வராக நரசிம்மர்

வடக்கு ஆந்திர மாநில கடற்கரைப் பிரதேசமான விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் 244 மீட்டர் உயரமுள்ள சிம்மாசலம் என்ற குன்று உள்ளது. இந்த குன்றின் மீது பெரிய அளவில் வராக நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மடக்கிய கால்கள் காட்டுப் பன்றி முகம் சிங்க வால் மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர் இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. இவரும் மூலவரைப் போலவே அமைந்திருக்கிறார். மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. ஒரு நாள் தவிர வருடம் முழுவதும் சந்தனத்துக்குள் இருக்கிறார். பார்க்க சிவலிங்கம் போலவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரிதியை அன்று ஒருநாள் மட்டும் மூலவர் மீதுள்ள சந்தனக் காப்பு முழுவதும் அகற்றப்பட்டு நிஜ ஸ்வரூபத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் வராக நரசிம்மர். அன்றைய தினம் இத்தலத்திற்கு வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள காந்தாரா நீர் வீழ்ச்சியுடன் கூடிய புஷ்கரணியில் நீராடி விட்டு கோயிலுக்கு வந்து வராக நரசிம்மரைத் தரிசிக்கிறார்கள். ஆந்திர மாநில திவ்ய ஷேத்திரங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.

அர்த்தநாரீஸ்வரர்

முதல் படம்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் 400 ஆண்டுகளுக்கு முன்பு கையால் வரையப்பட்ட ஓவியம். அருகில் பிருங்கிரிஷி முனிவர். இரண்டாவது படம்: AI மூலம் உருவாக்கப்பட்ட படம்.

பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அர்த்தநாரீஸ்வரராய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று அர்த்தநாரீஸ்வரர் கோலத்தை பிருங்கிரிஷி முனிவர் வழிபடும் காட்சி. ஊர் திருச்செங்கோடு.

கஜருத முருகன்

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் 16 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி. இத்தலத்தில் முருகப்பெருமான் யானை மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார். திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப் பரிசாக தனது பட்டத்து யானையான ஐராவதம் என்ற வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத் தம்பதிகளை வெள்ளை யானையில் அமரச் செய்து அக்காட்சியை கண்ணார கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி கொடுத்தார்.

சிங்கவரத்துக் கொற்றவை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சிங்கவரம் கிராமம். அங்கு பல்லவர் கால குடைவரைக் கோயிலாக அரங்கநாதர் கோயில் உள்ளது. அரங்கநாதருக்கு அருகாமையில் தனி சன்னதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓர் அறை இருக்கிறது. தாயாருக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் ஆரத்தித் தட்டினை சிறிது அந்தப் பக்கம் காண்பிப்பார். சிறிய சாளரத்தின் வழியே தீப வெளிச்சத்தில் அங்கு வீற்றிருக்கும் அழகிய கொற்றவை காட்சித் தருவாள். கொற்றவைக்கு வழக்கமாக உள்ள 8 கரங்கள் ஆயுதங்கள் இங்கு இல்லை. நான்கு கரங்கள் மட்டுமே உள்ளது. பின்னிரு கரங்கள் சக்கரம் சங்கினை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் இடுப்பின் மீதும் தொடையின் மீதும் வைத்த நிலையில் சற்று சாய்ந்து ஒய்யாரமாக நிற்கிறாள். வழக்கமாகக் கொற்றவையின் இரண்டு கால்களும் எருமைத் தலைமீது வைத்த நிலையில் காணப்படும். ஆனால் இங்கு வலது காலை மட்டும் மகிஷனின் தலைமீதும் இடது காலை தரையிலும் ஊன்றி நிற்கின்றாள். இரண்டு பக்கமும் இரண்டு அடியவர்கள் உள்ளார்கள். வலப்பக்கத்தில் இருப்பவர் நீண்ட தலைமுடி மீசையுடன் வீரனுக்கே உரித்தான பாணியில் இருக்கிறார். தனது வலது கையில் உள்ள கத்தியால் இடது கால் தொடையின் சதையை அரிந்துகொள்வது போல் உள்ளது. இடது பக்கத்தில் இருப்பவர் தரையில் முழங்கால் மண்டியிட்டு பூஜை செய்யும் நிலையில் அமர்ந்து இருக்கிறார். தலை மழித்து காணப்படுகிறது. மீசையும் இல்லை.

உத்குடி ஆசனத்தில் அய்யனார்

கருவறையில் அய்யனார் வடக்கு நோக்கிய நிலையில் உத்குடி ஆசனத்தில் ஜடாமுடியுடன் மாலை மற்றும் யக்ஞோபவீதம் கால்களில் சலங்கை அணிந்து அமர்ந்துள்ளார். சுற்றி காவல் தெய்வங்கள் உள்ளார்கள். உள்ளூர் மக்கள் இந்த அய்யனாரை சாஸ்தா என்றும் அழைக்கிறார்கள். இங்கு இவரது வாகன யானை பீடத்தின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: விஷ்ணு கோவில் இடங்கிமங்கலம் லால்குடி திருச்சி மாவட்டம்.

இராமர் பட்டாபிஷேகம்

இராமர் சீதையுடன் பட்டாபிஷேகம் காட்சி. இராமரின் அருகில் இலட்சுணன் வணங்கியபடி நிற்கிறார். சீதையின் அருகில் பரதன் இராமர் சீதைக்கு குடைபிடிக்க சத்ருக்கனன் வெண்சாமரம் வீசுகிறார். இராமரின் காலருகே அனுமன். இடம் ஸ்ரீரங்கபுரம் ஸ்ரீரங்கநாயக சுவாமி ஆலயம். தெலங்கானா மாவட்டம். கிபி 1540 ஆம் ஆண்டில் வனபர்த்தி சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டது.

கஜசம்ஹாரமூர்த்தி

சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. தாருகாவன முனிவர்கள் சிவபெருமானை அழிக்க அபிசார வேள்வி நடத்தி அதில் இருந்து கஜசூரன் என்ற யானையை உருவாக்கி சிவபெருமான் மீது ஏவி விட்டனர். இறைவன் கஜசூரன் என்ற யானையின் தோலை உரித்து தனது மேல் போர்த்திக் கொண்டு கஜசம்ஹாரமூர்த்தியாக நின்று தாருகாவன முனிவர்களின் அகங்காரத்தை அழித்து அவர்களுக்கு அருள் பாலித்தார். இவர் கரி உரித்த சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். கரி என்றாலும் யானை என்று பொருள். இந்த சிற்பம் உள்ள இடம் திருவதிகை வீரட்டானேசுவரர்கோவில் கடலூர் மாவட்டம்.

யம சண்டிகேசுவரர்

தமிழகத்தில் சில சிவாலயங்களில் சண்டிகேசுவரராக யமதர்மர் உள்ளார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் போன்ற சிவாலயங்களில் யமதர்மர் சண்டிகேசுவரராக உள்ளார். இவருக்கு யமசண்டிகேசுவரர் என்று பெயர். அனைத்து சிவத்தலங்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே சிவ தியானத்தில் ஆழ்ந்திருப்பார். திருவாரூரில் மட்டும் இரண்டு சண்டிகேஸ்வர்கள் உள்ளார்கள். முதலாமவர் ஆதி சண்டிகேஸ்வரர். இவர் தியானத்தில் இருப்பார். மற்றொருவர் யம சண்டிகேஸ்வரர். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்பதால் யமனுக்கு இவ்வூரில் வேலை இல்லை. இவ்வூரில் பிறந்தவர்களின் காலக் கணக்கை சண்டிகேஸ்வரரே கவனிக்கிறார். ஆகவே இங்கு யமதர்மர் சண்டிகேஸ்வரர் ஆனார் என்கிறது தல புராணம்.

இராவணன் அனுக்ரஹ மூர்த்தி

இறைவன் இராவணனுக்கு அருளிய வடிவம் இராவண அனுக்கிரகமூர்த்தி. பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் இலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லக் கூடிய தேரினை வைத்திருந்தான் இராவணன். ஒரு முறை கயிலை மலை வழியாக இராவணன் தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதிக்காமல் மலையைப் பெயர்க்க எண்ணி மலையை அசைத்தான். மலை அசைவதைக் கண்ட உமையவள் அஞ்சினாள். இதை உணர்ந்த சிவபெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர் நீண்ட ஆயுள் வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார். தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் முதல் சிற்பம் நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி. இரண்டாவது படம் எல்லோரா குகை கோயில் சிற்பம்