மத்சிய நாட்டு மன்னன் நம்மோடு ஒரு தோழனாக மறுத்துவிட்டான் என்ற துரியோதனன் விராட நகரத்தை தெற்கு திசையிலிருந்து சுதர்மன் தாக்கட்டும். அந்நகரை வட திசையிலிருந்து நாம் தாக்குவோம். இரண்டு முனைகளையும் சமாளிக்க விராட மன்னனுக்கு வலிமை இல்லை. அவனை நாம் தோற்கடிப்போம். அவனுடைய பசுக்களை எல்லாம் சூரையாடுவோம். மறைந்திருக்கும் பாண்டவர்களையும் கண்டுபிடிப்போம். விராட நகரம் அவர்களுக்கு அளித்துள்ள பாதுகாப்பு வீண் போயிற்று என்று நிரூபிப்போம் என்று துரியோதனன் கூறினான். அனைவரும் இத்தீர்மானத்தை ஆமோதித்து அதிவிரைவில் விராட நகரை ஆக்கிரமிப்பு செய்ய சென்றார்கள்.
தென்திசை பண்ணையில் இருக்கும் பசுக்களை எல்லாம் திரிகர்த்த நாட்டு மன்னன் சுதர்மன் தன்வசப்படுத்தி ஓட்டிக்கொண்டு போகின்றான் என்று மாட்டுக்காரர்கள் ஓடிவந்து விராட மன்னனிடம் முறையிட்டார்கள். வல்லமைமிக்க கீச்சகனுடைய மரணம் தான் துணிச்சல் நிறைந்த இப்படையெடுப்புக்கு காரணம் என்று விராட மன்னனின் யூகித்தான். ஆயினும் தன் படையை அதிவிரைவில் திரட்டினான். அவனுடைய சகோதரர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர்.
கனகன் தனக்கு போரில் ஓரளவு பயிற்சி இருக்கிறது என்றும் தானும் போருக்கு வருவதாகவும் மன்னனிடம் தெரிவித்தான். மேலும் உறுதியான உடல் படைத்திருக்கும் சமையல்காரன் வல்லாளன் குதிரைக்காரன் தாமக்ரந்தி மாட்டுக்காரன் தந்திரிபாலன் இப்போருக்கு நன்கு பயன்படுவார்கள் என்றும் மன்னரிடம் எடுத்துரைத்தான். அரண்மனையில் புதிதாக வேலைக்காரர்களாக எடுத்துக்கொள்ளப்பட்ட நால்வரிடத்திலும் ஓரளவு ஒரு போர் திறமை இருக்கிறது என்று விராட மன்னன் உணர்ந்தான். அவர்கள் போர் வீரர்களா என்று தெரியாது. ஆயினும் தற்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நால்வருக்கும் ரதங்களும் அவர்களுக்கேற்ற ஆயுதங்களும் வழங்கப்பட்டன. கனகனுக்கு இந்த நிகழ்வு பெருமகிழ்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் தனக்கும் தன் சகோதரர்களுக்கும் விராட நகரம் செய்த உதவிக்கு இப்போரில் அவனுக்கு வெற்றி தேடிக்கொடுத்து தக்க முறையில் விராட நகருக்கு நன்றி செலுத்தி விடலாம் என்று கனகன் மகிழ்ந்தான்.
திரிகார்த்த நாட்டு சேனையை விராட மன்னனை சேனாதிபதியாக கொண்டு அதிவிரைவில் சென்று தாக்கியது. போர் மிக மும்முரமாக நிகழ்ந்தது. இருபக்கத்திலும் உயிர்சேதம் இருந்தது. விராட மன்னனை கைதியாக பிடித்துக் கொள்வதில் சுதர்மன் ஏதோ ஒரு போக்கில் வெற்றி அடைந்தான். அதன் விளைவாக விராட சேனைக்குள் குழப்பம் உண்டாயிற்று. வீரர்கள் குழப்பமடைந்து அடைந்து அது நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் புதிதாக சேனையில் சேர்ந்திருந்த நான்கு போர்வீரர்களும் இந்த நெருக்கடியை நன்கு சமாளித்தார்கள். பொருத்தமான இடங்களில் அவர்கள் நின்று கொண்டு வீரர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டினார்கள். அதன் விளைவாக கலைந்து போன வீரர்கள் மீண்டும் உறுதியுடன் ஒன்றுபட்டனர். நிகழ்ந்த போராட்டத்தில் திடீரென்று மாறுதல் ஒன்று நிகழ்வதாயிற்று.