மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -1

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் உரிய சேனைகள் குருசேத்திரப் போர்க்களத்தில் சந்தித்து யுத்த நியதிகளை தங்களுக்கு தாங்களே நியமித்துக் கொண்டார்கள்.

சூரிய அஸ்தமனத்தில் அன்றைய சண்டை முடிவுக்கு வர வேண்டும். இரவில் விரோதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். விருப்பப்பட்டால் அவர்களுக்கிடையில் நட்பு இணக்கும் வைத்துக்கொள்ளலாம். ஒரு போர்வீரன் மற்றொரு போர்வீரனோடு சண்டை போடும்போது அவர்களுக்கிடையில் ஆயுத பலம் சமமாக இருக்க வேண்டும். போர்க்கான அறநெறியில் இருந்து யாரும் பிசகலாகாது. போர்க்களத்திலிருந்து பயந்து ஓடுபவர்களை ஒருபோதும் கொல்ல கூடாது. ரதத்தில் ஊர்ந்து வரும் ஒருவன் எதிர்க்கட்சியில் உள்ள ரதத்தில் வருபவருடன் மட்டுமே சண்டை போட வேண்டும். குதிரையில் வருபவனுடன் குதுரையில் வருபவன் மட்டுமே சண்டை போட வேண்டும். இம்முறையில் யுத்தம் சம வல்லமை படைத்தவர்களுக்கு இடையில் நிகழ்தல் வேண்டும். தஞ்சம் புகுந்தவர்களை பாதுகாத்தல் வேண்டும். ஓர் எதிரியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒருவனை யாரும் இடையில் புகுந்து தாக்க கூடாது. யுத்தத்திற்கு தயாராகாதவனையும் ஆயுதங்கள் இழந்து இருப்பவனையும் பின்வாங்கி ஒடுபவனையும் கொல்ல கூடாது. முரசு அடிப்பவர்களையும் சங்கநாதம் செய்பவர்களையும் தேரோட்டுபவர்களையும் குதிரைகளையும் போர்வீரர்களுக்கு ஆயுதங்கள் சுமந்து வருபவர்களையும் காயம் அடைந்த போர்வீரர்களுக்கு உதவி செய்பவர்களையும் கொல்ல கூடாது. இத்தகைய சட்டதிட்டங்களை இரு தரப்பினரும் சேர்ந்து தங்களுக்கு தாங்களே யுத்த நியதிகளை அமைத்துக்கொண்டனர்.

பயங்கரமான போர் துவங்கும் நிலைக்கு வந்துவிட்டது. அப்பொழுது அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் முன்னிலையில் வியாசர் பிரசன்னமானார். நடக்கும் யுத்தத்தை திருதராஷ்டிரன் காண விரும்பினால் அவனுக்கு கண் பார்வை தர வியாசர் முன்வந்தார். ஆனால் தன்னுடைய உற்றார் உறவினர் ஒருவரை ஒருவர் கொன்று அழித்துக்கொல்லும் காட்சியை காண கண் பெறுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று திருதராஷ்டிரன் மறுத்துவிட்டார். ஆயினும் நடக்கும் யுத்தத்தை யாராவது எடுத்து விளக்கினால் அவற்றை கேட்டு அறிந்து கொள்வதில் தனக்கு தடையேதும் இல்லை என்று கூறினார். அப்பொழுது சஞ்சயனுக்கு ஞானக்கண்ணை அளித்து யுத்தகளத்தில் நடப்பவற்றை இருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள வியாசர் சஞ்சயனுக்கு அனுக்கிரகம் செய்தார்.

தன்னை எதிர்த்துப் போர் வந்த வீரர்கள் யார் என்று பார்க்க அர்ஜுனன் விரும்பினான். தன் விருப்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தான். அர்ஜுனனுக்கு சாரதியாக பணிபுரிய முன்வந்த கிருஷ்ணன் ரதத்தை பீஷ்மர் துரோணர் கௌரவர் படைகளுக்கு முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தினார். போற்றுதலுக்குரிய பாட்டனார் பீஷ்மரையும் ஆராதனைக்குரிய ஆச்சாரியார் துரோணரையும் பார்த்தபிறகு அர்ஜுனனுக்கு மனதில் குழப்பம் வந்தது. வந்தனைக்குரிய முதியோர்களை எதிர்த்துப் போர் புரிய அவன் விரும்பவில்லை. இந்த நெருக்கடியில் அர்ஜுனனுக்கு வாழ்க்கை தத்துவத்தை எடுத்து விளக்க கிருஷ்ணர் கடமைப்பட்டார்.

அம்பர்நாத் கோவில் மத்தியப் பிரதேசம்

அம்பர்நாத்தின் ஷிவ் மந்திர் இந்தியாவில் மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பைக்கு அருகில் உள்ள அம்பார்நாதில் 11 ஆம் நூற்றாண்டு இந்து கோவிலாகும். அம்பாரேஸ்வரர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 1060 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஹேமத்பந்தியின் பாணியில் கட்டப்பட்ட அழகிய கல். ஷிலஹரா மன்னர் சித்தாரஜால் இது கட்டப்பட்டது, அது அவரது மகன் முமுனிவால் மீண்டும் கட்டப்பட்டது. இறைவன் 20 அடி கீழே தரையில் உள்ளார்

Image may contain: sky and outdoor
Image may contain: drink, plant and indoor
Image may contain: fire, table and indoor

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -15

அஸ்தினாபுரத்தின் சபையில் துரியோதனன் பாட்டனாராகிய பீஷ்மரை அணுகி அவர் கௌரவ சேனையின் சேனாதிபதியாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு பீஷ்மர் இயற்கையின் பாங்குகள் அனைத்தையும் உலக மக்கள் எல்லோரும் அவரவருக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறார்கள். இயற்கையோ நல்லார்க்கும் பொல்லார்க்கும் பொதுவாக எப்பொழுதும் பயன்பட்டு வருகிறது. இந்த இயற்கை தாயின் போக்கையே நானும் பின்பற்றி வருகிறேன். என்னிடதில் உள்ள பேராற்றல் பேரறிவு ஆகிய அனைத்தையும் எனக்காக நான் எப்பொழுதும் பயன்படுத்தில்லை. என்னிடத்தில் யார் எதைக் கேட்டாலும் அதை நான் தவறாமல் வழங்கிக் கொண்டே இருக்கிறேன். நான் உனக்கு கொடுத்த வாக்குப்படி நடந்து கொள்கின்றேன். என்னுடைய வீரியம் அனைத்தும் உனக்கு சொந்தமாகி விடுகிறது. ஆயிரக்கணக்கான வீரர்களை நான் கொல்வேன். ஆனால் பாண்டவர்களை மட்டும் நான் கொல்லமாட்டேன். நீயும் உன் சகோதரர்களும் என் அன்புக்கு உரியவர்களாக இருப்பது போன்றே பாண்டவர்களும் என் அன்புக்கு உரியவர்களே.

மற்றுமொரு விஷயத்தையும் உன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். மீண்டும் சொல்கிறேன் நான் யுத்தத்தை ஆமோதிக்கிறவன் அல்ல. உன்னுடைய தோழனாகிய கர்ணன் எப்போதும் எனக்கு உபத்திரத்தை உண்டு பண்ணுபவனாக இருக்கின்றான். நான் சேனாதிபதியாக இருக்கும் சமயத்தில் அவன் போர் புரிவது இல்லை என்று உறுதி கூறி இருக்கின்றார். ஆகையால் அந்த சேனாதிபதி பொறுப்பை நீ முற்றிலும் கர்ணன் வசம் ஒப்படைக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் அவன் சொல்படியே என்னுடைய கடமையை நன்கு நிறைவேற்றுவேன் என்றார். துரியோதனன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பீஷ்மரை கௌரவப்படைகளுக்கு தலைமை சேனாதிபதியாக தன் விருப்பப்படியே நியமித்தான். பீஷ்மரின் தலைமையில் கௌரவப்படைகள் போர்களம் செல்ல துவங்கினார்கள்.

கிருஷ்ணனுடைய தமையன் பலராமன் குருஷேத்திரப் போர் களத்திற்கு வந்து பார்த்தான். எண்ணிக்கையில் அடங்காத போர் பட்டாளங்கள் ஒன்றையொன்று அழித்துத் தள்ளக்கூடிய பாங்கில் இருப்பதைப் பார்த்தான். பலராமன் பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதை யுத்தம் சொல்லிக்கொடுத்தவன். ஆகையால் இருவரையும் அவன் ஒரே பாங்கில் நேசித்தான். பலராமனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாய்த்துக்கொள்ள முடிவு கட்டியிருந்தார்கள். அத்தகைய தன் மனதுக்கு ஒவ்வாத போராட்டத்தை பார்க்க பலராமன் விரும்பவில்லை. ஆகையால் அவன் அவ்விடத்தைவிட்டு தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டுபோனான்.

உத்தியோக பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து பீஷ்ம பருவம்.

எறும்புகளைப் போல மனிதர்கள்

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அங்குள்ள அந்தணர்கள் ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்துவிடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்.

கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது. அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும் எறும்புகளெல்லாம் அந்தச் சர்க்கரையை மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் இறைவனை அடைய வேண்டும் என்ற உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமல் அங்கேயே இருந்து விடுவார்கள் என்று சிரித்தபடி சொன்னார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -14

கிருஷ்ணரால் தூண்டப் பெற்ற குந்திதேவி கர்ணனை தனியாக சந்தித்து பேசினாள். கர்ணன் அவளுக்கு எப்படி மைந்தன் ஆனான் என்ற உண்மையை விளக்கினாள். கர்ணன் தன்னுடைய சொந்த சகோதரர்களாகிய பாண்டவர்களோடு வந்து சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தாய் குந்தி கர்ணனை வற்புறுத்தி வேண்டினாள். ஆனால் கர்ணன் அதற்கு சிறிதும் இணங்கவில்லை. கிருஷ்ணரிடம் தெரிவித்த அதே கருத்தை குந்திதேவியிடம் தெரிவித்து எக்காரணத்தை முன்னிட்டும் தான் பூண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்க ஆயத்தமாக இல்லை என்றும் தெரிவித்தான்.

குந்தி தேவி கிருஷ்ணரின் ஆலோசனையின் படி 2 வரங்களை கர்ணனிடம் கேட்டு வாங்கினாள். அதன்படி கர்ணன் அர்ஜுனனை தவிர மற்ற சகோதரர்கள் 4 பேரையும் எதிர்த்து ஆயுதம் ஏந்தி போர் புரிய கூடாது. கர்ணன் வைத்திருக்கும் நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறைக்கு மேல் பிரயோகப்படுத்தக்கூடாது என்ற வரத்தை வாங்கினாள். கர்ணன் குந்தி தேவி கேட்ட வரத்தை தர சம்மதித்து ஒரு விண்ணப்பம் வேண்டினான். அதன்படி அர்ஜுனனை கர்ணன் கொல்ல வேண்டும். அல்லது அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட வேண்டும் இரண்டில் ஒன்று நிச்சயம். யுத்தத்திற்கு பிறகு அவன் உயிர் பிழைத்திருந்தால் அவனை தன் தலை மகன் என்று குந்தி பகிரங்கமாக அறிவிக்கலாம். அப்படி அல்லாது போர்க்களத்தில் கர்ணன் இறந்தபிறகு அவன் தலையை குந்திதேவி தனது மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய மகன் இவன் என்று உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதுவரையில் அவனைப் பற்றிய மர்மம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று குந்திதேவிடம் அவன் விண்ணப்பம் வைத்தான். குந்திதேவியும் அதற்கு சம்மதித்து அங்கிருந்து கிளம்பினாள்.

கிருஷ்ணன் உபப்பிளவியாவிற்கு திரும்பிவந்து அஸ்தினாபுரத்தில் நிகழ்வுகளையெல்லாம் மற்றவர்களுக்கு எடுத்து விளக்கினான். யுத்தம் புரிவதைத் தவிர வேறு உபாயம் ஏதும் அவர்கள் கைவசம் இப்போது இல்லை. இனி காலதாமதம் செய்யாமல் அவர்கள் யுத்தத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள்.

துருபத மன்னன், அவன் மகன் திருஷ்டத்யும்னன், விராட வேந்தன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன். பீமன் ஆகியோரை தங்கள் வசமிருந்த ஏழு அக்ஷௌஹினி படைகளுக்கும் சேனாதிபதியாக நியமித்தார்கள். அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஆலோசித்து திருஷ்டத்யும்னனை அனைவருக்கும் தலையாக சேனாதிபதியாக நியமித்தார்கள். துருபத மன்னனுடைய வீரியமான மகன் திருஷ்டத்யும்னன் ஆவான். அவன் தன்னுடைய சகோதரி திரௌபதியை அர்ஜுனனுக்கு மணமுடித்து கொடுத்தவன். திரௌபதியே கௌரவர்கள் சபை நடுவே வைத்து அவமானப்படுத்தியது பாண்டவர்கள் 13 வருடங்களாக காட்டில் வசித்தது அகியவற்றை அவன் மனதில் வைத்திருந்தான். இதற்கு பழிக்குப்பழி வாங்கும் சந்தர்ப்பம் இப்பொழுது அவனுக்கு வாய்த்தது. பாண்டவர்களின் படைகள் அனைத்திற்கும் திருஷ்டத்யும்னன் தலையாய சேனாதிபதியாக பொறுப்பெடுத்துக் கொண்ட பொழுது வீரர்கள் அனைவரும் ஏகோபித்து கர்ஜித்தனர். சங்க நாதங்கள் முழங்கின. யானைகள் பிளிறின. பாண்டவப் படைகளை ஒருசேர போர்களம் செல்ல துவங்கினார்கள்.

இறைவன் இல்லாத இடம் எங்குமில்லை

ஓர் முனிவரிடம் மூன்று இளைஞர்கள் வந்தனர். முனிவரே உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும் என்றனர். ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த முனிவர் யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள் என உத்தரவிட்டார். முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றான். ஆளே இல்லாத அந்த காட்டில் கிளியைக் கொன்று விட்டு முனிவரிடம் திரும்பினான். முனிவர் அவனிடம் உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அதனால் உன்னை சீடனாக ஏற்க முடியாது என அனுப்பி விட்டார். இரண்டாவது இளைஞனுக்கு கிளியின் மீது இரக்கம் உண்டானது. கொல்ல மனமின்றி அதைக் காட்டில் உயிரோடு பறக்கவிட்டான். அவனிடம் முனிவர் நீ இரக்கம் கொண்டவன். உனக்கு நல்ல குரு கிடைக்க என் ஆசிகள் என்று திருப்பி அனுப்பினார். மூன்றாவது இளைஞன் எங்கும் சுற்றித் திரிந்தான். எங்கும் இறைவன் நிறைந்து இருக்கிறார். அதனால் இறைவன் இல்லாத இடம் என்று ஒரு இடம் எங்குமில்லை. அதனால் இதைக் கொல்ல முடியாது என்று சொல்லி முனிவரிவிடம் கிளியை ஒப்படைத்தான். அவனைக் குரு சீடனாக ஏற்றுக் கொண்டார். பின் தன் யோகசக்தியால் மற்ற இரண்டு கிளிகளையும் வரவழைத்து அவைகளை சுயரூபத்திற்கு மாற்றினார். கந்தவர்களாக மாறிய கிளிகள் முனிவரை வணங்கிவிட்டு புறப்பட்டனர்.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -13

கிருஷ்ணரின் சகாயம் பாண்டவர்கள் பக்கம் முழுமையாக இருக்கின்றது என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த அற்புதத்தை பார்த்த பிறகும் துரியோதனனுக்கு நடக்கப்போகும் விபரீதம் அதன் விளைவுகள் விளங்கவில்லை. போராட்டத்தை தவிர்ப்பதற்கு அத்தனை பேர்களும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. யுத்தம் நிகழப் போவது உறுதியாயிற்று.

அஸ்தினாபுரத்தை விட்டு புறப்படுவதற்கு முன்பு கிருஷ்ணன் கர்ணனை தனியாக சந்தித்தான். இதுவரை அறியாத கர்ணனின் வரலாற்றை கிருஷ்ணன் கர்ணனுக்கு எடுத்து விளக்கினான். குந்தி தேவி சிறுமியாய் இருந்த பொழுது சூரியனுக்குரிய மந்திரத்தை உச்சரித்து அந்த சக்தியின் விளைவாக முதல் மகனாக கர்ணனை பெற்றெடுத்துவிட்டு மீண்டும் கன்னிகையானாள். ஆகையினால் தர்மசாஸ்திரப்படி அவன் பாண்டுவின் முதல் மகன் ஆகின்றான். குரு வம்சத்து அரசாங்கத்துக்கு அவனே தலைமகன் ஆகின்றான். இவ்வுண்மையை பாண்டவ சகோதரர்கள் அறிந்தால் அவர்கள் மகிழ்வோடு கர்ணனை அரசனாக சிம்மாசனத்தில் அமரச் செய்வார்கள். இவ்வுண்மையை துரியோதனன் அறிந்தால் பாண்டவர்களுடன் ஒன்றுகூடி கர்ணனை அரசனாக்குவான். அதன் விளைவாக இப்பொழுது உருவெடுத்து வருகின்ற பயங்கரமான யுத்தம் தடுக்கப்படும். மகிழ்ச்சிக்கூறிய இந்த செயல்கள் யாவும் இப்போது உன்னிடத்தில் இருக்கின்றன என்று கிருஷ்ணன் விளக்கியதை கர்ணன் முற்றிலும் நம்பினான். ஆயினும் மூன்று முக்கியமான காரணங்களை முன்னிட்டு அவன் தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த ஆகாது என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டான்.

முதலாவதாக தன்னை வளர்த்து வந்த அதிரதன் ராதை தம்பதிகள் கர்ணனை தங்கள் மகன் என்றே கருத வேண்டும். இந்த எண்ணத்திற்கு எந்த இடைஞ்சல்களும் வரக்கூடாது. இரண்டாவது எக்காரணத்தை முன்னிட்டும் தனக்கும் துரியோதனனுக்கும் இடையிலான நட்பு வேறு போக்கில் மாறக்கூடாது. மூன்றாவதாக அர்ஜுனனை கொல்வதாக விரதம் பூண்டிருக்கின்றேன். அப்பொழுது அதனை மாற்றியமைக்க தான் ஆயத்தமாக இல்லை. ஆகையால் யுத்தம் முடிவடையும் வரையில் கர்ணனை பற்றிய வரலாற்றை ரகசியமாகவே வைத்து இருக்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டான். கர்ணனுடைய சுயநலப் பற்றற்ற பாங்கையும் ஆண்மையையும் கிருஷ்ணன் பெரிதும் பாராட்டினார்.

விதுரரையும் சாத்யகியையும் தன்னோடு அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் நேராக குந்திதேவியை பார்க்கச் சென்றான். சபையில் நிகழ்ந்தவைகள் அனைத்தையும் தெரிவித்தான். அதற்கு குந்திதேவி தர்மத்தை சார்ந்திருந்த போராட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் மக்களை பெற்றுள்ள பாக்கியம் க்ஷத்திரிய பெண்ணாகிய எனக்கு அமைந்திருக்கிறது. எனவே நான் பாக்கியவதி ஆகின்றேன். இனி வரப்போகும் யுத்தத்தில் அவர்கள் முறையாக ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். கிருஷ்ணா என்னுடைய ஆசீர்வாதங்களை தயவு கூர்ந்து என் பிள்ளைகளுக்கு தெரிவிப்பாயாக என்றாள்.

கங்கையில் நீராடல்

கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற வயதான அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது கதை கேட்பது உணவு தங்க இடம் கேட்டு வருபவர்களை உபசரிப்பது அவரது பணியாக இருந்தது. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை. அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை.

ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள் கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா என்று கேட்டனர். அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார். இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர். அப்போது அவர்கள் புண்ணியதாமாவிடம் நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா என்று கேட்டனர்.

அதற்கு புண்ணியதாமா நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது என்றார். ஒரு கணம் திகைத்த அந்த யாத்திரிகர்கள் மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும். இவர் அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம் என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. இரு யாத்திரிகர்களும் கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர்.

கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே என்று புலம்பத் தொடங்கி விட்டனர். பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும் என்று மனமுருக வேண்டினர். அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். மிகவும் பாக்கியசாலியும் புண்ணியவானுமான புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். இறைவனின் லீலைகள் கதை எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் இறைவனின் லீலைகள் கதையை தொடர்ந்து கேட்பவர்கள் படிப்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது என்று கூறி மறைந்து விட்டாள்.

தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக புண்ணியதாமாவிடம் சென்று நடந்தவற்றை கூறி அவரது காலில் விழுந்து தங்கள் தவறை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர்.

கருத்து

கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாது. இறைவனின் லீலைகளை கதையாக கேட்பது படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்ய முடியும். இறைவனின் லீலைகள் கதையாக எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதனை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர்கள் ஆகிறார்கள். இறைவனின் லீலைகளை கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். ஆயிரம் பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை.

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -12

அஸ்தினாபுரத்தின் சபா மண்டபத்தில் அனைவரும் துரியோதனனுக்கு புத்திமதி கூறினார்கள். அதற்கு துரியோதனன் இவ்வளவு நாட்கள் நிகழ்ந்த அனைத்திற்கும் நானே பொறுப்பாளி என்றும் குற்றம் முழுவதும் என்னைச் சார்ந்தது என்றும் நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி எண்ணுவதாக தென்படுகிறது. குரு வம்ச அரசாங்கத்துக்கு நான் ஒருவனே எல்லா விதத்திலும் அசைக்க முடியாத இளவரசன் ஆகின்றேன் எல்லோரும் ஒன்றுகூடி யுதிஷ்டிரனை இளவரசனாக்கியது பெரும் பிழையாகும். அதிர்ஷ்டவசத்தால் யுதிஷ்டிரன் பெற்ற ராஜ்யத்தையும் செல்வத்தையும் பகடை விளையாட்டில் பணயமாக வைத்து விளையாடி இழந்து விட்டான். யுதிஷ்டிரன் இழந்த ராஜ்யத்தை மனமுவந்து நாங்கள் அவனுக்கு திருப்பி கொடுத்து உதவினோம். மற்றுமொருமுறை அவன் அதை பணயமாக வைத்து இழந்தான். இது என்னுடைய குற்றமல்ல. இப்பொழுது பாண்டவர்கள் பாஞ்சால நாட்டு அரசர்களோடு சேர்ந்துகொண்டு குரு வம்சத்து அரசாங்கத்தின் மீது உள்நாட்டு கழகத்தை கிளப்பியிருக்கின்றார்கள். ஆயினும் தற்காப்பு நான் அவர்களைவிட மேம்பட்டவனாகவே இருக்கின்றேன்.

11 அக்ஷௌஹினி படைகள் என் வசம் இருக்கின்றன. பாண்டவர்களிடம் வெறும் 7 அக்ஷௌஹினி படைகளே இருக்கின்றன. யாராலும் வெல்ல முடியாத பீஷ்மர் துரோணர் கிருபர் அஸ்வத்தாமன் கர்ணன் ஆகிய மாபெரும் வீரர்கள் என் பக்கம் இருக்கின்றார்கள். யுத்தத்தில் நான் ஜெயிப்பது உறுதி. ஒருவேளை நான் தோல்வி அடைகின்றேன் என்றே வைத்துக்கொள்வோம் அவ்வாறு நிகழ்ந்தாலும் அதை நான் பொருட்படுத்த மாட்டேன். க்ஷத்திரியனான நான் வெற்றிக்கும் தோல்விக்கும் ஆயத்தமாக இருக்கின்றேன். என்னுடைய வழக்கு நீதிக்கு உட்பட்டது. ஆகையால் பயமுறுத்துதலுக்கு நான் அஞ்சுபவன் அல்ல. யார் நயந்து கேட்பதையும் நான் பொருட்படுத்த மாட்டேன். இந்த ராஜ்யம் முழுவதும் எனக்கு உரியது என்பதை நான் நன்கு அறிகிறேன். ஆகையால் ஒரு ஊசி முனை நிலம் கூட நான் பாண்டவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை என்று கூறிவிட்டு முதியோர்களை அவமானப்படுத்தும் வகையில் துரியோதனன் சபையிலிருந்து வெளியேறினான்.

கிருஷ்ணனை கைதியாக பிடித்து அடைத்து வைக்க துரியோதனன் தனது கூட்டாளிகளுடன் சதி ஆலோசனை செய்தான். இச்செய்தி சபையோரின் காதுக்கு எட்டியது. அவர்கள் பரபரப்பு மிக அடைந்தனர். கைது செய்ய வந்தவர்களுக்கு கிருஷ்ணன் தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டினான். அதை பார்த்த சதியாலோசனைக்காரர்கள் திக்குமுக்காடி விட்டார்கள். பார்க்கும் அனைவரும் கிருஷ்ணனாக காட்சி கொடுத்தனர். யாரைப்பிடித்து எங்கே கட்டி வைப்பது என்றே அவர்களுக்கு விளங்கவில்லை. கிருஷ்ணரின் இச்செயலால் ஒரு சிறு நலனும் வடிவெடுத்தது. திருதராஷ்டிரனுக்கு சிறிது நேரம் கண் பார்வைய கிடைத்தது. வந்த பார்வையைக் கொண்டு அவனுக்கு கிருஷ்ணனுடைய தெய்வீக ஆற்றல் ஓரளவு விளங்கியது. வேறு எதையும் பார்ப்பதற்கான கண்பார்வை தனக்கு வாய்க்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை பண்ணவில்லை. கிருஷ்ணரை பார்த்தை இன்பத்திலேயே அவர் லயித்திருந்தார்

மகாபாரதம் 5. உத்தியோக பருவம் பகுதி -11

கிருஷ்ணர் மேலும் பேசினார். குருவம்சத்தை சேர்ந்த துரியோதனும் அவனுடைய கூட்டாளிகளும் பாவம் நிறைந்த அதர்மத்தை செய்து வந்திருக்கின்றார்கள். அதற்கு அரசனான தங்களும் ஒருவிதத்தில் உடந்தையாக இருந்திருக்கின்றீர்கள். அத்தகைய ஆடாத பாவச்செயல்களை மன்னிக்கவும் மறக்கவும் யுதிஷ்டிரன் இப்போது ஆயத்தமாய் இருக்கின்றான். இப்பொழுதும் தங்களுக்கு அடிபணிந்து நடந்து கொள்ள அவன் ஆயத்தமாய் இருக்கின்றான். பகடைவிளையாட்டின் முடிவில் அமைத்து வைத்த ஒப்பந்தப்படி அவர்கள் தானாக சம்பாதித்துக் கொண்ட ராஜ்யத்தை அவர்களுக்கு திருப்பித் தந்துவிட வேண்டும் என்பது ஒன்றே அவர்களுடைய வேண்டுகோள் ஆகும் என்று கிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.

திருதராஷ்டிரன் பேசினார். இது ஒரு ஓயாத குடும்பத்தகராறு. ஆயினும் இது விரைவில் அமைதியாகவும் பெருந்தன்மையான முடிவுக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். ஆனால் என் மகன் துரியோதனன் என் சொல்படி கேட்க மறுக்கிறான். அவன் கர்ணன் சகுனியுடம் சேர்ந்து கொண்டு தன் போக்கில் விபரீதமாக நடந்து கொள்கின்றான். கிருஷ்ணா தயவு செய்து நீ தான் அவனை நல்வழியில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிருஷ்ணன் துரியோதனிடம் ராஜ குடும்பத்தில் பிறந்தவன் அதற்கேற்றவாறு பெருந்தன்மையோடு நடந்து கொள்வது சரியானது. கீழோன் ஒருவன் கடைபிடிக்கின்றன சிறுநெறிகள் உனக்கு ஒரு பொழுதும் பொருந்தாது. நீசனாக இருப்பவன் பேராசை பிடித்தவனாகின்றான். மற்றும் தயாள குணம் படைத்திருப்பது மன்னனின் மகனாக பிறந்து இருப்பவனுடைய பாங்கு ஆகின்றது. நீ முற்றிலும் மன்னனுடைய மாட்சிமை படைத்தவனாக இருப்பாயாக. பெற்றோர் சொல்லை கேட்பதனால் அறநெறியில் நிலைத்திருப்பவன் ஆகின்றாய். சகோதரர்களோடு நல்லிணக்கம் பூணுவதன் வாயிலாக உன்னுடைய வல்லமையும் மகிமையும் நீ வளர்க்கின்றாய். இதற்கு நேர்மாறாக யுத்தத்தில் இறங்குவாய் என்றால் அதன் விளைவாக குரு வம்சம் முழுவதும் அழிந்து பட்டுப் போகும். வேறு சில பல அரச குடும்பங்களும் அழிந்து போகும் என்று கிருஷ்ணன் துரியோதனிடம் கூறினார்.

கிருஷ்ணன் கொடுத்த அரிதிலும் அரிதான புத்திமதியை பீஷ்மரும் துரோணரும் முற்றிலும் ஆமோதித்தார்கள். தயாளகுணம் படைத்தவனாக துரியோதனன் இருக்கவேண்டுமென்று அவனிடத்தில் அன்போடு அவர்கள் எடுத்துரைத்தார்கள். விபரீதத்தை தவிர்ப்பதற்கு பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக் கொள்வது ஒன்றே சரியான உபாயம் என்று எடுத்துரைத்தார்கள். அடுத்தபடியாக இதே விதத்தில் விதுரரும் துரியோதனிடம் முறையாக வேண்டிக்கொண்டார். துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரரும் தாய் காந்தாரியும் பிடிவாதம் பிடித்தவனாக இருக்க வேண்டாம் என்று அவனிடம் கேட்டுக்கொண்டார்கள்.