ரதத்தில் இருந்து கீழே குதித்து ஓடிய உத்தரனை கண்ட பிருஹன்நளா அவனைத் துரத்திப் பிடித்து அவனுக்கு உற்சாகம் ஊட்டினாள். ராஜகுமாரன் நடு நடுங்கி கொண்டு நின்றான். பயந்து கொண்டிருந்த ராஜகுமாரனிடம் ராஜகுமாரா பயப்படாதே ஒரு நெருக்கடியில் பயந்து ஓடுகின்ற யாரும் எதையும் சாதிக்க முடியாது. பயம் மனிதனைப் பாழ்படுத்திவிடும். நீ ரதத்தை ஓட்டு. எதிரிகளை நான் தோற்கடித்து உனக்குரிய பசுக்களெல்லாம் மீட்டு உன்னிடம் தருகிறேன். அதனால் வருகின்ற வெற்றியும் கீர்த்தியும் உனக்கே உரியதாகட்டும் என்று கூறி ராஜகுமாரனை தூக்கிய ரதத்தில் வைத்துக்கொண்டு ஊருக்கு அருகில் இருந்த இடுகாட்டு பக்கம் ஓட்டி சென்றாள்.
கௌரவர்களுடைய சேனைக்கு மிக அருகில் இந்நிகழ்ச்சி நடந்தது. துரோணாச்சாரியார் கூர்ந்து கவனித்துப் பார்த்தார். சாரதியாக வந்த அந்த பெண்ணிடத்தில் அர்ஜூனனுடைய பங்குகள் சில தென்படுகின்றன என தெரிவித்தார். இதனை கேட்ட கர்ணன் தன்னந்தனியாக வந்துள்ள இந்த ராஜகுமாரன் உத்தரனுக்கு சாரதியாக வந்து இருப்பவள் ஒரு பெண். அவள் ஆடை அணிந்திருப்பதில் நேர்த்தி எதுவும் தென்படவில்லை அவள் அஞ்சிக் கொண்டிக்கின்றாள். அத்தகைய பெண்ணொருத்தியை அர்ஜுனன் என்று யூகிப்பது தவறு என்றான். ஆனால் கிருபாச்சாரியார் துரோணருடைய அபிப்பிராயத்தை ஆமோதித்தார். இவர்கள் இப்படி விதவிதமாக பேசிக்கொண்டிருப்பது குறித்து துரியோதனனுக்கு கோபத்தை உண்டாக்கியது. எதிர்த்து நின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனே கொல்ல வேண்டும் என்று துரியோதனன் அனைவர் முன்னிலையிலும் கூறினான்.
விராட நகரின் எல்லையில் இருக்கும் இடுகாட்டில் ஒரு மரத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த சவத்தை உத்தரனிடம் பிருஹன்நளா காட்டினாள். அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் மரத்தின் மீது ஏறி அதன் உள்பகுதியில் இருக்கும் தோல் பையை தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று உத்தரனிடம் பிருஹன்நளா வேண்டிக் கொண்டாள். அவள் சொல்லியபடியே உத்தரனும் நடந்துகொண்டான். மரத்தில் இருந்த பொந்தின் உள்ளே இருந்த ஒரு பெரிய தோல் பையை பார்த்து அவன் திகைத்துப் போனான். அதை கீழே எடுத்துக் கொண்டு வர அவனுக்கு இயன்றது. அதைத் திறந்து பார்த்தபோது சூரியப் பிரகாசத்தோடு ஒளிர்ந்து கொண்டிருந்த ஆயுதங்கள் தென்பட்டன. அதை பார்த்த ராஜகுமாரனுக்கு எண்ணிலடங்காத வியப்பு உண்டாயிற்று. இப்பொழுது விஷயங்கள் அனைத்தையும் உத்தரனிடம் அர்ஜூனன் எடுத்துக்கூறினான்.
ஆயுதங்கள் அனைத்தும் பாண்டவர்களாகிய எங்களுக்கு சொந்தம். கனகன் எனும் பெயருடன் இருப்பவர் யுதிஷ்டிரர். சமையல்காரர் வல்லாளன் பெயருடன் இருப்பவர் பீமன். பிருஹன்நளாவாகிய நான் அர்ஜுனன். தமக்ரந்தி என்ற பெயருடன் குதிரைக்காரனாக இருப்பவன் நகுலன். தந்திரிபாலன் என்ற பெயருடன் பசுக்களை பார்த்துக்கொள்பவர் சகாதேவன். சைரந்திரி பெயருடன் வேலைக்காரியாக இருப்பவள் திரௌபதி. ஒரு வருஷம் மறைந்து வாழ்ந்து இருத்தால் பொருட்டு நாங்கள் அனைவரும் உங்கள் அரசாங்கத்தில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வருகின்றோம். இன்னும் சில நாட்கள் தான் பாக்கி இருக்கின்றன. அதன் பிறகு எங்களை இன்னாரென்று வெளிப் படுத்திக் கொள்வோம். அதுவரையில் உன் தந்தையிடம் கூட எங்களைப் பற்றிய ரகசியத்தை தயவு செய்து வெளியிட வேண்டாம் என்று அர்ஜுனன் உத்தரனிடம் கேட்டுக்கொண்டான்.