தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 229 திருப்பாதிரிபுலியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 229 வது தேவாரத்தலம் திருப்பாதிரிபுலியூர். புராணபெயர் கடைஞாழல், கூடலூர் புதுநகரம். மூலவர் பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான, பாடலேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி. தலமரம் பாதிரிமரம். தீர்த்தம் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரைதீர்த்தம் படித்துறைகளுடன் உள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், நந்தியை தரிசிக்கலாம். உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தியும் அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் திருநாவுக்கரசர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கன்னி விநாயகர் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் பாடியுள்ளார். தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. இறைவி அரூபமாக (உருவமில்லாமல்) இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன் (கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயமாக பார்த்து அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருக்கின்றது. மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மீது மேலே ஏறுவதற்கு வசதியாக இருக்க தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம். புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானை தரிசிக்கச் சென்றார். அப்போது கெடிலநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் அங்கேயே மூன்று நாட்கள் காத்திருந்தார். வெள்ளம் வடியவில்லை. தன் நிலையைக் கூறி பெருமானை வழிபட சித்தராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகரை நீர் மேல் நடந்துவருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன் மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு பிரம்பு ஒன்றை ஏவி அந்த நதியை திசை திருப்பி ஓடச் செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர் இறைவனின் கருணையை நினைத்த படியே திருத்தலம் வந்து வழிபட்டார்.

பதினாறு வயதினராய் சித்தர் வடிவில் வந்த ஈசன் கை வைத்ததால் சிவகரை தீர்த்தம் உருவானது. சித்தர் வடிவில் வந்த சிவனின் திருவடிகளில் வேதங்களும் பாதுகைகளாக ஆகமங்களும் இருந்தன. உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்து விட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும் இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி பாதங்கள் நிலத்தில் பதியாமல் அரூபமாக (உருவமில்லாமல்) தவமிருந்து இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம். துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது. இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம். அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். மங்கண முனிவர் பூசித்து தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம்.

திருநாவுக்கரசை முதன்முதலில் அப்பர் என்று திருஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான். காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவதும் சமமானது என்றும் திருவண்ணாமலையில் 8 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 3 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமமானது என்றும் தல வரலாறு கூறிப்பிடுகின்றது. எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை அம்பாளின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். இங்கு இறைவனின் சன்னதியில் பள்ளியறை உள்ளது. திருப்பாதிரிப்புலியூரின் பெருமைகளை தேவி மூலமாக உலகம் அறிய வேண்டும் என்பதற்காக இறைவன் தூர்ச்சடி, பிரமசன்மன் என்ற சிவகணத்தவரை அனுப்பி வைத்தார். அவர்கள் மனித உருவில் குருவாகவும் சீடனாகவும் வந்து திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு வாய்ந்த சிவதலம் என்பதை மக்களிடையே எடுத்துரைத்தனர். சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன. சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம் வேறு இரு கல்வெட்டுக்களும் உள்ளது. இத்தலத்தில், திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இந்த கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய வம்சத்தினரால் புணரமைக்கப்பட்டது. இக்கோயில் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் மூலம் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோயில் என்பது தெரியவருகிறது. இந்த கோவிலின் நான்கு சுவர்களிலும் திருநாவுக்கரசரின் கருத்துக்கள் உள்ளது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 228 திருமாணிகுழி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 228 வது தேவாரத்தலம் திருமாணிகுழி. மூலவர் வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி. தலமரம் கொன்றை. தீர்த்தம் சுவேத, கெடில நதி. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் உள்ளனர். இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக தலவரலாறு உள்ளது. கோயில் கெடில நதியின் தென் கரையில் ஓர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தில் மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும் அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால் இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது. இறைவனும் இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால் இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார். தீபாராதனையின் போது மட்டும் 3 வினாடிகள் திரையை விலக்குவார்கள் சற்று நேரம் மட்டும் சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கலாம் இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் 11 ருத்திரர்களில் ஒருவரான பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை பூஜைகள் அனைத்தும் முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்களும் உள்ளது. சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந்துள்ளன. திரைக்கு பின் சுவாமியும் அம்பாளும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்திதேவர் வழக்கமான தலை சாய்த்த நிலையில் இல்லாமல் நேர் திசையில் உள்ளார். மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்பாளின் அம்புஜாட்சியில் ஆட்சி நடக்கிறது. அம்பாளிடம் இரண்டு கைகளிலும் ஒன்றில் தாமரை மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும் அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார்.

மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள் என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக்கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் திருமாணிக்குழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் உதவி என்றே குறிக்கப் பெறுகின்றது. பெரிய புராணத்தில் சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை. திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன் என்றும் உதவிமாணிகுழி என்றும் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். எனவே இறைவனுக்கு உதவிநாயகன் அம்மனுக்கு உதவி நாயகி என்ற பெயரும் உண்டு. சோழ பாண்டிய விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர் என்று குறிக்கப்படுகிறது. சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 227 திருவாண்டார் கோவில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 227 வது தேவாரத்தலம் திருவாண்டார் கோவில். புராணபெயர் திருத்துறையூர். மூலவர் வடுகீஸ்வரர், பஞ்சநாதீஸ்வரர், வடுகூர்நாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு தலையில் தலைப்பாகையுடன் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கன்னி அம்மை. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். தலமரம் வன்னி. தீர்த்தம் வாமதேவ தீர்த்தம். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்று மதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி உள்ளது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. பிரம்மா, சிவனை வழிபட்ட சிற்பம் தட்சிணாமூர்த்திக்கு அருகில் இருக்கிறது. பிரம்மாவுக்கு அருகில் ஆஞ்சநேயர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன் போர்க்கோலத்தில் இருக்கிறாள். முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும் பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள் பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா, தேவர்கள் சிவனிடம் சரணடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும் வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது.

ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று. படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால் அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன். ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை சிவன் என நினைத்து மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார். ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக தலபுராணத்தில் மூலமாக அறிந்து கொள்ளலாம். அர்த்த மண்டபத்தையும் கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 226 திருத்தளூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 226 வது தேவாரத்தலம் திருத்தளூர். புராணபெயர் திருத்துறையூர். மூலவர் சிஷ்டகுருநாதேஸ்வரர், சிஷ்டகுருநாதர், பசுபதீஸ்வரர், தவநெறியப்பர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவன் பெரிய லிங்க வடிவில் இருக்கிறார். ஆவுடை வலது பக்கம் இருக்கிறது. சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் பூங்கோதை நாயகி, சிவலோக நாயகி. தலமரம் கொன்றை. தீர்த்தம் சூர்யபுஷ்கரிணி. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். உட்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, பாலசுப்பிரமணியர், நடராஜர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேச்வரர், வரதராஜப் பெருமாள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இதில் தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர் சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் கொன்றை உள்ளது. பக்கத்தில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சூரியபுஷ்கரணி கோவிலுக்கு வெளியே உள்ளது.

இத்தல முருகப் பெருமான் இரு தேவியருடன் கிழக்கு நோக்கியவாறு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்பகழில் பாடியுள்ளார். கயிலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி லிங்கம் அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர். இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும் அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டார். அவரது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தார். இதன் அடிப்படையில் அம்பாள் வடக்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

திருவெண்ணெய் நல்லூரில் சிவனை பித்தா என்று பாடி வணங்கிய சுந்தரர் திருவெண்ணெய் நல்லூரில் இருந்து இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும் பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான் தம்பதியைக் காணவில்லை. அப்போது நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார் என்று அசரீரி வாக்கு கேட்க சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு குருவாக இருந்து உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவாக இருந்து தவநெறி உபதேசம் செய்தார். எனவே தான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஊருக்கு அருகில் கீழப்பாக்கம் என்றொரு இடத்தில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த இடத்தில் தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும் பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தது திருத்துறையூர். இவர் முக்தி அடைந்தத் திருத்தலமும் இதுவே. இவரது ஜீவசமாதியும் திருத்துறையூரிலேயே அமைந்துள்ளது. இத்தல இறைவனை சூரியன், பிரம்மா, விஷ்ணு, இராமர், சீதா, பீமன், அகத்தியர் நாரதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 225 திருவெண்ணைநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 225 வது தேவாரத்தலம் திருவெண்ணைநல்லூர். புராணபெயர் திருவருள்துறை. மூலவர் கிருபாபுரீஸ்வரர், தடுத்து ஆட்கொண்ட நாதர், அருட்கொண்டநாதர் வேணுபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை. மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நீங்க அம்பாள் இங்குள்ள நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்க நிதி, பதுமநிதி, ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இருக்கின்றாள் தலமரம் மூங்கில்மரம். தீர்த்தம் தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த சிவபெருமான் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது.

10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த வழக்கு தீர்த்த மண்டபம் உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில் மேலே சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றது.

அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிந்ததைக் கண் குளிரக்கண்டு திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர். தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் இங்கு உள்ளது. மகாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்கு உள்ளது. பாண்டவரில் அர்ச்சுணன் தன்மூத்தோனாகிய தருமனும் பாஞ்சாலியும் தனித்திருந்த போது சென்றதால் ஏற்பட்ட பாவத்தை இங்குள்ள இறைவனை வழிபட்டப் போக்கிக் கொண்டான். மேலும் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான். அர்ச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது. புத்தூர் சடங்கவியாருடைய மகள் சுந்தரர் திருமண நாளன்று இறைவன் முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இப்பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது.

சிவபெருமான் நீ எனக்கு அடிமை என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட அதிலுள்ள கையெழுத்து உண்மையானது தான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள். கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை பித்தன் கிறுக்கன் என்றெல்லாம் திட்டினார். அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன் தான் என்பதை அறிந்த சுந்தரர் சிவபெருமானை வணங்கி நிற்க என்னப் பற்றி பாடு என்று இறைவன் கேட்க எப்படிப் பாடுவது என்று சுந்தரர் கேட்க என்னை பித்தா என்று திட்டினாயே அதையே பாடு என்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போது தான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் வடக்கு பக்கத்தில் சுந்தரருக்கும் கிழவனாக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது. இறைவன் நின்று சாய்ந்திருந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது. மேலும் இறைவன் அடி வைத்த இம்மன்றத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு.

விதகோத்திரர் என்னும் அந்தணர் கருவுற்றப் பசுவை வேள்வி செய்தார் அதனால் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி பாடிப்பணிந்து தனது பாவத்தை போக்கிக் கொண்டார். சடையப்ப வள்ளல் இவ்வூரில் வாழ்ந்திருக்கிறார். தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி சிவபெருமானைக் கொல்ல ஏவினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன் அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருள் துறை என பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர் எனப்பெயர் பெற்றார். வேதங்கள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில் இறைவன் தீயுருவாகத் தோன்றினான் வேதங்கள் கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினான். முதலாம் ராஜராஜ உடையார் கல்வெட்டில் திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும் இரண்டாம் ராஜாதிராஜ உடையார் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும் தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் உள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயர் உடையார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும் பெயர் கல்வெட்டில் குறிப்படப்பட்டுள்ளது. சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 224 டி.இடையாறு

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 224 டி.இடையாறு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 224 வது தேவாரத்தலம் டி.இடையாறு. புராணபெயர் திருஇடையாறு, திருவிடையாறு. மூலவர் இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருந்தீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர். இங்கு இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது படுகிறது. அம்பாள் ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி. தலமரம் மருதமரம். தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம். இது அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது. மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத சண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சண்முக சுப்பிரமணியர் பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். இத்தலத்தில் சிவ பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.

அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலம் இது. இடையாறில் பிறந்த இவர் பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும் கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இடையாற்றில் எம்மை பூஜித்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். இக்கோவில் 8ம் நூற்றாண்டு கோவிலானாலும் கி.பி. 1471இல் ஒரிசா மன்னனால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்ம அரசரால் மீண்டும் கட்டப்பட்டது என கல்வெட்டில் செய்திகள் உள்ளது. இக்கோவில் கல்வெட்டுகளில் இறைவன் உடைய நாயனார் எனவும் இவ்வூரை இராஜராஜவள நாட்டு திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இறையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது. சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். 39 திருத்தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார். சுந்தரர், திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளார் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 223 அறகண்டநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 223 வது தேவாரத்தலம் அறகண்டநல்லூர். புராணபெயர் அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். அம்பாள் அழகிய பொன்னம்மை, ஸ்ரீசெளந்திர கனகாம்பிகை. தலமரம் வில்வம். தீர்த்தம் தென்பெண்ணை. ராஜகோபுரம் ஏழுநிலைகளை உடையது. ராஜகோபுரம் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் உள்ளார். இவரே இத்தலத்தின் தலவிநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் திருஞானசம்பந்தர் உள்ளார். விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாத லிங்கம் உள்ளது. இறைவனின் கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும், நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளனர். வெளிச் சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. இத்தலத்திலுள்ள முருகன் ஒருமுகத்துடனும் ஆறுகரங்களில் ஆயுதங்களுடன் வள்ளிதெய்வயானையுடன் வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இங்கு நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார்.

திருவண்ணாமலை வரும் வழியில் ரமண மகரிஷி இக்கோயிலுக்கு வந்து அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன்பின்னரே திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ராமலிங்க வள்ளலார் இவரை வணங்கி பாடல் பாடியிருக்கிறார். மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மகாவிஷ்ணு உயிரைக் கொன்ற தோஷம் நீங்க சிவனை வேண்டினார். அவர் பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி பல தலங்களுக்கும் சென்ற மகாவிஷ்ணு, இத்தலத்தில் சிவனை வழிபட்டபோது சிவன் அவருக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார். மகாவிஷ்ணு தாயாரை பிரிந்து தனியே வந்ததால் ஸ்ரீதேவியும் மகாவிஷ்ணுவைத் தேடி இத்தலத்திற்கு வந்தாள். இவ்விருவருக்கும் சிவன் காட்சி தந்தருளினார். மகாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோகச் சக்கரத்துடன் மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவியும் இருக்கின்றனர். ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவையும் அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும் வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.

நீலகண்டர் எனும் முனிவர் ஒருவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவதல யாத்திரை சென்றார். அவர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி சிறு குன்றாக இருந்த இந்த இடத்தில் அமர்ந்தார். அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு இந்த இடத்திலேயே சிவனை வழிபட வேண்டும் என ஆசை வந்தது. சிவனை எண்ணி இவ்விடத்தில் தவம் செய்து வழிபட்டார். அவருக்காக மனம் இரங்கிய சிவன் அம்பாளுடன் காட்சி தந்து அவருக்கு சாபவிமோசனம் கொடுத்தருளினார். நீலகண்ட முனிவர் சிவனிடம் தனக்கு இவ்விடத்தில் அருளியது போல இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டுமென வேண்டினார். அவருக்காக சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அறையணிநாதர் என்ற பெயர் பெற்றார். அறை என்றால் பாறை என்றும் அணி என்றால் அழகு என்றும் பொருள். பாறை மீது அழகாக அமைந்திருப்பவர் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்தது. கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்துள்ளார்கள். வனவாசம் முடிந்து 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள் பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும் அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்தனர். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் அறகண்டநல்லூர் இறைவனை தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர் என்றும் பழிபாவங்கள் நீங்கப் பெறுவார்கள் என்றும் அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும் என்றும் பாவங்களும் கழியும் என்றும் சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றி தொழுதால் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர் என்றும் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார். திருஞானசம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர் அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. திருஞானசம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 222 திருக்கோவிலூர், வீரட்டேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 222 வது தேவாரத்தலம் திருக்கோவிலூர். புராணபெயர் அந்தகபுரம், திருக்கோவலூர். மூலவர் வீரட்டேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் அந்தகாசுர வதமூர்த்தி. அம்பாள் பெரியநாயகி, சிவானந்த வல்லி. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் தென்பண்ணை. வீரட்டேஸ்வரர் கோவிலும் அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது. சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம் முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது.

இந்த விநாயகப்பெருமானை குறித்து அவ்வையார் சீதக்களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். அந்தகாசூரனை சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது. அட்ட வீரட்டத் தலங்களில் மிகவும் தொன்மையன வரலாற்றுச் சிறப்பு பெற்ற 2 வது வீரட்டான திருத்தலம் இது. சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக உள்ளார். சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம். அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது. இத்தலத்தில் பாரி வள்ளல் தன் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோயிலூரை ஆண்ட மன்னனுக்கு அவ்வையார் கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த கற்பாறை கபிலர்குன்று என்ற பெயரில் பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

64 நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது. சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய திருமுறை கண்ட சோழன் ராஜராஜன் பிறந்த தலம். திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும் மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.

திருக்கயிலாயம் செல்வதற்காக ஈசனை உருகி வேண்டிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதையடுத்து அயிராவணம் என்னும் யானையை ஈசன் அனுப்பினார். அதில் ஏறிய சுந்தரர் கயிலாயம் புறப்பட்டார். அவரோடு அவரது நண்பரான சேரமான் பெருமானும் குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி குதிரையில் ஏறி கயிலாயம் சென்றார். இருவரும் வானில் சென்றபோது கீழே திருக்கோவிலூர் என்ற சிவதலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் சுந்தரரும் சேரமானும் அவ்வையே நாங்கள் கயிலாயம் செல்கிறோம் நீயும் வருகிறாயா என்று கேட்டனர். கயிலாயம் செல்லும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது நானும் வருகிறேன் என்று கூறிய அவ்வை விநாயகர் வழிபாட்டை அவசரம் அவசரமாக முடிக்க எண்ணினார். சுந்தரர் சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வை இந்த தலத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்தாராம். உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் களப எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி பூஜை செய்த பிறகு விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கயிலையில் விட்டார் கணபதி. இவர் விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.

முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்டினார். அம்பாள் எந்த இடம் என்று உணர்த்த அம்பாள் தன் கையிலிருந்த வேல் விழுந்த இடம் திருக்கைவேலூர் என்று பெயர் பெற்று பின்நாளில் பெயர் மறுவி திருக்கோவிலூர் ஆனது. முருகன் சிவனை பூஜை செய்த தலம் இது. பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள். அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 பாகங்களாக விழுகிறது. அந்த 64 இடத்தில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அங்கு இருக்க செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார். ராஜராஜ சோழனின் சகோதரி இந்த ஆலயத்திற்கு விளக்குகள் ஏற்றிட நிதி வழங்கினார் என கல்வெட்டில் உள்ளது. சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன. இத்தல இறைவனை முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிஷி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 221 நெய்வணை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 221 வது தேவாரத்தலம் நெய்வணை. புராணபெயர் திருநெல்வெணெய். மூலவர் சொர்ணகடேஸ்வரர், வெண்ணையப்பர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக 7500 ருத்திராட்ச மணிகள் கொண்ட பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது. அந்நேரத்தில் மட்டும் சிவன் நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை என நிறங்கள் மாறி மாறி தெரிகிறார். அம்பாள் நீலமலர்க்கண்ணி, பிருஹந் நாயகி. இங்கு சூலத்தின் மத்தியில் சிவன் நின்றகோலத்தில் உற்சவராக இருக்கிறார். சிவமும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை உணரலாம். தலமரம் புன்னை. தீர்த்தம் கிணற்று தீர்த்தம். நான்கு முறமும் சுற்று மதிலுடன் ஒரு முகப்பு வாயில் மட்டுமே கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு முன்பாக நந்தி மற்றும் பலிபீடம் உள்ளன. கொடிமரமில்லை.

மூலவர் சந்நிதி வாயிலின் வெளியே மகாவிஷ்ணு சங்கு சக்ரதாரியாக தன் இடது மடியில் கைகளை கூப்பி வணங்கிய கோலத்தில் மகாலட்சுமியை அமர்த்தியபடி லட்சுமி நாராயணராக இருக்கிறார். வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியுள்ளது. அதையடுத்து வள்ளி தெய்வயானை உடனாகிய ஆறுமுக சுவாமி மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். மயில் இடதுபுறம் திரும்பி உள்ளது. முருகர் சந்நிதி பின்புறம் காசி விஸ்வநாதர் சந்நிதி, ஸ்படிக லிங்கம், நால்வர் சந்நிதிகள் உள்ளன. திருஞானசம்பந்தர் கையில் தாளமின்றி கை கூப்பிய நிலையிலும் சுந்தரர் நடன சுந்தரராகவும் காட்சி தருகின்றார். அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் காணப்படுகிறார். இங்கு அதிகார நந்தி பக்தர்களுக்காக இரண்டு கால்களையும் இணைத்து கை கூப்பி வணங்கி சிவனிடம் வேண்டிக்கொள்கிறார். சிவனே வந்து நெல்லை அணையாக கட்டிய தலம் என்பதால் இவ்வூர் நெல் அணை எனப்பட்டு காலப்போக்கில் நெய்வணை என்று மருவியுள்ளது. திருத்தல யாத்திரை வந்த திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அருகே வந்தபோது இருட்டி விட்டது. எனவே அவர் வழி தெரியாமல் தடுமாறி ஓரிடத்தில் நின்றார். அப்போது சிவன் அம்பாளை அனுப்பி திருஞானசம்பந்தனுக்கு வழிகாட்டி இங்கு வரச்சொல் என்று சொல்லி அனுப்பினார். அம்பாளும் திருஞானசம்பந்தருக்கு எதிரே சென்று தன்னுடன் வரும்படி கூறினாள். அம்பாள் திருஞானசம்பந்தரின் எதிர்நின்று அழைத்த இடம் அருகில் எதலவாடி என்று பெயரில் இன்றும் இருக்கிறது. அவளுடன் இங்கு வந்த திருஞானசம்பந்தர் சிவனை வணங்கி இருட்டிலும் தனக்கு அற்புத தரிசனம் தந்த மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டே பதிகங்கள் பாடினார். எனவே இங்குள்ள திருஞானசம்பந்தர் நடனம் ஆடிய கோலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார்.

முன்னொரு காலத்தில் இப்பகுதி வயல்கள் நிறைந்து விவசாயத்தில் சிறந்த இடமாக இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் செழிப்பாக குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தனர். வசதியான வாழ்க்கையால் மக்கள் இறை வழிபாட்டை முழுமையாக மறந்தனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் வருணனிடம் சொல்லி இவ்விடத்தில் மட்டும் இடைவிடாது தொடர் மழையை பெய்யும்படி கூறினார். அதன்படி வருணனும் இங்கு மழை பொழிவித்தான். முதலில் மழையைக் கண்டு மகிழ்ந்த மக்கள் தொடர்ந்து நிற்காமல் பெய்யவே கலக்கம் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து மழை பெய்ததால் ஊரில் இருந்த அனைத்து குளம் ஏரிகளும் நிரம்பி வழிந்தது. அப்போது ஊரின் மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து தண்ணீர் வெள்ளமாக ஊருக்குள் பாய்ந்தது. அது வரையில் இறை வழிபாட்டை மறந்திருந்த மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.

மனம் இறங்கிய சிவன் ஒரு வாலிபர் வடிவில் வந்தார். ஒவ்வொருவரும் வீட்டில் வைத்திருந்த நெல் மூட்டைகளை தரும்படி கூறினார். அவர்களும் எடுத்து கொள்ளும்படி சொல்லவே அவர் நெல்மூடைகளை தூக்கி வந்து ஏரியில் அணையாக கட்டி வெள்ளத்தை தடுத்தார். பின் அவர் வருணபகவானிடம் மழையை நிறுத்தும்படி சொல்லவே அவரும் மழையை நிறுத்தினார். மழையினால் தங்கள் உடமைகள் பொருள் அனைத்தையும் இழந்து நின்ற மக்கள் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் வாலிபனிடம் நீ தான் எங்கள் தெய்வம் என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். அவர்களிடம் உங்களது அனைத்து நிலைகளுக்கும் இறைவன் ஒருவனே காரணம். எனவே எந்த சூழ்நிலையிலும் அவனை மட்டும் மறந்து விடாதீர்கள் என்று சொல்லி அனைவருக்கும் தங்கம் நிரம்பிய குடங்களை கொடுத்துவிட்டு இழந்ததை இதன் மூலம் மீட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி மறைந்து விட்டார். மக்கள் புரியாமல் தவிக்கவே அந்த வாலிபர் அவர்களுக்கு தன் சுயரூபம் காட்டி சுயம்புவாக எழுந்தருளினார். பின் மக்கள் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினர். சொர்ணம் தந்தவர் என்பதால் சொர்ணகடேஸ்வரர் என்று பெயர்பெற்றார். இவருக்கு நெல்வெண்ணெய்நாதர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்து கல்வெட்டு ஓன்றில் இத்தல இறைவன் பெயர் பொற்குடங் கொடுத்தருளிய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் சுவாமியை பூஜித்து வணங்கியுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 220 விருத்தாச்சலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 220 வது தேவாரத்தலம் விருத்தாச்சலம். புராணபெயர் திருமுதுகுன்றம். மூலவர் விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை, இளைய நாயகி, பெரியநாயகி. தலமரம் வன்னிமரம் 2500 ஆண்டுகள் பழமையானது. இதனை திருச்சியில் உள்ள மத்திய அரசு பாரத மின்பகிர்வு கழகம் ஆராய்சி செய்து வெளியிட்டுள்ளது தீர்த்தம் மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம். இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம் என்கிறது தலவரலாறு முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும். இவர் 18 படியிறங்கி கீழே சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார்.

ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை. இக்கோயிலை ஆகமக்கோயில் என்றே அழைப்பார்கள். இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கின்றனர். விருத்த என்றால் முதுமை என்றும் அசலம் என்றால் மலை என்றும் பொருள்படும். எனவே விருத்தாசலம் என்றால் பழமலை என்பது கருத்தாகிறது. தேவாரப்பாடல்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று பாடப்பட்டுள்ளது. இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மை பயன்களும் மறுமை பயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன. சிவாலயம் 4 புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும் 660 அடி நீளமும் 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் உள்ளது. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும் பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 நாயன்மார் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்பில் உள்ளது. கோவிலில் அனைத்தும் ஐந்து என்ற எண்ணிக்கையில் உள்ளது. இறைவனுக்கு ஐந்து பெயர்கள் விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி. ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி என ஐந்து வினாயகர்கள் உள்ளனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம் என ஐந்து கோபுரங்கள் உள்ளன. உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி என ஐந்து முனிவர்கள் இங்கு இறைவனை தரிசித்துள்ளனர். தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று என ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

ஐந்து கொடி மரங்களும் இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர். கோவிலுக்கு உள்ளே அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம் என ஐந்து மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வெளியே இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம் என ஐந்து மண்டபங்கள் உள்ளது. திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என ஐந்து விதமான வழிபாடுகள் இறைவனுக்கு நடைபெருகிறது. விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்கள் உள்ளது. திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஆறுமுருகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் தேவியர்களுக்கு மேலே சக்கரங்கள் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்லா உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய புடவைத்தலைப்பால் வீசி இளைப்பாற்றி பாவங்களைப் போக்குகிறாள் என்றும் இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தை அருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்குகிறார் என்றும் கந்தபுராணம் சொல்கிறது. ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது என்றும் இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்றும் தலவரலாறு சொல்கிறது. காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் உள்ள புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால் அவை கூழாங்கற்களாக மாறிவிடுகிறது. இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால் காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைத்து சித்தி அடைவர் என்கிறது தலவரலாறு ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க சிவபெருமானும் அருள் செய்து தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகள் தோன்றின. பிரம்மா படைத்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முதலில் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

குருநமசிவாயர் என்ற மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோவிலின் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை கிழத்தி என்ற வார்த்தையை உபயோகித்து துதித்து பாடினார். பெரிய நாயகி முதியவடிவில் எதிரே தோன்றி என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய் கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர முடியும் என்று கேட்க குருநமசிவாயர் இளமை நாயகியே என்று பொருளுடன் பாட அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள். பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் பாலாம்பிகை என்ற பெயரில் தனிக்கோயில் உள்ளது.

ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்தார். சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார். தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்ததை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார். தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும் இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன. இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்தது. விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்கினார் அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது அருணகிரிநாதர், குமார தேவர், குருநமச்சிவாயர், சிவப்பிரகாசர், ராமலிங்க அடிகளார் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.