உமையொரு பாகன்

ஒரு பாதி ஆண்மைக்குரிய திண்மையும் உறுதியும் மறுபாதியில் பெண்மையின் மென்மையும் நளினமும் கொண்ட உமையொரு பாகன். இடம்: அமிர்தகடேஸ்வரர் கோயில். மேலக்கடம்பூர் கடலூர்மாவட்டம்.

அமர்ந்த நிலையில் பரமபதநாதர்

ஆதிசேஷன் மேல் அமர்ந்தவாறு பச்சைக்கல்லால் ஆன பெருமாள் பரமபதநாதர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இடம்: கரிவரதர் பெருமாள். கரிய மாணிக்க பெருமாள் கோவில் பனம்பாக்கம் கடம்பத்தூர் செஞ்சி.

நடராஜர் 18 கைகளுடன்

நடராஜர் பதினெட்டு கைகளுடன் தாமரை இலைகளின் விளிம்புடன் தாழ்ந்த பீடத்தில் நிற்கிறார். இரண்டு கைகளிலும் பாம்பை வைத்திருக்கிறார். இடது புறத்தில் மீதமுள்ள கைகள் டமருகம் பாசா ஜெபமாலை அபயமுத்ரா கபாலாம் கோடாரி திரிசூலம் வைத்திருக்கிறார். இரண்டு கைகள் தர்ஜனி மற்றும் வரத முத்திரையில் உள்ளது. நந்தி ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் விநாயகர் இரண்டு கைகளுடன் உள்ளார். விநாயகருக்கு வலப்புறம் ஒருவர் தரையில் அமர்ந்து இரண்டு மேளம் வாசிக்கிறார். இடம் பாதாமி குகை எண் 1.

அம்மை காண ஆனந்த நடனம் புரியும் ஆடல்வல்லான்

ஆடல்வல்லான் சிவகாமி காண உயிர்களுக்கு அருள் வழங்க ஆனந்த தாண்டவம் புரிந்ததை தத்ரூபமாக செதுக்கியுள்ளனர். மேற்புறத்தில் சுடர்களுடன் திருவாச்சி. ஜடாமகுடத்துடன் விரிசடையில் வலதுபுறம் வானிலிருந்து இறங்கும் வணங்கிய நிலையில் கங்கை இடப்புறத்தில் பிறை நிலவு. உடுக்கையும் தீயும் வலது இடது பின்கரங்களில் ஏந்தி அபய கரத்துடன் தூக்கிய திருவடியைப் பற்றிக்கொள் என்று காட்டி ஆணவமாகிய முயலகன் மேல் நின்று அகிலமெல்லாம் இயங்க ஆடிக் கொண்டிருக்கிறார். புலித்தோல் ஆடை ஆடும் வேகத்தில் முடிந்தும் நீண்டும் பறந்து கொண்டிருக்கின்றன. ஓரத்தில் கரை குஞ்சம் போன்ற அமைப்பு. வலத்தோளின் பின்புறம் படமெடுக்கும் நாகம், தோள் மாலை, கழுத்தணி, கையணி, இடையணி, காலணியுடன் அம்மையும் அவள் பங்கிற்குப் பேரழகுடன் நிற்கிறாள். குடவரைகளில் அம்மை காண ஆனந்த நடனம் புரியும் நடராஜரின் சிற்பம். இடம்: மூவரைவென்றான் மொட்டமலை பல்லவா் கால குடைவரை கோவில் விருதுநகா் மாவட்டம்.

யோகினி

64 யோகினிகளில் ஒருவரான யோகினி யமுனை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறாள். இந்த யோகினி ஒரு ஆமையின் மேல் ஒரு காலையும் அதன் வால் முனையின் மேல் மற்றொரு காலையும் வைத்து தன்னை சமநிலைப்படுத்திக் கொள்வதைக் காணலாம். இந்த யோகினிக்கு நான்கு கைகள் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான அம்சம் இவளது தலையை சுற்றி சுருண்டு எழும்பியுள்ள ஜடாமுடி தான்.

அமைவிடம்: சௌசாத் யோகினி கோவில் ஹிராபூர் ஒடிசா மாநிலம்.

புராண முருகர்

மயில் மீது இரு புறமும் கால்கள் போட்டு அமர்ந்த வடிவில் நுக்கேஹள்ளி எனும் இடத்தில் உள்ள ஹொய்சளர் கலைப்பாணி முருகன் சிலை இது. பொதுவாக ஹொய்சளர்கள் மிக அரிதாகவே முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். இது 13-ம் நூற்றாண்டு சிலையாகும். இங்கே நமக்கு மிகவும் பரிச்சயமான அழகான வேல் ஒரு கையிலும் மறு கையில் பாசக்கயிறு மற்றொரு கையில் அக்கமாலை நான்காம் கையில் ஹொய்சளர் சிலைகள் அனைத்திலும் இருக்கும் ஒருவித எலுமிச்சைவகைப் பழம் இருக்கிறது. ஆறு முகத்தில் மூன்று முகத்தை காண முடிகிறது. மயிலை அதன் தோகைகளுடன் மிக மிக அழகாக உருவாக்கியுள்ளனர்.