயார் செய்ய பணித்தார். ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார். அப்படி யாரேனும் அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். பதிலைக் கேட்ட ராமனின் பிறகென்ன நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள் என்றார்.

விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா!? அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் சுக்ரீவனும் அவனின் சேனைகளும் ராமனின் விருப்பமறிந்த வாயு மைந்தன் இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார் அஞ்சனை மைந்தன். அரக்கர்கள் சூழ்ந்தனர், அரக்கர்களே சண்டையிட வரவில்லை. நான் சிவ பூஜை செய்து வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி வந்துள்ளேன். தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு வியந்தது ராவணனோடு அவனது சபையும் இது சூழ்ச்சி என்றனர் சபையோர். சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமோ? தயை கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன். அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்து இந்த வேள்வியை நடத்தித்தர ஒப்புக் கொண்டான் சிறந்த சிவ பக்தனான ராவணன்.

பூஜை நடத்தி தர வந்த ராவணன் ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவனது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவன் தோன்றுவான் என ராவணனும் எண்ணினர். பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் பகிரவும் என்ற ராமனின் கோரிக்கைக்கு தசரத மைந்தா ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது. ஆனால் துணைவியின்று கிரஹஸ்த்தன் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை என்று பதிலளித்தார் இலங்கேஸ்வரன். தாங்கள்தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமன். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன் பூஜைக்காக சீதாவை பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது. மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை அழைத்து சென்று விடுவேன் என்ற நிபந்தனையுடன் வரவழைத்தார். இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயைக்கூர்ந்து தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பியவண்ணம் பண்டிதரான ராவணனிடம் வினவினார் ராமன். அதற்கு தணிந்த குரலில் ராம பிராணுக்கு மட்டுமே கேட்கும் படி ராவணன் பதில் அளித்தான். என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை. தட்சணை தராததால் பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும். யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும்தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த இலங்கேஸ்வரன். (மூலம்: வேதவியாசர் ராமாயணம்)

Image result for ராமன் செய்த சிவபூஜை

46 – திருமூலர்

திருக்கைலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.

இவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளியிருக்கும் பொதிகை மலையை அடையும் பொருட்டுத் திருக்கைலையிலிருந்து புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி, வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். திருக்கேதாரம், பசுபதிநாதர் கோவில், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்து விட்டு பின்பு காஞ்சி நகரையடைந்து, திருவேகம்பப் பெருமானை வழிபட்டு அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர் திருவதிகையை அடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப் புலியூரை வந்தடைந்தார். எல்லா உலகங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார்.

தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார் அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருத்தலமான திருவாவடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு அத்திருத்தலத்திலே சிறிது காலம் தங்கியிருந்தார். சில காலம் கழித்து திருவாவடு துறையிலிருந்து கிளம்பிச் செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்று தொட்டு ஆநிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச்சுற்றி வந்து வருந்தி அழுதன. மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் இப்பசுக்களின் துயரத்தினை நீக்குதல் வேண்டும் என்ற எண்ணம் திருவருளால் தோன்றியது. இந்த இடையன் உயிர் பெற்று எழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்காது என எண்ணிய தவமுனிவர் தம்முடைய திருமேனியைப் பாதுகாப்பாக ஒரிடத்தில் மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் சித்தியினால் தமது உயிரை அந்த இடையனது உடம்பில் புகுமாறு செலுத்தினார். மூலன் அதுவரை உறங்கியிருந்தவன் போல் சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தான்.

திருமூலர் விழித்தெழுந்ததைக் கண்டு பசுக்கள் மகிழ்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தின. துள்ளிக் குதித்தன. திருமூலராகிய சித்தருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவரும் பசுக்களைத் தட்டிக்கொடுத்து அவற்றோடு சேர்ந்து துள்ளிக் குதித்தார். மாலை வந்ததும் வீடு நோக்கி பசுக்கள் புறப்பட திருமூலரும் கூடவே புறப்பட்டார். ஒவ்வொரு பசுவும் தத்தம் வீடு அறிந்து புகுந்து கொண்டன. திருமூலர் அவற்றை எல்லாம் வீடு சேர்த்தார். ஆனால் மூலன் மட்டும் அவரது வீட்டிற்கு போக விரும்பவில்லை. அவர் ஞான திருஷ்டியால் மூலனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்தார். அதனால் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினார். மூலனின் மனைவி கணவன் வரவை வெகு நேரமாக எதிர்பார்த்துப் பயன் ஏதும் இல்லாததால் கணவனைத் தேடிப் புறப்பட்டாள். வரும் வழியிலே ஓரிடத்தில் கணவன் அமர்ந்து இருப்பதைக் கண்டு வியப்பு மேலிட அருகே சென்று வீட்டிற்கு வரக் காலதாமதம் ஆனது பற்றி வினவினாள். மூலன் மௌனம் சாதித்தார். மூலனின் மனைவி வியப்பு மேலிட கேள்வி மேல் கேள்வி கேட்டாள். திருமூலர் மௌனமாகவே இருந்தார். அவரது மனைவிக்கு புரியவில்லை. திருமூலரின் கையைத் தொட்டு அழைக்க முற்பட்டாள். அம்மையார் செய்கை கண்டு திருமூலர் சிறிது எட்டி விலகினார். அதைக் கண்டு அந்தப் பெண்மணி அஞ்சி நடுங்கி உங்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தது? எதற்காக இப்படி விலகுகிறீர்கள்? என்று மன வருத்தத்தோடு கேட்டாள். திருமூலர் மூலனின் மனைவியிடம் என்னால் உன் வீட்டிற்கு வர முடியாது. உனக்கும் எனக்கும் இனி மேல் எவ்வித உறவும் கிடையாது. அதனால் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு அமைதி பெறுவாயாக என்று கூறினார். அதற்குமேல் அவள் முன்னால் நிற்பதும் தவறு என்பதை உணர்ந்து திருமூல யோகியார் அத்தலத்திலுள்ள திருமடம் ஒன்றுக்குச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார். கணவனின் நிலையைக் கண்டு கதிகலங்கிப் போனாள் மனைவி. கணவனின் மனமாற்றத்தைப் பற்றி ஒன்றும் புரியாமல் கவலையோடு வீடு திரும்பினாள்.

இரவெல்லாம் பெருந்துயர்பட்டுக் கிடந்தாள். மறுநாள் மூலனின் மனைவி சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு அவர் இருக்குமிடத்திற்கு வந்தாள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் திருமூலரின் முகத்தில் தெய்வ சக்தி தாண்டமாடுவது போன்ற தனிப் பிரகாசம் பொலிவு பெறுவது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர். இருந்தும் அவர்கள் மூலனின் மனைவிக்காக திருமூலரிடம் வாதாடினர். ஒரு பலனும் கிட்டவில்லை. அதன் பிறகு திருமூலர் ஒரு முனிவர் என்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்கள் மூலனின் மனைவியிடம் உன் கணவர் முன்னைப்போல் இல்லை. இப்பொழுது அவர் முற்றும் துறந்த முனிவராகி விட்டார். இனிமேல் இந்த மெய்ஞானியாரோடு வாழ வேண்டும் என்பது நடக்காத காரியம் என்ற உண்மையைக் கூறினர். அவர்கள் மொழிந்ததைக் கேட்ட மூலனின் மனைவி கணவனுக்கு இப்படிப் பித்துப் பிடித்து விட்டதே என்று தனக்குள் எண்ணியவாறே அவரது கால்களில் விழுந்து வணங்கி வேதனையோடு வீடு திரும்பினாள். சற்று நேரத்தில் யோகநிலை தெளிந்த திருமூலர் மறைவாக ஒரு இடத்தில் வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். கிடைக்கவில்லை முதலில் யோகியாருக்கு சற்று வியப்பாகவே இருந்தது. மீண்டும் யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மைப் பொருளை உணர எண்ணம் கொண்டார். தபோ வலிமையால் இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே முக்கண்ணனார் தம் உடலை மறைத்தருளினார் என்பதை உணர்ந்து கொண்டார். திருமூலநாயனார் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

மூலனின் ஊரிலிருந்து புறப்பட்ட திருமூலர் திருவாவடுதுறை திருத்தலத்தை அடைந்து மூலவர் பெருமானைப் பணிந்தவாறு மதிலுக்கு வெளியே மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகம் செய்யத் தலைப்பட்டார். சிவயோகத்தில் நிலைத்து நின்று இதயக் கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். உணர்வு மயமாய்த் திகழ்ந்தார். உலகோர் பிறவியாகிய துன்பத்திலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறும் நல்ல திருமந்திர மாலையினை ஓர் ஆண்டிற்கு ஒரு மந்திரப் பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்து மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையை பாடினார். சிவயோக நுணுக்கங்களை விளக்கமாகக் கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல். தெய்வீக ஆற்றலுடன் திகழ்ந்து சிவபதவியை நினைப்பவரைப் பாவக் குழியிலிருந்து வெளியேற்றிக் காப்பதால் திருமந்திரம் எனத் திருநாமம் பெற்றது.

திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது. அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும் இலக்கியங்களையும் நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டராக போற்றப்படுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்தப் பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்குத் தான் திரும்பும்வபொழுது கொண்டு வந்தார் என்பதும் அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு. இதற்குச் சான்றாக இன்றளவும் பழைய கணபதியின் தொப்பையில்லாத திருவுருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இருப்பதை இன்றும் காணலாம். இவரது திருநூலுக்குத் தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது. அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்று வழங்கப்பட்டது.

திருமூலர் பரம் பொருளாகிய சிவபெருமானைப் போற்றி பாடியருளிய திருமந்திரம் வேத ஆகமங்களின் சாரம். இது ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக தெய்வீக ஆற்றலுடன் விளங்குவது இந்தத் திருமந்திரம். இது. சைவ சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது. இந்தப் புனிதமான திருமந்திரத் திருமுறைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு. இவ்வாறு உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திர மாலையை அருளியபின் திருமூலர் சிதம்பரம் சென்று தில்லை நாதனுடன் கலந்து தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்தார்.

பிற்குறிப்பு:

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்ற போதும் திருமந்திரத்தின் காலம் தற்கால ஏழாம் நூற்றாண்டு (கி.பி) என்று பல வரலாற்று வல்லுநர்களால் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தான் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை ஆலையத்தின் கொடி மரத்தின் அடியில் தான் எழுதிய திருமந்திரம் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புதைத்து வைத்துவிட்டு அவர் சிதம்பரம் சென்று நந்தீசுவரருடன் கலந்து விட்டார். அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்) தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞான சம்பந்தப் பெருமான் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலின் வாயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைய அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றதே என்ன என்று பாருங்கள்’ என்று கூறி கொடி மரத்தின் அடியில் உள்ள மண்ணைத் தோண்டச் செய்து அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளை கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் அதை வெளியிட்டு அனைவருக்கும் ஓதி அருளச் செய்தார்.

பிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாக சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

குருபூஜை: திருமூல நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

குபேரன்

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கியது. தன்னிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தையும் இறைவன் சிவபெருமானை அழைத்து வந்து காட்டி அதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணினான் குபேரன். தன் எண்ணத்தைச் செயல்படுத்திட கைலாயத்துக்குச் சென்று சிவபெருமான் பார்வதி தேவி ஆகியோரை வணங்கினான். அவர்களைத் தன் இல்லத்திற்கு ஒரு முறை வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி அழைத்தான். குபேரனது உள் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிவபெருமான் என்னால் உடனடியாக அங்கு வர முடியாது. நீ வேண்டுமானால் என் மகன் கணபதியைத் தற்போது அழைத்துச் செல். அவனுக்கு விருந்தளித்துத் திருப்திபடுத்தி அனுப்பி வை. பின்னொரு நாளில் நானும் பார்வதியும் உன் இல்லத்திற்கு வந்து விருந்து சாப்பிடுகிறோம் என்றார்.

குபேரனும் அதற்குச் சம்மதித்து சிவபெருமானிடம் விநாயகருக்குத் தேவையான உணவளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்புகிறேன் என்று வாக்களித்து விநாயகரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான். விநாயகரைத் திருப்திப்படுத்தும்படியாகவும் குபேரனின் செல்வச் செழிப்பை அவர் அறிந்து கொள்ளும்படியாகவும் பல்வேறு வகையான உணவு வகைகள் ஆடம்பரமாகச் செய்யப்பட்டன. விநாயகர் விருந்துண்ணுவதற்காக வந்து அமர்ந்தார். உணவு வகைகள் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. விநாயகரும் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வொன்றையும் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். குபேரன் அவர் சாப்பிடுவதை ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

குபேரன் அச்சத்தின்படியே அவன் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவு அனைத்தும் காலியாகி விட்டது. குபேரன் தன் வீட்டிற்கு அருகில் இருந்த அனைத்துக் கிராமங்களிலுமிருந்து உணவை வரவழைத்துக் கொடுத்தான். இருப்பினும் விநாயகரின் பசி அடங்கவில்லை. பசி அடங்காத விநாயகர் குபேரன் வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்களையெல்லாம் விழுங்க தொடங்கினார். இப்படியே போனால் வீட்டில் ஒன்றுமே மிஞ்சாது என்ற நிலை குபேரனுக்கு உண்டாயிற்று. குபேரன் எவ்வளவு முயன்றும் விநாயகரைத் தடுக்க முடியவில்லை. பதற்றமடைந்த குபேரன் ஈஸ்வரா அபயம் அபயம் என கைலாயத்திற்கு ஓடினான். சிவபெருமானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவபெருமான் அவனிடம் குபேரா உம்மிடமிருக்கும் தான் ஒருவனே மிகப்பெரும் செல்வந்தன் என்கிற கர்வத்தை விட்டுவிட்டு விநாயகனுக்கு ஒரு கைப்பிடி சாதம் கொடு அவன் பசி அடங்கிவிடும் என்றார். தன் தவற்றை உணர்ந்த குபேரன் தன் கர்வத்தை விட்டுவிட்டு ஒரு பிடி சாதத்தை விநாயகருக்கு அளித்தான். அதைச் சாப்பிட்ட விநாயகரின் பசி அடங்கியது. குபேரனின் கர்வமும் காணாமல் போனது. இந்த கதையில் சில உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

  1. நம் செல்வ வளத்தை ஊரறிய செய்வதற்காக தெய்வங்களுக்கு பலவகை பதார்த்தங்களை படைத்தலை விட உள்ளன்போடும் தூயபக்தியோடும் ஒருபிடி சாதம் படைத்தாலும் அதுவே நிறைவானது.
  2. நாம் எப்போதும் நம்மிடம் இருக்கும் பொருள் மற்றும் அறிவு ஆகிய இரண்டையும் கொண்டு கர்வம் கொள்ளக் கூடாது. அவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்க வேண்டும்.
Image result for குபேரன் விநாயகர்

சித்தர்கள்

சித்தர்கள்

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர். மனிதன் முயன்றால் சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில் சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால் இக்கலிகாலத்தில் அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம். சித்தராவதற்கு முதற்படி தன்னையும் இந்த உலகையும் இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே.

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே.

என்கிறார். ஆக முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில் அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி பரிகாரம் போன்றவை செய்தாலும் சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால் அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்? இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே. சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். வெறும் 18 பேர் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

சித்தர்களை வெறும் தமிழர்கள் இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோமரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள் இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சித்தர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால் மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும் நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். சித்தர்களைத் தியானித்தால் அவர்களின் திருவருள் கிடைத்தால் அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால் கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.

சராசரி மனிதனின் நிலையும் இறைநிலை நோக்கி உயரும். ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது? தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம் கர்மவினையை வெல்வது எப்படி? இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம் விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

சித்தர்கள் இறைவன் என்பவன் யார் அவனை அடையும் மார்க்கம் என்ன பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி? ப்ரம்மம் என்பது என்ன? இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான்? உலகிற்கு அடிப்படையாகவும் உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது? உடல் தத்துவங்கள் உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து பலபிறவிகள் எடுத்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள். சொல்லப்போனால் சித்தத்தை அடக்கி தாங்களும் சிவமாய் இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம். சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை

காசியில் (வாரணாசி) பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.