கேள்வி: கேடு நினைப்பவன் கெடுவான் என்கின்ற பழைய சொல்லிற்கு உள் அர்த்தம் என்ன?
பொதுவாக மற்றவர்களை கேடு நினைக்கின்றவன் கெடுவான் என்பது தான் பொருளாகின்றது. இருப்பினும் இதனை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். கேடு நினைப்பவன் என்பது மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவன் மட்டுமல்ல. பொதுவாகவே தீயகாரியங்கள் சதா நினைக்கின்றவனும் கேடு நினைக்கின்றவன் ஆவான். இவ்விதம் நினைக்கின்றவன் தகாத காரியங்களை பற்றி சதா நினைக்கின்றவனும் கெடுவான். கெடுவான் என்பதற்கு வேறு அர்த்தம் அழிந்து விடுவான் என்பதாகும். கெட்டு போவான் என்பது மட்டுமில்லாது கெடும் இது பொதுவாக தீபம் அனைவதற்கும் ஓர் வாக்காகும் சதா தீய காரியங்கள் நினைத்து இருக்கின்றவன் சித்த பிரம்மம் கண்டு தீபம் அனைவது போல் அனைந்து விடுவான் தன்னை மாய்த்துக் கொள்வான் என்பதும் பொருளாகும். எப்பொழுதும் தீய எண்ணங்கள் மனதில் வரும் பொழுதும் கெட்ட எண்ணங்கள் மனதில் வரும் பொழுதும் அதனை சீர் (சரி) செய்யும் வகையில் உயர்ந்த எண்ணங்கள் உடனடியாக வளர்த்தல் வேண்டும். தெய்வீக எண்ணங்கள் உடனடியாக வளர்த்தல் வேண்டும் இவ்விதம் செய்தால் தீயவை உடனே மறையும். இதனை கடைபிடிப்போர் சிலரே. ஏன் இவ்வாறு தீய எண்ணங்கள் வருகிறது என எண்ணுவோர் மட்டுமே தெய்வீக எண்ணங்களையும் நல்ல எண்ணங்களையும் உடனடியாக வளர்க்கின்றனர். இரண்டாவதாக இக்காலத்தில் பலரும் பல உபதேசங்கள் பெற்று நல்வார்த்தைகள் கேட்டு முழுமையாக கிரகித்துக் கொண்டு பாண்டித்யம் (இறைஅருள் இல்லாத அறிவு) பெறுகின்றனர். இவர்கள் வாழ்க்கையின் தத்துவங்களை அவை சொல்லும் விளக்கங்களை அமுல்படுத்துவதில்லை. இது சிறு வருத்தத்திற்கு உரியதாகும் ஏனெனில் அவ்வழிகளை கடைபிடிக்கும போது மனதில் பெரும் அமைதி கிடைக்கும். இதனை பலர் மறந்து விடுகின்றனர் துன்பம் வந்தால் அத்துன்பத்தில் மூழ்கி மேலும் மேலும் ஆழமாக பதிந்து விடுகின்றனர். துன்பம் வரும் பொழுது சிரிக்க முடியாது என்கின்ற போதிலும் அத்துன்பத்திலிருந்து மனதை எடுத்து ஏற்கனவே மனதில் நடந்த ஆனந்த காலத்திற்கு மனதை இழுத்துச் செல்ல வேண்டும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் விஷயங்களாகும். இன்பம் பெரிதாக வந்தால் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள் பின் துன்பமும் வருகின்றது என்று. இதில் எந்த வித மாற்றமும் இல்லை பெரும் துன்பம் வந்தால் இத்துன்பத்திற்கு பிறகு மகிழ்ச்சியான காலம் வரும் என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். இவை இயற்கையின் விதி மட்டுமல்லாது அவரவர்களின் கர்மவிதியும் கூட. கர்மம் இல்லாதவன் இவ்வுலகில் இருக்கமாட்டான் என்பது இதற்கு பெரும் விளக்கமாகும். இதனை நன்கு உணர்ந்து செயல்படுவீர்களாக.
