சாமியாரும் குரங்கும் வாரியார் சொன்ன கதை

ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார். குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார். அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது. நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை.

சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார். சாமியார் எதுவும் பேசவில்லை. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார். சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது. காதைப் பிடித்து இழுத்தது. தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது. சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது. உடனே சாமியார் நண்பர் ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர். உடனே சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார். அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது.

அப்போது சாமியார் சொன்னார் இந்தக் குரங்கைப் போலத் தான் மனித மனங்களும் நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று சும்மா விட்டு விடக் கூடாது. தேவாரம், திருவாசகம், தியானம், தவம், விரதங்கள் என்னும் பிரம்புகளால் மனதை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சற்று மனதிற்கு ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் என்றார்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -34

தண்ணீர் தேடிச்சென்ற பீமன் சிறிது தூரத்தில் ஒரு தாமரைக் குளத்தைக் கண்டான். அதில் ஸ்படிகம் போன்ற குளிர்ந்த நீர் இருந்தது. திருப்திகரமாக அவன் அதில் நீராடி தெளிவு பெற்றான். அழகிய தாமரை இலைகளை கொண்டு அற்புதமான நீர் பாண்டம் ஒன்றை அவன் செய்தான். அதில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தன் தாயும் சகோதரர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். அவர்களோ அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். எனவே பீமன் அமைதியாக அவர்களுக்கு காவல் இருந்தான். பீமனுடைய உள்ளத்தில் சில எண்ணங்கள் தோன்றியது கொலை பாதகர்களான கௌரவர்களோடு ஒளிந்திருத்தல் கண்டுபிடித்தல் விளையாட்டு விளையாடுவது சரி. ஆனால் தனது தாய் குந்திதேவியையும் இந்த ஆபத்தில் அழைத்து செல்வது சரிதானா என்று எண்ணிக்கொண்டு இருந்தான்.

அப்போது கட்டழமே வடிவெடுத்திருந்த அழகிய பெண் ஒருத்தி பீமனின் அருகில் வந்தாள். பீமனை அவன் பார்த்த பார்வையில் காதல் இருந்தது. அவள் யாரென்று பீமன் மரியாதையாக கேட்டான். அதற்கு அப்பெண் இந்த இடத்திற்கு இடும்பவனம் என்று பெயர். எனது சகோதரன் பெயர் இடும்பன். அவனது சகோதரியாகிய எனது பெயர் இடும்பி. இந்த இடத்தை நாங்கள் ஆண்டு வருகின்றோம். நாங்கள் ராட்சஷ கணத்தைச் சேர்ந்தவர்கள். மனித மாமிசத்தை உண்பதில் எங்களுக்கு ஆசை உண்டு. உன்னை கொன்று உன் மாமிசத்தை தன்னிடம் கொண்டு வருமாறு என் சகோதரன் என்னிடம் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் உன்னை பார்த்ததும் நான் காதல் கொண்டேன். எனது உடலை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும் திறமை எனக்கு உண்டு. இப்பொழுது ஒரு அழகிய பெண்ணாக வடிவெடுத்து இங்கு வந்திருக்கின்றேன். அன்புடன் என்னை ஏற்றுக்கொள். இங்கிருந்து நாம் புறப்பட்டு வேறு இடத்திற்குச் சென்று இன்பமான வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்போமாக என்று அவள் கூறினாள்

அதற்கு பீமன் எனது தாயும் சகோதரர்களும் உறங்கி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் அவர்களுக்கு காவல் இருக்கின்றேன். என் தாய் மற்றும் தமையன் உத்தரவு இன்றி நான் உன்னோடு வர இயலாது. தயவு செய்து இங்கிருந்து சென்று விடு என்றான். இடும்பி செய்த காலதாமதத்தை முன்னிட்டு பசியின் விளைவாக இடும்பன் கோபத்துடன் கர்ஜித்து கொண்டு அந்த இடத்திற்கு ஓடி வந்தான். தூரத்தில் அவன் வருவதை பார்த்த பீமன் அவன் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே அவனை தூரத்திற்கு தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான். தன்னுடைய தாய் மற்றும் சகோதரர்களின் உறக்கத்திற்கு இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது அவனுடைய நோக்கமாக இருந்தது.

சற்று தூரத்தில் பீமனுக்கும் இடும்பனுக்கும் சண்டை துவங்கியது. அப்போராட்டம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. இடும்பனும் பீமனும் சண்டையிடுவது இரண்டு யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடுவது போன்று இருந்தது. தூரத்தில் கிளம்பிய சண்டையின் சத்தம் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி விட்டது. எழுந்தவர்கள். தங்களுக்கு அருகில் பெண் ஒருத்தி பணிவிடை பண்ணும் பாங்கில் அருகில் அமர்ந்து இருந்ததைப் பார்த்தார்கள். பீமன் ராட்சஸனோடு தூரத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்தார்கள். என்ன நடந்தது என்று குந்திதேவி அப்பெண்ணிடம் கேட்டாள். நடந்தவைகள் அனைத்தையும் அப்பெண் குந்திதேவியிடம் கூறினாள். அல்லும் பகலும் ஓய்வில்லாமல் இருந்த பீமன் ராட்சஷனோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த அர்ஜுனன் அவனுக்கு ஓய்வு கொடுக்கும் பொருட்டு ராட்சஷனோடு சண்டையிட அந்த இடத்திற்கு விரைந்தான். ஆனால் அர்ஜுனன் அருகில் வருவதற்கு முன்பே பீமன் ராட்சசனை முதுகுப்பக்கம் இரண்டாக வளைத்து ஓடித்து அவன் தலையை உடலிலிருந்து திருகி எடுத்து ராட்சஷனை அழித்து விட்டான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -33

அரக்கு மாளிகையில் எரிந்த கடும் தீயானது அதிவிரைவில் கட்டடம் முழுவதும் பரவியது. நெருப்பின் ஓசை பயங்கரமாய் இருந்தது. அது வாரணாவத மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பியது. நெருப்பின் சத்தத்தில் பயந்து எழுந்த மக்கள் விபத்து பகுதிக்கு ஓடி வந்தனர். அவர்களால் கொளுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க இயலவில்லை. ஏனெனில் அருகில் செல்ல அகழி அவர்களுக்கு இடம் தரவில்லை. குருவம்சத்து பாண்டவ ராஜகுமாரர்கள் இப்படி அழிந்து போனதற்கு காரணம் திருதராஷ்டிர அரசனும் அவனுடைய பொல்லாத மகன் துரியோதனனுமே என்று மக்கள் பேசிக்கொண்டனர். எரிந்த தீ சிறிது குறைந்த பிறகு மக்கள் நீர் ஊற்றி அனைத்தனர். அங்கு வெறும் சாம்பல் மட்டுமே எஞ்சியிருந்தது. பிறகு அங்கு பாண்டவர்களை சென்று தேடினர். ஏழு பேருடைய எலும்புக்கூடுகள் மட்டுமே இருந்தது. ரகசியமாய் பாண்டவர்கள் வெளியேறிய சுரங்கத்தின் வாயில் முழுவதும் சாம்பலும் மண்ணும் மூடி அது மறைந்தது. ஆகவே பாண்டவ சகோதரர்கள் அனைவரும் அவர்களுடைய தாயும் எரிந்து போயினர் என்று மக்கள் முடிவுக்கு வந்தார்கள்.

அரக்கு மாளிகை எரிந்த இச்செய்தி விரைவில் அஸ்தினாபுரத்தில் வசித்து வந்த கௌரவர்களிடம் சொல்லப்பட்டது. திருதராஷ்டிரன் துரியோதனன் இருவர் உள்ளத்திலும் பரம திருப்தி அடைந்தனர். பங்காளிகள் அனைவரும் மறைந்து பட்டுப் போனார்கள். இனி ஆட்சிக்கு போட்டி போடுவதற்கு யாரும் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் வெளியே துயரத்திற்கு ஆளானவர்கள் போன்று அவர்கள் நடித்தனர். பொதுமக்களிடம் தாங்கள் நல்லவர்களாக தென்பட வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. விதுரருக்கு அனைத்தும் தெரிந்ததாலும் பீஷ்மர் இவ்வுலக வாழ்க்கையில் பற்று இல்லாதவராக இருந்ததால் இருவரும் இச்செய்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் இருவர் நீங்கலாக அனைத்து ராஜ குடும்பத்தார்கள் அனைவரும் துக்கத்தில் மூழ்கி கிடந்ததாக காட்டிக்கொண்டனர். அதற்கேற்றபடி ஆடம்பரமாக ஈமக்கிரியைகள் பாண்டவ சகோதரர்களுக்கும் அவருடைய அன்னை குந்தி தேவிக்கும் நிறைவேற்றப்பட்டன. மடிந்துபோன ஒவ்வொருவருடைய சிறப்பையும் தனித்தனியே சிலாகித்துப் பேசி வந்தனர். குரு வம்சத்துக்கு நிகழ்ந்த நஷ்டம் அளப்பரியது என்று துரியோதனன் பாசாங்கு பண்ணினான்.

வாரணம் பாதத்தில் அரக்கு மாளிகையில் இருந்து தப்பித்துக் கொண்ட பாண்டவர்கள் நெடுந்தூரத்துக்கு அப்பால் உள்ள கங்கை நதியின் தென்கரையில் இருந்த ஒரு காட்டில் கரையை அடைந்தனர். கார்இருள் அப்போது அகலவில்லை. காட்டின் உட்புறத்தில் நெடுந்தூரத்துக்கு அவர்கள் நடந்தனர்.. விடியற்காலையில் அவர்கள் யார் கண்ணுக்கும் தென்படாமல் காட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டனர். குந்திதேவி மிகவும் களைத்துப் போய் இருந்தாள். தன்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க இயலாது என்றும் தாகத்தால் நாக்கு உலர்ந்து போயிற்று தனக்கு தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டாள். தாயையும் தன் உடன் பிறந்தவர்களையும் அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் ஓய்வு எடுக்கும்படி அமரச் செய்து விட்டு அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று தேடி பீமன் புறப்பட்டு போனான்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -32

துரியோதனன் மற்றும் அவனுடைய மந்திரி புரோச்சனன் இவர்களது கொடிய சதித்திட்டத்தை விதுரர் தெளிவாக அறிந்தார். எனவே சுரங்கம் அமைப்பதில் சிறந்த பொறியாளனான கனகன் என்பவன் ஒருவனே வாரணவதத்திற்கு அனுப்பி வைத்தார். கனகன் யுதிஷ்டிரனை தனியாக சந்தித்து விதுரர் தன்னை சுரங்கம் அமைக்க அனுப்பி வைத்ததாக சொன்னான். அந்த அரக்கு மாளிகையில் இருந்து அருகில் இருந்த வனத்திற்கு போகும் படியான ரகசிய சுரங்கம் ஒன்றை கட்டுவதற்கான திட்டத்தைப் பற்றி யுதிஷ்டிரனிடம் பேசினான். இருவரும் திட்டம் ஒன்றை திட்டினார்கள்.

அந்த திட்டத்தின்படி புரோச்சனனிடம் யுதிஷ்டிரன் இந்த மாளிகையிலேயே தாங்கள் நிரந்தரமாக வசித்து இருக்கப்போவதாகவும் ஆகையால் பாதுகாப்பிற்காக அகழியை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் இங்கு இருக்கும் காலம் முழுவதும் புரோச்சனன் அவர்களுக்கு நிர்வாக காரியதர்சியாக இங்கேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். இவர்களது திட்டப்படி கனகன் மாளிகையை சுற்றி இருந்த அகழியை திருத்தி அமைக்கும் வேலையில் நியமிக்கப்பட்டான். புரோச்சனன் அதற்கு ஆட்சேபம் எதுவும் செய்யவில்லை. காலையிலிருந்து இரவு வரையில் காட்டில் சென்று வேட்டையாடுவதில் பாண்டவர்கள் ஈடுபட்டார்கள். புரோச்சனனையும் அவர்களோடு நாள்தோறும் அழைத்துச்சென்றனர். இவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு யாருக்கும் தெரியாதபடி அதிவிரைவில் சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

அரக்கு மாளிகைக்கு தீ மூட்டும் நாள் ஒன்றை துரியோதனனும் புரோச்சனனும் குறித்து வைத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. அந்நாளில் குந்திதேவி ஊரில் இருப்பவர்கள் அனைவருக்கும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தாள். விருந்திற்கு வந்தவர்களில் வேடுவச்சி ஒருத்தியும் அவளின் ஐந்து புதல்வர்களும் வந்திருந்தனர். அன்னமும் பானமும் அனைவருக்கும் தாராளமாக வழங்கப்பட்டது. உணவை உண்டு முடித்தபின் வேடுவச்சி மற்றும் அவளது ஐந்து மைந்தர்களை தவிர அனைவரும் சென்று விட்டனர். விதிவசத்தால் உண்ட மயக்கத்தில் வேடுவச்சியும் அவர்களது புதல்வர்களும் அங்கேயே தங்கி விட்டனர். நள்ளிரவு வந்தது. புரோச்சனனும் அயர்ந்து தூங்கி போனான்.

குந்தி தேவியையும் மற்ற சகோதரர்களையும் சுரங்கத்தின் வழியாக வெளியே போகும்படி பீமன் கூறினான். அவர்களும் அவ்வாறே சென்றனர். பிறகு அரக்கு மாளிகையின் அனைத்து பகுதிக்கும் தீ மூட்டிவிட்டு பீமனும் அச்சுரங்கத்தின் வழியாக வெளியே வந்தான். அரக்கு மாளிகை முற்றிலும் எரிந்த பின்பு சுரங்கத்தின் அமைப்பின்படி இவர்கள் வெளியேறிய நுழைவுப்பகுதியின் வாயிலை மூடியது. பாண்டவர்களும் சுரங்கத்தின் மறுபகுதியை வந்தடைந்தனர். பின் இவர்கள் வெளியே வந்த வாயில் இருக்கும் இடம் தெரியாமல் அதனை மூடிவிட்டனர். அடுத்தபடியாக காட்டில் இருந்த நதிக்கரைக்கு வந்தனர். அங்கு விதுரரின் ஏற்பாட்டின்படி அவர்களுக்காக படகு ஒன்று இருந்தது. நதியில் நெடுந்தூரத்துக்கு அப்பால் இருக்கும் அடையாளம் தெரியாத ஒரு நாட்டிற்கு அவர்கள் வந்து சேர்த்தனர்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -31

பாண்டவர்கள் தங்கள் ஊருக்கு விஜயம் செய்ததை குறித்து வாரணவதத்தில் வசிக்கும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பாண்டவர்களுக்கு ஆர்வத்தோடு கூடிய வரவேற்பு செய்தார்கள். முக்கியமான பிரமுகர்கள் பலருடைய இல்லங்களில் விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். அவைகளை எல்லாம் நிறைவேற்றி வைத்து விட்டு ஏற்கனவே அவ்வூரில் இருந்த ராஜகுடும்ப விடுதியில் அவர்கள் தங்கியிருந்தார்கள். அதற்கிடையில் ஏற்கனவே கட்டப்பட்ட அரக்கு மாளிகையைச் சுற்றிலும் அகழி ஒன்று வெட்டப்பட்டது. உள்ளே வசிப்பவர்களின் பாதுகாப்புக்காக என்று வெளியில் காட்டிக் கொள்ள நல்ல திட்டம் அது. ஆனால் உள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள் உயிரோடு வெளியே தப்பித்து வர முடியாத படி அது கட்டப்பட்டிருந்தது. அதில் வந்து வசிக்கும்படி ராஜகுமாரர்களை மந்திரி புரோச்சனன் வரவேற்றான். மாளிகை வசதி மிக வாய்க்கப்பெற்று இருந்தாலும் புதிய கட்டிடத்திற்கு வந்த உடனே யுதிஷ்டிரன் மற்றும் பீமன் இருவருக்கும் இந்த மாளிகையில் ஆபத்து மிக அமைந்திருக்கிறது என்று சந்தேகப்பட்டார்கள். அரக்கு மெழுகு குங்கிலியம் போன்ற விரைவில் தீப்பற்றி சுடர்விட்டு எரியும் பொருளைக் கொண்டு அம்மாளிகை கட்டப்பட்டு இருந்ததை அவர்கள் கவனித்தார்கள். அவ்வீட்டில் உள்ள வாசனையும் அதற்கு அறிகுறியாக இருந்தது. பாண்டவர்களாகிய தங்களுக்கென்று அமைக்கப்பட்ட இந்த பொறி என்று உணர்ந்தார்கள்.

பீமன் தனது சகோதரர்களிடம் துரியோதனன் எனக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து நீரில் மூழ்கவைத்து கொல்ல முயன்றான். தெய்வாதீனமாக நச்சுப்பாம்புகள் கடித்ததில் விஷம் முறிந்து மரணத்திலிருந்து நான் தப்பித்துக் கொண்டேன். இப்பொழுது நாம் அனைவரையும் நெருப்புக்கு இறையாகும் திட்டமொன்றை துரியோதனன் வகுத்து வைத்திருக்கின்றான். சித்தப்பா விதுரருடைய எச்சரிக்கை இங்கே உண்மை ஆகின்றது. இப்பொழுதே நாம் பழைய அரச விடுதிக்கு திரும்பி போய்விடுவோம். பிறகு அஸ்தினாபுரத்திக்கு சென்று துரியோதனனிடமிருந்து ராஜ்ஜியத்தை பறிமுதல் செய்து பெற்றுக் கொள்வோம் என்றான்.

அதற்கு யுதிஷ்டிரன் துரியோதனனுடைய சூழ்ச்சி நமக்கு தெளிவாக விளங்குகின்றது. ஆனால் இப்பொழுதே சூழ்ச்சி செய்து அவர்கள் நம்மை கொன்று விட்டால் கொலை பாதகன் என்னும் பழி துரியோதனனுக்கு வந்து சேரும். ஆகையால் சிறிது நாட்கள் கழித்து அவன் தன் திட்டத்தை செயல்படுத்துவான். அதற்குள்ளாக அவனுடைய சூழ்ச்சியை தோற்க்கடிக்கும் திட்டம் ஒன்றை நாம் வகுப்போம். கேடு ஏதும் இன்றி நாம் தப்பித்துக்கொள்வோம். இந்த மாளிகையினுள் நாம் கொளுத்தி கொல்லப்பட்டோம் என்னும் நம்பிக்கையை துரியோதனனுக்கு உண்டாக்க வேண்டும். நாம் தப்பித்துக் கொண்டு வெளியே தூரத்தில் உள்ள பிரதேசம் ஒன்றில் மாறு வேஷம் பூண்டு நாம் வாழ்ந்திருப்போம். நெருக்கடியில் நமக்கு உதவிபுரியும் நண்பர்களை நாம் தேடிக் கொள்வோம். அதன் பிறகு நாம் நம்முடைய பங்காளிகளான கௌரவர்களுக்கு நாம் உயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்துவோம் என்றான்.

இத்திட்டத்தை பீமன் ஆமோதித்தான். ஆபத்தான மாளிகையில் எச்சரிக்கையாக வாழ்ந்திருக்க சகோதரர்கள் தீர்மானித்தார்கள். அந்த ராஜகுமாரர்களுக்கு ஏற்ற வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் செய்து வைப்பது போன்று பாசாங்கு பண்ணிய அமைச்சர் புரோசனன் உண்மையில் அவர்கள் தப்பித்து ஓடாத படி காவல் காத்திருந்தான். சகோதரர்களும் அவனிடத்தில் பூரண நம்பிக்கை வைத்திருப்பது போன்று பாசாங்குடன் நடந்துகொண்டார்கள்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -30

திருதராஷ்டிரர் இளவரசன் யுதிஷ்டிரனை வரவழைத்தார். என் அருமை செல்வா வாரணவதத்தைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள். வசிப்பதற்கு ஏற்ற ஊர் என்று அதைப் பாராட்டி கூறுகிறார்கள். ஆகையினால் நீ உன் தாயையும் தம்பிகளையும் அங்கு அழைத்துச் சென்று சிறிது காலம் அங்கு வசித்திரு. அதன் மூலம் நீ நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவாய். இப்பட்டணத்திலே நீ படாதபாடுபட்டு களைத்துப் போய் இருக்கிறாய். உனக்கு உற்சாகத்தை ஊட்டுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை. ஆகவே நீ வேறு ஊருக்குச் சென்று ஓய்வு பெறுவது முற்றிலும் அவசியமாகும் என்று திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

குறிப்பறிந்து கொள்ளும் யுதிஷ்டிரனுக்கு விஷயம் நன்கு விளங்கியது. புத்திமதி புகட்டுவது போன்று தனக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு அது என்பதை உணர்ந்தான். அங்கு செல்ல அவனுக்கு விருப்பம் இல்லாத போதிலும் வேறு உபாயம் அவனுக்கு இல்லை. அரைமனதுடன் அந்த உத்தரவுக்கு அவன் இணங்கினான். பாண்டவ சகோதரர்களும் அவர்களுடைய அன்னையும் முதியோர்களாகிய பீஷ்மர் விதுரர் துரோணர் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு போனார்கள். போகும் வழியில் அரசன் எங்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார். அதனை ஏற்று நாங்கள் போகின்றோம் என்று பாண்டவர்கள் அனைவரிடமும் தெரிவித்தார்கள். நகர வாசிகளில் சிலர் பாண்டவர்கள் ஊர் கடந்து செல்வதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று யோசித்தார்கள். அவர்களில் அனுதாபம் காட்டி சிலர் பாண்டவர்களை தொடர்ந்து சென்றார்கள். யுதிஷ்டிரன் அவர்களுக்கு ஆறுதல் கூறி அஸ்தினாபுரத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தான்.

விதுரர் மட்டும் தனியாக பாண்டவர்களுடன் நெடும் தூரம் நடந்து சென்றார். போகும் போது சூழ்ச்சிகளை பற்றியும் தீ விபத்துகளை பற்றியும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். ஒரு வனமே தீப்பற்றி எரிந்த பொழுது எலிகள் பூமிக்குள் வளை தோண்டி அந்த விபத்தில் இருந்து தப்பித்து கொண்டதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ராஜகுமாரர்கள் இந்த எச்சரிக்கையின் உட்பொருளை நன்கு உணர்ந்து கொண்டார்கள். பாண்டவ சகோதரர்களுக்கு நலன் உண்டாகுக என்று வாழ்த்தி விதுரர் அஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றார். சில நாட்களில் சகோதரர்களும் அவருடைய அன்னையும் மிகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்த வாரணவதத்தை சென்றடைந்தனர்.

பாண்டவர்கள் வாரணவதத்திற்கு கிளம்பி சென்றதைக் குறித்து துரியோதனன் மகிழ்ச்சியுற்று இருந்தான். அவனுடைய மாமாவாகிய சகுனியின் சதிஆலோசனையின்படி பாண்டவர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை நன்கு நிறைவேற்றினான். புரோச்சனன் என்பவன் அஸ்தினாபுரத்தின் ஒரு அமைச்சர் ஆவார். துரியோதனன் அவனை தனது சதியாலோசனைக்கு உட்படுத்தி வைத்திருந்தான். அந்த அமைச்சர் வாரணவதத்திற்கு பாண்டவர்கள் செல்லும் முன் விரைந்து சென்று அரக்கு மாளிகையை ஒன்றை கட்டி முடித்திருந்தான். பாண்டவர்களை அந்த மாளிகையில் வசித்து இருக்கும்படி வேண்டிக் கொள்ளுதல் வேண்டும். சிறிது காலத்திற்கு பிறகு அதற்கு தீமூட்டி விடுதல் வேண்டும். அதில் வசித்தவர்கள் தீக்கு இரையாகி மடிந்து போவார்கள். அந்த விபத்து தெய்வாதீனமாக நிகழ்ந்தது என அனைவராலும் கருதப்படும். இதுவே அவர்கள் அமைத்திருந்த கொடிய திட்டமாகும்.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -29

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -29

திருதராஷ்டிரன் துரியோதனனிடம் உனது மாமா சகுனி மன்னன் தன்னுடைய ஆட்சிக்கு உறுதுணையாக மந்திரி ஒருவனை வைத்திருகின்றான். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவனுடைய பெயர் கணிகன். இவ்வுலக விவகார ஞானத்தில் அவனுக்கு ஈடானவர்கள் யாருமில்லை. அவனைப் பற்றிய எண்ணம் இப்போது என் உள்ளத்தில் உதிக்கிறது. அவன் இப்பொழுது அஸ்தினாபுரத்திற்கு வந்திருக்கிறான். விரைவில் சென்று அவனை யாருக்கும் தெரியாமல் அழைத்து வா என்றார்.

திருதராஷ்டிரன் அறைக்கு கணிகன் வேறு யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக அழைத்து வரப்பட்டான். ராஜ குடும்பத்தில் இருந்த சிக்கலான பிரச்சினைகள் அனைத்தும் அவனுக்கு எடுத்து விளக்கப்பட்டது. கணிகன் சிறிது நேரம் அமைதியாக சிந்தனையில் மூழ்கி இருந்தான். பின்னர் அவன் திருதராஷ்டிரனிடம். நீங்கள் இரண்டு வித மனப்பான்மைகளை உங்களிடத்தில் வரவழைத்து கொள்ளுங்கள். சூழ்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அது முற்றிலும் அவசியமானது. முதலாவது பாண்டவர் பிள்ளைகளை நன்கு நேசிப்பதாக பாசாங்கு பண்ணுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு தங்களுக்கு அவர்களிடம் வெறுப்பு இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அன்பு இருப்பதாக பாசாங்கு பண்ணுங்கள். எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றுவதற்கு உள்ளத்தில் புதைந்து கிடக்கும் வெறுப்பே தூண்டுகோலாய் இருக்கவேண்டும். இரண்டாவது எதிரிகளை எப்படியாவது ஒழித்து தள்ளவேண்டும். சிறிது நாள் காத்திருங்கள். காலதாமதம் நமக்கு பிரதிகூலமாக முடியும். இவ்வாறு கூறிவிட்டு கணிகன் அரண்மனையை விட்டு வெளியேறினான்.

சிறிது நாட்களுக்கு பின்பு திருதராஷ்டிரனிடம் துரியோதனன் தந்தையே நான் ஒரு சதித் திட்டம் வைத்திருக்கிறேன். தயைகூர்ந்து தாங்கள் பாண்டவர்களையும் அவர்களுடைய தாய் குந்தி தேவியும் ஒரு வருட காலத்திற்கு நமது நாட்டில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் வாரணாவதம் என்னும் இடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள். அவர்கள் நம் நாட்டில் இல்லாத பொழுது எனக்கேற்றவாறு நாட்டை நான் ஆயத்தப்படுத்திக் கொள்கிறேன். அவர்கள் இங்கு திரும்பி வராமல் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறேன். ஒருவேளை அவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால் அஸ்தினாபுரம் அவர்களுக்கேற்ற நகரம் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்கிறேன் என்றான். திருதராஷ்டிரர் மௌனமாய் இருந்தார். அவருடைய மௌனம் சதியாலோசனைக்கு அனுமதி போன்று இருந்தது. அதற்கு காரணம் காலம் சென்ற பாண்டுவின் புதல்வர்கள் மீது அவர் வைத்திருந்த பொறாமை அளவு கடந்து இருந்தது. தம்முடைய சொந்த மகனே நாட்டை ஆள வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. துரியோதனன் மந்திரிகள் சிலரை தனது கையாட்களாக அமைத்துக் கொண்டான். பின்பு வாரணாவதம் இடத்தைப் பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். அவ்வூர் ஒரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலம். அங்கே நிகழும் விழா மிக மிக கவர்ச்சிகரமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்த இடத்தின் சீதோஷ்ணம் மிக மிக ஆரோக்கியமானது என பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் விளைவாக எங்கு கேட்டாலும் வாரணாவதம் பற்றிய பேச்சாக இருந்தது.

மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -28

அஸ்தினாபுரத்து மக்கள் அரச குடும்பத்தை பற்றிய விஷயங்களை வெளிப்படையாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். திருதராஷ்டிரன் அரசராக இருக்கலாகாது. அவருக்கு தகுதி போதவில்லை. ஆட்சிக்கு முற்றிலும் பொருத்தமானவர் பீஷ்மர். ஆனால் தாம் ராஜ்யத்தைப் துறந்து விட்டதாக அவர் நெடுநாளைக்கு முன்பே விரதம் பூண்டு கொண்டார். எக்காரணத்தை முன்னிட்டும் அந்த விரதத்திலிருந்து விலகமாட்டார். துரியோதனிடம் சில குறைபாடுகளை மக்கள் உணர்ந்தனர். ஆகையால் யுதிஷ்டிரன் ஒருவனே நாட்டை ஆள தகுதி வாய்ந்த மன்னன் ஆவான் என்று மக்களிடம் பேச்சாக இருந்தது.

துரியோதனன் நாட்டில் வேவுக்காரர்கள் பலரை நியமித்து வைத்திருந்தான். பொதுமக்களுடைய அபிப்பிராயம் முற்றிலும் தனக்கும் தனது தந்தைக்கும் அனுகூலமாக இல்லை என்பதை அறிந்து அவன் மிகவும் மனம் நொந்து இருந்தான். தன் தந்தையிடம் தனியாக சந்தித்து தன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளை எல்லாம் அவன் வாரிக் கொட்டி தள்ளினான். தாங்கள் ஏன் யுதிஷ்டிரனை இளவரசனாக்கினீர்கள். நாட்கள் ஏற ஏற அவன் ஆட்சி தரத்திலும் கீர்த்தியிலும் அதிவேகமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றான். தங்களுக்கு கண் தெரியாத காரணத்தினாலும் அவன் மக்களுக்கு செய்யும் நன்மை காரணமாகவும் மக்கள் அவனை அரசனாக்க விரும்புகின்றார்கள். அப்படி என்றால் ராஜகுமாரன் ஆகிய நான் ஒரு அடிமையாக ஒதுக்கப்படுகின்றேன். இத்தகைய பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து இருப்பதைக் காட்டிலும் நான் மடிந்து போவதை மேல். நிலைமை வரம்பு கடந்து போவதற்கு முன்பே ஏதாவது செயலில் ஈடுபட்ட ஆக வேண்டும். தயவு செய்து தீர்மானம் பண்ணுங்கள் என்று துரியோதனன் தன் தந்தையிடம் கூறினார்.

அதற்கு திருதராஷ்டிரன் எனக்கு கண் பார்வை இல்லை என்றாலும் இந்த நெருக்கடியான நிலைமையை என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது. மக்கள் எல்லோரும் என்னுடைய சகோதரன் பாண்டுவின் மகன்கள் ஆட்சி செய்வதை விரும்புகின்றார்கள். அவசரப்பட்டு நாம் ஏதாவது செயலில் இறங்கினால் அது நமக்கே கேடாக வந்து அமையும் என்றார். அதற்கு துரியோதனன் தந்தையே தயவு செய்து என் சொல்லுக்கு சிறிது செவி சாயுங்கள். நமது பாட்டனாராகிய பீஷ்மர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடுநிலையுடன் இருக்கின்றார். என்னையும் என் சகோதரர்களையும் கிட்டத்தட்ட செத்துப் போகும் நிலையில் வைத்து பீமன் எங்களை நசுக்கிய பொழுதும் பாட்டனார் அது தலையிடவில்லை. பிறகு பீமனுக்கு நான் விஷம் வைத்ததை அவர் அறிந்தும் அதில் அவர் தலையிடவில்லை. ஆகவே அவர் நம்மை ஒருபோதும் எதிர்க்க மாட்டார். துரோணரின் மகன் அஸ்வத்தாமன் என்மீது வைத்திருக்கும் அன்பு மிகவும் உறுதியானது. நலம் கேடு அனைத்திலும் அவன் என்னுடன் இருப்பான். அவனைப் பின்பற்றி அவருடைய தந்தை துரோணரும் தாய்மாமா கிருபரும் நம் பக்கமே சார்ந்து இருப்பார்கள். சித்தப்பா விதுரர் நிச்சயமாக பாண்டவர்களுக்கு உரியவர் ஆவார். ஆயினும் அவரிடம் உறுதிப்பாடு எதுவும் இல்லை. தர்மத்தைப் பற்றி பேசுவதில் அவர் நிபுணர். தர்மத்தை மட்டுமே அவர் பேசிக்கொண்டு இருப்பார். நல்லதோ கெட்டதோ எதையும் சாதிக்க அவரால் இயலாது. ஆகையால் அவரை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை நமக்கு உறுதி வாய்ந்த தக்க பின் பலத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டு அவர்களை தோற்கடிக்க நாம் திட்டம் போட வேண்டும். இதில் காலதாமதம் உதவாது. காலதாமதம் செய்தோம் என்றால் நாம் அழிந்து போவோம் என்றான்.

சுய அனுபவமே உண்மையானது

ஸ்ரீ ரமண மகரிஷியின் குட்டி கதை

ஒரு இளம் சன்னியாசி ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து துறவறம் பற்றி அறிந்து கொள்ள முயன்று வந்தார். ஆனால் அந்த குருவோ எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்காது.
இதனால் மனம்வெறுத்த அந்த துறவி அங்கிருந்து வெளியேறமுடிவு செய்தார். அவர் வெளியேறும் முன்பாக அங்கு ஒரு நிகழ்வு நடந்தது. அதன் பிறகு அந்த துறவி அங்கிருந்து வெளியேறவேயில்லை.

அன்றைய தினம் மற்றொரு இளம் துறவி அந்த ஆசிரமத்திற்கு வந்தார். அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த அவர் பல்வேறு ஆழமான கருத்துக்களை பேசினார். ஆன்மீகத்தின் பல கோணங்களை ஆராய்ந்து ஏறக்குறைய 2 மணிநேரம் பேசினார். அந்த ஆசிரமத்தின் குரு கண்களை மூடியவாறு அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சைக் கேட்ட இளம் துறவி குரு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவருடன் சென்று விட முடிவு செய்தார். அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரைப் பாராட்டினார்கள்.

பேசி முடித்த அந்த புதிய துறவி அருகேயிருந்த குருவிடம் தனது பேச்சு எப்படி இருந்தது என்று சிறிது கர்வத்துடன் கேட்டார். கண் விழித்த அந்த குரு நீ எப்போது பேசினாய்? நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 2 மணிநேரமாக நீ பேசாமல் அமர்ந்து கொண்டு தானே இருந்தாய் என்றார். அப்படியென்றால் இதுவரை பேசியது யார் என்று அந்த புதிய துறவி கேட்டார். சாஸ்திரங்கள் பேசின நீ படித்த புத்தகங்கள்
பேசின நீ உன் சுய அனுபவத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று குரு சொன்னார்.

இப்படித்தான் பலரும் தாங்கள் மற்றவரிடமிருந்து கேட்ட கற்ற விஷயங்களை பேசி வருகின்றனர். சுய அனுபவத்தைப் பேசுவதில்லை. சுய அனுபவமே உண்மையானது.

மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம்.

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில் வரும் மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம்.

த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய மாம்ருதாத்.

இதில் உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய என்ற வரிகளின் அர்த்தம் வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவது போல என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும் என்பது அர்த்தம். எந்தப் பழமாயிருந்தாலும் பழுத்தவுடன் பட்டென்று தன் கொடி செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும். பூமியில் நிறைய பழங்கள் இருக்கின்றது. இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான விளக்கத்தை மஹா பெரியவா அற்புதமாக அளித்துள்ளார்.

மற்ற பழங்கள் போல் அல்லாமல் வெள்ளரிப் பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக்கொடி தரையோடு தரையாய்ப் படரும். அதனால் வெள்ளரிப் பழமும் தரையிலேயே பழுத்துக்கிடக்கும். அது பழுத்தவுடன் அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள் இலைகள் போன்றவை தானாகவே அந்தப் பழத்தை விட்டு விலகும். பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

அதுபோல ஞானிகளுக்கு அவர்கள் பந்தம் பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில் அவர்கள் ஞானத்தை அடைந்துவிட்டால் இவர் பழுத்து விட்டார் என்று எப்படி வெள்ளரிக் கொடி தன் பழத்தை தானகவே விட்டு விலகுகிறதோ அது போல பந்தம் பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே விலகி விடும்.