யுதிஷ்டிரன் இப்போது மனத்தெளிவு அடைந்திருந்தான். உலக சம்பந்தமான இன்ப துன்பங்களை பொருட்படுத்தாத நடுநிலையான மனநிலைக்கு இப்பொது அவன் வந்துவிட்டான். பொது நல சேவையில் அமைதியுடன் ஈடுபட ஆயத்தமானான். சிரார்த்தம் செய்யும் ஒரு மாத காலம் முடிவற்றது. நதிக்கரையிலிருந்து நகரத்தை நோக்கி அரச குடும்பம் அமைதியாக நகர்ந்தது. திருதராஷ்டிரரின் ரதம் முதலில் சென்றது. அதனை தொடர்ந்து யுதிஷ்டிரன் ரதமும் மற்றவர்களெல்லாம் முறையாக பின் தொடர்ந்து வந்தனர்.
முடிசூட்டும் மண்டபத்திற்கு கிருஷ்ணன் யுதிஷ்டிரனை அழைத்து வந்து குருகுலத்தின் அரச சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தான். அந்த முடிசூட்டு விழா ஆடம்பரமில்லாமல் மிகவும் சுருக்கமாக முடிந்தது. அரச பதவியை ஏற்றுக்கொண்ட யுதிஷ்டிரன் பெரியப்பா திருதராஷ்டிரரின் பிரதிநிதியாக இருந்து பொதுமக்களுக்கு உள்ளன்போடு பணிவிடை செய்வதாக உறுதி கூறினான்.
பீஷ்மர் தன் தேகத்தை விட்டுவிட உத்ராயண புண்ணிய காலத்திற்காக காத்திருந்தார். அதிவிரைவில் அவரிடம் சென்று தங்கள் நிலைமையை அவருக்கு தெரிவிப்பது என்று பாண்டவர்கள் முடிவு செய்தனர். கிருஷ்ணனையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். பீஷ்மர் போர்க்களத்தில் கூரிய அம்பு படுக்கையில் படுத்திருந்தார். முதலில் கிருஷ்ணன் பீஷ்மரிடம் தான் வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரிடமும் பரஸ்பரம் பாராட்டுதலும் விசாரிப்பதும் அமைதியாக நடந்தது. அதன்பிறகு கிருஷ்ணன் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் தங்களைப் பார்க்க அஞ்சுகிறான். ஏனென்றால் மானுடர்ளை பெருவாரியாக அழித்த யுத்தத்திற்கு காரணமாக இருந்தவன் என்று எண்ணி தங்கள் முன்னிலையில் வர அஞ்சுகின்றான் என்றார். அதற்கு பீஷ்மர் இந்த யுத்தத்திற்கு யுதிஷ்டிரன் மட்டும் காரணம் இல்லை. இந்த பழி பாவத்துக்கு நானும் காரணமாக இருந்திருக்கின்றேன். என் முன்பு யுதிஷ்டிரன் வரலாம் என்றார் பீஷ்மர்.
பீஷ்மர் முன்னிலையில் வந்த யுதிஷ்டிரன் தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். சிம்மாசனத்தில் அரசனாக வீற்றிருக்க தான் விரும்பவில்லை என்றும் செய்த பாவத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்ள வனத்திற்கு சென்று தவம் புரிய விரும்புகிறேன் என்றான். அதற்கு பீஷ்மர் இந்த யுத்தத்தை தூக்கியவன் நீ அல்ல. அது உன் மீது சுமத்தப்பட்டது. கொடியவர்களை நீ அழித்துள்ளாய். நீ செய்தது பாவம் அல்ல. அது க்ஷத்திரிய தர்மம். ஆள்பலமும் படைபலமும் அதிகம் இருந்த கௌரவர்களுக்காக அதர்மத்தின் பக்கம் நின்று போர் புரிந்த நான் வெற்றியடையவில்லை. தீயவர்களுக்காக நான் போர் புரிந்தும் அந்தப் பாவம் என்னை வந்து சேரவில்லை. ஏனென்றால் என்னிடத்தில் சுயநலம் எதுவும் இல்லை. அது போல் சுயநலம் இல்லாமல் நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பொதுநல கடமையை நிறைவேற்றுவயாக. வனத்திற்குச் சென்று தவம் பிரிவதை விட மேலானது பொது நல சேவையில் தன்னை ஒப்படைப்பது ஆகும். அந்த நலனுக்காக அரசனாக நீ இருப்பாயாக. இது நான் உனக்கு இடும் ஆணையாகும் என்று பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் கூறினார். தங்களின் அணைக்கு அடிபணிந்து வணங்கி தங்கள் கட்டளையை ஏற்கின்றேன் என்று யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கூறினான்.