மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -2

பாண்டவர்கள் போருக்கு ஆயுத்தமான பணிகளை செய்ய ஆரம்பித்தனர். துரியோதனன் எதிர்பார்த்ததை விட அதிவிரைவில் துவங்கும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. துரியோதனனும் போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். தன்னுடைய நண்பர்கள் அனைவரின் உதவியை நாடி தூதுவர்களை அனுப்பி வைத்தான். அரசர்களும் அவர்களுடைய சேனைகளும் மிகப் பரபரப்புடன் ஆங்காங்கு போருக்கு ஆயத்தமாயினர்.

கிருஷ்ணனுடைய உதவியை நாடி துரியோதனன் தானே துவாரகைக்கு அவசரமாக புறப்பட்டு சென்றான். அதேபோல் கிருஷ்ணனுடைய உதவியை நாடி அர்ஜூனனும் அங்கு விரைந்து சென்றான். அப்போது கிருஷ்ணன் உறங்கி கொண்டிருந்தார். கிருஷ்ணனுடைய கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஒற்றை நாற்காலியின் மீது துரியோதனன் விரைந்து சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்கு பின் சென்ற அர்ஜுனன் கிருஷ்ணருடைய கால்மாட்டில் கைகட்டி நின்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் கண் விழித்து பார்த்ததும் கால்மாட்டில் நின்று கொண்டிருந்த அர்ஜுனன் தென்பட்டான். இருவருக்குமிடையில் நலத்தைப் பற்றி விசாரணை நிகழ்ந்தது. பின்பு கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தம்மை நாடிவந்ததன் நோக்கம் என்ன என்று கேட்டார். அர்ஜுனன் வந்த விஷயத்தை உள்ளபடி எடுத்து விளக்கினான். அர்ஜுனனுக்கு உதவி செய்ய கிருஷ்ணன் சம்மதம் தெரிவித்தார்.

அதன் பிறகு கிருஷ்ணரிடம் தலை மாட்டில் துரியோதனன் அமர்ந்து இருப்பதை அர்ஜுனன் எடுத்துரைத்தான். திரும்பிப் பார்த்து அவனுடன் சிறிது நேரம் கிருஷ்ணர் உரையாடினார். கிருஷ்ணனுடைய உதவியை நாடி வந்திருப்பதாக துரியோதனன் சொன்னான். தான் முதலில் வந்ததாகவும் ஆகையால் தர்மரீதியாக தனக்கே கிருஷ்ணன் உதவி செய்தாக வேண்டுமென்று அவன் வேண்டிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணனோ துரியோதனா என்னை நீ முதலில் நாடி வந்துள்ளாய். ஆகையால் என்னுடைய உதவியைப் பெறும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் நான் அர்ஜுனனை முதலில் பார்த்தேன். ஆகையால் அவனுக்கும் என் உதவி கிடைக்கும். உங்கள் இருவருக்கும் நான் உதவி செய்கின்றேன். என்னிடத்தில் இருக்கும் அனைத்தையும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கிறேன். ஆயுதம் இல்லாமல் தனியாக இருக்கும் நான் ஒரு பாகம். என்னுடைய சேனையும் சேனைத் தலைவர்களும் ஆயுத தளவாடங்களும் மற்றொரு பாகமாகும். இவ்விரண்டு பாகங்களில் உனக்கு ஒன்றும் அர்ஜுனனுக்கு ஒன்றும் கிடைக்கும். உங்கள் இருவரில் அர்ஜுனன் இளையவனாக இருப்பதால் அவனே முதலில் எந்த பாகம் வேண்டும் என்று தீர்மானிக்கட்டும். அடுத்த பாகத்தை நீ எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

பாகம் பிரித்து வைத்தது குறித்து துரியோதனனுக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் சேனைகளையும் ஆயுதங்களையும் அர்ஜூனன் முதலில் கேட்டு விடுவானே என்று அரை மனதுடன் அதற்கு சம்மதம் கொடுத்தான். அர்ஜூனன் சற்று சிந்தித்துப் பார்த்தான். போர்க்களத்தில் தனக்கு உதவி பண்ண நிராயுதபாணியாக இருக்கும் கிருஷ்ணனை தனக்கு வேண்டுமென்று அவன் வேண்டினான். அர்ஜூனன் கூறியதும் அதை கேட்ட துரியோதனன் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தான். ஆயுதங்களும் படைகளும் போருக்கு முற்றிலும் தேவையாக இருக்கும் என்பது துரியோதனனுடைய கருத்தாக இருந்தது.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -1

பாண்டவர்களின் எதிர்கால வாழ்வைப் பற்றி ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் அதற்காகவே அழைக்கப்பட்டிருந்த அரசர்கள் எல்லோரும் விராட நகர சபா மண்டபத்தில் கூடினார்கள். இது குறித்து கிருஷ்ணன் சபை நடுவே எழுந்து நின்று பேச ஆரம்பித்தான். பொருத்தமான பிரதிநிதி ஒருவன் அஸ்தினாபுரத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவன் ஆலோசனை சொன்னார். செல்பவன் யுதிஷ்டிரனுடைய நிலைமையை உள்ளபடி எடுத்து விளக்கி அவனுக்கு சேரக்கூடிய ராஜ்யத்தை அவனுக்கு கண்ணியமாக திருப்பித் தரும்படி கேட்டுக் கொள்ளவேண்டும். அடுத்தபடியாக கிருஷ்ணனுக்கு மூத்தவன் பலராமன் பேசினான். சகுனியுடன் சூதாடியதன் வாயிலாக யுதிஷ்டிரன் தவறு செய்து விட்டான். சூதாட்டத்தில் இழந்ததை திருப்பி கேட்பது முறை இல்லை. எனினும் பிரதிநிதியாக செல்பவன் ஏதேனும் ஒருவிதத்தில் பாண்டவர்களுக்கு கௌரவர்கள் சகாயம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம் என்றான்.

பலராமனை தொடர்ந்து யாதவ வீரனான சத்யகி பேசினான். பலராமனுடைய கருத்தை அவன் முற்றிலும் எதிர்த்துப் பேசினான். யுதிஷ்டிரன் விரும்பி சூதாட செல்லவில்லை. அவனுடைய பெரியப்பா திருதராஷ்டிரன் பலவந்தமாக சூதாட்டத்திற்கு அழைத்துள்ளார். சகுனியோடு சூதாடி ஆகவேண்டும் என்று அவனுடைய கௌரவ சகோதரர்களும் வற்புறுத்தினார்கள். கொள்ளையடிக்கும் பாங்கில் யுதிஷ்டிரனுடைய ராஜ்யத்தையும் சொத்துக்களையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை கண்ணியமான முறையில் அவர்கள் திருப்பித் தந்தாக வேண்டும். அப்படித் தராவிட்டால் தர்ம யுத்தத்தின் வாயிலாக திருப்பி எடுத்துக் கொள்ளப்படும். கெஞ்சிக் கேட்பதற்கு இங்கு இடம் இல்லை என்று சத்யகி கூறினான்.

சத்யகியின் பேச்சை துருபத மன்னன் முற்றிலும் ஆமோதித்தான். தன்னுடைய ராஜ்யத்திலிருந்து தகுதிவாய்ந்த துதூவன் ஒருவனே அஸ்தினாபுரத்திற்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தையும் அது சம்பந்தமான விசயங்கள் அனைத்தையும் அவன் அறிந்தவனாக இருப்பான். இது ஒருபுறமிருக்க யுத்தம் வந்தால் தங்களுக்கு உதவி பண்ணக் கூடியவர்களை அதிவிரைவில் அணுகி அவர்களை தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் போய் கேட்பவர்களுக்கு சம்மதம் கொடுப்பது அரசர்களுக்கு அன்றைய நடைமுறையில் இருந்தது.
இந்த விசயத்தில் பாண்டவர்கள் பிந்தலாகாது. நிச்சயமாக முதலில் துரியோதனன் ஓடோடி தன் பக்கம் யுத்தம் செய்ய அரசர்களை அழைப்பான். ஆகையால் யுதிஷ்டிரன் அதிவிரைவில் அரசர்களிடம் சென்று அவர்களின் உதவியை நாடுதல் அவசியம் என்று துருபதன் கூறினான். துருபதன் கூறியவற்றை கிருஷ்ணன் ஆமோதிக்கவும் பாராட்டவும் செய்தான். அங்கு குழுமியிருந்த அரசர்களும் அதே முடிவிற்கு வந்தனர். இப்போது இருக்கும் நெருக்கடியில் யுத்தம் கண்டிப்பாக நடைபெறும் ஆகவே அவரவர்களுக்குரிய சேனைகளை அதிவிரைவில் தயார் படுத்தும் நோக்கில் அவர் அவர்கள் பிரிந்து சென்றார்கள்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -18

விராட மன்னனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் உறவு நன்கு வளர்ந்து வருகையில் துரியோதனனுடைய ஒப்பந்தம் ஒன்றை எடுத்துக் கொண்டு தூதுவன் ஒருவன் வந்தான். அந்த ஒப்பந்தத்தின் படி 13 ஆண்டுகள் பூர்த்தி ஆவதற்கு முன்பே அர்ஜுனனை நாங்கள் பார்த்துவிட்டோம். ஆகையால் நீங்கள் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு வனவாசம் செல்ல வேண்டும். நமக்கிடையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்துக் கொண்டுள்ள ஒப்பந்தத்தில் இருந்து நீங்கள் பிசகுவீர்காளாகில் உங்களுக்கு சொந்தமான தர்மத்திலிருந்து பிசகிப்போனவர்கள் ஆவீர்கள் என்று தூதுவன் கூறினான். அதைக் கேட்ட யுதிஷ்டிரன் வாய்விட்டு கடகடவென்று சிரித்தான். நாம் இருவருக்கும் போற்றத்தக்க பாட்டனாராக இருக்கின்ற பீஷ்மர் 13 ஆண்டுகளை நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினோமா இல்லையா என்பதை கூறட்டும். அவருக்கேற்ற பேரப்பிள்ளைகளான நாம் இருவரும் அவருடைய தீர்மானத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வோம். அப்படி நாம் நடந்து கொள்வது நம்முடைய குடும்பத்தின் கௌரவத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும் என்று அதற்கு மறுமொழியாக ஒற்றனிடம் செய்தி சொல்லி அனுப்பினான்.

விராட மன்னனுக்கு சொந்தமாக இருந்த உபப் பிளவ்வியா என்னும் பட்டணத்திலே பாண்டவர்கள் வசித்து வரலாயினர். வனவாசத்திலிருந்து பாண்டவர்கள் வெளியே வந்து விட்டார்கள் என்ற செய்தி அதிவிரைவில் எங்கும் பரவியது. அதைக் கேள்வியுற்ற நண்பர்களும் அபிமானிகளும் பாண்டவர்களை பார்ப்பதற்கு கும்பல் கும்பலாக வந்தனர். வந்தவர்களில் கிருஷ்ணனும் துருபத மன்னனும் முதன்மை வகித்தார்கள். பாண்டவர்களும் கிருஷ்ணனுக்கு சந்திக்கும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சி மிக்கதாக இருந்தது.

கிருஷ்ணா உன்னுடைய அனுக்கிரஹத்தால் பதிமூன்று ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டவர்களாக இருந்து நாங்கள் திரும்பி வந்திருக்கிறோம். உன்னுடைய எண்ணப்படி நடந்து கொள்ள நாங்கள் இப்போது ஆயத்தமாக இருக்கின்றோம் என்றார்கள். திரௌபதி அழுதபடி ஸ்தப்பித்து நின்று கொண்டிருந்தாள். அவள் கண்ணீரை துடைத்த கிருஷ்ணன் பெண்பால் ஒருத்தியுடைய புனிதத்திற்கு பங்கம் பண்ணுகின்ற பாதகன் தண்டனையிலிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள மாட்டான். நீ பட்டுள்ள மானபங்கத்திற்கு ஈடு செய்வேன் என்று பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு காம்யக வனத்தில் உனக்கு வாக்கு கொடுத்திருக்கின்றேன். அதிவிரைவில் நீ மகிழ்வுற்றிருக்கும் நாள் வரப்போகிறது. என்றார்.

சுபத்திரையும் அவளுடைய மகன் அபிமன்யுவும் விராட நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அபிமன்யு அவனுடைய தந்தை அர்ஜுனனை போன்றே ஆற்றல் மிகப்படைத்தவனாக இருந்தான். சில கூறுகளில் அவன் தந்தைக்கு மிக்கானாக இருப்பான் என்னும் அறிகுறிகள் அவனிடம் தெரிந்தன. வந்தவர்களை விராட நகரத்தின் மகாராணி சுதேசனை மகிழ்வுடன் வரவேற்றாள். மற்ற உறவினர்களும் அதிவிரையில் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர். அவர்கள் எல்லோருடைய முகங்களிலும் மகிழ்வு ததும்பிக் கொண்டிருந்தது. ராஜகுமாரி உத்தரையை அபிமன்யுவிற்கு திருமணம் செய்து முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் அதிவிரைவில் ஆயத்தமாகி பெருமகிழ்வுடன் இனிதாக திருமணம் நடந்தது. யுதிஷ்டிரனை பார்க்க வந்த வேந்தர்கள் பலர் இந்த விவாகத்தில் கலந்து கொண்டனர்

விராட பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து உத்தியோக பருவம்

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -17

அர்ஜுனன் எழுந்து விராட நகர மன்னனிடம் இப்பொழுது இங்கு சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவர் யுதிஷ்டிரன். அவர் தேவலோகத்தில் தேவேந்திரனுடைய சிம்மாசனத்திலும் அமர தகுதி வாய்ந்தவர். அத்தகையவர் தங்கள் சிம்மாசனத்தின் மீது அமர்வதற்கு தடை ஏதுமில்லை என்றான். மன்னன் இதைக்கேட்டு வியப்புற்றான் சிறிதுநேரம் மன்னனின் நாவில் பேச்சு ஏதும் எழவில்லை. பிறகு இவர் யுதிஷ்டிரர் என்றால் என்னுடைய அரண்மனையில் வந்து இங்கு தங்கி வேலைபார்த்தவர்கள் யார் எனக்கேட்டான். வேலையாட்களாக வந்தவர்களும் தானும் குருவம்சத்தின் பாண்டவ சகோதரர்கள் என்றும் சைரந்திரியான பணிப்பெண் திரௌபதி என்றும் அர்ஜுனன் அறிமுகப்படுத்தினான்.

உத்தரன் தன் தந்தைக்கு போரில் நடந்தவைகள் அனைத்தும் சொல்ல ஏற்ற நேரம் வந்துவிட்டது என்று எண்ணினான். விராட நகரத்தை காப்பாற்றுவதற்காக போர் புரிந்தவன் அர்ஜுனன் அவனுக்கு தேரோட்டியாக நான் இருந்தேன். அர்ஜுனன் இங்கு அப்பாவி போன்றே இருந்து வந்தான் ஆனால் போர்க்களத்தில் தெய்வீக ஆற்றல் படைத்தவனாக அவன் நடந்து கொண்டான். ஒற்றை ஆளாக இருந்து கொண்டு கௌரவ போர் வீரர்களையும் அவனுடைய சேனைகளையும் அவன் விரட்டினான். நம்முடைய அரசாங்கத்தை காப்பாற்றியவன் அர்ஜுனனே என்றான்.

யுதிஷ்டிரனை பார்த்து விராட மன்னன் ஒரு வருட காலம் தங்களை இன்னார் என்று காட்டிக் கொள்ளாது என்னுடைய அரண்மனையில் வசித்து வந்துள்ளீர்கள். நான் தங்களுக்கு காட்டிய அரைகுறையான உபசாரத்தை குறித்து என்னை மன்னித்து அருளும்படி வேண்டுகிறேன் என்னுடைய நாட்டில் தங்கள் தங்கியபடியால் தெய்வீகம் நிலைபெற்றிருந்தது அதனால் முறையாக மழை பெய்துள்ளது. நலன்கள் யாவும் முன்னனிக்கு வந்து கேடுகள் யாவும் பின்னணிக்கு போயிருக்கிறது. நாடு சௌபாக்கியமே வடிவெடுத்துள்ளது. என்னையும் என்னுடைய ராஜ்யத்தையும் எனக்கு சொந்தமாக உள்ள ஏனைய அனைத்தையும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் என்றான். யுதிஷ்டிரன் மன்னனின் கையைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கின்றோம். தங்களுடைய நகரிலேயே எங்களுடைய ஓர் வருட அக்ஞாத வாசம் என்னும் கடினமான பகுதியை மிக மகிழ்வுடன் கழித்து வந்தோம். வேற்றார்களாக நாங்கள் இங்கு வந்தோம் எங்களை அன்போடு தாங்கள் பராமரித்தீர்கள். உங்களோடு உறவு பூண்டதை முன்னிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என்றான்.

விராட மன்னன் அர்ஜுனனைப் பார்த்து என்னுடைய மகளான ராஜகுமாரி உத்தரை என்பவள் உன்னிடமிருந்து இசையையும் நடனத்தையும் நன்கு கற்றுக் கொண்டாள். அவளை மணந்து கொண்டு என்னை கண்ணியப்படுத்த வேண்டும். இதை தவிர வேறு எந்தவிதமான இணக்கத்தை கொண்டும் நான் திருப்தி அடைய மாட்டேன். எனது மகளை திருமணம் புரிந்து கொள்வதன் வாயிலாக உறவினர் என்னும் பந்தம் எப்பொழுதும் நம்மிடையே உறுதி பெறுகிறது என்றான். அதற்கு அர்ஜுனன் உத்தரையை எப்பொழுதும் என் மகளாகவே பாவித்து வந்திருக்கின்றேன். அந்த இணக்கம் தெய்வீக இணக்கத்திற்கு நிகரானது. அந்த மனப்பான்மையை நான் இப்பொழுது மாற்ற இயலாது. ஆயினும் அவளை என்னுடைய மருமகளாக நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய மகன் அபிமன்யுவுக்கு அவள் மனைவியாவாள். எனது மகனுக்கு திருமணம் செய்வதன் வாயிலாக உங்களுடைய விருப்பம் நிறைவேறுகிறது. அத்துடன் இக்குழந்தையோடு நான் வைத்துள்ள குரு என்னும் ஆச்சாரிய இணக்கத்திற்கும் பங்கம் ஏதும் வராது என்றான். அர்ஜுனன் கூறியது அனைவருக்கும் மன திருப்தியை உண்டு பண்ணியது.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -16

ராஜகுமாரன் உத்தரன் தந்தையின் முன்னிலையில் வந்து வணக்கம் செலுத்தினான். கனகன் யார் என்பதை இப்போது ராஜகுமாரன் அறிந்ததினால் கனகனுக்கு தக்க மரியாதை செலுத்தினான். கனகனின் முகத்தில் காயம் ஆகி இருப்பதை பார்த்த ராஜகுமாரனுக்கு வருத்தம் உண்டாயிற்று. இந்த சான்றோரை காயப்படுத்தியது யார் என்று அவன் அதிகார தோரணையுடன் கேட்டான். அதற்கு ஒரு சுருக்கமான விளக்கம் சொல்லி இது அவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி அல்ல என்று அரசன் அதை ஒதுக்கி வைத்தான். தந்தை இவர் யார் என்று உங்களுக்கு தெரியாது இவர் காலில் விழுந்து தயை கூர்ந்து அவருடைய மன்னிப்பை பணிந்து கேட்டுக்கொள்ளுங்கள் அப்படி செய்யாவிட்டால் நாம் அனைவரும் ஒழிந்துபட்டு போவோம் என்று அரசரிடம் வற்புறுத்தி கூறினான். அரசனும் ராஜகுமாரன் சொன்ன படியே நடந்து கொண்டான். ஏனென்றால் இது வரையில் சாதாரண ஆளாக தென்பட்ட ராஜகுமாரன் இப்போது திடீரென்று வெற்றிவீரனாக தென்பட்டான்.

அரசர் வெற்றிவிரனான உத்தரனை தழுவிக்கொண்டு அருமை செல்வா செயற்கரிய வீரச் செயலை நீ சாதித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அசைக்க முடியாத கௌரவ சேனையை எப்படி தோற்கடித்தாய். பசுக்களை எல்லாம் எவ்வாறு மீட்டெடுத்தாய் என்று விளக்கமாக கூறு அதை கேட்க ஆவலாக இருக்கின்றேன் என்றார். அதற்கு உத்தரன் இச்செயலை செய்தது நான் இல்லை. நானோ தயங்கிக்கொண்டிருந்தேன். அப்போது பராக்கிரமே வடிவான ராஜகுமாரன் ஒருவன் இந்த வீரச்செயலை சாதித்தான். விரைவில் அவன் இங்கு வந்து அனைத்து விஷயங்களையும் விளக்குவான் என்றான்.

ராஜகுமாரன் கௌரவர்களை எதிர்க்க புறப்பட்ட பொழுது ராஜகுமாரன் உத்தரனுடைய தங்கை உத்தரை தனது இசைகுருவான பிருஹன்நளாவிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தாள். போர்க்களத்தில் தனது சகோதரன் வெற்றி அடைந்த பின் எதிரிகளின் பட்டுத்துணிகள் சிலவற்றை பறிமுதல் செய்து தனக்கு கொண்டு வரவேண்டும் என்று அவள் வேண்டினாள். அவளுடைய சகோதரன் உத்தரனும் பிருஹன்நளாவின் செயலால் வெற்றி பெற்றான். பிருஹன்நளா கௌரவர்கள் மயக்கத்தில் இருக்கும் போது பறிமுதல் செய்த பட்டு துணிகளை வெற்றியின் சின்னமாக அவளுக்கு கொடுத்தாள். தன்னுடைய இசை ஆசிரியரிடமிருந்து அவைகளை பெற்று அவள் பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

மூன்று நாட்களுக்கு பிறகு பாண்டவ சகோதரர்களும் திரௌபதியும் நீராடிவிட்டு ராஜவீதியில் உடை அணிந்து கொண்டு ராஜ சபை மண்டபத்திற்கு போனார்கள். அங்கு அரசனுக்குரிய சிம்மாசனத்தின் மீது ஏறி யுதிஷ்டிரன் அமர்ந்து கொண்டான். ஏனைய சகோதரர்கள் அவரவர்கள் அந்தஸ்துக்கு உரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். வழக்கம் போல் விராட மன்னன் மந்திரி பிரதானிகள் புடைசூழ சபைக்கு வந்தான். வந்தவன் தான்னுடைய சிம்மாசனத்தின் மீது கனகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். கனகா என்னுடைய ராஜசபையில் பகடை விளையாடுபவனாக உன்னை வைத்து நேசித்து வந்தேன். இப்பொழுது ராஜரீதியில் உடையணிந்து கொண்டு என்னுடைய சிம்மாசனத்தின் மீது அமர்ந்து இருக்கின்றாய் இப்படி நடந்துகொள்வது உனக்குப் பொருந்தாது. உன்னுடைய உயிரை காப்பாற்ற விரும்பினால் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்ற சரியான காரணத்தைக் கூறு என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் புன்னகை பூத்த பாங்கில் ஒன்றும் பேசாது அரசரை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஓம் நமோ நாராயணாய நம

ஒரு நாள் அக்பர் அரசவையில் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று அக்பர் பீர்பாலிடம் கேட்டார். அதற்கு பீர்பால் அரசே அவருக்கு ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் என்று பதில் அளித்தார். ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டார். இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். அதை பார்த்ததும் அக்பருக்கு பீர்பால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்தார்.

ஒரிரு நாட்கள் சென்றன. அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய். என்னால நம்பவே முடிலவில்லை. என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும் என்றார் கோபமாக. பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செய்தேன் அரசே என்றார். அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்

பீர்பால் அரசே என்னை மன்னியுங்கள். நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே. சிறிது யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கின்றேன். நீங்கள் திடிரென்று தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்

பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே ஒரு குழந்தை மீது இவ்வளவு அன்பு இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு தன்னை நம்பும் உயிர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கும் ஆகையால் தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அக்பர் இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

Image result for திருமால் முதலை

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -15

அர்ஜுனன் எய்த சம்மோஹன அஸ்திரத்தின் வேகம் சிறிது நேரத்தில் தணிந்தது. தூக்கத்திலிருந்து விழித்தெழுபவர்கள் போன்று கௌரவர்கள் மற்றும் படை வீரர்கள் விழித்துக் கொண்டார்கள். எழுந்ததும் நிலைமையை அவர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். கழுத்திலிருந்த பட்டு துண்டுகளை தாங்கள் பறிகொடுத்து இருப்பதை அறிந்தார்கள். இந்நிகழ்ச்சி அர்ஜுனன் அவர்களை தோற்கடித்ததற்கு அறிகுறியாக இருந்தது. தாங்கள் தோல்வி அடைந்ததை எண்ணி கௌரவர்கள் மிகவும் துயரத்துடன் அஸ்தினாபுரம் திரும்பிப் போனார்கள். உத்தரனும் அர்ஜூனனும் ஆயுதங்களை மீண்டும் மரப் பொந்தில் மறைத்து வைத்து விட்டு வெற்றி வீரர்களாக அரண்மனைக்கு திரும்பிப் போனார்கள். இப்பொழுது அர்ஜுனன் மீண்டும் பிருஹன்நளாவாக ரதத்தை ஓட்டிச் சென்றாள்.

விராட நாட்டின் மீது படையெடுத்து வந்த திரிகர்த்த மன்னனாகிய சுசர்மனை வெற்றி கொண்டதை முன்னிட்டு நகரவாசிகள் விராட அரசனுக்கு குதூகலமான வரவேற்பு அளித்தார்கள். வெற்றியை கொண்டாடும் இடத்தில் ராஜகுமாரன் உத்தரன் காணப்படவில்லை. இதனை அரசன் விசாரித்த பொழுது பண்ணையின் வடபகுதியை தாக்குவதற்கு படையெடுத்து வந்த கௌரவ சேனையை சமாளிப்பதற்கு உத்தரன் தனியாக போய் இருக்கிறான் என்ற விஷயத்தை அரசன் அறிய வந்தான். அவனுக்கு துணையாக பிருஹன்நளா மட்டும் அவனுடன் சென்று இருக்கிறாள் என்ற செய்தியை கேட்டதும் அரசனுக்கு வருத்தம் உண்டாயிற்று. நிகழ்ந்த போராட்டத்தில் நிச்சயமாக அந்த ராஜகுமாரன் கொல்லப்பட்டு இருப்பான் என்று முடிவு செய்தான். அவன் உயிரோடு இருந்தால் அவனைக் காப்பாற்றுவதற்கு திடம் வாய்ந்த படை ஒன்று அனுப்ப அரசன் உத்தரவிட்டான். உத்தரனுடன் பிருஹன்நளா சென்றிருக்கிறாள் ஆகவே ராஜகுமாரனுக்கு தீங்கு ஒன்றும் நேராது என்று கனகன் அரசனுக்கு உறுதி கூறினான். இதற்கிடையில் உத்தரன் கௌரவ சேனையை தோற்கடித்து விட்டான் என்றும் பசுக்களை அனைத்தும் மீட்டு விட்டான் என்றும் அரசருக்கு செய்தி வந்தது. சாத்தியம் இல்லாத இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள அரசனுக்கு மனம் ஒப்பவில்லை.

தேரோட்டியாக பிருஹன்நளா உடன் சென்று இருப்பதினால் ராஜகுமாரனுக்கு வெற்றி நிச்சயம் என்று கனகன் அரசருக்கு உறுதி கூறினான். உத்தரன் மீது அரசன் கொண்ட கவலையை போக்க இச்செய்தியை கனகன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தான். ராஜகுமாரனுக்கு மேலாக ஒரு பெண்ணுக்கு கனகன் முக்கியத்துவம் கொடுத்தது அரசனுக்கு பிடிக்கவில்லை. இதைக் குறித்து அரசன் கனகன் மீது மிகவும் கோபம் கொண்டு கனகனின் முகத்தில் பகடையை வீசி எறிந்தான். அது கனகனின் நெற்றியில் பட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அப்பொழுது அருகில் இருந்த சைரந்தரி சொட்டிய இரத்தத்தை தன் சேலை முந்தானையால் துடைத்து எடுத்து அதை தங்கக் கிண்ணத்தில் பிழிந்து வைத்தாள். அரசனுக்கு சைரந்தரி செய்தது பிடிக்கவில்லை. இதை குறிப்பால் அறிந்து கொண்ட சைரந்தரி அதற்கு விளக்கம் சொன்னாள். இவர் ஒரு சான்றோர் இவருடைய ரத்தம் பூமியில் விழுந்தால் பல வருடங்களுக்கு இந்நாட்டில் மழை பொய்த்துப் போகும் என்றாள். அப்போது உத்தரனும் பிருஹன்நளாவும் அரண்மனைக்கு திரும்பி வந்து விட்டார்கள் என்ற செய்தி அரசருக்கு தெரிவிக்கப்பட்டது உடனே அவர்களை ராஜசபைக்கு அழைத்து வர வேண்டும் என்று அரசன் ஆணையிட்டான். தனது நெற்றியில் ரத்தம் வந்து கொண்டிருப்பதை பிருஹன்நளா பார்த்தால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்ற காரணத்தால் சிறிது நேரம் பொறுத்து பிருஹன்நளா வரவேண்டும் என்ற செய்தியை கனகன் சொல்லி அனுப்பினான்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -14

விராட நகரத்தின் பசுக்களை மீட்டெடுப்பது அர்ஜுனன் செய்ய வேண்டிய முதல் கடமையாக இருந்தது. அதற்கேற்ற முறையை அவன் கையாண்டான். தன்னுடைய காண்டீப வில்லில் இருந்து கணக்கற்ற அம்புகளை அவன் பறந்தோடச் செய்தான். அதனுடைய சத்தம் காதைத் துளைத்தது. அந்த சத்தத்தின் விளைவாக பசுக்கள் எதிரிகளின் கைவசத்தில் இருந்து தப்பித்துக் கொண்டு தங்கள் பண்ணையை நோக்கி விரைந்து ஓட்டம் பிடித்தன. பசுக்களை பராமரித்து வந்த மாட்டுக்காரர்கள் மகிழ்வுடன் அவற்றை பின் தொடர்ந்து ஓடினார். அர்ஜுனன் பசுக்களை மீட்டெடுப்பதில் வெற்றி அடைந்தான்.

போரில் பசுக்களை மீட்டெடுப்பது துவக்க பகுதியாக இருந்தது. அடுத்தபடியாக அவன் துரியோதனனை பின்தொடர்ந்தான். கௌரவ போர்வீரர்கள் அவனுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர். போர்வீரர்கள் அனைவரும் அர்ஜுனனை வளைத்துக் கொண்டு தாக்கினர். ஆனால் அற்புதமான பங்கிலே அனைவரையும் அவன் முறியடித்தான். தாக்கிய அனைவரையும் சமாளித்துக் கொண்டு அவன் விரைந்து பாய்ந்து கர்ணணை தாங்கினான். விரைவில் கர்ணன் போர்க்களத்தில் இருந்து பறந்து ஓடி விட்டான். அடுத்தபடியாக அர்ஜுனன் துரோணாச்சாரியாரை தாக்கினான். துரோணாச்சாரியார் சோர்ந்து போய் பின்வாங்கினார். அதன்பிறகு அசுவத்தாமன் அர்ஜுனனை வந்து தாக்கினான். இருவருக்கும் இடையில் நடந்த போர் மிகவும் பயங்கரமாக இருந்தது. அசுவத்தாமனும் சோர்வடைந்து பின்வாங்கினான். பிறகு அந்த இடத்தை கிருபாச்சாரியார் வந்து பிடித்துக் கொண்டார். அவரும் விரைவில் பின்வாங்கினார். அர்ஜுனன் மிக லாவகமாக அங்கு வந்து இருந்த படைகளை தோற்கடித்தான்.

பீஷ்மர் முன்வந்து அர்ஜுனனை தாக்கினார். பாட்டனாருக்கும் அர்ஜூனனுக்கும் இடையில் நடந்த போராட்டம் மிகவும் பயங்கரமாக இருந்தது. அந்த அரிய நிகழ்ச்சியை பார்க்க விண்ணவர்களும் உலகிற்கு வந்தனர். களைத்துப்போன பாட்டனாருக்கு சிறிது ஓய்வு தேவையாக இருந்தது. அவரும் பின் வாங்கினார். அர்ஜுனன் இப்போது தன்னுடைய ஜென்மத்து விரோதியாய் இருந்த துரியோதனனை தாக்கினான். துரியோதனன் அதிவிரைவில் தோல்வியடைந்து போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடித்தான். அவனிடம் நீயும் ஒரு க்ஷத்திரனா வெட்கமாக இல்லையா என்று அவனை ஏளனம் பண்ணினான். அர்ஜூனனின் பரிகாசம் செய்ததை முன்னிட்டு துரியோதனனுக்கு ஓரளவு வீரத்தை தூண்டியது. ஆகையால் அவன் மீண்டும் போர் புரிய துணிந்து வந்தான். அவனை பின்பற்றிய அவனுடைய சேனைத் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து அதனை தாங்கினார். வல்லமை பெற்று இந்த போர் வீரர்கள் பலரை ஒற்றை மனிதனாக அர்ஜுனன் சமாளித்து பார்ப்பதற்கு அரிய காட்சியாக இருந்தது.

வீராதி வீரர்கள் அத்தனை பேருக்கும் மேம்பட்டவன் அர்ஜுனன் என்பதை நிரூபித்துக் காட்டினான். அதன் பிறகு அவன் சம்மோஹன அஸ்திரத்தை கையாண்டான். அதன் விளைவாக எதிரிகள் அத்தனை பேரும் மயங்கி கீழே விழுந்தார்கள். இந்த சூழ்நிலையில் வெற்றிவேந்தனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான். அந்த நிலையில் அர்ஜூனன் ராஜகுமாரன் உத்திரனுக்கு ஒரு சிறிய வேலை கொடுத்தான். கௌரவ படைவீரர்கள் கழுத்தில் அணிந்திருந்த பட்டு துணிகளை அவிழ்த்து வரும்படி கூறினான். இச்செயல் நிறைவேறிய பிறகு வெற்றி வீரனாக அர்ஜுனன் அவ்விடத்திலிருந்து அரண்மனை நோக்கி சென்றான்.