அறியாமை

குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக் காண வேறு ஒரு மடாலயத்தின் தலைவர் வந்தார். ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர். குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார். தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன் என்றார். நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் குரு.

குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது. உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை. அங்கு இருப்பதோ சில சீடர்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள். இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும் என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.

அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார். அறியாமை என்ற வினைதான் காரணம் என்றார். அறியாமையா என்று வியந்தார் வந்தவர். ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் இருக்கிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும் என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு. குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக் கூறினார். இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இவராயிருக்குமோ இல்லை அவரையிருக்குமோ என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் இறைதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் இறைதூதராக இருந்தால் என்ற கேள்வியோடு மற்றவர்களை அன்போடு நடத்தினர். இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பணிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர். இதனைக் கண்ட பிறகு தான் மடாலத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் பணிவுடனும் அன்புடனும் பழகும்போது நாம் இறைத்தூதராகிவிடுகிறோம்.

கடவுள் என்பவர் வெளியில் தேடவேண்டியது இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும்.

அசுவமேத யாகத்திற்கு சமமான பலன்

பூஜையில்லாத சிவலிங்கத்திற்கு அல்லது கோவிலுக்கு நித்ய பூஜையை உண்டாக்குபவன். ஏழ்மையில் உள்ளவனுக்கு எதையும் ஏதிர்பாராமல் தானம் செய்பவன். தயையின்றி இருக்கும் சடலத்தை எடுத்து அதற்கு உரிய சிரார்தம் செய்பவன் அல்லது அதற்கு உபகாரம் செய்பவன் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை செய்பவனுக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது.

வர்ணங்கள் உண்மை விளக்கம்

பிறப்பால் வர்ணங்கள் இல்லை அவர்களின் செயலினால் மட்டுமே என்பதை மனு தர்மம் சொல்கிறது. பிறப்பால் அனைவரும் சமமே தர்ம செயல்களை செய்வதாலும் நற்குணங்களை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே ஒருவன் மேன்மையான நிலைக்கு உயர்கிறான் என்று பகவத்கீதை சொல்கிறது. நம்முடைய வேதத்தில் இருக்கும் சில சமஸ்கிருத மந்திரங்களுக்கு பொருள் தவறாக அனைவருக்கும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் விளக்கம்

வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை கடைபிடிப்பவனும் இதனை அடுத்தவருக்கு எடுத்துரைப்பவனுக்கும் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். மனம் வலிமையடைந்தால் அவனது முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருக்கும். மனமானது நெற்றியின் நடுவே உள்ளது. மனதை வலிமையானதாக வைத்திருப்பவர்கள் அனைவரும் பிராமணன் ஆவார்கள்.

ராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்ரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடி மக்களை திறம்பட காத்திட முடியும். தோள் வலிமையுடன் இருப்பவர்கள் அனைவரும் சத்ரியன் ஆவார்கள்.

வைசியனானவன் வாணிபம் செய்பவன். பல ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டும். பல நாட்கள் நடப்பதற்கு வலிமையான தொடை இருக்க வேண்டும். வலிமையான தொடைகளுடன் இருப்பவர்கள் அனைவரும் வைசியன் ஆவார்கள்.

சூத்திரனானவன் உடல் உழைப்பால் வேலை செய்பவர்கள் மற்றும் வயல்களில் வேலை செய்து இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற உணவு உற்பத்தி செய்து பாடுபட வேண்டும். விவசாயம் செய்ய அவனுக்கு சோர்வில்லாத வலிமையான பாதங்கள் வேண்டும். வலிமையான பாதங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் சூத்திரன் ஆவார்கள்.

பொய்யான விளக்கம்

பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான்
பிரம்மாவின் தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான்
பிரம்மாவின் தொடையில் இருந்து வைசியன் பிறந்தான்
பிரம்மாவின் பாதத்தில் இருந்து சூத்திரன் பிறந்தான்

விதுரரின் சிந்தனைகள்:

மகாபாரதத்தில் விதுரர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார். அத்தகைய பெருமை மிக்க விதுரர் 15 வகையான மூடர்களை பட்டியலிடுகிறார்.

  1. தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.
  2. தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.
  3. பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.
  4. உயர்ந்த குடும்பத்தில் பிறந்து முறையற்ற செயலை செய்பவன்.
  5. தானத்தைக் கேட்கக்கூடாதவனிடம் கேட்பவன்.
  6. எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து தற்பெருமை பேசுபவன்.
  7. பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம் பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
  8. பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
  9. பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ பெற்றுக்கொண்டு பின் அது தனது நினைவில் இல்லையே என்று சொல்பவன்.
  10. தனது மனைவியைக் குறித்து பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
  11. அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
  12. தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
  13. புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு வீட்டிற்கு வந்து அதை தானே சொல்லித்தற்பெருமை பேசுபவன்.
  14. எதிரிகளிடம் சரண்டைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.

ஒருமுகப்படுத்தப்பட்ட மனம்

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர் நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர் முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல் நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம் பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள் அப்போது உங்களுக்கே தெரியும் என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின. இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம் நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள் என்றார்கள். அதற்கு விவேகானந்தர் என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார்.

சுவாமி விவேகானந்தர் மன ஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.

மாகாபராதம் குருசேத்திர போர் வியூகம்

  1. கிரௌஞ்ச வியூகம் – நாரை வியூகம்
  2. மகர வியூகம் – முதலை வியூகம்
  3. கூர்ம வியூகம் – ஆமை வியூகம்
  4. திருசூல வியூகம் – திரிசூலம் வியூகம்
  5. சக்ர வியூகம் – சக்கரம் வியூகம்
  6. கமலா வியூகம் – பூத்த தாமரைமலர் வியூகம்
  7. கருட பத்ம வியூகம் – கருடன் வியூகம்
  8. ஊர்மி வியூகம் – கடல் அலைகள் போன்ற வியூகம்
  9. மண்டல வியூகம் – வான் மண்டல வியூகம்
  10. வஜ்ர வியூகம் – வைரம் இடிமுழக்கம் போன்ற வியூகம்
  11. சகட வியூகம் – பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
  12. அசுர வியூகம் – அசுர வியூகம்
  13. தேவ வியூகம் – தேவ வியூகம்
  14. சூச்சி வியூகம் – ஊசி போன்ற வியூகம்
  15. ஸ்ரிங்கடக வியூகம் – வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
  16. சந்திரகல வியூகம் – சந்திர பிறை வடிவ வியூகம்
  17. மலர் வியூகம் – பூ மாலை போன்ற வியூகம்
  18. சர்ப வியூகம் – நாக வியூகம்

செயல்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார். அதற்கு குரு பசி எடுத்ததால் சாப்பிடுவது தூக்கம் வந்தால் தூங்குவது. சீடர் மறுபடியும் கேள்வி கேட்டார். பசித்தால் புசிப்பது உறக்கம் வந்தால் உறங்குவது இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன். வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை. கவலையில் சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன் என்றார்.

செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம் என்று பகவத்கீதை கூறுகிறது. எந்த செயலானாலும் செய்யும் செயலில் ஒன்றிவிடும் போது அது தியானமாகி விடுவதோடு செய்யப்படும் செயலும் முழுமை அடைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் செயலின் பாரம் துன்பம் எதுவும் இல்லாமல் அச்செயலை நிறைவாக செய்யமுடியும்.

குருச்சேத்திர படைகள்

அஸ்தினாபுரம் அரியணைக்காக கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த போர் குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் இருப்பதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. படைகளும் அதன் வகைகளும்

ஒரு தேரும் ஒரு யானையும் ஐந்து காலாட்களும் மூன்று குதிரைகளும் சேர்ந்தது ஒரு பத்தி.
மூன்று பத்தி ஒன்று சேர்ந்தது ஒரு சேனாமுகம்.
மூன்று சேனாமுகம் ஒன்று சேர்ந்தது ஒரு குல்மம்.
மூன்று குல்மம் ஒன்று சேர்ந்தது ஒரு கணம்.
மூன்று கணங்கள் ஒன்று சேர்ந்தது ஒரு வாகினி.
மூன்று வாகினி ஒரு பிருதனை.
மூன்று பிருதனை ஒரு அனீகினி.
பத்து அனீகினிகள் ஓர் அக்ரோணி சேனை.

ஓர் அக்ரோணி படை என்பது
21870 தேர்கள்
21870 யானைகள்
65610 குதிரைகள்
109350 காலாட்படைகள் ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர் அணியில் 11 அக்ரோணி படைகளும் பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

அதிரதர்

இவர்கள் இருப்பதிலே திறமை அதிகம் உள்ளவர்கள். எவர் ஒருவர் தனியாளாக ஒரு தேரின் மேல் நின்று ஒரே சமயத்தில் பல்லாயிரம் தேர் வீரர்களோடு போரிடும் வல்லமை உடையவரோ அவரே அதிரதர் ஆவார்.

மகாரதர்

இவர்கள் அதிரதருக்கு அடுத்தபடியாக தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர்கள்.

சமரதர்

இவர்கள் மகாரதருக்கு அடுத்தபடியாக ஒரு சமயத்தில் ஒரு தேர்வீரரோடு போரிடும் வல்லமை கொண்டவர்.

ஆன்மீகம்

தியானம் செய்தால் எதிரில் கடவுள் வந்து நிற்பார் என்றெல்லாம் நினைக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்தால் உடல் வலிமையாவது போல தியானம் செய்தால் மனது வலிமை அடையும். நமது சிந்தனையில் தெளிவு பிறக்கும். மனது வலிமையடைந்தால் தீயவற்றின் பக்கம் மனம் செல்லாது. நல்ல பழக்க வழக்கங்களோடு நல்லதையே செய்து நல்லதையே பார்த்து நல்லதையே கேட்டு நல்லதையே பேசி தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதி வந்ததும் கடவுள் எதிரில் வந்து நிற்பார்.

ஆன்மீகம் என்பது தேடி அலைகிற விஷயம் இல்லை. தகுதி இருந்தால் தேடி வருகிற விஷயம்.

வில் வித்தையில் அஸ்திரங்களின் ஆளுமையும் அவற்றின் செயல்பாடும்

அஸ்திரங்கள் என்பவை அம்பு தர்ப்பை பொருட்களின் மேல் மந்திரங்களால் உருவேற்றப்பட்ட மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். அஸ்திரங்கள் அனைவருக்கும் கிட்டிவிடாது. முறையான பயிற்சியும் குருவின் துணையும் இறையருளும் இருந்தால் மட்டுமே அவை வீரனுக்கு கைவசமாகும். இந்த அஸ்திரங்களுக்கு அம்புகள் அவசியம் தேவையில்லை. ஒரு தர்பை புல்லை எடுத்து அந்த அஸ்திரத்திற்கு உண்டான மந்திரத்தை ஜெபித்து இலக்கை நோக்கி விசினால் கூட அஸ்திரம் தனது பணியை செய்துவிடும்.

பிரம்மாஸ்திரம்: பிரம்மாவின் அஸ்திரம். இலக்கை மொத்தமாய் அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அஸ்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது.

பிரம்மஸ்ரிஷா: பிரம்மாவின் அஸ்திரம். தேவர்களையும் எதிர்க்கும் வலிமை கொண்டது. பிரம்மாஸ்திரத்தின் அளவு அழிவை தரவல்லது.

இந்திராஸ்திரம்: இந்திரனின் அஸ்திரம். ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை வானிலிருந்து மழை பொழிவது போலே பொழிய வைக்க வல்லது.

வஜ்ராயுதம்: இந்திரனின் அஸ்திரம். மின்னலால் தாக்குண்டது போல இலக்கை அழிக்கும் வலிமை கொண்டது.

பாசுபதாஸ்திரம்: சிவனின் அஸ்திரம். இலக்கு எந்த இயல்புடையதாக இருப்பினும் அதை அடியோடு அழிக்கும் வலுப்பெற்றது.

ஆக்னேயாஸ்ச்திரம்: அக்னியின் அஸ்திரம். இலக்கை எரித்து சாம்பலாக்கும் அஸ்திரம்

வருணாஸ்திரம்: வருணனின் அஸ்திரம். எல்லை இல்லாமல் எரியும் நெருப்பையும் அடக்கவல்லது. ஆக்னேயாஸ்ச்திரத்தை எதிர்க்க செலுத்தப்படும் அஸ்திரம்

வாய்வாஸ்திரம்: வாயுவின் அஸ்திரம். கடுமையான சூறாவளியை உண்டாக்கும் அஸ்திரம். இலக்கை பூமியை விட்டுத் தூக்கி சுழற்றி அடிக்கும் அஸ்திரம்.

சூரியாஸ்திரம்: சூரியனின் அஸ்திரம். இருளை மறைத்து ஒளியைக் கொடுக்கும் அஸ்திரம்.

நாகாஸ்திரம்: நாகமாய் மாறி இலக்கை அழிக்கும் வலுகொண்டது. கிடைப்பதற்கு அரியது. பொதுவாய் இதற்கு ஈடான எதிரான அஸ்திரம் கிடையாது.

நாகபாசானம்: விஷம் கொண்ட நாகங்கள் இலக்கை கட்டி மயக்கமடைய செய்யும். இதில் கட்டுண்டவர் கடவுளே ஆனாலும் கண்விழிப்பது அரிது.

மோகினி அஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை ஒரு மாயையில் சிக்க வைக்கும். ஒரு முழு சேனையையும் மதி இழக்கச் செய்யும் வலு கொண்டது

சம்மோஹனம்: எதிரியின் மொத்த சேனைக்கும் ஆபத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது

பிரம்மோஹனம்: சம்மோஹன அஸ்திரத்தைப் போன்றது

நாராயனாஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். எண்ணற்ற அம்புகளையும் சக்கரங்களையும் இலக்கை நோக்கி மழை போல பொழியச் செய்யும். இதை யாரும் எதிர்த்து நின்றால் நிற்பவரின் வலிமையையும் இந்த அஸ்திரத்தில் சேரும். நிராயுதபாணியாய் நிற்பவரை அஸ்திரம் தாக்காது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும். பின்னர் இது விஷ்ணுவை அடைந்து விடும்

வைஷ்ணவாஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை அதன் இயல்பு எதுவாக இருப்பினும் அழிக்கும் வல்லமை கொண்டது.

பர்வதாஸ்திரம் : இலக்கின் மேல் வானத்தில் இருந்து மலை ஒன்றை விழச் செய்யும்.