ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 642

கேள்வி: நாக தோஷம் போக வழிமுறைகள் என்ன?

நாக தோஷம் என்பது எல்லா விதமான பாவங்களின் மொத்த குவியல். நாக தோஷம் என்பது ஒரு குறியீடு. இதிலிருந்து விடுபட இரு வழிகள் ஒன்று ஆன்மீக வழியில் துர்க்கை கணபதி ராகு கேது தெய்வங்களின் காயத்ரி மந்திரத்தை தினமும் 27 எண்ணிக்கை உருவிடுவதுடன் இரண்டாவதாக பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வது பசுக்களை தானமாக தருவது பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும். ஏழை பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றை செய்யலாம்.

வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தை வைத்து செய்து வைத்து ஏதோ மண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி அதன் தலையில் சில மலர்களை இட்டு ஒரு துளி பாலையும் இட்டு அதை ஆழியிலோ நதியிலோ கரைத்து விட்டால் நாக தோஷம் போய்விடும் என்றால் எளிதாக எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு குறியீடு அடையாளம். இருந்தாலும் மேல் கூறியவற்றோடு இப்பொழுது இவ்வாறு நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால் ஏதாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டு விடலாம். அது ஆலய தொண்டிற்கு பயன்படட்டும். இல்லை அந்த வெள்ளியை உபயோகமாக தனமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாக தோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகள் ஆகும்.

நாராயணி

ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று. இடம்: கங்காஜடாதீஸ்வரர் கோவில் கோவிந்தபுத்தூர் அரியலூர் மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 641

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

சித்தர்கள் இருக்கிறார்கள் இல்லை. இறை இருக்கிறது அல்லது இறை இல்லாமல் போகிறது. சட்டம் இல்லாமல் போகிறது. இப்படி எது இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக மிக மிக நல்லவனாக மாற வேண்டியது கட்டாயம். அதனால் தான் சிந்திக்கும் ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது போல் நிலையிலேயே தொடர்ந்து இறைவழியில் வருவதாகவும் சித்தர்கள் வழியில் வருவதாகவும் கூறிக் கொள்கின்ற மனிதன் இந்த வழிமுறையை அறியாத தெரிந்து கொள்ளாத அல்லது அறிந்தும் பின்பற்ற முடியாத எத்தனையோ சராசரி மனிதர்கள் வாழ அவர்கள் செய்ய அஞ்சுகின்ற செயலை எம்மை அறிந்தும் எம் வாக்கை அறிந்தும் இன்னும் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் ஓரளவு தெரிந்தும் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் விதியை நோவதா? அல்லது சரியாக வழி காட்டாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஓலையிலே வந்து கனக வண்ண அச்சரத்திலே காட்டி காட்டி காலம் தோறும் ஓதி ஓதி அவற்றையெல்லாம் செவியில் கேட்டு கேட்டு மனதிலே பாதிக்காமல் விட்ட சேய்களைப் பற்றி விசனப்படுவதா?

எம் வழியில் வருவதாக எவனொருவன் உறுதியாக முடிவெடுத்து வந்தாலும் உடனடியாக சற்றும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் எப்படி வீட்டிற்குள் அரவம் வந்துவிட்டால் அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒரு மனிதன் ஈடுபடுகிறானோ எப்படி ஒரு இல்லம் தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க முயல்கிறானோ அதேபோல உள்ளத்திலே ஒரு தீய எண்ணமும் ஒரு ஒழுக்கக் கேடான எண்ணம் தோன்றினால் அது முளை விடும் பொழுதே அதனை கிள்ளி எறிந்து விட வேண்டும். அது விருட்சமாகி விட்டால் பின்னர் அதை அகற்றுவது கடினம். அது இருந்து விட்டுப் போகட்டும் நன்றாக தானே இருக்கிறது அழகாக தானே இருக்கிறது என்று ஒரு மனிதன் எண்ணினால் பிறகு அந்த தீய விருட்சம் அவன் உள்ளம் என்னும் வீட்டையே இடித்து விடும். எனவே இது போல் கருத்தை மனதில் வைத்துக் கொண்டு காலாகாலம் எமது வழியிலே விடாப்படியாக வருகின்ற சேய்களுக்கு இறைவன் அருளால் யாம் எமது நல்லாசியைக் கூறிக் கொண்டே இருப்போம் ஆசிகள்.

சிரித்த முகத்துடன் முருகன்

சுகாசனத்தில் வீற்றிருந்த கோலத்தில் முருகர் அருள் பாலிக்கிறார். தலையில் கரண்ட மகுடம். ஒரு கையில் அக்ஷர (அக்க) மாலை. இன்னொரு கையில் சக்தி ஆயுதம்.

சூரியன் விஸ்வகர்மாவிடம் சென்று தன் கடுமையான வெளிச்சத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விஸ்வகர்மா சூரியனின் ஒரு சிறு பகுதியை உடைத்து சக்தி ஆயுதத்தை உருவாக்கினார். இதைக் கொண்டுதான் முருகர் மலைகளைப் பிளக்கிறார். எதிரிகளை அழிக்கிறார். முருகன் சன்னவீரம் என்ற குறுக்காகச் செல்லும் மார்புப் பட்டைகளை அணிந்திருக்கிறார். பாண்டியர்களின் கலைப் படைப்பில் உருவானது இந்த சிற்பம். இடம்: கழுகுமலை வெட்டுவான் கோவில். தூத்துக்குடி மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 640

கேள்வி: குறிப்பிட்ட ஒரு நன்மை நடக்க வேண்டும் என்று எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் வேறு நன்மைகளை வேண்டினால் கிடைக்காதா?

ஒரு ஆலயத்தின் மண்ணை மிதிக்கும் பொழுதே கிரக நிலை கொண்ட மனிதர்களின் தோஷங்கள் குறையட்டும் என்பதற்காக விதவிதமாக ஆலயங்கள் இங்கே எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஒரே ஆலயம் சராசரி மனிதன் செல்லும் பொழுது உலகியல் தேவையை தரும் தருவாகத் தோன்றுகிறது. அதே ஆலயத்திற்கு ஓரளவு பற்றை விட்ட ஞானி செல்லும் பொழுது முக்தியே நல்கின்ற ஆலயமாக தோன்றுகிறது. எனவே இருப்பது அதுபோல் ஒரே ஆலயம்தான். செல்லுகின்ற பக்தர்களின் என்ன ஓட்டத்திற்கு ஏற்ப மனோ தர்மத்திற்கு ஏற்ப மனப்பக்குவத்திற்கு ஏற்ப அந்த மனிதனுக்கு நல்லருளை வழங்குகிறது. எதுவும் வேண்டாம் இறைவா நீ தான் வேண்டும் என்ற என்று வேண்டுகின்ற உள்ளங்கள் ஆலயம் செல்லும் பொழுது அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டுள்ள ஆலயமாக இருந்தாலும் அதுபோலவே நலம் நடக்கிறது

திருசெந்தூர் தலபுராணம்

திருச்செந்தூர் தல புராணம் புத்தகம் PDF வடிவில் டவுண்லோடு செய்து கொள்ளும் வசதி இந்த பக்கத்தில் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 639

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவன் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் தளராத பக்தி தடைபடாத தர்மம் தவறாத தர்மம் என்றென்றும் இதுபோல் வழியிலே மாந்தர்கள் செல்ல செல்ல இறைவனின் பரிபூரண அருளும் தொடருமப்பா. அப்பனே இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றுமே நலமே நடக்கும் என்று யாம் காலாகாலம் கூறிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் இயம்புங்கால் மனிதனின் மனதிலே உறுதியின்மையும் தெளிவு இல்லாததாலும் லோகாயத்தை அழுத்தம் திருத்தமாக பிடித்துக் கொண்டிருப்பதாலும் உடனடியாக ஆதாயத்தை எப்பொழுதுமே மனித மனம் எதிர்பார்ப்பதாலும்தான் அனைத்து குறுக்கு வழிகளையும் மனிதன் கையாளுகிறான். நீக்கமற நிறைந்துள்ள இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கின்ற என்கிற ஒரு உணர்வு உண்மையாகவே மெய்யாகவே ஒரு மனிதனுக்கு அழுத்தம் திருத்தமாக இருக்குமானால் அவன் யாருமே பார்க்கவில்லை யாருக்கும் தெரியவில்லை நான் இடர்படுகிறேன் எனவே இந்த தவறை செய்யலாம். என்னை விட அதிக தவறு செய்யக் கூடிய மனிதன் நன்றாக தானே இருக்கிறான். எனவே நான் தவறு செய்யலாம். அது தவறு இல்லை என்ற வாத பிரதிவாதங்களை தமக்குள் வைத்துக் கொண்டு தவறான வழியில் சென்று கொண்டே இருக்கிறான்.

ஆயினும் கூட இறைவன் பார்க்கிறார் பார்க்கவில்லை மற்றவர்கள் அறிகிறார்கள் அறியவில்லை என்று சிந்திக்காமல் அவனவன் மனமே சாட்சியாக வைத்து ஒரு மனிதன் நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தாலே அம்மனிதனுக்கு இறை வழிபாடு கூட தேவையில்லை எனலாம். நன்றான இறை வழிபாட்டையும் நன்றாக பாசுரங்களையும் ஓதுவதோடு ஒரு மனிதன் நின்று விடக்கூடாது. அதையும் தாண்டி அப்பழுக்கற்ற மனிதனாக எல்லோருக்கும் நலத்தை செய்யும் புனிதனாக போராடியாவது வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோல் நல்ல வழியை தொடர்ந்து கடைபிடித்தாலே இறைவன் அருள் பரிபூரணமாக தொடரும். இல்லையென்றால் வெறும் சடங்குகளை மட்டும் செய்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு சராசரி மனித நிலைதான் அங்கு நிற்கும்.

எனவே இறைவனை வணங்கவும் தர்மங்களை செய்யவும் சத்தியத்தை பேசவும் மட்டுமல்லாது அடிப்படை மனித நேயத்தை மறந்து விடாமல் வார்த்தைகளில் பணிவு செயல்களில் பணிவு தேகத்தில் பணிவு பார்வையில் பணிவு என்று ஐம்புலனும் ஆதாரமாக இருக்கும் மனம் பணிய மனதோடு இருக்கும் ஆத்மா பணிய இப்படி பணிதலே இறைவனருளை பரிபூரணமாக பெற்றுத் தரக்கூடிய நல்லதொரு உயர் நிலையாகும். எனவே பணிதல் என்பது இறங்குதல் அல்லது தாழ்ந்து போதல் என்ற பொருள் அல்ல. வேடிக்கையாக கூறப்போனால் நிறை காட்டும் நிறை காட்டுமனி (தராசு) தூலக்கோல் அதை கவனித்தால் தெரியும். எங்கே அதிக கனம் பரிமாணம் தெரிகிறதோ அந்த தளம் தாழ்வு இருக்கும். கன பரிமாணம் இல்லாத அடுத்த தளம் உயர்ந்தே இருக்கும். இப்பொழுது அது உயர்ந்து இருப்பதால் மெய்யாக அது உயர்ந்ததா? இன்னொரு தளம் தாழ்ந்திருப்பதால் மெய்யாகவே அது தாழ்ந்ததா? எனவே முற்றிய பயிர் தலை கவிழ்ந்தே இருக்கும். ஆங்கே நிறை குடம் தளும்பாது இருக்கும். இவற்றையெல்லாம் மனிதர்கள் குறிப்பாக எமது வழியில் வரக்கூடியவர்கள் புரிந்து கொண்டு வாழ இறைவன் அருளும் தொடர்ந்து கொண்டே வருமப்பா.

வீணை இல்லாத சரஸ்வதி தேவி

கலைமகள் ஞானசரஸ்வதி தாமரை பீடம் மீது அமர்ந்த திருக்கோலம். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஞானசரஸ்வதி தனி சன்னதியில் இருக்கிறார். அர்த்த (பாதி) பத்மாசனத்தில் காட்சி தரும் இவளின் வலது கையின் ஆள்காட்டி விரல் மேல் நோக்கியபடி உள்ளது. இதற்கு சூசி முத்திரை என பெயர். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது என்பது இதன் பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணூல் கைகளில் ஜபமாலை கமண்டலம் சுவடி வளையல்கள் என கலை நயத்துடன் காட்சியளிக்கிறாள்.

சூரிய பகவான்

காஷ்யப முனிவருக்கும் அவரது மனைவி அதிதிக்கும் மாகா மாதம் 7 ஆம் தேதி சூரிய பகவான் பிறந்தார். இந்நாள் சூரிய ஜெயந்தியாகவும் ரத சப்தமியாகவும் கொண்டாடப்படுகிறது. 7 ஆம் நாள் ரத சப்தமியின் அடையாளமாக சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருகிறார். இங்குள்ள ஏழு குதிரைகள் சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன. இடம்: கேதாரேஸ்வரர் கோவில் ஹலேபீடு ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 638

கேள்வி: மனம் ஒடுங்க என்ன செய்ய வேண்டும்?

உலகியல் செயல்கள் அனைத்தும் கர்ம வினைகளால் (மனிதர்கள்) ஏற்படுத்திக் கொள்பவை. ஏற்பட்டுக் கொண்டிருப்பவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தில் பணி புரிகின்ற மனிதன் அந்த நிறுவனத்தை தன் இல்லமாக ஒரு பொழுதும் கருகுவதில்லை. வந்து போகின்ற இடமாகத்தான் கருதுகிறான். ஆனால் தன் இல்லம் தன் வாகனம் தன் குடும்பம் என்றால் சற்றே ஒட்டுதல் வந்து விடுகிறது. எனவே இந்த உலகத்தையும் ஒரு நிறுவனமாக பார்த்து இங்கே சில காலம் பணிபுரிய அந்த ஆத்மா இந்த உடம்பு என்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. வந்த பணி முடிந்தவுடன் இல்லம் திரும்புவது போல அது செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும் என்ற நினைவோடு வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டு விட்டால் மனம் ஒடுங்க தொடங்கிவிடும்.