மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -15

அர்ஜுனன் எய்த சம்மோஹன அஸ்திரத்தின் வேகம் சிறிது நேரத்தில் தணிந்தது. தூக்கத்திலிருந்து விழித்தெழுபவர்கள் போன்று கௌரவர்கள் மற்றும் படை வீரர்கள் விழித்துக் கொண்டார்கள். எழுந்ததும் நிலைமையை அவர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். கழுத்திலிருந்த பட்டு துண்டுகளை தாங்கள் பறிகொடுத்து இருப்பதை அறிந்தார்கள். இந்நிகழ்ச்சி அர்ஜுனன் அவர்களை தோற்கடித்ததற்கு அறிகுறியாக இருந்தது. தாங்கள் தோல்வி அடைந்ததை எண்ணி கௌரவர்கள் மிகவும் துயரத்துடன் அஸ்தினாபுரம் திரும்பிப் போனார்கள். உத்தரனும் அர்ஜூனனும் ஆயுதங்களை மீண்டும் மரப் பொந்தில் மறைத்து வைத்து விட்டு வெற்றி வீரர்களாக அரண்மனைக்கு திரும்பிப் போனார்கள். இப்பொழுது அர்ஜுனன் மீண்டும் பிருஹன்நளாவாக ரதத்தை ஓட்டிச் சென்றாள்.

விராட நாட்டின் மீது படையெடுத்து வந்த திரிகர்த்த மன்னனாகிய சுசர்மனை வெற்றி கொண்டதை முன்னிட்டு நகரவாசிகள் விராட அரசனுக்கு குதூகலமான வரவேற்பு அளித்தார்கள். வெற்றியை கொண்டாடும் இடத்தில் ராஜகுமாரன் உத்தரன் காணப்படவில்லை. இதனை அரசன் விசாரித்த பொழுது பண்ணையின் வடபகுதியை தாக்குவதற்கு படையெடுத்து வந்த கௌரவ சேனையை சமாளிப்பதற்கு உத்தரன் தனியாக போய் இருக்கிறான் என்ற விஷயத்தை அரசன் அறிய வந்தான். அவனுக்கு துணையாக பிருஹன்நளா மட்டும் அவனுடன் சென்று இருக்கிறாள் என்ற செய்தியை கேட்டதும் அரசனுக்கு வருத்தம் உண்டாயிற்று. நிகழ்ந்த போராட்டத்தில் நிச்சயமாக அந்த ராஜகுமாரன் கொல்லப்பட்டு இருப்பான் என்று முடிவு செய்தான். அவன் உயிரோடு இருந்தால் அவனைக் காப்பாற்றுவதற்கு திடம் வாய்ந்த படை ஒன்று அனுப்ப அரசன் உத்தரவிட்டான். உத்தரனுடன் பிருஹன்நளா சென்றிருக்கிறாள் ஆகவே ராஜகுமாரனுக்கு தீங்கு ஒன்றும் நேராது என்று கனகன் அரசனுக்கு உறுதி கூறினான். இதற்கிடையில் உத்தரன் கௌரவ சேனையை தோற்கடித்து விட்டான் என்றும் பசுக்களை அனைத்தும் மீட்டு விட்டான் என்றும் அரசருக்கு செய்தி வந்தது. சாத்தியம் இல்லாத இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள அரசனுக்கு மனம் ஒப்பவில்லை.

தேரோட்டியாக பிருஹன்நளா உடன் சென்று இருப்பதினால் ராஜகுமாரனுக்கு வெற்றி நிச்சயம் என்று கனகன் அரசருக்கு உறுதி கூறினான். உத்தரன் மீது அரசன் கொண்ட கவலையை போக்க இச்செய்தியை கனகன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தான். ராஜகுமாரனுக்கு மேலாக ஒரு பெண்ணுக்கு கனகன் முக்கியத்துவம் கொடுத்தது அரசனுக்கு பிடிக்கவில்லை. இதைக் குறித்து அரசன் கனகன் மீது மிகவும் கோபம் கொண்டு கனகனின் முகத்தில் பகடையை வீசி எறிந்தான். அது கனகனின் நெற்றியில் பட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அப்பொழுது அருகில் இருந்த சைரந்தரி சொட்டிய இரத்தத்தை தன் சேலை முந்தானையால் துடைத்து எடுத்து அதை தங்கக் கிண்ணத்தில் பிழிந்து வைத்தாள். அரசனுக்கு சைரந்தரி செய்தது பிடிக்கவில்லை. இதை குறிப்பால் அறிந்து கொண்ட சைரந்தரி அதற்கு விளக்கம் சொன்னாள். இவர் ஒரு சான்றோர் இவருடைய ரத்தம் பூமியில் விழுந்தால் பல வருடங்களுக்கு இந்நாட்டில் மழை பொய்த்துப் போகும் என்றாள். அப்போது உத்தரனும் பிருஹன்நளாவும் அரண்மனைக்கு திரும்பி வந்து விட்டார்கள் என்ற செய்தி அரசருக்கு தெரிவிக்கப்பட்டது உடனே அவர்களை ராஜசபைக்கு அழைத்து வர வேண்டும் என்று அரசன் ஆணையிட்டான். தனது நெற்றியில் ரத்தம் வந்து கொண்டிருப்பதை பிருஹன்நளா பார்த்தால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்ற காரணத்தால் சிறிது நேரம் பொறுத்து பிருஹன்நளா வரவேண்டும் என்ற செய்தியை கனகன் சொல்லி அனுப்பினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.