கேள்வி: மனிதனுக்கு விடுதலை கிட்டாமல் தடுப்பது எப்பொருள்?
இதில் பெரும் சிந்தனை தேவையற்றதாகின்றது. ஏனெனில் பெரும் சொத்தானது மனிதனுக்கு தன் உயிர் ஒன்றே. இதற்கு பின்பே மற்றவை அனைத்தும் ஏனெனில் வெள்ளி (பணம்) செல்வங்கள் உண்ண இயலாது எதற்கும் உதவாது. கடினமான காலங்கள் தோன்றும் போது உயிர் என்பதே கடைசியாக பிரியும் சொத்தாக இருக்கின்றதால் அதற்கு மேல்தான் மனிதனுக்கு பற்று. அப்பற்றினை நீக்கிட முயற்சிகள் செய்திட வேண்டும்.
கேள்வி: பல மகாகவிகள் பல மகான்கள் செய்யுள்கள், பாடல்கள், தேவாரங்கள் என்றெல்லாம் எழுதிய போதிலும் விகடகவிகளுக்கு ஏன் முக்கியத்துவம் உள்ளது?
விகடகவிகள் என்றால் லேசாக எடையிடுதல் ஆகாது. ஏனெனில் பாமர மக்களுக்கும் எளிதாக புரியும் வகையில் நகைச்சுவையுடன் பல பல முக்கியமான பொருள்களும் எடுத்துரைத்துள்ளார்கள். இதை மனமதில் நிறுத்த வேண்டும். இன்று ஓர் திருமந்திர செய்யுளை எளிதாக உணர முடியாத பொழுதும் அதனின் பொருளை எடுத்து எளிதாக நகைச்சுவை மூலமாக மக்களுக்கும் எடுத்துரைத்துள்ளார்கள். இத்தகைய நிலையில் அவர்கள் பணி மகத்தானது மேலும் விகடத்தை மட்டும் காணாது உட்பொருட்களை சிரத்தையோடு காணுதல் வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகிறது.
ஆன்மீகம் என்கின்ற பாதையில் ஒருவன் செல்லும் போது முதன்மையில் பல பல ரூபங்கள் வழிபட்டும் மேல் செல்ல செல்ல எப்படி நம்மிடமுள்ள பழக்கங்கள் உதிருகின்றதோ அவ்விதம் ஒவ்வொரு ரூபமும் உதிர்ந்து விடும். முடிவில் ஓரிரு ரூபங்கள் இருக்கும் காலத்தில் இதனையும் தாண்டி செல்லுதல் வேண்டும் என எண்ணினால் மிகவும் ஓர் வெறுமை தோன்றும். இவ்விதம் வெறுமை தோன்றுவது சீரில்லை. ஏனெனில் சீராக சாதனைகள் செய்து கொண்டால் ரூபம் விட்டு அரூப நிலைக்கு செல்லும் போது ஆனந்தமே பெருகுதல் வேண்டும். அவ்விதம் ஆனந்தம் கிடைக்கவில்லை என்றால் இந்நிலைக்கு இன்னும் தகுதி பெறவில்லை என்றே பொருளாகும். இதனை மனதில் நிறுத்த வேண்டும். இந்நிலை அடைய முயற்சிகள் பெருக்கிடல் வேண்டும். ஏனெனில் நாம் பட்டப்படிப்புக்கு செல்லும் போது கீழ் வகுப்பு புத்தகங்களை உபயோகித்தலாகாது என்கின்ற விதியும் உண்டு. இத்தகைய நிலையில் மேல் நிலை அடையுங்கால் மீண்டும் எமக்கு விளையாட்டுத்தனமாக சாதனைகள் வேண்டும் என்பதே சரியில்லை. இது கடினமாக சொல்லவில்லை என்கின்ற போதிலும் இது ஆன்மீக பாதையில் செல்வோருக்கு ஓர் வழிகாட்டியாக இருக்கட்டும் என்றும் எண்ணிட்டோமே.
கேள்வி: இறந்து சென்றவர்கள் பல பிறவி எடுக்கின்றனர் என்கின்ற நிலையில் ஐந்து ஆண்டுகள் சென்ற பிறகும் அவர்களுக்கு ஏன் ஸ்ரார்த்தம் தவசம் என்றெல்லாம் நடத்துதல் வேண்டும்?
இது உங்கள் மன திருப்திக்காக நடத்துகின்றீர்கள். ஓராண்டு உங்கள் திருப்திக்கு செய்தபின் வருகின்ற ஆண்டுகளில் அந்நாளில் அன்னம் பாலித்து (அன்னதானம் செய்து) அந்த அன்னதான புண்ணியத்தை அந்த ஆத்மாவிற்கு எங்கு இருந்த போதிலும் அங்கு சமர்ப்பணம் செய்வதே சிறந்த வழியாகின்றது. பசியுள்ளவனுக்கு அன்னதானம் செய்து அவன் உண்டு வாழ்த்துதல் வேண்டும். இங்கு உயர் குலத்தோன் கீழ் குலத்தோன் என்பது எதுவுமில்லை. ஆண் பெண் பேதமில்லை. பசி என்பது யாவர்கும் ஒன்றே. நன்றாக பசித்து பசி தீர்ந்த பின் வாழ்த்தும் வாழ்த்தே சிறந்த வாழ்த்தாகும். இவ்வழி செய்வதே நலம் தருவதாகும். மற்றவர்கள் ஆச்சாரம் அடிப்படையில் இவ்விதம் அவ்விதம் என்று கூறுவார்கள். இழவு வீட்டில் உள்ளோர் ஓராண்டு காலம் ஆலயம் செல்லுதல் வேண்டாம் என்றும் கூறுவது உண்டு. இதுவும் எமது அபிப்பிராயத்தில் மடமையாகின்றது. விதி முடிவதற்கும் ஆண்டவனுக்கும் என்ன சம்பந்தம். சைவ நெறியில் உட்பட்டதாக ஒருவர் மாண்டுவிட்டால் காரியங்கள் அன்று முடிந்த பின்பே ஆலயத்திற்கு செல்லுதல் வேண்டும் என்பதே விதியாகும். இதில் சைவ சித்தாந்தத்தில் வழியுண்டு என்று கூறுகிறோம். மற்றவர்கள் கூறுவது ஆச்சார்ய முறைகளாகும். மதத்தை சார்ந்ததாகும் உண்மையான ஆன்மீகம் மதம் எங்கு முடிகின்றதோ அங்கு தான் துவங்கும். இங்கு வருபவர்கள் ஆன்மீகத்தை நாடுகின்றனர் என்கின்ற ஓர் கருத்தின் அடிப்படையில் இவ்விதம் கூறினோம்.
கேள்வி: மானசீக பூஜையில் ஆலய விதிமுறைகளின் படி பூஜை செய்ய முடியுமா?
உள்ளம் ஓர் ஆலயம் எனக் கணக்கிட்டால் நமது ஸ்வரமானது (மூச்சுக் காற்றானது) நாதஸ்வரமாகவும் இதயத் துடிப்பு மிருதங்க வாத்தியமாகவும் பல நாடிகளின் துடிப்புகள் உபகரணங்களாகவும் கண்களில் காணும் மின் ஒளியை ஆரத்தியாகவும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை வளர்த்தல் வேண்டும். இவ்விதம் செய்திட்டால் உள்ளமானது ஓர் உத்தமமான ஆலயமாகின்றது. அவ்விதம் ஆகிய பின் மற்ற தலங்களில் (ஆலயங்களில்) அலைய மனதிற்குத் தோன்றாது.
கேள்வி: தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றுதல் வேண்டுமா?
பலருக்கும் இதில் மனக்குழப்பங்கள் உள்ளது. வெள்ளிக்கிழமையன்று இல்லை சப்தமத்திற்கு (15நாட்களுக்கு ஒரு நாள்) ஏதேனும் ஒரு நாள் தீபம் ஏற்றினால் போதாதா என மனதில் தோன்றுகிறது. ஏனெனில் விளக்கேற்றுவதும் கிரியை (வேலை) அன்றோ? என கூறுகின்றனர். இது ஓர் தவறான அபிப்பிராயமாகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஈடானது தீபம் என்றும் அது வீட்டில் தினந்தோறும் காலை மாலை ஏற்றுதல் வேண்டும். காலையில் சூரியன் உதயமாகும் காலங்களிலும் பின்பு மாலை சந்திரன் வரும் காலங்களிலும் இதனை செய்தல் வேண்டும். அவர்களின் வருகையை போற்றும் வழியாக இதனை செய்கின்றோம். இதனை மறக்க வேண்டாம். மேலும் தீபத்தின் முழு அர்த்தங்கள் என்னவென்றால் எவருக்கும் இருட்டில் இருப்பது பிடிப்பதில்லை ஏனெனில் இருட்டில் காண்பதெல்லாம் மாறி காண்கின்றோம். சிறிது அச்சம் தோன்றுகிறது. வெளிச்சம் வந்தவுடன் உண்மை விளங்குகிறது இதனால் அச்சம் தீருகின்றது அல்லவா? இது போல வாழ்க்கையிலும் நமக்கு தோன்றும் அச்சங்கள் விரட்டுவதற்கு தினந்தோறும் தீபங்கள் ஏற்றுதல் வேண்டும். இதற்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு பெரும் காரியமல்ல தீபம் வெளிச்சம் கொடுக்கின்றது வெளிச்சம் என்பது அறிவு எனக்கு வெள்ளிக்கிழமையன்று மட்டும் அறிவு போதும் வெளிச்சம் போதும் என்பது சிறிது மடமையாக தோன்றுகிறது அல்லவா? இதுபோல் என்றும் அறிவு வேண்டும் வெளிச்சம் வேண்டும் என்றும் பயம் அகல வேண்டும் என்றும் ஆனந்தம் பெறுதல் வேண்டும் என்றால் காலை மாலை இரு முறையாவது ஓரு மணி நேரத்திற்காவது தீபத்தை ஏற்றுதல் வேண்டும்.
கேள்வி: இக்கலியுகத்தில் பலத்தால் எதையும் அடையலாம் என்பது சரியா?
பலத்தால் காரியங்களை சாதிப்பவன் ஒருநாள் பலத்தால் தோல்வியும் காண்பான். வாளை எடுத்தவன் வாளால் அழிவான் என்றும் ஓர் பழஞ்சொல் உண்டு. இது உறுதியாக நடைபெறுகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எவரவர் வாழ்க்கையில் பலத்தின் அடிப்படையாலும் மற்றவர்களை அச்சுறுத்தி சீர்கெடுக்கின்றானோ அவன் ஒரு நாள் உறுதியாக அத்தகைய பலத்திற்கும் அடங்கி விடுதல் வேண்டும் என்பதே ஈசனின் விதியாகின்றது. ஆங்கலமதில் கூற Action Reaction என்பார்கள் இதிலிருந்து எவரும் தப்ப இயலாது.
கேள்வி: ஆன்மீக பாதை என்றால் சுகம் யாவும் அனுபவித்தல் கூடாது விரக்தியாக இருக்க வேண்டும் என்பதுதானா?
சுகம் என்பது என்ன என்றால் சாதாரண சுகங்கள் யாவும் நிலையற்றதாம். ஆன்மீக பாதையில் வந்தால் படிப்படியாக ஒவ்வொன்றாக விடுதல் என்பதே உண்மையான நிலையாகின்றது. இதனை உணர்தல் வேண்டும். தெய்வம் இவ்வுலகம் நமக்கென படைத்து அதிலுள்ள சுக போகங்களையும் நமக்காகவே படைத்துள்ளான் என்பது உண்மை. இருப்பினும் நாம் எங்கிருந்து வந்தோம் என நாம் தேடிட மீண்டும் அங்கு செல்லுதல் வேண்டும் என எண்ணம் படைத்தால் இங்கு விட்டு அங்கு செல்லுதல் வேண்டும் என்கின்றதே உண்மையான நிலை. இவ்விதமிருக்க இங்கிருக்கும் சுக போகங்கள் விடுதல் வேண்டும். இது பலராலும் இக்காலத்தில் யாத்திரை செய்ய இயலாது என்பதையும் மனமதில் நிறுத்தல் வேண்டும். இக்காலத்தில் நமக்கு முக்கியம் என்கின்றதெல்லாம் இங்கு விடுதல் வேண்டும் ஏன் இவ்வுடலையே விடுதல் வேண்டும் என்கின்றதே நிலையாய் நிற்க மற்றவையெல்லாம் விளையாட்டு பொருட்களாகவே கண்டு அதனையும் இங்கு விட்டு செல்லுதல் வேண்டும் என்பதே சத்திய நிலை.
எம்மதம் பெரிதுதான். உம்மதம் அல்ல என்கின்ற வீண் விவகாரங்கள் ஏன் என்றும் மதம் என்பதே மதம் பிடித்த யானையாம் என்று இங்கு கூறினோம். அவ்விதம் கூறுகின்றவர் மதம் பிடித்த யானை போல் என்றும் இங்கு விளக்கிடுவோம். மதம் பிடித்த யானை எதிரே வரும் அனைவரையும் எதிரி என அதற்கு தோன்றி தாக்குகிறது. அவ்விதமே இந்நிலை கண்டோர். இது தான் மதம் என்றும் மதம் தவறுகின்றோர் என்றும் இங்கு விளக்குவோம். மதம் என்பது ஓர் தேவையற்ற பிரச்சனையாம் என்று இங்கும் கூற மேலும் இவ்வித வினாக்கள் வேண்டாம் என்றும் இது எவர் மனதில் தோன்றியதோ அவரே அச்சிந்தனையை மனதிலிருந்து நீக்கவும் என்றும் இங்கு கூறினோம்.
கேள்வி: ஆலயம் பெரிதா? இல்லை அங்கே வீற்றிருக்கும் சக்திதான் பெரிதா?
ஆலயங்கள் தோன்றும் முன்னதாகவே தெய்வீக சக்தி இருந்தது. இவ்விதமிருக்க ஆலயம் பிரதானம் அல்ல. ஆலயங்கள் முன்பு கூறியவாறு ஆன்மீகக் குருடர்களுக்கு ஊன்று கோலாகவே விளங்குகின்றது. அங்கு நம் ஆத்மாவின் சக்தியையே மூர்த்தங்கள் (மூர்த்திகள்) பெறுகின்றது என்பதை யாம் இங்கு கூறுவோம். எவ்வித ஆழ்ந்த நிலையில் நாம் பிரார்த்திக்கின்றோமோ நம் உள்ளிருக்கும் அத்தெய்வீக சக்தியே அம்மூர்த்தங்களுக்குள் பாய்கின்றது என்பதே பொருள். இது எளிதாக நீங்களும் உணர இயலும். ஏனெனில் ஆலயத்தின் பெருமை வலிமை அங்கிருக்கும் சக்கர பிரதிஷ்டையே இது யார் பிரதிஷ்டை செய்தது எனக் கேட்டால் மனிதனே இவ்விதம் ஆலயத்திற்கு முன்னதாக தெய்வீக சக்தி என்கின்றதால் அச்சக்தியே பெரிதாகின்றது.