ஏலவார்குழலியை கரம் பற்றி ஏகாம்பரேஸ்வரர்

சிவபெருமான் ஏகாம்பரநாதராகவும் பார்வதிதேவி ஏலவார்குழலியாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் விஷ்ணு பகவான். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.

கங்காவதரணம்

கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இது பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர். ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி உடலைப் பின்புறமாக வளைத்து கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான சிற்பம் நுட்பமான யோக கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

சிவனை மீன் வடிவில் வழிபட்ட திருமால்

சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று கடலுக்கடியில் ஒளிந்து கொண்டபோது திருமால் பெரிய மீனாக உருவம் தாங்கி கடலுக்கடியில் சென்று அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி பெரிய கொக்கு வடிவமெடுத்து மீனின் கண்களை பிடுங்கி மீனின் செருக்கை அடக்கினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

நடனமாடும் சிவபெருமான்

சிவபெருமான் தனது 20 கைகளில் பல ஆயுதங்கள் ஏந்தியபடி தாமரை பீடத்தில் நடனமாடும் தோரணையில் இந்த வெண்கலச் சிற்பம் உள்ளது. சிவபெருமானின் இரண்டு பக்கமும் பரிவார தேவதைகள் உள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் தற்போது நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.

நந்தி தேவர்

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரம் கோயிலில் உள்ள நந்தி தேவரின் அழகிய சிற்பம். கரிகாலசோழன் காலத்தில் கட்டப்பட்ட சிற்பம். காலம் 2 ஆம் நூற்றாண்டு.

சங்கு சக்கரத்துடன் முருகர்

ஒருமுறை அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே அவர்களை அழிக்க சிவபெருமான் முருகபெருமானை அழைத்து அசுரர்களை வதம் செய்ய உத்தரவிட்டார். முருகர் அசுரர்களை வதம் செய்ய கிளம்பும் போது சிவபெருமானும் தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தார்கள். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்து ஆசி புரிந்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகபெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அவர் அருகில் வள்ளி தெய்வானை உள்ளனர். மயில் இடது புறமாக திரும்பி நிற்கிறது. இடம்: அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில். அழகாபுத்தூர் தஞ்சாவூர் மாவட்டம்.

கிளி முகம் கொண்ட யோகினி உமாதேவி

தாந்த்ரீக வழிபாடு முறையின் யோகினியான கிளி முகம் கொண்ட பெண் தெய்வமான உமாதேவி இவள். ஒரு ஆட்டுக் குட்டியின் முகத்தைக் கொண்ட குழந்தையைப் பிடித்துக் கொண்டு காட்டுப் பன்றியின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள்.

காலம் 11 – 12 ஆம் நூற்றாண்டு இடம் ஹிராபூர் புவனேஸ்வரில் கண்டெடுக்கப்பட்ட இந்த பழமையான சிலை தற்போது குவாலியர் மாநில அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி தேவர்கள் சிற்பங்களாக

உனகோடி என்பதன் நேரடி பொருள் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு (9999999) என்று பொருளாகும். இது ஒரு வங்காள மொழிச் சொல் ஆகும். இது ஒரு பழமையான சைவத்தலமாகும். இங்கு பாறைகளில் புடைப்புச் சிற்பங்களும் கற்சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. இந்த சிற்ப உருவங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள். இரண்டு கல் சிற்பங்கள். கல்லில் வெட்டப்பட்ட சிற்பங்களுக்கு மத்தியில் சிவனின் தலையும் பிரம்மாண்டமான விநாயகர் சிற்பமும் சிறப்பாக குறிப்பிடப்பிடத்தக்கன. கால பைரவர் என அழைக்கப்படும் இந்த சிவனின் சிலை சுமார் 30 அடியைவிட உயரமானதாக உள்ளது. இதில் கலை நயமிக்க சிவனின் தலை மட்டும் சுமார் 10 அடி உயரம் உள்ளது. சிவன் சிலையின் இருபக்கத்திலும் இரு பெண் தெய்வங்களின் முழு உருவங்கள் உள்ளன. அதில் ஒன்று சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை. அருகே நந்தி உருவமும் உள்ளது. நந்தி உருவம் அரைப்பகுதி தரையில் புதைந்துக் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு கல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த செதுக்கல்கள் அழகிய நிலப்பரப்பு வனப்பகுதியில் அமைந்துள்ளன சுற்றிலும் பசுமையான தாவரங்கள் உள்ளன. இது சிற்பங்களுக்கு அழகு சேர்க்கிறது. திரிபுரா மாநிலத்தில் உனகோடி அகர்தலாவில் இருந்து வடகிழக்கில் 178 கிமீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் உள்ள எல்லாச் சிற்பங்களும் குல்லு கம்ஹார் என்று சிற்பியால் வடிக்கப்பட்டவை. அவர் பார்வதியின் பக்தர். பார்வதியும் சிவபிரானும், சிவகணங்களுடன் இந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினார் இந்தச் சிற்பி. ஈசனால் இதை ஏற்க முடியவில்லை. பக்தனின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்பிய அன்னை பக்தனுக்கு ஒரு நிபந்தனை விதித்தாள். இரவு முடிவதற்குள் ஒருகோடி உருவங்களைச் செதுக்கச் சொன்னாள். பார்வதியின் அருளால் விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பி செதுக்கி முடித்தார்.

இந்த சிற்பங்களுக்கு இன்னோரு புராண கதையும் சொல்லப்படுகிறது.

சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் காசிக்குச் செல்லும் வழியில் இந்த இடத்தில் இரவு தங்கினார். பின் அனைத்து தேவர்களையும் சூரியன் உதிக்கும் முன் எழுந்து காசிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காலையில் சிவனைத் தவிர வேறு யாரும் சோம்பல் காரணமாக எழுந்திருக்கவில்லை. எனவே அனைவரையும் கற்களாக மாறும்படி சபித்து விட்டு காசிக்கு தானே தனியாக புறப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரபலமான அசோகாஷ்டமி மேளா என அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பயணிகள் கலந்து கொள்ளும் திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.

நந்தியும் அனுமனும்

சைவத்தில் போற்றப்படும் நந்தி பகவானும் வைணவத்தில் போற்றப்படும் அனுமனும் ஆரத்தழுவி கொள்ளும் சுதை சிற்பம். இடம் நவ திருப்பதிகளுள் ஒன்றான திருவரகுணமங்கை கோயில்.