ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 629

கேள்வி: மௌனம் பற்றி:

மௌனத்தை குறித்து பேசினாலே மௌனம் பங்கமாகிவிடுமப்பா. இதுபோல் நிலையிலேயே குரு தட்சிணாமூர்த்தியை குருவாரம் சென்று முடிந்த வரையில் வழிபாடுகளை செய்து வந்தாலும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை அன்றாடம் செய்து வந்தாலும் மௌனத்தவம் ஒருவனுக்கு சித்திக்கும்.

சிவ வடிவம் – 64. சிஷ்யபாவமூர்த்தி

தமிழ்க் கடவுள் என போற்றப்படுபவர் முருகபெருமான். இவர் தேவர்களைத் துன்புறுத்தி வந்த சூரபத்மனை அழித்தார். முருகன் வேறு சிவசக்தி வேறல்ல. அவரே இவர். இவரே அவர். ஆறு எண்ணிற்கும் ஆறுமுகனுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஆறுமுகம் கொண்டவர். சரவணபவ என்ற ஆறு எழுத்து கொண்டவர். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். வளர்பிறை 6 ஆம் நாள் வரும் சஷ்டி அவருக்கு உகந்த நாள். இப்படி அனைத்தும் ஆறு மயம் தான். ஒரு முறை கயிலைக்கு பிரம்மன் வந்தார். அப்போது அகந்தை மேலிட முருகரை வணங்காமல் சென்றார். முருகர் பிரம்மனை அழைத்து தாங்கள் யாரென்றும் தாங்கள் செய்யும் தொழில் என்னவென்றும் கேட்டார். தனது பெயர் பிரம்மா என்றும் நான் படைப்புத் தொழில் புரிபவன் என்றார். முருகரும் படைப்புத் தொழிலை எவ்வாறு செய்வாய் என்றார். வேதம் ஓதி செய்வதாகக் கூறினார் பிரம்மன். வேதம் ஓதுக என்றார் முருகர். பிரம்மனும் ஓம் என்று பாடித் தொடங்கினார். உடன் முருகர் பிரம்மனை நோக்கி இப்பொழுது நீர் கூறிய பிரணவத்தின் பொருள் கூறுக என்றார். பிரம்மர் பிரணவத்தின் பொருள் தெரியாது விழிக்க பிரணவத்தின் பொருள் தெரியாத நீயெல்லாம் எவ்வாறு படைப்பை மேற்கொள்வாய் என்றபடியே பிரம்மனை சிறையில் அடைத்தார் முருகர். இதனைக் கேள்வியுற்ற சிவபெருமான் முருகனிடம் வந்து முருகா நீ பிரணவத்தின் பொருளை அறிவாயா? அறிந்திருந்தால் எனக்கு கூறு என்றார். உடன் முருகரும் முறைப்படிக் கேட்டால் கூறுவதாகச் சொன்னார். உடனே சிவபெருமான் சீடராக மாறி கேட்க முருகரோ குருவாக மாறி உபதேசித்தார். தகப்பனுக்கே சுவாமியாக அதாவது குருவாக இருந்து பிரணவத்தின் பொருள் உரைத்ததால் முருகருக்கு தகப்பன் சாமி எனப் பெயர் உண்டானது. இம்மூர்த்தி சிஷ்ய பாவ மூர்த்தி ஆகும்.

அதன் பின்னர் பிரம்மன் சுவாமிமலை சென்று சிவபூஜை செய்து அவர் மூலமாக முருகப்பெருமான் பொருளுரைக்க பிரம்மன் அறிந்தார். சுவாமிமலை குடந்தையருகே அமைந்துள்ளது. இத்தலத்திலேயே தந்தைக்கு உபதேசக் காட்சி நடைபெற்றது. பெரியபுராணம் சிவமகாபுராணம் பாகவதம் ஆகிய நூல்களில் இந்த வடிவத்தைப் பற்றி கூறிப்பிடப்பட்டுள்ளது.

கங்காதர மூர்த்தி

கங்காதர மூர்த்தியின் வலது மேல் கரம் ஜடா முடியைப் பிடித்துக் கொண்டு வெகு வேகமாக வரும் கங்கையைத் தாங்குகிறது. வலது கீழ் கரத்தால் நாகத்தைப் பிடித்துள்ளார். இடது மேல் கரம் ஜடா முடியை அவிழ்ப்பது போல் உள்ளது. மற்றொரு கரத்தை இடுப்பில் ஒய்யாரமாக வைத்திருக்கிறார். வலது காலைத் தூக்கி முயலகன் தலை மீது வைக்க அவன் பாரம் தாங்காமல் சற்றுச் சாய்வாகப் படுத்து இடக்கையாலும் பாதத்தைத் தாங்குகிறான். அருகில் பகீரதன் இருக்க இறைவனைச் சுற்றி தேவர்களும் இருக்கின்றனர். கிமு 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்ம பல்லவனால் கட்டப்பட்ட குடைவரைச் சிற்பம் இது.

இடம்: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதியில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னிதி செல்லும் வழியில் இடப் புறம் லலிதங்குரா பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இடத்தில் ஒரு சிறிய அறை போல் காணப்படும் பகுதியில் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 628

கேள்வி: இறைவனை வணங்க சிறப்பான காலம் நேரம் ஏதும் உண்டா?

இறைவனை வணங்க காலம் நாழிகை ஏதும் இல்லைப்பா. மனிதன் விருப்பத்திற்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம். அது வணங்குகின்ற மனிதனின் மன நிலையைப் பொறுத்தது. மனதிலே எழுகின்ற பக்தி நிலையைப் பொறுத்தது. இதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

சிவ வடிவம் – 63. இரத்தபிட்சா பிரதானமூர்த்தி

சிவபெருமானை பார்த்து ஏளனமாய் சிரித்து நானே பெரியவன் என்ற அகந்தையுடன் இருந்தார் பிரம்மா. பிரம்மாவைப் போல் யாரும் அகந்தை கொள்ளக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான் பைரவரின் ரூபத்தை எடுத்து பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை திருகி எடுத்தார். பிரம்மாவின் தலையிலுள்ள மண்டை ஓடு அவரது கைகளிலேயே ஒட்டிக் கொண்டது. சிவகணத் தலைவர்களுடன் வனம் சென்ற பைரவர் அங்கிருந்த முனிவர்கள் ரிஷிகள் தவசிகள் இவர்களிடமிருந்து இரத்தத்தை தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி அவர்களின் உடம்பிலிருந்து வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார். அடுத்து வைகுந்தம் சென்றார். பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் பைரவர் சிவகணங்களுடன் சென்று திருமாலிடம் இரத்தத்தை கேட்டார். திருமால் தனது நகத்தினால் நெற்றியினை கீறி ஒரு ரத்த நரம்பிலிருந்து சொட்டிய இரத்தத்தை கபாலத்தில் விட்டார். இவ்வாறு முனிவர் ரிஷிகள் தவசிகள் தேவர்கள் திருமால் போன்றோரிடம் இரத்தம் பெற்று கபாலத்தில் இருந்த அகந்தையையும் கர்வத்தையும் அழித்தார் பைரவர் ரூபத்தில் இருந்த சிவபெருமான். கபாலத்தில் இருந்த அகந்தை அழிந்தவுடன் கபாலமானது சிவபெருமானின் கையை விட்டு நீங்கியது. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க இரத்தத்தை பிட்சையாக பெற்ற சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று. இந்த மூர்த்தி காசியில் இருக்கிறார்.

மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.

இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்

ஏலவார்குழலியை கரம் பற்றி ஏகாம்பரேஸ்வரர்

சிவபெருமான் ஏகாம்பரநாதராகவும் பார்வதிதேவி ஏலவார்குழலியாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் விஷ்ணு பகவான். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.