மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -25

யுதிஷ்டிரன் தன்னுடைய தெய்வீக தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். பன்னிரண்டு வருஷகாலம் வனவாசத்தை நாங்கள் வெற்றிகரமாக கழித்து உள்ளோம். எப்பொழுதும் யாரிடத்திலும் நான் எந்த வரத்தையும் கேட்பதில்லை. ஆயினும் தந்தையே நான் இப்பொழுது ஒரு நெருக்கடியில் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நாங்கள் எல்லாரும் ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் பண்ணியாக வேண்டும். அதை வெற்றிகரமாக முடிக்க எங்களை ஆசீர்வதிக்கும்படி பிரார்த்திக்கிறேன் என்றான். அதற்கு தர்ம தேவதை உன்னை நீ வனத்திலோ மலைக்குகையிலோ உன்னை மறைத்துக் கொள்ள மாட்டாய். மறைந்திருத்தல் பொருட்டு விண்ணுலகிற்கு ஓடிப் போக மாட்டாய். சமுதாயத்திலேயே வசித்திருந்து பயன்படுகின்ற பணிவிடைகளை புரிந்து கொண்டு இருப்பாய். அப்படியிருந்தும் ஒரு வருடத்திற்கு உன்னை யார் என்று கண்டுபிடிக்க யாருக்கும் இயலாது. நான் உன்னை முழுமனதோடு உன்னை ஆசீர்வதிக்கிறேன் என்று தர்மதேவதை சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அக்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள். பாண்டவர்கள் 12 வாருட வனவாசத்தை நல்லமுறையில் பயன்படுத்தினார்கள். மாமுனிவர்கள் அந்தணர்கள் தவசிகள் என பல நல்லோர்களின் இணக்கம் அவர்களுக்கு அமைந்ததே இதற்கு முதல் காரணமாக இருந்தது. 12 வருட காலமும் அருள் நாட்டத்திலேயே அவர்கள் மூழ்கியிருந்தனர். சான்றோர்களுடைய வரலாற்று ஆராய்ச்சிலேயே அவர்கள் ஈடுபட்டிருந்தனர். 12 வாருட வனவாசம் முடிவுக்கு வந்தது.

அக்ஞாத வாசத்தை பற்றி பாண்டவர்கள் திட்டமிடலாயினர். இப்பொழுது பாண்டவர்களை தவிர வேறு யாரும் அவருடன் இருக்க இயலாது முனிவர்களும் கூட அத்தீர்மானத்தில் கலந்து கொள்ளலாகாது. ஆகையால் அரை மனதுடன் யுதிஷ்டிரன் தங்களை விட்டுப் பிரிந்து போகும் படி முனிவர்களையும் மற்ற மேன்மக்களையும் பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். பாண்டவர்களை சந்திக்க வருபவர்களுக்கு ஓயாமல் உணவு வழங்கிக் கொண்டிருந்த அட்சய பாத்திரத்தின் செயலும் ஒரு மங்களகரமான முடிவுக்கு வந்தது. ரிஷிபுங்கவர்கள் மாமுனிவர்கள் அந்தணர்கள் தவசிகள் ஆகிய எல்லோரும் பாண்டவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அவரவர் போக்கில் பிரிந்து போயினர்.

வன பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து விராட பருவம்.

ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில்.

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள பனகனப்பள்ளிக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவில் வளர்ந்து வருகிறது. இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது. நந்தியின் அளவு அதிகரித்து வருவதால் கோயில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு தூணை அகற்றியுள்ளனர். சிலை ஆரம்பத்தில் அதன் தற்போதைய அளவை விட மிகவும் சிறியதாக இருந்தது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இந்த சிலை மீது சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிலை செதுக்கப்பட்ட பாறை வளர்ந்து வரும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் 20 ஆண்டுகளில் 1 அங்குல உயரம் வளர்ந்து வருவதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த சித்தப்பா என்னும் சிவ பக்தர் ஒருவர் இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனார் என்றுணர்ந்த சித்தப்பா ஆனந்தக் கூத்தாடினார். தெலுங்கில் நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அது தான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது. இந்த கோவிலை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்கம வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹாரா புக்க ராயாவால் கட்டப்பட்டது. வீரபிரம்மேந்திர ஸ்வாமி சில காலம் இங்கு தங்கியிருந்து கால ஞானம் என்னும் நூலை இயற்றியுள்ளார். வீர பிரம்மந்திர ஸ்வாமியின் கூற்றின்படி இந்த நந்தி சிலை உயிர் பெற்று வரும்போது இந்தக் கலியுகம் முடியும்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -24

யுதிஷ்டிரனின் பதில்களால் மகிழ்ந்து போன அந்த குரல் இறுதியில் மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன். யாருக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனக் கேட்டது. நகுலனை எனக்குத் திருப்பிக் கொடுங்கள் என யுதிஷ்டிரர் வேண்டினார். யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன் அர்ஜூனன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் நகுலனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய் என அசரீரி கேட்டது.

அதற்கு யுதிஷ்டிரன் போர் புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல. அதுமட்டுமில்லாமல் என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவிகள். இருவரும் எனக்கு தாய்மார்கள் ஆகிறார்கள். அவர்கள் இருவருக்கும் மகப்பேறு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் என் கடமையாகும். அந்த கடமையை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்து இருக்கிறது. யுதிஷ்டிரனாகிய நான் மற்றும் பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாய்க்கு பக்திப்பூர்வமாக சேவை செய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள். அவளுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும். ஒரு தாய்க்கு மகன் இல்லாது போகும்படி நான் நடந்து கொள்வது தர்மம் இல்லை ஆகவே நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன் என்றார் யுதிஷ்டிரர்.

நீ பரந்த மனப்பான்மை படைத்தவன் உன்னை போன்றவனை காண்பது அரிதிலும் அரிது. ஆகவே 4 சகோதரர்களையும் நான் உனக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். உடனே நான்கு சகோதரர்களும் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்திருப்பது போன்று எழுந்தார்கள். அவர்களை வாட்டிய பசி தாகம் களைப்பு ஆகியவை இப்போது ஓடிப் போயின. யுதிஷ்டிரர் அசரீரியை பார்த்து என்னுடைய சகோதரர்களை தேவர்களாலும் வெல்ல முடியாது. அத்தகைய வீரர்களை மயக்கத்தில் விழவும் மறுபடியும் எழுந்திருக்கவும் செய்திருக்கிறாய். அத்தகைய நீ யார் என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். யுதிஷ்டிரர் முன்பு பிரகாசத்துடன் மூர்த்தி ஒன்று தோன்றி நான் தர்மதேவதை உனக்கு நான் தெய்வீக தந்தையாவேன். உன்னுடைய உறுதிப்பாட்டை சோதித்தல் பொருட்டு இப்பொழுது நிகழ்ந்தவை யாவற்றையும் நான் வேண்டுமென்றே செய்தேன். உன்னிடத்தில் எனக்கு பரம திருப்தி உண்டாகியது நீ வேண்டும் வரங்களைப் பெற்றுக் கொள்வாயாக என்று தர்ம தேவதை கூறினார். தந்தையை பிராமணன் மானிடம் இழந்த அரணிக்கட்டையை திருப்பித்தர கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையேல் தர்மத்திலிருந்து நாங்கள் பிசகியவர்கள் ஆவோம். ஆகவே அரணிக்கட்டை மீண்டும் கிடைக்க தயை கூர்ந்து அதற்கு அருள்புரிவீர்களாக என்றான். அதற்கு தர்மதேவதை தானே மான் வடிவில் வந்து அரணிக்கட்டையை தூக்கி சென்றோம் என்று கூறி திருப்பி அளித்தார். மகிழ்ச்சியுடன் அரணிக்கட்டையை பெற்றுக்கொண்டார் யுதிஷ்டிரர்.

வீரபிரம்மேந்திரர்

விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரணஆசாரி பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீரபிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள் தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீரபோஜர் வீரபாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள். வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார். பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம் தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை. ஒருநாள் இரவு வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து உறங்கினார். காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது. அவன் எழுந்ததும் யாரப்பா நீ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும் ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. இனி இங்கேயே இரு என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் கால ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர். இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்த போது ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மேந்திரர் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது. இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.

வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும் அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போது தான் அறிந்ததாகவும் அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள். ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழ வேண்டியது தான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர். அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மேந்திரர் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:

புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்தது போகும் காலம் மாறி சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல் ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’ இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள். வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள். அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.

ஆந்திரவில் இருக்கும் போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன் என்றார். பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். போலேரம்மா என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது அவரது சுருட்டைக் கொளுத்தியது சரி சரி நெருப்பு போதும் என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல். இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள். அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.

காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம் துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார். தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். யாக்கை நிலையற்றது இதன் மேல் பற்று வைக்காதீர்கள் என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். எனக்கு இறப்பில்லை என்பதால் என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.

பத்து மாதங்கள் சுழன்றோடின. இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம் என்று சிலர் விமர்சித்தனர். மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கி விட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன் என்றார் தாயார். மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்து வந்து சமாதியை இடித்துத் திறந்து பார்த்தான். அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன. அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர் சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லி மீண்டும் சமாதியை மூடச் சொன்னார். இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீரபிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத்தொடங்கினார்கள். ஆந்திராவில் கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி.

Image may contain: text that says 'எதிர்காலத்தை முன்னமே சொன்ன வீரபிரம்மம்!'

கந்த சஷ்டி கவசம் வரலாறு

முருகப்பெருமான் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் மிகச்சிறந்த முருக அடியார் கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருக்கிறது. சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

பாலதேவராய சுவாமிகளுக்கு ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியவர் முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது. மனம் வாடாது. குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம். நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -23

தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் யுதிஷ்டிரர். நீர் இருக்கும் தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர் உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் நீர் அருந்த முற்பட்டார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும் என்று குரல் ஒலித்தது. அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய யுதிஷ்டிரர் இந்த தண்ணீர் தடாகம் உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன் என்றார்.

கேள்வி – சூரியனை பிரகாசிக்கும் படி செய்வது எது?

யுதிஷ்டிரன் பதில் – பரப்பிரத்தின் தெய்வீக சக்தி சூரியனை பிரகாசிக்கும் படி செய்கிறது

கேள்வி – மனிதன் மேலோன் ஆவது எப்போது?

யுதிஷ்டிரன் பதில் – தவத்தின் வாயிலாக மனிதன் மேலோன் ஆகிறான்

கேள்வி – மனிதன் எப்போது புத்திமான் ஆகின்றான்?

யுதிஷ்டிரன் பதில் – ஏட்டுக்கல்வியினால் மனிதன் புத்திமான் ஆவதில்லை. சான்றோர் இணக்கத்தினாலே மனிதன் புத்திமான் ஆகின்றான்.

கேள்வி – பிராமணன் யார்?

யுதிஷ்டிரன் பதில் – எல்லோருடைய நலத்தின் பொருட்டு தன்னை ஒப்படைப்பவன் பிராமணன் ஆகிறான்.

கேள்வி – க்ஷத்திரன் யார்?

யுதிஷ்டிரன் பதில் – தர்மத்தை காக்கும் பொருட்டு தன் உயிரைக் கொடுப்பவன் க்ஷத்திரியன் ஆகின்றான்.

கேள்வி – வேகம் வாய்ந்தது எது

யுதிஷ்டிரன் பதில் – மனம்.

கேள்வி – பயணம் போகிறவர்களுக்கு மிக மேலான கூட்டாளி யார்?

யுதிஷ்டிரன் பதில் – கல்வி

கேள்வி – எதை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்?

யுதிஷ்டிரன் பதில் – ஆசையை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்.

கேள்வி – அமைதி எங்கு உள்ளது?

யுதிஷ்டிரன் பதில் – மனத்திருப்தியில்.

கேள்வி – அதிசயங்களுள் அதிசயம் எது?

யுதிஷ்டிரன் பதில் – கணக்கற்ற பேர் இடைவிடாமல் இறந்து கொண்டே இருக்கின்றனர். அப்படி இருந்தும் உயிர்வாழ்ந்து இருப்பவன் தான் மரணம் அடையாமல் இருக்க போவதாக எண்ணிக் கொள்கிறான். இதுவே அதிசயங்களுள் அதிசயம்

இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் யுதிஷ்டிரர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -22

மானை பிடிக்க முடியாமல் போனதால் தர்மத்திலிருந்து பிசகி விட்டோமே என்று வருத்தத்தில் பாண்டவ சகோதரர்கள் இருந்தனர். அப்போது பீமன் துச்சாதனன் சபையின் நடுவே திரௌபதியை இழுத்து வந்த போது நாம் அவனை கொன்றிருக்கவேண்டும் அந்த கடமையிலிருந்து நாம் நழுவியதே இந்த இந்த தர்மத்திலிருந்து பிசகியதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றான். அப்போது அர்ஜூனன் சபையில் கர்ணன் திரௌபதியை அவமானப்படுத்திய போது நான் செயலற்று இருந்தேன் அப்போதே அங்கு அவனை நான் கொன்று இருந்தால் இப்படி ஒரு சூழ்நிலை வந்து இருக்காது என்றான். சகாதேவன் சகுனி பகடை விளையாட்டில் வெற்றி பெற்றிருந்த பொழுது நான் அவனை கொன்றிருக்க வேண்டும் அப்படி செய்யாமல் போனது தான் காரணமாக இருக்கும் என்றான். சகோதரர்கள் கூறிய அனைத்தையும் யுதிஷ்டிரன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான். அனைவருக்கும் தாகம் ஏற்பட்டது. தங்கள் தாகத்தை தணிக்கும் பொருட்டு அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்து தண்ணீர் கொஞ்சம் கொண்டு வரும்படி நகுலனிடம் அவன் கூறினார்

தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான். அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக ஆரம்பித்தபோது அசரீரி ஒன்று ஒலித்தது. இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன் பிறகு நீர் பருகலாம் என்றது அசரீரி. சுற்றும் முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்தி விட்டு தண்ணீர் குடித்தான். சிறிது தண்ணீர் குடித்த உடனேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.

வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன் அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை. மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான். உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன். அப்போதும் அதே குரல் ஒலித்தது உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல் என்றது. முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு உன்கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன் என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் கீழே வீழ்ந்தான்.

மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் யுதிஷ்டிரன் மனக்கவலை அடைந்தான். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான். தம்பிகளுக்கு என்ன ஆனது என்று பார்த்து விட்டு எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று பீமனிடம் யுதிஷ்டிரன் கூறினார். தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான். இது ராட்சசர்களின் வேலையாகத்தான் இருக்கும். முதலில் தாகத்தை தணித்துக்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான். மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார் என அலட்சியமாக நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே கீழே விழுந்தான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -21

பாண்டவ சகோதரர்கள் ஜயத்ரதனை கைது செய்து யுதிஷ்டிரனுடைய முன்னிலைக்கு அழைத்துச் சென்று என்ன தண்டனை அளிக்கலாம் என்று யுதிஷ்டிரனுடைய அனுமதியை நாடி நின்றனர். பீமன் ஜயத்ரதனை கொல்வதற்கு யுதிஷ்டிரன் அனுமதி கொடுக்குமாறு கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் குற்றங்கள் பல ஜயத்ரதன் செய்திருக்கின்றான். எனினும் இவன் நமக்கு மைத்துனன் ஆகிறான். காந்தாரியின் கடைசி குழந்தையாகிய துஸ்ஸாலாவுக்கு இவன் கணவன். அந்த முறையை முன்னிட்டு இவனை மன்னித்து இவன் உயிரை காப்பாற்ற நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறி அவனை விடுதலை செய்தான்.

ஜயத்ரதன் அவமானத்தால் தலையை தொங்க போட்டுக்கொண்டு தன்போக்கில் போனான். அவன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போகாமல் கங்கைக் கரையோரம் சென்று சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். நாட்கள் பல கழிந்து போயின. சிவபெருமானும் அவன் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு ஜயத்ரதன் வரும் காலத்தில் வரும் யுத்தத்தில் பாண்டவர்களை கொல்வதற்கு ஏற்ற வல்லமையை தனக்கு தர வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டான். அதற்கு சிவனார் பாண்டவர்களை கிருஷ்ணன் காப்பாற்றுகிறான் ஆகையால் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. உனக்கு நாம் ஒரு சிறிய உபகாரம் செய்ய முடியும். சிறிது நேரத்திற்கு அவர்களை சமாளிக்கும் திறமை உனக்கு வந்தமையும். அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிட்டார். சிறிதளவேனும் சிவபெருமான் தனது பிரார்த்தனைக்கு செவி சாய்த்தது குறித்து ஜயத்ரதன் மகிழ்ச்சி அடைந்தவனாய் கங்கை கரையில் இருந்து தனது நாட்டுக்கு புறப்பட்டு போனான்.

12 வருட வனவாசம் முடிவுறும் தருவாயில் இருந்தது. இன்னும் சில நாட்களில் அது முற்றுப் பெற்றுவிடும். அப்போது ஒருநாள் காம்யக வனத்தில் சென்று கொண்டிருந்த பிராமணன் வருவன் தன்னுடைய அரணிக்கட்டையை மானிடம் இழந்துவிட்டான். அரணிக்கட்டை மான் ஒன்றின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது. பயந்து போன மான் ஓட்டம் பிடித்து வனத்திற்குள் சென்றது. ஏமாற்றமடைந்த பிராமணன் பாண்டவர்களிடம் ஓடி வந்து அந்த மானிடம் இருந்து அரணிக்கட்டையை மீட்டெடுத்து தரும்படி கேட்டுக்கொண்டார். அக்கணமே பாண்டவ சகோதரர்களும் அந்த மானை பின்தொடர்ந்து ஓடினர். அது அவர்களை வனத்திற்குள் நெடுந்தூரம் ஓடும்படி செய்து மாயமாய் மறைந்து போயிற்று. பசியாலும் தாகத்தாலும் சகோதரர்கள் வாடி போயினர். அனைவரும் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். பிராமணன் ஒருவனுக்கு நாம் உதவி பண்ண முடியாது போய்விட்டது. நாம் தர்மத்திலிருந்து பிசகியுள்ளோம் என்றான் சகோதரர்களில் ஒருவன்.

குறிப்பு – ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை வைத்திருப்பார்கள். அரணிக்கட்டை என்பது இரண்டு கட்டைகள் இருக்கும். அதில் ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்து தயிர் கடைவது போல கடைவார்கள். தீப்பொறி எழும். அந்த தீயை யாகத்திற்கு பயன்படுத்துவார்கள்.

பழனி மலை

சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று. பழனி மலை இருக்கும் இடத்தை கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்று குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக் கோப்பெரும்பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர். தண்டாயுதபாணி ஆலயம் சேரமன்னன் சேரமான் பெருமானால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும் சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து கோபுரங்கள் மண்டபங்கள் கட்டி பல வசதிகள் செய்துள்ளனர். 450 மீட்டர் உயரமான இந்த மலையில் 690 படிகள் உள்ளது. இம்மலை முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள முருகர் நவபாஷணத்தால் போகரால் செய்யப்பட்டவர். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் இருக்கும் பொழுது முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்து பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். 4000 திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். இந்த நவபாஷான சிலை செய்யும் காலத்தில் இயற்கை தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சிலை செய்ய ஏற்றார் போல் சூழ்நிலை அமைத்து சித்தர்களுக்கு உதவி செய்தது.

தண்டாயுதபாணி விக்ரகம் எப்பொழுதும் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீர் அபிஷேக தீர்த்ததுடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் கொண்டு அபிஷேகம் நடைபெருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது. சந்தனம் பன்னீர் மட்டும் அடி முதல் முடி வரை அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -20

யுதிஷ்டிரனுடைய இருப்பிடத்திற்கு சென்றால் தங்களுக்கு மேலும் உணவு அளிப்பார்கள். அதிகமான உணவு சாப்பிட்ட அனுபவத்தைப் பெற்றபடியால் அங்கு உணவு அருந்த இயலாது. ஆகவே அனைவரும் ஆலோசனை செய்தார்கள். பிறகு பாண்டவர்களின் கண்ணுக்குத் தென்படாது அங்கிருந்து சென்று விடலாம் என்று துர்வாச மகரிஷியும் அவரது சீடர்களும் ஏகமனதாக முடிவு செய்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். துர்வாச மகரிஷி திரும்பி வராததைக் கண்ட யுதிஷ்டிரன் துர்வாச மகரிஷியை அழைத்து வருமாறு பீமனை அனுப்பி வைத்தான். பீமன் நதிக்கரையில் யாரும் இல்லாததை கண்டு யுதிஷ்டிரனிடம் கூறினான்.

கிருஷ்ணனுடைய கருணையால் திரௌபதி பெரும் சோதனையிலிருந்து விடுதலை பெற்றாள். பூரண யோகி ஒருவன் தன் பசியை போக்கிக் கொண்டால் அக்கம்பக்கத்தில் உள்ள அனைவருடைய பசியையும் போக்க வல்லவனாகிறான் என்பது யோகசாத்திர தர்மத்தின் கோட்பாடாகும். அந்த கோட்பாட்டை கிருஷ்ணன் இங்கு கையாண்டான். துர்வாச மகரிஷியும் அவருடைய சிஷ்யர்களும் உணவு உண்ட அனுபவத்தை பெற்றனர். பாண்டவர்களும் துர்வாச மகரிஷியின் சாபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டனர்.

பாண்டவர்கள் தங்கியிருக்கும் வனத்தில் தங்கியிருக்கும் சில பெண்கள் இருந்தபடியால் திரௌபதிக்கு துணையாக அவர்களை வைத்து விட்டு பாண்டவர்கள் ஐவரும் வேட்டையாட வனத்திற்குள் சென்றிருந்தனர். அப்பொழுது சிந்து நாட்டு மன்னனாகிய ஜயத்ரதன் காம்யக வனத்தை தாண்டி தன் போக்கில் சென்று கொண்டிருந்தான். அப்போது திரௌபதியை பார்த்ததும் அவன் சிறிதும் நாணமின்றி அவளிடம் தனது காதலை தெரிவித்தான். ஆனால் திரௌபதி தன்னை இன்னார் என்று அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். அவனுடைய செயல் முற்றிலும் சரியானது இல்லை என்று திரௌபதி தெரிவித்தாள். ஆனால் அவள் கொடுத்த விளக்கத்திற்கு ஜயத்ரதன் செவிசாய்க்கவில்லை. நாடோடிகளாகிய பாண்டவர்கள் அவளை மனைவியாக வைத்திருக்க தகுதியற்றவர்கள் என்றும் நாடாளும் வேந்தன் என்னும் முறையில் எந்த பெண்ணை வேண்டுமானாலும் தனக்கு மனைவியாக எடுத்துக் கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்றும் பேசினான். அதைத்தொடர்ந்து இருவருக்குமிடையில் கைசண்டை நிகழ்ந்தது. திரௌபதி ஜயத்ரதனை கீழே தள்ளினாள். ஆயினும் அவனுடைய வலிமையினால் திரௌபதியுடைய கைகளையும் கால்களையும் கட்டி தன் ரதத்தில் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான்.

திரௌபதிக்கு துணையிருந்த பெண்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதாக பாண்டவர்கள் உணர்ந்தனர் எனவே அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து திரும்பினர். திரௌபதியை காணவில்லை நடந்தவற்றை விளக்கமாக அங்கிருந்த பெண்கள் எடுத்துக் கூறினார். அக்கணமே சகோதரர்கள் ரதம் போன வழியில் விரைந்து ஓடினார். ஜயத்ரதனை பிடித்து நிறுத்தினர். அவனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. சிறிது நேரத்தில் ஜயத்ரதனை தோற்கடிக்கப்பட்டான். பீமன் அவனை கீழே போட்டு மிதித்தான். ஜயத்ரதனுக்க மயக்கம் உண்டாயிற்று. அவன் மயங்கி கிடந்த பொழுது ஐந்து சிறு குடுமி வைத்து அவனுடைய தலை முடி வெட்டப்பட்டது. அதன் விளைவாக அவனுடைய தோற்றம் பரிதாபத்துக்கு உரியதாயிற்று. சிறிது நேரத்திற்கு பிறகு அவனுக்கு மயக்கம் தெளிந்தது. அப்பொழுது அவன் ஒரு கால்நடை போன்று கயிற்றால் கட்டப்பட்டு இருப்பதை அறிந்தான்.