உமையொரு பாகன்

ஒரு பாதி ஆண்மைக்குரிய திண்மையும் உறுதியும் மறுபாதியில் பெண்மையின் மென்மையும் நளினமும் கொண்ட உமையொரு பாகன். இடம்: அமிர்தகடேஸ்வரர் கோயில். மேலக்கடம்பூர் கடலூர்மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 666

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒவ்வொரு மனிதனின் விதியானது மிகமிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையில் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் மிகக் கடினம். மனிதன் எண்ணிவிடலாம் உடலில் வலுவிருந்து கையில் தனமிருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று. அதுபோல் தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவ கிரகத்தினாலும் ஒன்பதாம் இடத்து அதிபதியினாலும் கர்ம பாவத்தினாலும் அதையும் தாண்டி இறைவனின் கருணையினாலும் கடாட்சத்தினாலும்தான் நடக்கும். ஆலய தரிசனமோ தல யாத்திரையோ சரியானபடி திட்டமிடாலே என்று மனிதன் எண்ணிவிடக் கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும்.

ஸ்ரீ எண்டல மல்லிகார்ஜுன சுவாமி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரவிவலசையில் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் 20மீ உயரமும் 3மீ அகலமும் கொண்டது. இந்த சிவலிங்கம் திறந்தத வெளியில் உள்ளது.

தல புராணத்தின் படி திரேதா யுகத்தில் ராமர் ராவணனைக் கொன்றுவிட்டு அயோத்திக்குத் திரும்பும் போது ​​அவர்களின் மருத்துவரான சுஷேணன் சுமஞ்ச பர்வதத்தில் தங்கி சிவபெருமானுக்காக தவம் செய்ய விரும்பினார். அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு உதவ விரும்பினார். சிறிது நேரம் கழித்து ராமர் அனுமனை அனுப்பி சூஷேணனை பற்றி விசாரிக்கச் சொன்னார். அனுமன் வந்தபோது ​​சுஷேணன் இறந்து விட்டதைக் கண்டான். சுஷேணனின் உடலைக் கண்டு மனம் வருந்திய அவர் உடலை மான் தோலால் மூடி அதன் மேல் சில மல்லிகைப் பூக்களை வைத்துவிட்டு அந்தச் செய்தியை ராமருக்குத் தெரிவிக்கச் சென்றார். ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணன் அங்கு வந்து மரியாதை செலுத்தி அவர்கள் மான் தோலை அகற்றும்போது ​​ஒரு சிவலிங்கம் இருந்தது. சுயம்பு லிங்கத்தின் அருகில் உள்ள புஷ்கரிணியில் (குளத்தில்) நீராடி பூஜை செய்துவிட்டு புறப்பட்டனர். சிவலிங்கம் படிப்படியாக வளர்ந்தது. சிவலிங்கம் வந்ததில் இருந்து மக்கள் நலம் பெற ஆரம்பித்தனர். இந்த சுவாமி மல்லிகாஜூன சுவாமி என்று அழைக்கப்பட்டார். மல்லிகைப் பூ மற்றும் அஜினா என்றால் மான் தோல் என்று பொருள். அதனால் அவர் மல்லிகாஜின சுவாமி என்று அழைக்கப்பட்டார்.

பிற்காலத்தில் துவாபரயுகத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தில் இருந்த போது ​​அர்ஜுனன் இந்த சுவாமியை வழிபட்டுள்ளார். எனவே அவர் மல்லிகார்ஜுன சுவாமி என்று அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் தெக்கலியின் ராஜா இந்த சிவலிங்கத்தைச் சுற்றி கோயில் கட்ட முயன்றார். ஆனால் அது வெற்றிபெறவில்லை. சிவபெருமான் அவரது கனவில் தோன்றி அவரை கோயிலில் அடைக்க வேண்டாம் என்றும் தன்னைத் தொட்டு பக்தர்களை அடையும் காற்று அவர்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்று கூறினார். அதனால் கோவில் கட்டப்படவில்லை. அவர் சூரிய ஒளியில் (தெலுங்கில் எண்டா) வெளிப்பட்டதால் இந்த சுவாமி ஸ்ரீ எண்டல மல்லிகார்ஜுன ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 665

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நாங்கள் அடிக்கடி கூறுவது என்னவென்றால் இறைவனே தவறு செய்யத் தூண்டினாலும் விதியே தவறான வழிக்கு அழைத்துச் சென்றாலும் போராடிப் போராடி ஒரு மனிதன் இறைவழியில் வந்து தன்னுடைய மனதை வலுவாக்கி உள்ளத்தை உறுதியாக்கி தவறான பழக்கங்களுக்கு எதிராகவே தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.

ஒவ்வொரு மனிதன் பின்னால் எத்தனையோ பாவ வினைகள் மறைந்து நின்று செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப் போட வேண்டுமென்றால் பகவானின் திருவடியை சதா சர்வ காலம் எண்ணுவதோடு எந்தவித குழப்பம் இல்லாமலும் சந்தேகம் இல்லாமலும் அள்ளி அள்ளி தந்து கொண்டே போகிற தர்மம் ஒன்றுதான் எளிய வழி. இந்நிலை உயர உயர ஒரு மனிதனின் உச்ச நிலையிலே இனி என்னுடையது என்று எதுவும் இல்லை எல்லாம் இறைவன் தந்து என் கண்ணில் படுகின்ற மனிதர்களுக்கு என்ன தேவையோ பிற உயிர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உதட்டால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உள்ளத்தால் முடிந்த ஒரு பிரார்த்தனையை செய்கிறேன். நான் பெற்ற பொருளால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறருக்காக அர்ப்பணம் செய்கின்ற குணம் வந்துவிட்டால் இறைவன் அருள் அவனிடம் பரிபூரணமாக பரிமளிக்க தொடங்கும். இது போல் நிலையிலே பிறருடைய பிரச்சினைகளை நீக்க ஒரு மனிதன் முயற்சி செய்தாலே அவனுடைய பிரச்சனைகளை தீர்க்க இறைவன் முன் வந்து விடுவான்.

அமர்ந்த நிலையில் பரமபதநாதர்

ஆதிசேஷன் மேல் அமர்ந்தவாறு பச்சைக்கல்லால் ஆன பெருமாள் பரமபதநாதர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இடம்: கரிவரதர் பெருமாள். கரிய மாணிக்க பெருமாள் கோவில் பனம்பாக்கம் கடம்பத்தூர் செஞ்சி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 664

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நடக்கட்டும் நம்புகிறோம் என்பது மனிதர்களின் வாக்கு. நம்புங்கள் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.

எம் வழியே வருகின்ற மனிதர்கள். திடம் கொண்டு வைராக்கியம் கொண்டு தர்ம வழியிலும் சத்திய வழியிலும் இறை பக்தி வழியிலும் மிக நன்றாக செல்ல செல்ல நாங்களே ஒன்றை கூறி அதனை தேவையான தருணத்தில் நடத்தாமல் மாற்றுவோம். யாம் ஒன்றை கூறாமல் நடவாதப்பா என்று கூறி நடத்தியும் காட்டுவோம். இந்த இரண்டிற்கும் பல்வேறு விதமான கர்ம வினை சூட்சும நுணுக்கங்கள் உண்டு. அதை ஒரு விதமாக நுணுக்கமாக ஆய்ந்து பார்த்தால்தான் புரியும்.

ஆண்டாண்டு காலம் மந்திரங்களை ஜெபித்தாலும் மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டால் ஓட்டை பாத்திரத்தில் நீரை வைத்தது போல் ஆகிவிடும். முதலில் பூஜை தர்மம் தொண்டு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு பிறர் மனதை புண்படுத்தாமல் நாகரீயமாக வார்த்தைகளை பயன்படுத்துவது முக்கியம். அந்த பயிற்சியை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 663

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நீங்கள் அனைவருமே முன் ஜென்மங்களில் சித்தர்களிடம் உரையாடியவர்கள் தான். உறவாடியவர்கள் தான். அப்போது நீங்கள் எல்லாம் யாது கேட்டீர்கள் என்றால்? எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்களை மறக்கக் கூடாது என்று கேட்டீர்கள். எனவே நீங்கள் மறந்தாலும் நாங்கள் யாரையும் மறக்க மாட்டோம். மறந்தும் கைவிட மாட்டோம் என்பதால் நீங்கள் அனைவரும் சித்த வழி தொண்டு செய்ய வேண்டும். அந்த வழியில் இறைவனை காண வேண்டும். இதுபோல் யாம் கூறுவது என்னவென்றால் சேய்கள் எம்மை நாடும் தருணம் எது நடப்பினும் மனம் தளராமல் வந்தால் இறுதியில் இறைவன் அருளால் பரிபூரண வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நடராஜர் 18 கைகளுடன்

நடராஜர் பதினெட்டு கைகளுடன் தாமரை இலைகளின் விளிம்புடன் தாழ்ந்த பீடத்தில் நிற்கிறார். இரண்டு கைகளிலும் பாம்பை வைத்திருக்கிறார். இடது புறத்தில் மீதமுள்ள கைகள் டமருகம் பாசா ஜெபமாலை அபயமுத்ரா கபாலாம் கோடாரி திரிசூலம் வைத்திருக்கிறார். இரண்டு கைகள் தர்ஜனி மற்றும் வரத முத்திரையில் உள்ளது. நந்தி ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் விநாயகர் இரண்டு கைகளுடன் உள்ளார். விநாயகருக்கு வலப்புறம் ஒருவர் தரையில் அமர்ந்து இரண்டு மேளம் வாசிக்கிறார். இடம் பாதாமி குகை எண் 1.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 662

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மனித வாழ்க்கையில் கடமையை செய்தோம். பிரார்த்தனை செய்தோம். பிறருக்கு நன்மையை செய்தோம் என்று போக வேண்டும். பெரிய அளவிலே ஒன்றின் மீது பற்றும் அதி தீவிர பாசமும் வைத்தால் பிறகு அது நம்மை பாடாய்படுத்தும். இன்பம் என்ற ஒன்றை எவன் ஒருவன் உணருகிறானோ அவனால் தான் துன்பத்தை உணர முடியும். எவன் எதிலேயும் இன்பத்தையும் பார்க்கவில்லையோ அவனுக்கு எதனாலும் எவற்றாலும் துன்பமில்லை. அது இறை ஒருவருக்குத் தான் சாத்தியம். அதனால்தான் இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே என்று கூறப்படுகிறது. அண்ட சராசரங்களை படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஏதுமில்லை. தன் உள்ளத்தை தவிர.