விராட நகரத்தின் பசுக்களை மீட்டெடுப்பது அர்ஜுனன் செய்ய வேண்டிய முதல் கடமையாக இருந்தது. அதற்கேற்ற முறையை அவன் கையாண்டான். தன்னுடைய காண்டீப வில்லில் இருந்து கணக்கற்ற அம்புகளை அவன் பறந்தோடச் செய்தான். அதனுடைய சத்தம் காதைத் துளைத்தது. அந்த சத்தத்தின் விளைவாக பசுக்கள் எதிரிகளின் கைவசத்தில் இருந்து தப்பித்துக் கொண்டு தங்கள் பண்ணையை நோக்கி விரைந்து ஓட்டம் பிடித்தன. பசுக்களை பராமரித்து வந்த மாட்டுக்காரர்கள் மகிழ்வுடன் அவற்றை பின் தொடர்ந்து ஓடினார். அர்ஜுனன் பசுக்களை மீட்டெடுப்பதில் வெற்றி அடைந்தான்.
போரில் பசுக்களை மீட்டெடுப்பது துவக்க பகுதியாக இருந்தது. அடுத்தபடியாக அவன் துரியோதனனை பின்தொடர்ந்தான். கௌரவ போர்வீரர்கள் அவனுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர். போர்வீரர்கள் அனைவரும் அர்ஜுனனை வளைத்துக் கொண்டு தாக்கினர். ஆனால் அற்புதமான பங்கிலே அனைவரையும் அவன் முறியடித்தான். தாக்கிய அனைவரையும் சமாளித்துக் கொண்டு அவன் விரைந்து பாய்ந்து கர்ணணை தாங்கினான். விரைவில் கர்ணன் போர்க்களத்தில் இருந்து பறந்து ஓடி விட்டான். அடுத்தபடியாக அர்ஜுனன் துரோணாச்சாரியாரை தாக்கினான். துரோணாச்சாரியார் சோர்ந்து போய் பின்வாங்கினார். அதன்பிறகு அசுவத்தாமன் அர்ஜுனனை வந்து தாக்கினான். இருவருக்கும் இடையில் நடந்த போர் மிகவும் பயங்கரமாக இருந்தது. அசுவத்தாமனும் சோர்வடைந்து பின்வாங்கினான். பிறகு அந்த இடத்தை கிருபாச்சாரியார் வந்து பிடித்துக் கொண்டார். அவரும் விரைவில் பின்வாங்கினார். அர்ஜுனன் மிக லாவகமாக அங்கு வந்து இருந்த படைகளை தோற்கடித்தான்.
பீஷ்மர் முன்வந்து அர்ஜுனனை தாக்கினார். பாட்டனாருக்கும் அர்ஜூனனுக்கும் இடையில் நடந்த போராட்டம் மிகவும் பயங்கரமாக இருந்தது. அந்த அரிய நிகழ்ச்சியை பார்க்க விண்ணவர்களும் உலகிற்கு வந்தனர். களைத்துப்போன பாட்டனாருக்கு சிறிது ஓய்வு தேவையாக இருந்தது. அவரும் பின் வாங்கினார். அர்ஜுனன் இப்போது தன்னுடைய ஜென்மத்து விரோதியாய் இருந்த துரியோதனனை தாக்கினான். துரியோதனன் அதிவிரைவில் தோல்வியடைந்து போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடித்தான். அவனிடம் நீயும் ஒரு க்ஷத்திரனா வெட்கமாக இல்லையா என்று அவனை ஏளனம் பண்ணினான். அர்ஜூனனின் பரிகாசம் செய்ததை முன்னிட்டு துரியோதனனுக்கு ஓரளவு வீரத்தை தூண்டியது. ஆகையால் அவன் மீண்டும் போர் புரிய துணிந்து வந்தான். அவனை பின்பற்றிய அவனுடைய சேனைத் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து அதனை தாங்கினார். வல்லமை பெற்று இந்த போர் வீரர்கள் பலரை ஒற்றை மனிதனாக அர்ஜுனன் சமாளித்து பார்ப்பதற்கு அரிய காட்சியாக இருந்தது.
வீராதி வீரர்கள் அத்தனை பேருக்கும் மேம்பட்டவன் அர்ஜுனன் என்பதை நிரூபித்துக் காட்டினான். அதன் பிறகு அவன் சம்மோஹன அஸ்திரத்தை கையாண்டான். அதன் விளைவாக எதிரிகள் அத்தனை பேரும் மயங்கி கீழே விழுந்தார்கள். இந்த சூழ்நிலையில் வெற்றிவேந்தனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான். அந்த நிலையில் அர்ஜூனன் ராஜகுமாரன் உத்திரனுக்கு ஒரு சிறிய வேலை கொடுத்தான். கௌரவ படைவீரர்கள் கழுத்தில் அணிந்திருந்த பட்டு துணிகளை அவிழ்த்து வரும்படி கூறினான். இச்செயல் நிறைவேறிய பிறகு வெற்றி வீரனாக அர்ஜுனன் அவ்விடத்திலிருந்து அரண்மனை நோக்கி சென்றான்.