தத்தாத்ரேயர்

பிரம்மா விஷ்ணு சிவனின் தலை இணைந்து மூன்று தலைகளும் ஆறு கைகளுடன் அருளுகிறார். பிரம்மாவின் குறியீடாக ஜெபமாலை விஷ்ணுவின் குறியீடாக சங்கு மற்றும் சக்கரம் சிவனின் குறியீடாக திரிசூலம் மற்றும் உடுக்கை ஆகியவை ஆறு கைகளில் வைத்துள்ளார். இவரின் ரூபம் பெரும்பாலும் தனிமையில் வாழும் ஒரு சந்நியாசி போலவும் இவரைச் சுற்றி நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இடம் ஜம்புகேசுவரர் கோயில் திருவானைக்காவல் திருச்சி.

அனுக்கிரக மூர்த்தி

தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் மதுரை மீனாட்சிஅம்மன் கோவில்.

சேனைகளின் தலைவன் முருகன்

தற்போது இருக்கும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதிகள் அக்காலத்தில் காந்தாரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கோலத்தில் உள்ள முருகனின் சிலை. காலம் 2 ஆம் நூற்றாண்டு. தற்போது கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் உள்ளது.

சிவபெருமான்

சிவபெருமான் தனது இடது காலை தூக்கி நடனமாடியபடி கைகளில் உள்ள சங்கை ஒரு கிண்ணம் போல் பிடித்து அதிலிருக்கும் ஆலகால விஷத்தை குடிப்பது போல் உள்ளது. பிறை நிலவு மற்றும் சிவனின் தலைமுடியில் இருந்து கங்கை நீரை வெளியேற்றுவது மற்றும் சிவனின் தலையை சுற்றி மஹாகாளத்துடன் கூடிய அழகான சிரச்சக்கரம் இந்த சிற்பத்தில் உள்ளது. இச்சிற்பம் கறுப்பு சலவைக் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இடம் பீகார்.

வாமனன்

சங்ககால ஏடுகளில் விஷ்ணு பகவானின் பிறந்த நாளும் வாமணன் அவதரித்த நாளும் ஒன்றுதான் என குறிப்புகள் கூறுகின்றன. மகாபலி என்ற அசுர குலத்தில் தோன்றிய மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமனனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த சிற்பம் அமைந்துள்ள இடம் பாதாமி குடைவரை கோவில் கர்நாடக மாநிலம்.

கேசி வதம்

கேசி என்பவர் ஒரு அரக்கனாவார். பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்ற கேசி கம்சனின் தூண்டுதலின் பேரில் கண்ணனைக் கொல்வதற்கு கோகுலத்திற்கு குதிரை வடிவத்தில் சென்றார். இவர் அரக்கன் என்பதை அறிந்த கண்ணன் குதிரையில் வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டு குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான். இது கேசிவதம் ஆகும். கேசியை வதம் செய்த இடம் தற்போது கேசிகாட் என்று அழைக்கப்படுகிறது. கேசியை வென்றதினால் கண்ணன் கேசவன் என்று பெயர் பெற்றார். இந்த சிதிலமடைந்த சிற்பம் தற்போது இருக்கும் இடம்: மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகம் நியூயார்க் நகரம்.