அர்ஜுனன் எழுந்து விராட நகர மன்னனிடம் இப்பொழுது இங்கு சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவர் யுதிஷ்டிரன். அவர் தேவலோகத்தில் தேவேந்திரனுடைய சிம்மாசனத்திலும் அமர தகுதி வாய்ந்தவர். அத்தகையவர் தங்கள் சிம்மாசனத்தின் மீது அமர்வதற்கு தடை ஏதுமில்லை என்றான். மன்னன் இதைக்கேட்டு வியப்புற்றான் சிறிதுநேரம் மன்னனின் நாவில் பேச்சு ஏதும் எழவில்லை. பிறகு இவர் யுதிஷ்டிரர் என்றால் என்னுடைய அரண்மனையில் வந்து இங்கு தங்கி வேலைபார்த்தவர்கள் யார் எனக்கேட்டான். வேலையாட்களாக வந்தவர்களும் தானும் குருவம்சத்தின் பாண்டவ சகோதரர்கள் என்றும் சைரந்திரியான பணிப்பெண் திரௌபதி என்றும் அர்ஜுனன் அறிமுகப்படுத்தினான்.
உத்தரன் தன் தந்தைக்கு போரில் நடந்தவைகள் அனைத்தும் சொல்ல ஏற்ற நேரம் வந்துவிட்டது என்று எண்ணினான். விராட நகரத்தை காப்பாற்றுவதற்காக போர் புரிந்தவன் அர்ஜுனன் அவனுக்கு தேரோட்டியாக நான் இருந்தேன். அர்ஜுனன் இங்கு அப்பாவி போன்றே இருந்து வந்தான் ஆனால் போர்க்களத்தில் தெய்வீக ஆற்றல் படைத்தவனாக அவன் நடந்து கொண்டான். ஒற்றை ஆளாக இருந்து கொண்டு கௌரவ போர் வீரர்களையும் அவனுடைய சேனைகளையும் அவன் விரட்டினான். நம்முடைய அரசாங்கத்தை காப்பாற்றியவன் அர்ஜுனனே என்றான்.
யுதிஷ்டிரனை பார்த்து விராட மன்னன் ஒரு வருட காலம் தங்களை இன்னார் என்று காட்டிக் கொள்ளாது என்னுடைய அரண்மனையில் வசித்து வந்துள்ளீர்கள். நான் தங்களுக்கு காட்டிய அரைகுறையான உபசாரத்தை குறித்து என்னை மன்னித்து அருளும்படி வேண்டுகிறேன் என்னுடைய நாட்டில் தங்கள் தங்கியபடியால் தெய்வீகம் நிலைபெற்றிருந்தது அதனால் முறையாக மழை பெய்துள்ளது. நலன்கள் யாவும் முன்னனிக்கு வந்து கேடுகள் யாவும் பின்னணிக்கு போயிருக்கிறது. நாடு சௌபாக்கியமே வடிவெடுத்துள்ளது. என்னையும் என்னுடைய ராஜ்யத்தையும் எனக்கு சொந்தமாக உள்ள ஏனைய அனைத்தையும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் என்றான். யுதிஷ்டிரன் மன்னனின் கையைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கின்றோம். தங்களுடைய நகரிலேயே எங்களுடைய ஓர் வருட அக்ஞாத வாசம் என்னும் கடினமான பகுதியை மிக மகிழ்வுடன் கழித்து வந்தோம். வேற்றார்களாக நாங்கள் இங்கு வந்தோம் எங்களை அன்போடு தாங்கள் பராமரித்தீர்கள். உங்களோடு உறவு பூண்டதை முன்னிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என்றான்.
விராட மன்னன் அர்ஜுனனைப் பார்த்து என்னுடைய மகளான ராஜகுமாரி உத்தரை என்பவள் உன்னிடமிருந்து இசையையும் நடனத்தையும் நன்கு கற்றுக் கொண்டாள். அவளை மணந்து கொண்டு என்னை கண்ணியப்படுத்த வேண்டும். இதை தவிர வேறு எந்தவிதமான இணக்கத்தை கொண்டும் நான் திருப்தி அடைய மாட்டேன். எனது மகளை திருமணம் புரிந்து கொள்வதன் வாயிலாக உறவினர் என்னும் பந்தம் எப்பொழுதும் நம்மிடையே உறுதி பெறுகிறது என்றான். அதற்கு அர்ஜுனன் உத்தரையை எப்பொழுதும் என் மகளாகவே பாவித்து வந்திருக்கின்றேன். அந்த இணக்கம் தெய்வீக இணக்கத்திற்கு நிகரானது. அந்த மனப்பான்மையை நான் இப்பொழுது மாற்ற இயலாது. ஆயினும் அவளை என்னுடைய மருமகளாக நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய மகன் அபிமன்யுவுக்கு அவள் மனைவியாவாள். எனது மகனுக்கு திருமணம் செய்வதன் வாயிலாக உங்களுடைய விருப்பம் நிறைவேறுகிறது. அத்துடன் இக்குழந்தையோடு நான் வைத்துள்ள குரு என்னும் ஆச்சாரிய இணக்கத்திற்கும் பங்கம் ஏதும் வராது என்றான். அர்ஜுனன் கூறியது அனைவருக்கும் மன திருப்தியை உண்டு பண்ணியது.