பதினேழாம் நாள் யுத்தம் ஆரம்பித்தது. இருபக்க வீரர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க சங்கநாதங்களும் போர் முரசுகளும் முழங்க சீறிப் புறப்பட ஆயத்தமாய் இருந்தனர். முதல் நாள் போரை ஒப்பிடுகையில் பதினேழாம் நாள் வீரர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பாகமாய் குறைந்திருந்தது. போர் ஆரம்பிக்கையிலேயே கர்ணனுக்கும் தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி என்றான் கர்ணன். உடன் சல்லியன் உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு என்றான் சல்லியன். தேவாதி தேவர்களையும் அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ஜூனனை வெல்வது எளிது என்றான் கர்ணன். வீண் தற்பெருமை வேண்டாம். உன் வீரம் நான் அறிவேன். சிவனுடன் போர் புரிந்தவன் அர்ஜூனன். சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன். அப்போது நீ எங்கே போனாய் கர்ணா. விராட நகரில் பசுக்களை மீட்ட போது அர்ஜூனனுக்கு பயந்து ஓடியவன் நீ. உத்தரன் தேரோட்டிய போதே பீஷ்மரையும் துரோணரையும் வென்றவன் அர்ஜூனன். இப்போது கிருஷ்ணர் தேரோட்டும் போது சற்று எண்ணிப்பார். உன் ஆணவப் பேச்சை நிறுத்தி ஆற்றலை செயலில் காட்டு என்றான் சல்லியன். யுதிஷ்டிரரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் வேலையை ஆரம்பித்தான் சல்லியன்.
கர்ணனின் யுத்த ஆரம்பம் கௌரவர்களுக்கு உற்சாகத்தையும் பாண்டவர்களுக்கு அச்சுறுத்தலையும் தந்தது. அவனது ரதத்தை வீரர்கள் இருபுறமும் இருந்து காத்தனர் கர்ணன் சென்ற வழி எல்லாம் எதிரிக்கு அழிவை தந்தது. பாண்டவ படைகள் நிலை குலைந்தது. அவன் வீரத்தைக் காண ஒவ்வொரு கௌரவ படை வீரர்களுக்கும் உற்சாகம் கிளம்பியது. சல்லியனின் திறமையில் கர்ணனின் ரதம் யுத்தகளம் எங்கும் சுற்றி சுழன்று அடிக்கும் சூறாவளியாய் எட்டுத் திக்கும் விஜயம் செய்து ஜெயம் தந்தது. ஆரம்பத்தில் கர்ணனின் ஊக்கத்தை கெடுத்த சல்லியனும் கர்ணனின் திறமை கண்டு உண்மையான வீரனை நான் இங்கே கண்டேன். அவன் மீது பெரும் மதிப்பு கொண்டேன் என உள்ளத்திலே எண்ணினான். கர்ணனின் கண்ணசைவில் அவன் எண்ணம் புரிந்து களத்தை அவனுக்கு சாதகமாக்கினார் சல்லியன்.
பாண்டவர்களின் தரப்பில் சிறந்த வீரர்களாகக் கருதப்பட்ட பானதேவன், சித்திரசேனன், சேனவிந்து, தபன் மற்றும் சூரசேனனை எளிதில் வீழ்த்தினான் கர்ணன். மாவீரர்கள் ஐவரை கர்ணன் கொன்றதை கண்டவுடன் அவனுடன் போரிட பாண்டவர் தரப்பில் இருந்து திஷ்டத்துய்மன் சாத்யகி பீமன் மற்றும் சிகண்டி என அத்தணை பேரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர். அனைவரையும் எதிர்க்கொண்டான் கர்ணன். கர்ணனுக்கு துணையாய் வந்த சேனையை பீமன் அழிக்கத் தொடங்கினான். இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. பீமன் கடுமையாய் தாக்கினான். சிறிது நேரத்திற்கு பின் கர்ணன் பீமனால் தாக்குண்டு மயங்கி தேரில் விழுந்தான். அன்றைக்கு பீமன் போர்க்களத்தில் யமனைப் போலக் காட்சி தந்தான். சல்லியன் கர்ணனை போர்க்களத்தில் இருந்து வெளியேற்றிச் சென்றான். களம் பீமனின் கைக்குள் வந்தது. எங்கு நோக்கினும் ரத்த வெள்ளம். கர்ணன் களத்தில் இல்லாதது பாண்டவர்களுக்கு தகுந்த நேரமாய் மாறியது.