மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -7

அர்ஜூனனும் கர்ணனும் ஒருவரை ஒருவர் யுத்தம் செய்வதைக் காண அனைத்து தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும் வந்தனர். புகழ் பெற்ற இரு வீரர்களும் தங்கள் திறனை முழு வீச்சில் வெளிப்படுத்தப் போகும் வித்தைகளைக் காண விழி இமைக்காது காத்திருந்தனர். சூரியன் தன் மகனுக்கு ஆசி கூறுவது போலே பிரகாசமான தன் கதிர்களை ஒளிர்த்துக் கொண்டு இருந்தான். இந்திரனும் தன் மகனின் வெற்றிக்காக ஆசிகளை வழங்கினான். கிருஷ்ணர் அர்ஜுனனின் ரதத்தை செலுத்த சல்லியன் கர்ணனின் ரதத்தை நடத்த இருவரும் சந்திக்கும் வேளை நெருங்கியது. அர்ஜுனன் கர்ணன் இவ்விருவரும் வில்வித்தையில் கீர்த்தி மிக வாய்க்கப்பட்டவர்கள். ஒருவரை ஒருவர் கொல்ல அவ்விருவரும் தீர்மானித்து இருந்தார்கள். மகாபாரத போராட்டம் இப்பொழுது இவ்விரு வீரர்கள் மூலம் உச்ச நிலையை எட்டியது.

யுத்தம் துவங்கும் முன்பு கர்ணன் சல்லியனோடு சுருக்கமாக உரையாடினான் நான் இந்த யுத்தத்தில் வெற்றி அடைவேன் என்னும் உறுதிப்பாடு எனக்கு உண்டு. ஆயினும் நான் கொல்லப்பட்டால் எனக்கு நீ என்ன செய்வாய் என்று கேட்டேன். அதற்கு சல்லியன் நீ ஒருபோதும் தோல்வி அடைய மாட்டாய். ஒருவேளை நீ தோல்வி அடைந்தால் நான் ஆயுதம் எடுத்து கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் கொன்று உன்னுடைய மரணத்திற்கு ஈடு செய்வேன் என்று சல்லியன் கூறினான். சல்லியன் அவ்வாறு கூறியது கர்ணனுக்கு பெரும் மகிழ்வை ஊட்டியது. இதற்கு நிகராக அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் சுருக்கமான உரையாடல் நிகழ்ந்தது. ஒருவேளை நான் கொல்லப்பட்டால் கிருஷ்ணா நீ என்ன செய்வாய் என்று அர்ஜுனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் இம்மண்ணுலகத்தை எவ்வாறு கர்ணனால் அழிக்க முடியாதோ அதே போல நீயும் கொல்லப்பட மாட்டாய். உனக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் கர்ணனையும் அவனுக்கு சாரதியாக இருக்கின்ற சல்லியனையும் நான் கொல்வேன் என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உறுதி கூறினான்.

துச்சாதனன் பீமனால் கொல்லப்பட்டதை அறிந்த துரியோதனன் கிட்டத்தட்ட மூர்ச்சை அடைந்து போனான். அந்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள முடியாத நிலையில் இருந்தான். இந்நிலையில் அஸ்வத்தாமன் துரியோதன் இருக்குமிடம் வந்தான். கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒரு பயங்கரமான யுத்தம் நிகழப்போகிறது. இந்த யுத்தத்தில் கர்ணன் கொல்லப்பட்டால் உன்னுடைய துயரம் மேலும் அதிகமாகும். எனவே யுத்தத்தை நிறுத்திவிடு நான் உன்னிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உன் மனம் மாறிவிட்டால் பாண்டவர்கள் இப்போதும் மகிழ்வோடு உன்னிடம் சமாதானம் செய்து கொள்வார்கள். கர்ணனும் அர்ஜுனனும் நெருங்கிய நண்பர்களாக வாழ்வார்கள் என்று கேட்டுக்கொண்டான். துரியோதனன் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியிருந்தான். பிறகு அஸ்வத்தாமனிடம் நீ கூறுவது அனைத்தும் உண்மையே. இந்த உண்மையை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் இப்போது பின்வாங்குவது சாத்தியப்படாது. என் அன்புக்குரிய தம்பி துச்சாதனன் கொல்லப்பட்டதை பார்த்த பிறகு சமாதானம் என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லை. ஊழ்வினையின் விளைவால் கடைசி வீரன் இருக்கும் வரை இந்த யுத்தம் நடந்தாக வேண்டும் என்று துரியோதனன் கூறினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.