கேள்வி: மனம் என்பது என்ன?
உடலைச் சுற்றியிருக்கும் கோசங்களில் (மூடியிருக்கும் உறை) ஒன்று மனோமய கோசமாகும். இது மனதின் எண்ணங்களால் செய்யப்பட்ட ஒரு கோசம். மனம் என்பது எண்ணங்கள், சிந்தனைகள், ஜென்மாந்திர வாசனைகள் (முன் ஜென்மங்களின் நினைவுகள்) ஆகியவற்றின் கோர்வையாகும். ஜென்மாந்திர வாசனைகள் நம்மைத் தொடர்ந்து வரும். இது தீவிரம் அடைந்து சிந்தனைகளாக மாறி வெறியாக மாறி மனமாக மாறுகிறது. இந்த ஜென்மத்தில் நாம் சிந்திக்கும் எண்ணங்கள் அனைத்தும் மனமாக மாறுகிறது. மனம் என்று தனி வஸ்து (பொருள்) இல்லை. அத்தகைய மனம் பரிசுத்தம் அடைய வேண்டுமென்றால் நல்ல எண்ணங்கள் இருத்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. பலர் நல்வழியில் முயற்சிக்கின்றனர். இருப்பினும் அவ்வப்போது ஒரு பழமொழி கூறுவது போல் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல மனமும் கெட்ட எண்ணங்களை நோக்கி ஏறும். ஏறட்டும் அதனை மீண்டும் இறக்குவீர்களாக. இவ்விதமே மனதைப் பரிசுத்தம் செய்ய முடியும். பரிசுத்த ஆவி என்று மற்ற மதங்களில் கூறுவது பரிசுத்த மனநிலை என்பதேயாகும். இதை உணராது மனது வேறு பொருளாக எண்ணுவது தவறாகும். மனதினில் வலிமை இல்லையென்றால் மனத்தின் வலிமை குறைந்துவிடும். இதுவே ஒரு மனிதனின் குணத்தையும், வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கிறது. இந்நிலையில் மனதைச் சீர்படுத்துவதே ஓவ்வொருவரின் முதல் கடமையாகும். மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்கின்ற ஓர் பழமொழி உண்டு. மனதால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை. மனதில் ஒரு எண்ணத்தை நிறுத்தி அந்த எண்ணத்திற்குத் தீவிரத்தைக் கொடுத்தால் அக்காரியம் உறுதியாக நடைபெறும் என்பது விதி. அத்தகைய மன வலிமையை முதலில் வளர்த்தல் வேண்டும். மனதைத் தேட வேண்டாம். எனெனில் மனம் நம் சிந்தனைகளே நம் எண்ணங்களே நமது ஜென்மாந்திர வாசனைகளே. மனது கஷ்டப்படுகிறது மனவேதனை கொள்கிறது என்று கூறுவோர் அந்த மனம் எங்கிருக்கிறது என எண்ணுதல் வேண்டும். இதனைத் தேடினாலும் கிடைக்காது என்கின்ற நிலையில் நம் எண்ணங்களே நமக்கு வேதனை அளிக்கிறது என உணர்தல் வேண்டும். அத்தகைய எண்ணங்களை மாற்றி இறைவனின் திசையில் திருப்பிட மனமது செம்மையாகும்.
