மானச பூஜை

ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால் அது அந்த பிரம்மாவே சொன்னது போல ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான். நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள் என்று தன் ஜாதகத்தை கொடுத்தார். ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். பிறகு தொழிலாளியிடம் ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன் என்றார். ரொம்ப நன்றிங்க ஐயா நான் நாளைக்கு வருகிறேன் என்று தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள் அப்பா ஏன் அவரிடம் அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பி விட்டீர்கள். இன்று வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீர்கள் என்று கேட்டாள். அதற்கு ஜோதிடர் அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன் என்றார். இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. ஒரு பாழடைந்த சிவன் கோவிலில் ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

கோவில் சிதிலமடைந்து கிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினான். ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன் என்று நினைத்துக்கொண்டார். அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி கருவறையில் உறையும் இறைவனை வணங்குவது போல் தனது சிந்தனையை ஓடவிட்டார். அப்போது அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார். இவர் வெளியே வந்த அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து சிறு காயத்துடன் தப்பினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை அமர வைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார். ஜோதிட நூல்களை ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால் அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி நேற்றிரவு என்ன நடந்தது? என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார். தான் சென்றபோது மழை பெய்ததையும் அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தில் தான் ஒதுங்கியதையும் சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும் பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார். ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய கும்பாபிஷேகம் அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார். இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள் என்று அவரை வழியனுப்பி வைத்தார் ஜோதிடர்.

அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது. சிவபுண்ணியம் தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த பூஜை அவரை காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் வினை சுருங்குதல். அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு என்று திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் அருளியிருக்கிறார்.

மகாபாரதம் 15. ஆஸ்ரமவாசிக பருவம் பகுதி -2

ஒருநாள் திருதராஷ்டிரன் சபை ஒன்றை கூட்டினான். சபையிலே தன் தம்பி பாண்டுவின் பிள்ளைகளும் பொதுமக்களும் பிரதிநிதிகளும் கூடியிருந்தனர். தான் வனவாசத்திற்கு போக வேண்டிய அவசியத்தை குறித்து திருதராஷ்டிரன் அனைவருக்கும் எடுத்து விளக்கினான். மன்னன் ஒருவன் அறநெறியில் போர் புரிந்து போர்க்களத்தில் உயில் துறக்க வேண்டும். இல்லையேல் கடைசி காலத்தில் தவத்தில் இருந்து தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதுவே அரசனுக்குரிய தர்மமாகும். இந்த கோட்பாடுகளை முன்னிட்டு திருதராஷ்டிரன் காட்டிற்கு செல்ல தீர்மானித்தான். விதுரனும் சஞ்ஜயனும் காந்தாரியும் குந்தியும் அவரை பின்பற்றி தவம் புரிய காட்டிற்குப் போக தீர்மானித்தார்கள். இந்தத் தீர்மானத்திற்கு சபையிலிருந்த அனைவரும் அரை மனதுடன் அவருக்கு சம்மதம் கொடுத்தார்கள்.

வனத்திற்கு சென்றவர்கள் அற்புதமாக தங்கள் இறுதிக்காலத்தை கழித்தனர். இவ்வுலக வாழ்வை அவர்கள் அறவே மறந்து விட்டனர். நிலையற்ற இந்த நிலஉலக வாழ்வு அவர்கள் மனதில் இருந்து மறைந்து பட்டுப் போயிற்று. எப்பொழுதும் மறவாது இருக்கும் பரம்பொருளை பற்றிய எண்ணமே அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்து இருந்தது. தியானமும் பிரார்த்தனையும் முறையாக நிகழ்ந்தன. சான்றுகளுடன் பேச்சும் உரையாடலும் நடைபெற்றது. நில உலக வாழ்வின் இறுதி காலத்தில் இருக்கவேண்டிய பண்பில் அவர்கள் முற்றும் நிலைத்திருந்தனர். இவ்வாறு ஆண்டுகள் 3 சென்றது.

மகாபாரத யுத்தம் நிகழ்ந்து சரியாக 18 வருடங்களுக்கு பிறகு இப்போது ஊழித்தீ போன்ற நெருப்பு வனமெங்கும் பற்றி எரிந்தது. திருதராஷ்டிரனும் காந்தாரியும் குந்தியும் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுடைய தேகம் தீக்கு இரையாயின. ஆத்ம சொரூபம் இறைவனிடத்தில் ஒன்றுபட்டது. இவ்வுலக வாழ்க்கையை அவர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர். தீயிலிருந்து தப்பிய விதுரரும் சஞ்ஜயனும் பிரம்ம நிஷ்டையில் இருக்கும் பொருட்டு இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

ஆஸ்ரமவாசிக பருவம் முற்றியது அடுத்து மௌசல பருவம்.

தொடரும்…………

ரமணமகரிஷி

ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்கள். அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர் இதையெல்லாம் பார்த்துகொண்டு இருப்பார். இந்த வேதவிற்பன்னர்களைப் போல பேச முடியவில்லையே வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார். அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டார் ரமணர். ஒருநாள் தனக்கு அவர் பணிவிடை செய்து கொண்டிருந்த போது இன்று சவரம் செய்து கொண்டாயா? எனக் கேட்டார். அவர் ஏதும் புரியாமல் ஆமாம் சுவாமி என்றார். கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய் என்று திரும்பவும் கேட்டார் ரமணர். பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல் ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார். கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். நீ சவரம் செய்யும் வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது. அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா என்றார் ரமணர். முடியாது சுவாமி என்றார் பக்தர். அதேபோல் தான் வேதங்களும் உபநிஷதங்களும் சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல் காயப்படாமல் முக்தியடைய அவை உதவும் அவ்வளவு தான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும் இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும். அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார்.

உண்மையான அன்போடு இறைவனை வழிபடுதலும் இறைவனின் அங்கமான ஒவ்வரு உயிருக்கும் தொண்டு செய்வதே உண்மையான பக்தி உண்மையான இறைவழிபாடு. பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் மணிகளும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம். அன்பு இருந்தால் மட்டும் போதும்.

மகாபாரதம் 15. ஆஸ்ரமவாசிக பருவம் பகுதி -1

யுதிஷ்டிரன் தனது ஆட்சியில் மக்களை நல்வழியில் நடத்துவது தன் கடமை என உணர்ந்து செயல்பட்டான். அவன் ஆட்சியில் குறை ஏதும் தென்படவில்லை. நிறைவு எங்கும் நிலைத்திருந்தது. மக்கள் அனைவரும் யுதிஷ்டிரனை தங்கள் தந்தையாக கருதிவந்தனர். ஆட்சி புரிபவன் நான் என்ற எண்ணம் அரசனிடமும் இல்லை. ஆளப்பட்டு வருகின்றோம் என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. நாட்டில் உள்ள அனைவரும் பரந்த ஒரே குடும்பமாக அனைவரும் வாழ்ந்து வந்தார்கள்.

யுதிஷ்டிரன் தனது பெரியப்பாவாகிய திருதராஷ்டிரனுக்கு முழுமனதுடன் பணிவிடை செய்தான். திருதராஷ்டிரன் தனது மக்கள் அனைவரையும் இழந்துவிட்டான். துரியோதனனை ஆட்சில் அமர வைக்க வேண்டும் என்ற திருதராஷ்டிரனுடைய வாழ்வின் நோக்கம் நிறைவேறவில்லை. திருதராஷ்டிரன் நிலைமை இப்போது பரிதாபகரமாக இருந்தது. அத்தகைய நிலையில் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுப்பது யுதிஷ்னிரனுடைய நோக்கமாக இருந்தது. துரியோதனன் திருதராஷ்டிரனுக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்தான். அதற்கு நேர்மாறாக இப்பொழுது பாண்டுவின் புதல்வர்கள் யுதிஷ்டிரன் தலைமையில் சிறிதளவும் தர்மத்திலிருந்து பிசகாமல் நடந்து கொண்டார்கள். அதேவேளையில் நாட்டின் சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்து வருவது தான் அல்ல. திருதராஷ்டிரன் தான் என்பதை என் பெரியப்பாவிடம் யுதிஷ்டிரன் சொல்லிக்கொண்டே வந்தான். யுதிஷ்டிரன் படைத்திருந்த பரந்த மனப்பான்மையின் விளைவாக மன வேதனையில் இருந்து திருதராஷ்டிரன் விடுபட்டான். குந்தியும் திரௌபதியும் காந்தாரிக்கு பணிவிடை செய்து அவளுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுத்தார்கள்.

யுதிஷ்டிரனுடைய நெறி பிறழாத ஆட்சி முறையிலும் பாதுகாப்பிலும் திருதராஷ்டிரன் 15 வருடகாலம் வாழ்ந்து வந்தான். சௌபாக்கியம் நிறைந்த அந்த நல்ல சூழ்நிலையில் வாழ்ந்து வந்ததன் விளைவாக துரியோதனன் சகுனி மற்றும் பலரின் நடுவில் பொல்லாங்கு மனதுடன் வாழ்ந்து வந்த திருதராஷ்டிரன் நல்ல மனதும் ஆழ்ந்த சிந்தனையும் உடைய மாறிவிட்டான். பீமனும் துரியோதனனும் ஜன்ம விரோதிகளாக முன்பு வாழ்ந்துவந்தனர். அதை முன்னிடு திருதராஷ்டிரன் பீமன் மீது கோபம் மிக படைத்திருந்தான். பீமன் எச்சரிக்கையாக நடந்து கொண்டதன் விளைவாக தற்போடு திருதராஷ்டிரனின் மனப்பான்மையை பீமன் அடியோடு மாற்றி விட்டான். திருதராஷ்டிரரின் மனதை திருத்தி அமைத்த சிறப்பு பாண்டவர்களுக்கு உரியதாக இருந்தது.

மகாபாரதம் 14. அசுவமேத பருவம் பகுதி -2

கீரிப்பிள்ளை நடந்த நிகழ்வு ஒன்றை கூற ஆரம்பித்தது. சிறிது காலத்திற்கு முன்பு பக்கத்தில் இருந்த நாடு ஒன்றில் பயங்கரமான பஞ்சம் உண்டானது. பட்டினி கிடந்து பலர் மாண்டு போயினர். உணவு போதவில்லை. அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் அவருடைய மனைவி அவருடைய மகன் மருமகள் என நால்வர் வாழ்ந்து வந்தனர். பஞ்சத்தை முன்னிட்டு அந்த ஆசிரியர் தம்முடைய தர்மமாகிய கல்வி புகட்டும் செயலை நிறுத்தி விடவில்லை. ஆசிரியரின் குடும்பம் பட்டினியால் வாடுவது பற்றி அறிந்த மாணவன் ஒருவன் அந்த ஆசிரியருக்கு கொஞ்சம் கோதுமை மாவு கொடுத்தான். அதை கொண்டு நான்கு சப்பாத்திகள் செய்தனர். உணவை அவர்கள் அருந்த போகும் தருவாயில் பட்டினியுடன் ஒருவன் விருந்தாளியாக வந்து சேர்ந்தான். விருந்தாளிக்கு ஆசிரியர் தனது பங்கு சப்பாத்தியை கொடுத்து அதை ஏற்கும் படி வேண்டினார். அந்த சப்பாத்தியை சாப்பிட்டதன் விளைவாக அவனுக்கு பசி அதிகரித்தது. ஆசிரியரின் மனைவி தனக்குரிய பங்கு சப்பத்தியை வந்தவனுக்கு எடுத்து வழங்கினாள். அதன் விளைவாக விருந்தினருக்கு பசி மேலும் அதிகரித்தது. மகன் தனக்குரிய பங்கை வழங்கினான். விருந்தாளிக்கு மேலும் உணவு தேவைப்பட்டது. மருமகள் தனது உணவை விருந்தாளியின் இலையில் வைத்து அவனை வணங்கினாள். அதனையும் சாப்பிட்ட விருந்தாளி மிகவும் திருப்தி அடைந்தவனாக அனைவரையும் வாழ்த்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

தங்களது உணவை விருந்தாளிக்கு கொடுத்த ஆசிரியரின் குடும்பம் பசியில் சாகும் நிலையில் கிடந்தனர். அவர்கள் செய்த தியாகத்தை அறிந்த விண்ணுலகத்தவர்கள் வியந்தனர். தேவர்கள் ரதம் ஒன்றை மண்ணுலகிற்கு கொண்டு வந்து ஆசிரியர் குடும்பத்தார் உடலிலிருந்து அவர்களை விடுவித்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தேவலோகத்தில் அவர்கள் பசியில்லாமல் தாகமில்லாத மேல் நிலைக்கு சென்றனர்.

கீரிப்பிள்ளை தொடர்ந்து பேசியது. நான் என் வலையில் இருந்து வெளியே வந்து அவர்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப்பட்ட தரையின் மீது படுத்து உருண்டேன். தரையில் சிதறிக் கிடந்த கோதுமை மாவின் புனிதம் சிறிதளவு என் உடலின் ஒரு பகுதியில் ஒட்டியது. மாவு ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பொன்நிறமாக மாறியது. எனது உடலின் மீதி பகுதியையும் பொன்நிறமாக மாற்றுவதற்காக தானதர்மங்கள் செய்யும் யாகசாலை எங்கேனும் இருக்கிறதா என்று நான் தேடி பார்த்து ஒவ்வொரு இடமாக படுத்து உருண்டு கொண்டிருக்கின்றேன். எங்கும் எனது உடல் பொன்நிறமாக மாறவில்லை. யுதிஷ்டிரன் செய்த இந்த யாகம் நடந்த இடத்திலும் படுத்து உருண்டேன். இங்கும் எனது உடலின் மீதிப்பகுதி பொன்நிறமாக மாறவில்லை. ஆகவே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியரின் தானத்திற்கு நிகராக யுதிஷ்டிரனின் இந்த யாகம் இல்லை. இந்த யாகத்தை நீங்கள் அனைவரும் மிகவும் பெருமையாக பேசுகின்றீர்கள். ஆகவே நீங்கள் பொய் பேசுகின்றீர்கள் என்று கூறினேன் என்று தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது.

கீரியின் இக்கூற்றை கேட்ட பெருமக்கள் அனைவரும் திகைத்துப்போய் மௌனத்துடன் இருந்தனர். ஆசிரியர் செய்த தர்மம் ஆடம்பரமான எந்த வேள்விக்கு நிகராகாது என்பதை அனைவரும் அமைதியாக ஏற்றுக் கொண்டனர். எந்த சிறிய செயலானாலும் செய்யும் மனநிலை பொருத்தே அதன் சிறப்பு என்னும் கோட்பாடு இங்கு நிரூபிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுடைய அசுவமேத யாகத்திற்கு வந்திருந்த கிருஷ்ணன் சிறிது காலம் ஹஸ்தினாபுரத்தில் தங்கியிருந்தார். யுதிஷ்டிரனை சிம்மாசனத்தில் அமர்த்துவது கிருஷ்ணனின் முக்கியமான செயலில் ஒன்று. அந்த அரிய செயலும் இப்பொழுது நிறைவேறியது. எனவே கிருஷ்ணனை பாண்டவர்கள் அரைமனதோடு துவாரகைக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.

அசுவமேத பருவம் முற்றியது. அடுத்து அசிரமவாசிக பருவம்.

இறைவனிடம் கேட்ட கேள்வி

காசில்லா பக்தனுக்கு தூரத்திலும் காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா இது என்ன நியாயம் என்று ஒருவன் இறைவனிடம் கேள்வி கேட்டான்.

கலகலவென சிரித்தார் இறைவன். தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை. தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை. ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை. எனக்கான இடத்தை எனக்கான நேரத்தை எனக்கான விழாக்களை என்னை வணங்கும் முறையை எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள். இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேள்வி கேட்பது என்ன நியாயம் என்றார் இறைவன்.

மகாபாரதம் 14. அசுவமேத பருவம் பகுதி -1

அரச சிம்மாசனத்தில் அமர்ந்த யுதிஷ்டிரன் ராஜ தர்மங்களில் தன் மனதைச் செலுத்தினான். ஆட்சி முறையின் ஒரு பகுதியாக அஸ்வமேத யாகம் நிகழ்த்துவது அவசியமாக இருந்தது. வியாசர் அவன் முன்னிலையில் தோன்றி அதன் அவசியத்தை அவனுக்கு எடுத்து விளக்கினார். பல அரசர்கள் தேடி வைத்திருந்த செல்வத்தில் பயன்படாமல் இருந்ததை சிற்றரசர்களிடமிருந்து சேகரிக்க வேண்டியது இந்த யாகத்தின் ஒரு பகுதி ஆகும். சிற்றரசர்களிடமிருந்து செல்வத்தையும் யாகத்திற்கு தேவையான திரவியங்களை சேகரிக்கும் பணிக்கு அர்ஜுனன் நியமிக்கப்பட்டான். யுதிஷ்டிரன் செய்யும் அந்த யாகத்திற்கு அறிகுறியாக அவன் குதிரை ஒன்றை அக்கம் பக்கங்களில் இருந்த நாடுகளுக்கு அர்ஜுனன் ஓட்டிச் சென்றான். யாகம் செய்ய தடை கூறுபவர்கள் தங்கள் நாட்டிற்குள் குதிரையின் நடமாட்டத்திற்கு ஆட்சேபனே கூறலாம். அவர்களை வெல்லுவது அர்ஜுனனின் கடமையாக இருந்தது. ஆனால் அத்தகைய தடை யாரும் கூறவில்லை. அனைத்து அரசர்களும் தங்கள் தேவைக்கு மேலிருந்த செல்வத்தை அளித்தனர். யாகத்திற்கு தேவையான திரவியங்களையும் ஏனைய பொருட்களையும் அவன் பெரிதும் இமாசலப் பிரதேசத்திலிருந்து சேகரித்துக்கொண்டான்.

அஸ்வமேதயாகம் அரங்கில் சிறப்பாக நிகழ்ந்தது சிற்றரசர்களும் நாடாளும் மன்னர்கள் பலரும் அழைக்கப்பட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த அரசர்களும் நெடுந்தூரத்துக்கு அப்பால் இருந்த அரசர்களும் அந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள். சாஸ்திரங்களில் உள்ளபடியே நடைமுறைகள் அனைத்தும் ஒழுங்காக நிகழ்ந்தது. ஏழை எளியவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. சமுதாய முன்னேற்றத்திற்கு என புதிய திட்டங்களுக்கு தேவையான செல்வம் வழங்கப்பட்டது. பயன்படாமல் இருந்த செல்வங்களை எடுத்து நல்வழியில் பயன்படுத்துவது இந்த யாகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சான்றோர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி யாகம் நிறைவேறியது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். யுதிஷ்டிரன் செய்த அஸ்வமேயாகம் ஒப்புயர்வு அற்றது என்று அனைவரும் கூறினர்.

அப்பொழுது யாகசாலையில் கீரிப்பிள்ளை ஒன்று வந்து சேர்ந்தது. அதனுடைய மேல்பகுதி சாம்பல் நிறமாகவும் மற்ற பகுதிகள் பொன் நிறமாகவும் இருந்தது. இந்த அதிசயத்தை பார்த்து அனைவரின் கவனமும் அதன்மேல் சென்றது. கீரிப்பிள்ளை தரையில் படுத்து புரண்டது. பிறகு எழுந்து நின்று அங்கு கூடியிருந்த அனைவரிடமும் நீங்கள் அனைவரும் அறிந்தோ அறியாமலோ யாகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று பொய் பேசினீர்கள் என்று அது குற்றம் சாட்டியது. தாங்கள் அறிந்து பொய் ஏதும் சொல்லவில்லை என்று அனைவரும் தெரிவித்தார்கள். மேலும் கீரிப்பிள்ளை சாட்டிய குற்றச்சாட்டை தெளிவு படுத்தும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

ஸ்ரீ பாஸ்கர ராயர்

தேவி உபாசகர் ஒருவர் செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை. ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்தார். அப்போது கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து உங்களுக்கு பணம் தானே வேண்டும் கூச்சல் போடாதீர்கள் சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன் என்று மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தாள். சிறிது நேரத்தில் சிறு பையுடன் வந்தாள் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே இதோ பாருங்கள். இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான வட்டியும் உள்ளன. பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டாள். செல்வந்தரும் பத்திரத்துடன் வீட்டுதிண்ணையில் அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்புடன் உங்களை கவனிக்க வில்லை மன்னியுங்கள் என்று பிரசாத தட்டை நீட்டினார். செல்வந்தர் முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் என்றார். அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஆச்சரியம். நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே என்று பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர். உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு பத்திரத்தை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்றார். ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் மனைவியை அழைத்து நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே உண்மையா என்று கேட்டார். அந்த அம்மையாரோ திகைப்புடன் நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன். இது எப்படி சாத்தியம்? என்றார். அப்போது பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி குரல் கேட்டது நான் தான் பணம் கொடுத்தேன். குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைந்தனர். அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு யாரும் இல்லை.

இப்போது அனைத்தும் புரிந்தது தேவி உபாசகருக்கு. கடனை அடைக்க தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி. உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் மன்னியுங்கள் என்று செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார். அந்த தேவி உபாசகர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர். அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது. தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர். இவர் தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும் குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் பற்றி திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர் தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார். பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும் மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து அந்தந்த யோகினிகளுக்கான பெயர் மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது வைதீகர்கள் தமது தலைவரான யோகி குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று கேட்டார்கள். அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்ல. நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுனார். யோகி வைதீகர்ளுக்கு அந்தக் காட்சியை காண விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றனர்.