லலிதாசன விநாயகர்

இந்தியாவின் ஹைதராபாத் அருகே உள்ள பெத்தா கோல்கொண்டா கிராமத்திற்கு அருகே 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கணபதி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூர்த்தி கல்யாணி சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. (கிபி 12 ஆம் நூற்றாண்டு). விநாயகரின் மூர்த்திக்கு இரண்டு கைகள் உள்ளன. ஒரு கையில் பாலும் மற்றோரு கையில் மோதகம் (இனிப்பு) உள்ளது. மூர்த்தி எளிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விநாயகர் லலிதாசன தோரணையில் அமர்ந்திருக்கிறார்.

நந்தி லிங்கம்

ஈசனின் வாகனமான நந்தி பகவான் சிவலிங்க ஆவுடையாரின் மீதும் அவரின் மீது சிவலிங்கம் இருக்கும் அரிதான சிவலிங்க வடிவம்.

இடம்: மகாராஷ்டிரா மாநிலம் சட்டரா மாவட்டம் பட்டேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு சிவனுக்காக 7 குகை கோவில்கள் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில்கள் சற்று சிதிலம் அடைந்திருந்தாலும் கோவிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளது.

பார்வதிதேவி

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகைக் கொண்ட இந்த சோழர் காலத்தைச் சேர்ந்த பார்வதிதேவியின் வெண்கலச் சிலை நியூயார்க்கில் உள்ள தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட் என்ற மியூசியத்தில் தற்போது உள்ளது.

தவளையை காக்கும் பாம்பு

அத்வைதம் தத்துவத்தை பரப்பிய ஆதிசங்கரர் கிபி 788 இல் கேரளாவில் உள்ள காலடியில் பிறந்தார். அவர் அத்வைத சிந்தனையை பரப்ப மடம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேடி சிருங்கேரிக்கு சென்ற போது துங்கபத்ரா நதிக்கரையில் அவரது கவனத்தை ஈர்த்தது ஒரு பாம்பு. சுட்டெரிக்கும் நண்பகல் வெயிலில் பிரசவ வலியில் இருந்த தவளையை காக்க தவளையை வெயில் தாக்காதவாறு நாகப்பாம்பு ஒன்று குடைப்பிடித்த படி படமெடுப்பதை கண்டார். இயற்கையாக பாம்பு தவளையை உணவாக உட்கொள்ளும். ஆனால் இங்கு இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை விட்ட பாம்பு தன் உணவான தவளை பிரசவ வலியில் இருப்பதை கண்டு அதன் மீது அன்பை செலுத்தியது. எதிரிகளுக்கு இடையே அன்பைத் தூண்டும் திறன் கொண்ட அந்த இடத்தின் புனிதத்தால் கவரப்பட்ட அவர் அந்த இடத்தில் தனது முதல் மடத்தை நிறுவினார்.
இடம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியில் அமைந்துள்ளது கோவில் நகரமான சிருங்கேரி. இங்கு இந்த சிற்பம் உள்ளது.

உக்ரநரசிம்மர்

இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்? என்று இரணியன் தனது கதையால் தூணை அடித்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்த நாராயணனின் அவதாரம் உக்ரநரசிம்மர். இடம் ஸ்ரீபிரஹலாதன் கோவில் அஹோபிலம்.

நரசிம்மர்

விஷ்ணு பகவானின் அவதாரமான யோக நரசிம்மரின் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. நரசிம்மர் நான்கு கைகளுடன் உட்குடியாசனத்தில் அமர்ந்துள்ளார். நரசிம்மருக்கு 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு உள்ளது. மீதமுள்ள 2 கைகளும் கால்களும் யோகப்பட்டையுடன் உட்குடிகாசனத்தில் உள்ளது. டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்டது. இடம் ஓடிசா மாநிலம். காலம் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைபட்டது.

கங்காதர மூர்த்தி

கங்காதர மூர்த்தியின் வலது மேல் கரம் ஜடா முடியைப் பிடித்துக் கொண்டு வெகு வேகமாக வரும் கங்கையைத் தாங்குகிறது. வலது கீழ் கரத்தால் நாகத்தைப் பிடித்துள்ளார். இடது மேல் கரம் ஜடா முடியை அவிழ்ப்பது போல் உள்ளது. மற்றொரு கரத்தை இடுப்பில் ஒய்யாரமாக வைத்திருக்கிறார். வலது காலைத் தூக்கி முயலகன் தலை மீது வைக்க அவன் பாரம் தாங்காமல் சற்றுச் சாய்வாகப் படுத்து இடக்கையாலும் பாதத்தைத் தாங்குகிறான். அருகில் பகீரதன் இருக்க இறைவனைச் சுற்றி தேவர்களும் இருக்கின்றனர். கிமு 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்ம பல்லவனால் கட்டப்பட்ட குடைவரைச் சிற்பம் இது.

இடம்: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதியில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னிதி செல்லும் வழியில் இடப் புறம் லலிதங்குரா பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இடத்தில் ஒரு சிறிய அறை போல் காணப்படும் பகுதியில் உள்ளது.

மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.

இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்