யோக நரசிம்மர்

இரண்யன் வதை முடித்து யோக நிலையை மேற்க்கொள்ளும் நரசிம்மரை இரசித்து சிவனும் பிரம்மனும் ஆசி கொடுக்கின்றார்கள். யோக நரசிம்மரின் தலைக்கு மேல் சிவன் மற்றும் பிரம்மாவின் உருவம். இடம் திருக்காவியூர் மகாதேவர் கோயில், பத்தனம்திட்டா கேரளா

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி

புதுக்கோட்டை திருவேங்கைவாசல் ஊரில் கீரனூர் சாலையில் அமைந்துள்ள வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சணாமூர்த்தி என்றும் அர்த்தநாரீஸ்வர தட்சணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அபய வரத ஹஸ்தங்களுடன் ஒரு கரத்தில் ருத்ராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார். இக்கோயில் மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி அருள்பாலிக்கிறார். அம்பாள் பிரகதாம்பாள். இந்தல இறைவனை வழிபட்ட காமதேனுவின் சாபத்தை புலி ரூபத்தில் இறைவன் வந்து நீக்கியபடியால் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

பத்திரகிரியார்

பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பர்த்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்த அந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர். இவருடைய மெய்ஞானப்புலம்பல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இந்த சிற்பம் உள்ள இடம் அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் தெற்கு மாட வீதி மயிலாப்பூர்.

வீணாதரசிவன்

தான் வாசித்த இந்தப் பண் எப்படியிருக்கிறது என்ற பார்வையுடன் வீணாதர சிவன். இறைவனின் கை தனது தலையில் வைத்து ஆசி பெற்ற மகிழ்ச்சிப் பூரிப்பில் துள்ளலுடன் அடியவர் நிற்கிறார். வீணாதரசிவன் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. இடம் தர்மராஜ ரதம் மாமல்லபுரம்.

சதுர தாண்டவம் ஆடும் அஷ்ட புஜ சிவன்

சதுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் 108 தாண்டவங்களுள் ஒன்று மற்றும் பரதநாட்டியத்தில் 39வது கரணம் ஆகும். இங்கு சிவன் எட்டு கைகளோடு சதுர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். இடம் காமரசவல்லி உடனுறை கார்கோடேஸ்வரர் கோயில். அரியலூர் மாவட்டம்.

திரிநேத்திர தசபு வீரஆஞ்சநேயர்

மூன்று கண்களையும் பத்துக் கரங்களையும் வைத்திருக்கிறார். முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி அருள்பாலிக்கிறார். இடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் உள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில்.

பெரியவர்

திருமந்திரம் பாடல் எண்: 1031

அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே

எல்லை இல்லாத இறைவனை அளப்பவர்கள் யாருமில்லை என்று திருமூலர் அருளியிருக்கிறார். அளக்க முடியாத இறைவனை சிற்பி தன்னுடைய சிற்பத்தில் காண்பித்து கற்பனையில் இறைவனின் அளவை மனிதர்களின் அறிவுக்கேற்ப புரிந்து கொள்ளும்படி செதுக்கியிருக்கிறார்.

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் இறைவன் சன்னதிக்கு வெளியே இருக்கும் துவாரபாலகரின் காலடியில் ஒரு மரம். மரத்தில் ஒரு பாம்பு இருக்கும். அந்த பாம்பின் வாயில் யானை இருக்கும். யானை மிகவும் பெரியது. பாம்பின் வாயில் யானை என்றால் அந்த யானையையே விழுங்கும் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். அந்த பாம்பு ஒரு மரத்தில் இருக்கும். அப்படி என்றால் அந்த மரம் எவ்வளவு பெரியதாக இருக்கும். அந்த மரம் துவாரபாலகர் காலடியில் இருக்கிறது. அப்படி என்றால் துவாரபாலகரின் பாதம் எவ்வளவு பெரியது. பாதமே இவ்வளவு பெரியதென்றால் துவாரபாலகரது உருவம் எவ்வளவு பெரியது. அந்த துவாரபாலகர் தனது கையை கோயிலின் உள்ளே காட்டுகிறார். கோயிலின் உள்ளே இறைவன் இருக்கின்றார். அப்படி என்றால் இறைவன் எத்தனை பெரியவராக இருப்பார்.

பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டிய இறைவன்

சுகலன் என்னும் வேளாளனின் புதல்வர்கள் பன்னிருவர். தேவகுரு பிரஹஸ்பதியின் கோபத்திற்கு ஆளாகி பன்றிக் குட்டிகளாக பிறந்தனர். காட்டுப்பகுதியில் பாண்டிய மன்னன் வேட்டையாடும் போது இப்பன்றிக்குட்டிகளின் பெற்றோர் இறந்தனர். தாயின்றி பசியால் வாடிய பன்றிக்குட்டிகளின் பசியைப் போக்க சிவபெருமான் தாய்ப்பன்றியாக வடிவெடுத்து பாலூட்டி அவர்களின் பசியைப் போக்கினார். பின்பு அவர்களுக்கு மனித உருவம் அளித்து பாண்டியன் அரசவையில் அமைச்சர்களாக ஆக்கி முக்தி அளித்தார். பெற்ற தாயை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றி வடிவெடுத்து பாலூட்டிய சிவபெருமானின் பெருங்கருணை குறித்து பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணமாகப் பாடியருளியுள்ளார். திருவிளையாடல் புராணத்தில் 45 ஆவது படலமாக உள்ளது. இச்சிற்பம் உள்ள இடம் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில் மதுரை.