இந்த காணொளி உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீமகாகாலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் நடுஇரவு பூசையின் போது எடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரவில் மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் உடலில் இருந்து பெறப்படும் சாம்பலைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பாசம்ஆரத்தி என்று இந்த பூசைக்கு பெயர். இந்தியாவில் இந்த ஒரு கோவிலில் மட்டுமே இந்த பூசை நடைபெறுகிறது. இந்த அபிஷேகத்தைக் காண முன்பதிவு செய்வது அவசியம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.
Month: May 2020
கண்ணீர் விட்டழுத கிருஷ்ணர்
மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்ததை எண்ணி அர்ஜுனன் மிகவும் கண்ணீர் வடித்துக் கொண்டு இனி நான் என் உயிர் வாழ வேண்டும் என்று அழுதுகொண்டு இருந்தான். அப்பொழுது அவன் தலையில் எதோ நீர்த்துளிகள் விழவே மேலே நோக்கி பார்த்தான். கீதையை உபதேசித்த கிருஷ்ணர் அங்கு அழுதுகொண்டு நின்றிருந்தார். அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து நான்தான் சாதாரண மனிதன் மரணம் இன்பம் துன்பம் போன்ற உலக நிலைகளில் இருந்து விடுபடாதவன் எனது மகனை இழந்ததால் அழுகிறேன். ஆனால் நீங்கள் தெய்வமாயிற்றே இதை எல்லாம் கடந்தவர் அல்லவா நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இப்பொழுதுதான் உனக்கு பல மணிநேரம் செலவு செய்து கீதையை உபதேசம் பண்ணினேன். உலகில் உள்ள எல்லாமே மாயை எதுவும் யாருக்கும் சொந்தமில்லை இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையது ஆகும். எனவே எதற்காகவும் எந்த ஒரு இழப்பிற்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இல்லை என்று மிக சிரமபட்டு போதித்தேன். இவ்வளவு சீக்கிரத்தில் அது பயனற்று போய்விட்டதே. அனைத்தையும் நேரடியாக கேட்ட நீயே அதை உடனே மறந்துவிட்டு உன் மகனுக்காக இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாயே இந்த மனிதகுலத்தை எப்படி திருத்த என்பதை எண்ணித்தான் நான் அழுகிறேன் என்றார்.

ஐயப்பன் வரலாறு
மும்பை சித்தி வினாயகர்
மொக்கணீஸ்வரர் ஆலயம்
வியாபாரி ஒருவர் தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார். ஒருமுறை தன் நண்பருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார். பயணக் களைப்பால் ஒரு காட்டில் தங்கி கண்ணயர்ந்தனர். வியாபாரிக்கு முன்பாகவே எழுந்த நண்பர் ஓடையில் குளித்து விட்டு கட்டுசாதத்தை சாப்பிட்டார். தன் நண்பர் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டார். இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்த நண்பர் ஒரு சாக்கில் மண்ணை நிரப்பி சிவலிங்கம் போல் வடிவமைத்து காட்டுப்பூக்களால் அலங்கரித்து ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி நட்டு வைத்தார். பார்ப்பதற்கு அசல் சிவலிங்கம் போலவே இருந்தது. வியாபாரி எழுந்ததும் மாமா நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டீர்கள். உங்கள் பக்கத்திலேயே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வணங்கியபின் சாப்பிடுங்கள் என்றார். எங்கும் சிவமயம் என்று மகிழ்ந்த வியாபாரியும் தன் நண்பர் காட்டிய சிவலிங்கத்தை தரிசித்து பின் சாப்பிட்டார்.
அப்போது நண்பா சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் என்பதற்காக ஒரு சாக்குப்பையில் மண் நிரப்பி நிஜலிங்கமென உங்களை நம்ப வைத்து விட்டேன். உங்கள் உடல்நலம் கருதி செய்த இந்த தவறை மன்னிக்க வேண்டும் என்றார். என்ன சொல்கிறீர்கள் நண்பரே நான் பார்த்தது நிஜமான லிங்கத்தை தான். என் சிவனையே லிங்க வடிவில் தரிசித்தேன் என்றார் உறுதியாக. சாக்குப்பையில் மண்ணை போட்டு நட்டு வைத்தது நான் தான் என்ற நண்பர் அங்கே சென்று சாக்குப்பையை எடுக்க முயன்றார். ஆனால் அசையக்கூட இல்லை. அங்கே நிஜமான லிங்கம் எழுந்தருளி இருந்ததைக் கண்ட நண்பர் மூச்சடைத்துப் போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவரும் சிவபக்தரானார். இந்த லிங்கத்தின் பெருமையை மாணிக்கவாசகர் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி என்று தனது பாடலில் போற்றுகிறார்.
மூலவர் மொக்கணீஸ்வரர். அம்பாள் மீனாட்சி. தலமரம் வில்வம். மிகச்சிறிய கோயில். அம்பாள் மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். முன்மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். கொள்ளு வைக்கும் சாக்குபைக்கு மொக்கணி என்ற பெயர் உண்டு. எனவே சிவன் மொக்கணீஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபத்தில் மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். இத்தல விநாயகர் மூத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.




அக்னி நட்சத்திரம் குறித்த மகாபாரதக் கதை
யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர் காண்டவவனம். இந்திரனின் பாதுகாப்பில் உள்ள அவ்வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர அவ்வப்போது மழை பெய்ய செய்தான் இந்திரன்.
யமுனை நதியில் கண்ணன் மற்றும் அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர். பின் அவர்கள் கரையேறும் போது அங்கு வந்த அந்தணர் ஒருவர் கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து உங்களை பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். என் பசிக்கு உங்களால் தான் உதவ முடியும். இவ்வனத்தில் என் பசிப்பிணியை தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன் அக்னி தேவனே ஏன் இந்த வேடம் நேரிடையாகவே உன் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே என்று சொன்னதும் தன் வேடத்தை கலைத்த அக்னி தேவன் உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை சுவேதசி என்ற மன்னனுக்காக நுாறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார் துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன். அதனால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்நோய்க்கான மூலிகைகள் இவ்வனத்தில் உள்ளன. அவற்றை நான் கபளீகரம் செய்தால் மட்டுமே என் பிணி தீரும் என்றார். நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போதெல்லாம் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியை தடுத்து விடுகிறான் இந்திரன் என்றார். ஆகவே நான் எரிக்கும் போது மழையை தடுத்து உதவி செய்யுங்கள் என்று கேட்டார்
இதைக்கேட்ட அர்ஜுனன் அக்னி தேவனே நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் இங்கு நாங்கள் நீராட வந்ததால் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. அதனால் இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு அம்பறாத் துாணியும் அம்புகளும் வில்லும் தேவை என்றான். உடனே அர்ஜுனனுக்காக சக்தி மிக்க காண்டீப வில் அம்புகள் மற்றும் அம்பறாத் துாணி என எல்லாவற்றையும் தந்தார் அக்னி பகவான். அப்போது கிருஷ்ணர் அக்னி தேவனிடம் உன் பசி பிணியை தீர்த்து கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இக்காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அச்சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார் கிருஷ்ணர். அக்னி தேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் துவங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். வானில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்ட அர்ஜுனன் அவ்வனத்தில் மழை பொழியாமலிருக்க தன்னிடம் உள்ள அம்புகளால் சரக்கூடு ஒன்றை கட்டி தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வனத்தில் உள்ள மூலிகை பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தார். அடுத்த வந்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாக கொண்டார். அடுத்த வந்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு இறுதியில் இருவரிடமும் விடைபெற்றார் அக்னி தேவன். காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறது புராணம்.




குருவின் வழிகாட்டுதல்
குரு ஒருவர் ஒரு ஊருக்கு வந்தார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் ஒருவன் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம் உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன் என்று கேட்டான். துறவி அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன். நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் அதற்கு முன் ஒரு வேலை செய் ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.
மறுநாள் காலை குரு அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும் அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் குரு. இன்று சுத்தப் படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் திரும்ப திரும்ப அசுத்தம் ஆகுதுன்னு சுத்தப்படுத்தாமல் விட்டால் இந்த இடம் மிகவும் அசுத்தம் ஆகிவிடும் ஆகையால் சுத்தம் செய்கிறேன் என்றான். இதை கேட்ட குரு அப்போது சொன்னார் தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன். அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் மனிதர்களை நல்வழிபடுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.
இளைஞன் கேட்டான் சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று கேட்டான். அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார். பின்பு அந்த இளைஞனைப் பார்த்து இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா என்று கேட்டார். ஆகாது சாமி என்றான். உன் கேள்விக்கு இதான் பதில். நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் வழிகாட்டும் பாதையில் சென்று மனிதன் தன்னிடம் இருக்கும் வினைகள் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி இறைவனை அடைந்து விடுகிறானோ அப்பொழுதே எங்களின் சுத்தப்படுத்தும் கடமை முடிந்து விடும் என்றார்.

விதி
துரியோதனனுக்கு யுதிஷ்டிரரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்னும் வஞ்சம் இருந்தது. சூதாட்டத்தின் மூலமாகத்தான் யுதிஷ்டிரருடைய அத்தனை செல்வத்தையும் அபகரிக்க முடியும் என்றார் சகுனி. சூதாட்டம் ஆட வா என்று அழைக்க முடியாது. அழகிய மண்டபம் ஒன்று கட்ட வேண்டும் அதை விழாவாக வைத்து அனைவரையும் அழைத்து சூதாடலாம் என்று நினைத்தான் துரியோதனன். அதன்படியே மண்டபம் கட்டும் வேலையைத் தொடங்கினான். மண்டபம் காண வாருங்கள் மகிழ்வாக விழாவைக் கொண்டாடலாம் என்று ஓலையில் அழைப்பு எழுதி திருதராஷ்டிரனிடம் கையெழுத்து வாங்கினான் துரியோதனன். பிறகு சகுனியின் அறிவுரைக்கேற்ப விதுரர் மூலமாக தர்மருக்கு அனுப்பி வைத்தான்.
யுதிஷ்டிரருக்கு விதுரர் அழைப்பு ஓழையை கொடுத்தார். அதைப் படித்த யுதிஷ்டிரர் தனது சகோதரர்களிடம் சென்று தனித்தனியாக ஆலோசனை செய்தார். திருதாராஷ்டிரர் கையெழுத்திட்ட ஓலை வந்திருக்கிறது. மண்டப விழாவுக்கு செல்வோமா என்று கேட்கிறார். மூன்று சகோதரர்கள் போகலாம் என்றார்கள். சகாதேவனிடம் இதே போன்று கேட்டதும் ஓலை கொண்டு வந்தது யார் என்று கேட்கிறான். விதுரர் ஓலை எடுத்துவந்தார் என்கிறார் யுதிஷ்டிரர். அனுப்பியது யார் என்றான் சகாதேவன். துரியோதனன் அனுப்பினான் என்கிறார். ஓலையில் கையெழுத்து அது யார் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டான். அது திருதராஷ்டிரன் போட்டிருக்கிறார் என்றார் யுதிஷ்டிரர். இப்படியே சகாதேவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறினார். ஒரு கட்டத்தில் சலித்து விட்டார். எதற்கு கேட்கிறாய் சகாதேவா என்று யுதிஷ்டிரர் கேட்டார். நமக்கு ஓலை அனுப்பியது ஒருவர். கையெழுத்திட்டது ஒருவர். அனுப்ப நினைத்தது ஒருவர். கொண்டு வந்தது மற்றொருவர் என்றெல்லாம் நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப்பொறுத்த வரை இவை அனைத்தையும் செய்வது விதி ஒருவன் தான் என்றான் சகாதேவன்.

காவி உடை
காவி என்பதை நம் முன்னோர் துறவற நிறமாக வைத்தனர். இல்லறத்தை துறந்து துறவறம் செல்வோர் அனியவேண்டியது. வெள்ளை வேட்டியை சில மூலிகைகளை தண்ணீரில் போட்டு நனைத்து கட்டுவதே காவி உடை. காட்டில் செல்லும்போதும் பல இடங்களில் உறங்கும் போதும் பல புழுப்பூச்சிகள் விலங்குகள் கடிக்கும். இந்த காவி நிற உடையிலிருந்து வரும் மூலிகையின் வாசனை பூச்சிகள் பெரிய விலங்குகள் அருகில் வராமல் தடுக்கும்
காவி கட்டுவோர் இல்லறம் துறந்தார் என்று சிவாகமத்தில் கூறப்படுகிறது.
மஞ்சணத்தி மரத்தின் பட்டயை பக்குவப்படுத்தி அதனோடு ஆகமல மரத்தின் கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில்போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலிபருத்தி இலையும் சேர்த்து பின் வெண்மை நிறதுணியை அந்த சுடு நீரில் போட்டு துவைத்து எடுத்தால் வெண்மையான துணி காவி நிறத்தில் இருக்கும். முழுதும் காய வைத்து எடுத்தால் காவி உடையாகி விடும். இந்த ஆடையை துறவறம் பூண்டு காட்டிற்கு செல்பவர்கள் அணிந்தார்கள். இந்த காவி நிற ஆடையை தழுவி வரும் உயிர்த்துவமான காற்றை மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன் மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய கலையைக் கற்றார்கள். ஆனால் இன்று இது தெரியாமல் காவி என்றால் துறவு என்றாகி விட்டது. காவி உடை எதற்கு ஏன் என்று பலருக்கும் இன்று தெரியாமல் போனது.

எண்ணங்கள்
குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் யுதிஷ்டிரர் ஒருமுறை வீதியில் நடந்து சென்றார். துரியோதனன் அந்தப் பக்கமாக தேரில் வந்தான். யுதிஷ்டிரர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் வீதியில் நடக்க வேண்டும் இதுபற்றி அவன் யுதிஷ்டிரரிடம் கேட்டான். அண்ணா நம்மைப் போன்றவர்கள் வீதியில் நடக்கலாமா நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் இருந்தும் நீங்கள் நடந்து செல்கின்றீர்கள். இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ என்றான். யுதிஷ்டிரர் அவனிடம் தம்பி நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு வீதியாக நடந்தால் தான் நமது நாட்டின் நிலைமை மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும் என்றதும் துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது. நாடாளப் போவது நானல்லவா அப்படிப் பார்த்தால் நானல்லவா வீதியில் நடந்து செல்ல வேண்டும் என்று எண்ணி இவரைப் போலவே நாமும் நடப்போம் என தேரில் இருந்து குதித்தான்.
மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம் இவனும் கவனித்துப் பார்த்தான். ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன் ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். யுதிஷ்டிரருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இவனது காலில் ஒரு முள் குத்தினால் ஆ வென அலறுகிறான். ஆனால் இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு கரகரவென நறுக்குகிறான். இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா என்று அவனை மனதுக்குள் எண்ணியபடியே நடந்தார். அப்போது அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன. இதைப்பார்த்த யுதிஷ்டிரர் தவறு செய்துவிட்டோமே இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும் மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும் நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு தர்மத்தையும் பாதுகாக்கிறான். அப்படியானால் இவனைப் பற்றிய தப்பான எண்ணம் என் மனதில் ஏன் ஏற்பட்டது. நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.
வீட்டிற்கு சென்றதும் இதைப்பற்றி பெரியவர்களிடம் கேட்டான். நடந்தவைகள் அனைத்தும் கேட்டவர்கள் யுதிஷ்டிரனுக்கு பதில் சொன்னார்கள். தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால் துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட எண்ணங்களும் காற்றில் பரவி உன்னையும் பாதித்து விட்டது. இதனால் தான் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுவோம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.
