திரௌபதியின் பாதணிகளை சுமந்த கிருஷ்ணர்

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே என்று நினைத்த துரியோதனன் மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். தாத்தா பீஷ்மர் பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும் அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால் துரியோதனனோ பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். அவர்களைப் போரில் கொல்வேன் என்று சொல்லுங்கள் என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார்.

அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கிருஷ்ணர் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. சற்றைக்கெல்லாம் பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும் தர்மம் வெல்லும் என்று நமக்கு ஆசி கூறியவர். அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால் நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும் என்று நடுங்கினார்கள். பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட திரௌபதி மிகவும் கவலை கொண்டாள். இனி தன்னுடைய சபதம் என்னாவது போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ணர் அங்கே வந்து சேர்ந்தான். திரௌபதியைப் பார்த்து சத்தம் செய்யாமல் என் பின்னால் வா என்று மிக மெல்லிய குரலில் கூறி அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தில் கிருஷ்ணர் நடந்து சென்றுகொண்டிந்தார். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. கிருஷ்ணர் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் திரௌபதிக்கு சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கிருஷ்ணரின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

யுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் திரௌபதி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசை கேட்டது. ஓரிடத்தில் நின்ற கிருஷ்ணர் திரௌபதியைப் பார்த்து சகோதரி உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு என்று கூறினான். திரௌபதியும் காலணிகளைக் கழற்றி வீசினாள். தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் திரௌபதி நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காதே என்றான். திரௌபதியும் கிருஷ்ணர் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் திரௌபதி. யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர் தீர்க்க சுமங்கலியாக இரு பெண்ணே என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன் அவள் யாரென்றும் பார்த்தார். திரௌபதியை பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். இவளையா வாழ்த்தினோம் என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ அந்தப் பாண்டவர்களின் பத்தினியை தீர்க்கச் சுமங்கலியாக இரு என்று வாழ்த்திவிட்டோமே என்று தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.

திரௌபதியைப் பார்த்த பீஷ்மர் பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தில் நீ தனியாகவா வந்தாய் உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள் என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கிருஷ்ணர் நின்றுகொண்டிருந்தார். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது. வா கிருஷ்ண இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு என்று கேட்டார். இதுவா திரௌபதியின் பாதணிகள் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் இந்த துணியில் முடிந்து வைத்திருக்கிறேன் என்றார் கிருஷ்ணர். உடனே திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். கிருஷ்ணா இது என்ன சோதனை என் காலணிகளை நீ சுமப்பதா என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா என்று அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன. தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயா என்றார் கிருஷ்ணர். பீஷ்மர் குறுக்கிட்டு மாயவனே அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன் உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க அவர்களின் பாதணிகளைக்கூட நீ தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும். கிருஷ்ணா நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான் ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் செய்யமுடியுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட பக்தர்களை ரட்சிக்க திரௌபதியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா என்று அவர் கண்களில் கண்ணீர் கொப்பளித்தன. மறுநாள் போரில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் அர்ஜூனனால் படுத்தார்.

உண்மையான பக்தி

தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை என அர்ஜூனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்று கிருஷ்ணர் கேட்டார். என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்து விடுகிறானே கிருஷ்ணர் என அர்ஜூனன் திடுக்கிட்டான். அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அர்ஜூனா நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா என்று கிருஷ்ணர் அழைத்தார். இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கிருஷ்ணரும் அர்ஜூனனும் பெண்களாக மாறி பிங்கலையின் வீட்டுக் கதவை தட்டினர்.

தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். தாயே நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா என்று கேட்டார் கிருஷ்ணர். உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம் என்றாள் பிங்கலை. பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும் சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும் பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. தாயே கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே கத்திகள் யாருடையவை என்று கிருஷ்ணர் கேட்டார். என்னுடையவைதான் வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகள் மூவரைக் கொல்ல வேண்டும் அதற்காக மூன்று கத்திகள் வைத்திருக்கின்றேன் என்றாள். யார் அந்த விரோதிகள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன், திரௌபதி, அர்ஜூனன் இந்த மூவரும் என்றாள். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. திரௌபதிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ஜூனனைக் கொல்ல இந்தப் பெரிய கத்தி என்றாள். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்த மூவரும் கிருஷ்ணருக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கிருஷ்ணருக்குக் கொடுக்கலாமா என் கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கிருஷ்ணரின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுத்தான். ஆகவே அவனுக்கு சிறிய கத்தி என்றாள்.

திரௌபதி எப்படி உங்கள் விரோதியானாள் என்று கேட்டார் கிருஷ்ணர். அஸ்தினாபுரத்தில் இருக்கும் திரௌபதிக்கு துவாரகையில் இருக்கும் கிருஷ்ணர் வாரி வாரிப் புடவைகளை அருளினானே புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால் புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கிருஷ்ணருக்கு கை எவ்வளவு வலித்திருக்கும் கிருஷ்ணரின் கைகளை வலிக்கச் செய்த திரோபதியை சும்மா விடுவேனா அவளுக்கு நடுத்தர அளவுள்ள கத்தி என்றாள்.

அர்ஜூனன் கிருஷ்ணரின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே அவன் மேல் ஏன் விரோதம் என்று கேட்டார் கிருஷ்ணர். அர்ஜூனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா. குதிரைகளின் கயிற்றை இழுத்து இழுத்துக் கிருஷ்ணர் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும் தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாதாரண வேலை இல்லை. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம் என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ஜூனன். அன்று அவனை பார்த்துக் கொள்கிறேன் அவனுக்கு பெரிய கத்தி என்றாள்.

அர்ஜூனன் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தார் கிருஷ்ணர். குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கிருஷ்ணர்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள். திரௌபதிக்கு புடவை கொடுத்ததில் கிருஷ்ணர் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே சுயநலமே ஆனாலும் மானம் காக்க வேண்டியதால் திரௌபதியையும் மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை இரண்டாவது கத்தியையும் வீசிவிட்டாள்.

போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜூனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும் என்றாள் பிங்கலை. சுயநலம் பிடித்த அர்ஜூனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்றான் கிருஷ்ணர். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கிருஷ்ணர் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னார் அர்ஜூனன் கிருஷ்ணர் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான் அர்ஜூனனை நீங்கள் கொன்றுவிட்டால் உற்ற நண்பனை இழந்து கிருஷ்ணர் வருந்துவானே. கிருஷ்ணர் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா என்று கேட்டார் கிருஷ்ணர். நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கிருஷ்ணர் உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன் என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். பெண் வேடத்திலிருந்த அர்ஜூனன் மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

சதாசிவ பிரம்மேந்திரர்

ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர் இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால் சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும் அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட குருவானவர் அவரை அழைத்து ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அதுவே வேத வாக்காக குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

சுமார் நூறாண்டு காலம் அவர் ஒருநாள் வழக்கம் போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள் ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார். முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக எதிலும் லட்சியமே இல்லாதவர் போல் நடந்து செல்கிறாரே என்ன ஆணவம் ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும் சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை.

இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை. ராணிகள் நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று அரசரிடம் வேண்டினார்கள். உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில் அரசரும் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்து செல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை. துண்டுபட்ட வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம் என்ன வேண்டும் என்று கேட்டார் பிரம்மேந்திரர். அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர் தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது. .

சுவாமி ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார் மன்னர். எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது. இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு ஒரு சாமியார் இருந்தாரே ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போது சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள் புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில் தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். உற்சவமூர்த்தி. திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர். புதுக்கோட்டை மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி 1753-ம் ஆண்டு சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தது.

அன்னதானம் பெற்ற உணவை சாப்பிடும் முறை

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். தன் உடலை விட்டுவிட வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம் அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற யுதிஷ்டிரர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிஷ்மரிடம் சென்றார். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி பிதாமகரே தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் யுதிஷ்டிரர். உடனே திரௌபதி பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் நெடியை உணர்ந்த யுதிஷ்டிரர் நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் இது தகாத செயல் என்று கடுமையாகக் கேட்டார்.

துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர் அந்தச் சபையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது என்று கூறினாள். யுதிஷ்டிரர் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார். திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும் உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள். ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னமிட்டால் அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் திரௌபதியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன். ஆனால் இப்போது அர்ஜூனன் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன். என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

குறிப்பு: முற்காலத்தில் இந்த காரணத்தை ஒட்டியே விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் மற்றவர்களிடம் பெற்ற உணவை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்டார்கள்.

குரு

மகான் ஒருவரிடம் வந்த பக்தர் ஒருவர் அவரிடம் குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா குருவின் வழிகாட்டல் அவசியம் தேவையா என்று கேட்டான். அதற்கு அந்த மகான் அவனிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும் பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது. அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார்.

இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல் அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள் ஒரு நல்ல குருவின் அருளும் வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார். உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.

சகுனியை பெருமைபடுத்திய கிருஷ்ணர்

குருசேத்திரப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர் தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர். யாகம் தொடங்கலாமே சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்றா எனக் கேட்டார் கிருஷ்ணர். ஆயிற்று கண்ணா முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம் என்றான் அர்ஜுனன். யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில் கேட்டார் கிருஷ்ணர். குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான் என்றார் யுதிஷ்டிரன். வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான் அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது. என்னாயிற்று கண்ணா உனக்கு முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே என்றார் கிருஷ்ணர் அமைதியாக. பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா கேட்டான் அர்ஜுனன். அர்ஜுனா வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து எத்தனை தடைவந்தாலும் தகர்த்து தன் லட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் லட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர்கள் தோற்கவில்லை. ஆனால் எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் லட்சியமும் வெல்லவில்லையே என கேட்டான் யுதிஷ்டிரன். போரில் உடன்பிறந்தவர் உற்றார் உறவினர் பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது. உங்கள் வாரிசுகளை அழித்த பின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள் கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள். அப்படிப் பார்த்தால் சகுனியின் லட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே என அர்ஜுனன் கேட்க சிரித்தார் கிருஷ்ணர். அர்ஜுனா எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய் என்றார் கிருஷ்ணர்.

கெளரவர்களை அழிப்பதே சகுனியின் லட்சியமா ஏன் கிருஷ்ணா என்று அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார். கெளரவர்களை மட்டும் அல்ல உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம் இலட்சியம் எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால் கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி என்றார் கிருஷ்ணர். பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன். பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான் என்றார் கிருஷ்ணர். சகுனி துரோகி நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே என்றார் திருதராஷ்டிரன். இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான் உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால் திரௌபதியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால் தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி உங்கள் எல்லோரையும் விட நல்லவனே என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணா எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான் தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன சொல் கிருஷ்ணா என கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன். அது எனக்கும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா முடியாதா கேட்டார் கிருஷ்ணர். கோபப் படாதே கிருஷ்ணா யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே என்றார் யுதிஷ்டிரர் அமைதியாக. யுதிஷ்டிர வீரனாக நல்லவனாக ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் என்பதை அறிவாயா தப்பிப் பிழைத்தவன் சகுனி தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் லட்சியம் வெல்வதற்காக இதில் என்ன தவறு போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களாகும் போது அவன் கொண்ட லட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே என்றார் கிருஷ்ணர்.

திரௌபதியை துகிலுரிக்க வைத்தது சகுனி செய்த தர்மமா என கேட்டான் பீமன். பீமா யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன் எங்களுக்கு பதிலாக கிருஷ்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால் அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே. திரௌபதியின் அவமானம் சகுனியால் திட்டமிடப்பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யுதிஷ்டிரனும் துரியோதனனும் தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான் பழிகாரன் அல்ல கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன். கிருஷ்ணா பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும் என்றான் சகாதேவன் அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார் அவரைப் பின் தொடர்ந்தான் சகாதேவன்.

கிருஷ்ணா சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன் என்றான் பணிவுடன். சகாதேவா காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது கவலை வேண்டாம். அது மட்டுமின்றி இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே. என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன் அவன். உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. அவனை என் பக்தனாக அவன் விரும்பாவிடினும் அவனை நான் ஏற்றுக் கொண்டதனால் யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன். என்னை விரும்பி நினைப்பதோ விரும்பாமல் நினைப்பதோ என்னை நினைப்பது மட்டுமே முக்கியம். ஒருவனை நான் ஆட்கொள்ள அதுபோதும் என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்.

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில்

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில் சேஷமலை அமைந்துள்ளது. கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே கருடனின் வெள்ளித்தூண் உள்ளது. அந்தத் தூணில் கருடன் பொறிக்கப்பட்டுள்ளார். முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இத்தலம் குக்ஷி என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் குக்கி சுப்ரமண்யா என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகாரத்தின் ஈசான மூலையில் உள்ளார். கந்தபுராணத்தில் தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் குமாரதாரா நதி ஓடுகிறது. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின் தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.

புராணக்கதைப்படி தாருகாசூரன் சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்ற பின்பு சுப்ரமணியசுவாமி வினாயகருடன் இக்குமாரமலையில் தங்கினார். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்ரமணியசுவாமியை வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை சுப்ரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற சுப்ர மணியசுவாமி தேவசேனாவை மணந்தார். இத்தேவ திருமணம் குமாரமலையில் நடந்தது. பிரம்மா விஷ்ணு சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துகள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனாவுடன் சுப்ரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

காசியப முனிவரின் மனைவியரான கத்ரு வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில் யாருடைய கருத்து சரியானதோ அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில் கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும் அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன் நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள் வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின. சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான் என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது. சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன் குக்குட த்வஜ கந்தஸ்வாமி என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில் சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் பல யுகம் கண்ட கோயிலாகும்.

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் மங்களுரிலிருந்து 105 கி.மீ. தூரத்திலும் பெங்களூரிலிருந்து 317 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பெங்களூர் – மங்களூர் ரயில்வண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் குக்கே சுப்ரமணியசுவாமி கோயிலை அடையலாம்.