மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -13

பீஷ்மர் பேசினார். துரோணர் கிருபர் அஸ்வத்தாமன் கூறியவற்றில் உண்மை இருக்கிறது. கர்ணனுடைய பேச்சு குழப்பத்தையும் கருத்து வேற்றுமையையும் உண்டு பண்ணியிருக்கிறது. அவன் செய்துள்ள தவறை மன்னிக்கவும் மறக்கவும் செய்வோம். தலைவர்களுக்கு இடையிலேயே உண்டாகும் கருத்து வேற்றுமைகள் சேனையில் குழப்பத்தை உண்டு பண்ணும் நெருக்கடியான சூழ்நிழையில் காலத்தின் போக்குக்கு ஏற்ப நன்கு எண்ணிப் பார்த்து நாம் குறை நிலைகளை நிறை நிலைகளாக திருத்தி அமைக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுகூடி போர் செய்ய ஆயுத்தமாவோம் என்று பீஷ்மர் கூறினார்

துரோணர் பேசினார். கர்ணன் என்னை ஏளனம் பண்ணியதை நான் கருத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு குழந்தையின் பிதற்றலாக கருதி நான் அதை ஒதுக்கி விட்டேன் ஆனால் எனக்கு ஏற்பட்டுள்ள ஒரு சந்தேகம் ஒன்றை பெரியோர் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும் அர்ஜுனன் தன்னை யார் என்று அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தன்னுடைய காண்டீப வில்லுடன் குரங்கு கொடியை கட்டிக்கொண்டு மும்முரமாக போர் செய்ய முன்னேறுகிறான். அவன் மறைந்திருக்கும் காலம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்று துரியோதனன் சொல்கின்றான். இந்த விஷயத்தில் தாங்கள் கூறுவது என்ன என்று பீஷ்மரிடம் துரோணர் கேட்டார்.

பீஷ்மர் பேசினார். பாண்டவர்கள் ஒருபொழுதும் தருமத்திலிருந்து பிசகுவதில்லை. இவ்வுலக சம்பந்தமான ஒப்பந்தமும் உடன்படிக்கையும் ஒவ்வொரு 5 ஆண்டுகளோடு இரண்டு மாதங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் உறுதி கூறுகிறது. இது சம்பந்தமான வாக்குவாதத்தை தவிர்த்தல் பொருட்டு பாண்டவர்கள் ஐந்து மாதங்கள் அதிகப்படியாகவே அக்ஞாத வாசத்தில் வாழ்ந்து இருக்கின்றார்கள். ஆகையால் அர்ஜுனன் முன்னேறி வருவது தர்மத்துக்கு உட்பட்டு முற்றிலும் முறையே என்று பீஷ்மர் கூறினார்

துரோணர் பேசினார். அப்படியானால் இப்பொழுதே நாம் துரியோதனனையும் கால்நடைகளையும் நகரத்திற்கு அனுப்பி விடுவோம் இல்லையேல் நெடுங்காலம் அர்ஜுனன் பூண்டுள்ள கோபத்தின் விளைவாக துரியோதனனை அவன் கொன்று விடக் கூடும் என்றார். துரோணாச்சாரியார் கூறியதை அனுசரித்து அதற்கு உரிய போர் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போர்க்களத்திலிருந்து பின் வாங்கிக் கொள்ளும்படி துரியோதனனே பெரியவர்கள் ஒன்று கூடி கேட்டுக்கொண்டு அர்ஜூனனை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்று கூடி எதிர்த்து நின்றனர்.

அர்ஜுனன் இரண்டு அம்புகளை ஒரே நேரத்தில் எய்தான். ஒன்று துரோணாச்சாரியாரின் பாதங்களில் வந்து விழுந்தது. அது குரு வணக்கத்திற்கு அறிகுறியாக இருந்தது. இரண்டாவது அம்பு துரோணாச்சாரியாரின் காதுக்கருகில் சீறிக்கொண்டு சென்றது. போர் புரிவதற்கு குருநாதரின் அனுமதி கேட்டதற்கு அது அறிகுறியாக இருந்தது. அர்ஜுனன் துரியோதனனை போர்களத்தில் தேடினான் அனால் அவனை எங்கும் காணவில்லை. பசுக்களை ஓட்டிக்கொண்டு துரியோதனன் அஸ்தினாபுரம் சென்று கொண்டிருந்தான்.

தொடரும்………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.