அதிகார நந்தி

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐந்து வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பவராகும். கைலாயத்தில் வாயில் காவலாக நின்றிருக்கும் நந்திக்கு சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால் இவருக்கு அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலின் கோபுர நுழைவாயிலில் உள்ள அதிகாரநந்தி குரங்கு போன்ற முகத்துடனும் மனிதனைப் போன்ற உடல்வாகுடனும் நுணுக்கமான ஆபரணங்கள் மற்றும் பாரம்பரிய உடைகளால் அலங்கரிக்கப்பட்டவராகச் செதுக்கப்பட்டுள்ளார். இந்தக் குறிப்பிட்ட வடிவம் சிவபெருமானின் வாசலைக் காக்கும் காவலராக நந்தி அதிகார நிலையில் இருப்பதைச் சித்தரிக்கிறது.

பேரங்கியூர் மகிஷாசுரமர்த்தினி

துர்க்கையின் இந்த மகிஷாசுரமர்த்தினி சிலை ராஷ்டிரகூட கலைப்பாணி எனப்படுகிறது. துர்க்கை எருமை உருவ மகிஷனை வதம் செய்யும் காட்சி. அருகில் துர்க்கையின் வாகனமான சிங்கம். துர்க்கை வலது காலை நிலத்தில் மடிந்துள்ள மகிஷனின் வலதுகால் மீது ஊன்றி இடது காலை அவன் தோள் மீது வைத்து அழுத்தி இடது கீழ்க்கையால் அவன் நாக்கைப் பற்றி வெளியிழுத்து தலையை மேல் நோக்கித் திருப்பி இடது கையில் ஏந்திய சூலத்தால் அவன் முதுகில் குத்துகிறாள். வலது மூன்றாம் கையில் வாள் அசுரன் தலையைத் துண்டிக்க ஓங்கியுள்ளது. எதிர் இடது கையில் கேடயம். வலது இரண்டாம் கையில் ஆழி வீசப்படும் நிலையில் பிரயோக சக்கரம் உள்ளது. எதிர் இடது கையில் ஓங்கிய வில். மேல் வலது கை வில்லில் பொறுத்திச் செலுத்த அம்பறாத்தூணியில் இருந்து அம்பு ஒன்றை உருவுகிறது. எதிர் இடது மேல் கை வெற்றி முழக்கமிட சங்கு ஓங்கி உள்ளது. இருகைகளில் வாளும் கேடயமும் ஏந்திய அவுணன் ஆற்றலிழந்து மரணத்தின் விளிம்பில் தவிக்கிறான். மகிஷாசுரமர்த்தினியின் முகம் கம்பீரமும் கடுமையும் காட்டுகிறது. இடம்: அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புநாதஈஸ்வரர் திருக்கோவில், பேரங்கியூர் விழுப்புரம் மாவட்டம்.

திரிபுரைசக்தி

சிவபெருமான் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர். சிவ அர்ச்சனை விதிகளையும் தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். இந்த பணிக்கு அவர்களுக்கு வேண்டிய சக்தியைப் பெற்றிட எல்லாம் வல்ல சக்தியை பைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அனைத்து பைரவ பைரவி சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள். சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குகிறார்கள். ஸ்தூல சூட்சும காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை திரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர்.

திரிபுரைசக்தி மற்றும் பைரவர் பைரவி பற்றிய முழுமையான கருத்துக்கள் அனைத்தும் திருமந்திரத்தில் உள்ளது. இந்த பைரவி அருள்பாலிக்கும் இடம் கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.

ஐந்து முக பிரம்மா

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. இந்த பத்து திருக்கரங்களில் வேதப் புத்தகம், ஜெபமாலை, கமண்டலம் மற்றும் தாமரை மலர் ஆகியவை ஏந்தப்பட்டுள்ளன. சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருப்பது போல் தனக்கும் ஐந்து தலைகள் உள்ளதால் தான் இறைவனுக்கு சரிசமமானவன் என்ற கர்வம் வந்த காரணத்தால் சிவபெருமானால் அந்த ஐந்தாவது தலை கொய்யப்பட்டு நான்கு தலைகளுடன் நான்முகன் என்ற பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சிவபெருமானால் பிரம்மாவின் ஐந்தாவது தலை கொய்யப்படுவதற்கு முன்பு பிரம்மன் ஐந்து தலைகளுடன் (பஞ்சமுகன்) படைப்பின் கடவுளாகக் காட்சியளித்த நிலையைக் குறிக்கும் சிற்பம். இந்த சிற்பம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் அதன் நுழைவாயிலில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தூணில் பிரம்மனின் அழகிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த தூண் சிற்பங்கள் கிபி 14 முதல் 15 ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு அல்லது பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகின்றன.

வீணாதார தட்சிணாமூர்த்தி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ வேத நாராயண சுவாமி கோயிலின் கோஷ்டத்தில் வீணாதார தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி வழக்கமாக அனைத்து சிவாலயங்களில் இருப்பார். சில பெருமாள் தலங்களில் புராண கதைகளின் படி இவரைக் காண முடியும். தட்சிணாமூர்த்தி தன் கரங்களில் வீணையை ஏந்தி இசையின் மூலம் பிரபஞ்ச ஞானத்தைப் போதிக்கும் காட்சியில் அருள் பாலிக்கிறார். பேரரசர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கட்டடக் கலைக்கும் ஆன்மீக ஒற்றுமைக்கும் சான்றாக விளங்குகின்றது.

இந்த பெருமாள் கோயிலில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பதுபோல் கல்லிடைக் குறிச்சி மன்னார் கோயிலில் உள்ள வேதநாராயணர் கோவில் விமானத்திலும், கடையநல்லூர் நீலமணிநாதசுவமி கோயிலிலும் கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலிலும் மதுரை சோழவந்தானிலுள்ள பெருமாள் கோவிலிலும் அருள்பாலிக்கிறார்.

பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்ட அனுமன்

இராமாயணத்தில் அசோக வனத்தில் சீதையை சந்தித்த பிறகு இலங்கையை அழிக்கத் தொடங்கிய அனுமனை நோக்கி இந்திரஜித் தனது பிரம்மாஸ்திரத்தை எய்தான். பிரம்மாஸ்திரம் தன்னை ஒன்றும் செய்யாது என்ற வரத்தை ஏற்கனவே பெற்றிருந்த அனுமன் பிரம்மாவிற்கு மரியாதை அளிக்கும் நோக்கத்திலும் அந்த அஸ்திரத்தின் வலிமையை வீணடிக்கக் கூடாது என்பதாலும் பிரம்மாஸ்திரத்தின் மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாகவும் அனுமன் அந்த அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு அடிபணிந்து நின்றார். தான் அனுமனை கட்டுப்பட்டுத்தி வெற்றி பெற்றதாக நினைத்த இந்திரஜித் அனுமனை இராவணனின் அவைக்கு அழைத்துச் சென்றான். இலங்கையின் பலத்தையும் இராவணனின் எண்ணங்களையும் நேரில் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தூதரின் கடமையைச் செய்ய நினைத்த அனுமன் பிரம்மாஸ்திர கட்டுடன் இராவணனின் அரசவைக்கு சென்றார். இந்திரஜித்தின் அறிவுரையை மீறி அசுரர்கள் பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்ட அனுமனை மேலும் சாதாரண கயிறுகளால் கட்டினர். அவர்கள் இவ்வாறு செய்தவுடன் பிரம்மாஸ்திரம் அனுமனை விட்டு நீங்கியது.

இந்திரஜித்தின் வலிமை மிக்க பாம்பு போன்ற பிரம்மாஸ்திரம் எனும் ஆயுதத்தால் அனுமனின் கைகளும் வாலும் சுருட்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் இராமாயணக் காட்சி இந்த சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஆந்திர மாநிலம் தாடிபத்ரியில் உள்ள சிந்தல வெங்கடரமண சுவாமி கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் பேரரசின் தலைவரான திம்மநாயுடுவால் 1510 – 1525 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.

கார்த்திகேயன்

தமிழகத்தின் மானம்பாடி நாகநாதசாமி கோயிலில் இந்த முருகரின் சிலை ஒருகாலத்தில் இருந்தது. நேர்த்தியான நுணுக்கமான அலங்கார வேலைபாடுகளுடன் சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட சிலையாகும். இக்கோயிலானது கிபி 11ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜேந்திரசோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

பத்ரகாளி அம்மன்

திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி அம்மன் சிற்பமானது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலைச் சேர்ந்தது. இக்கோயில் கிபி 13 முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் (பிற்காலச் சோழர் காலம் முதல் விஜயநகரநாயக்கர் காலம் வரையிலான இடைப்பட்ட காலத்தில்) கட்டப்பட்டது. சக்தியின் உக்கிர வடிவமான பத்ரகாளி அம்மன் உருவம் கொண்ட திரிசூலம் உலோகத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

நந்தி பகவான்

கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் இந்த நந்தி பகவான் சிற்பம் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

கண நாயகன்

வேத வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி வியாசர் இடைவிடாமல் சொல்லிய மகாபாரதம் எனும் இதிகாசத்தை தன் தந்தத்தை எழுத்தாணியாக்கி உருவாக்கித்தந்த கண நாயகரின் மரத்தாலான சிற்பம். இடம் ஸ்ரீ மகாதேவர் ஆலயம், வாழப்பள்ளி, கேரளம்.