ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி 10

ராமர் வந்திருந்த ராட்சச பெண்ணை பார்த்து நீ யார்? உனது பெயர் என்ன? உன்னைப்பார்த்தால் ராட்சச பெண் போல் தெரிகிறது. இங்கு எதற்கு வந்திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு ராட்சச பெண் ராவணனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா? ராவணனின் சகோதரி நான். எனது பெயர் சூர்ப்பனகை. விச்ரவஸினுடைய மகனும் ராட்சசர்களின் அரசன் ராவணன் அவனின் சகோதர்களான விபீஷணனும் கும்பகர்ணனும் மகா பலசாலிகள். தவிர இக்காட்டின் அரசனான கரணும் தூஷணனும் என் சகோதரர்கள் ஆவார்கள். இவர்களின் அதிகார பலம் மிகவும் பெரியது. நினைக்கும் எதையும் செய்யும் பலமும் அதிகாரமும் பெற்றவர்கள். ஆனால் நான் அவர்களுக்கு கட்டுப்பட்டவள் அல்ல. என் விருப்ப்படி தான் எதையும் செய்வேன். இந்த வனத்தில் என்னைக் கண்டால் அனைவரும் பயப்படுவார்கள். உன்னைக் கண்டதும் உன் மேல் நான் காதல் கொண்டுவிட்டேன். இனி நீ தான் என் கணவன். இந்த பூச்சியை போலிருக்கும் இந்த பெண்ணை கட்டிக்கொண்டு ஏன் அலைகிறாய். இக்காட்டில் உனக்கு தகுந்த மனைவி நான் தான். என்னுடன் வந்து மகிழ்ச்சியாய் இரு. என் உருவத்தை பார்த்து பயப்படாதே. எனக்கு உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி உண்டு. உனக்கு பிடித்தாற் போல் அழகாக என் உருவத்தை மாற்றிக்கொள்கிறேன். நீயும் நானும் வாழ்வதற்கு உனது தம்பியும் உனது மனைவியும் தடையாய் இருந்தால் இப்போதே அவர்களை தின்று முடித்து விடுகின்றேன். எதற்கும் யோசிக்காதே உடனே என்னுடன் வந்துவிடு என்றாள் சூர்ப்பனகை.

ராமர் சூர்ப்பனகை பேசிய அனைத்தையும் கேட்டு சிரித்துவிட்டு லட்சுமணனுடன் விளையாட எண்ணம் கொண்டார். அரக்கியே எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இவள் எனது மனைவி என்னுடனேயே இருக்கிறாள். என்னை ஆசைப்பட்டு நீ அடைந்தால் இரண்டாவது மனைவியாவாய். உனக்கு துன்பம் மிகவும் வரும். இரண்டு மனைவிகள் இருவருக்குமே தொந்தரவு வரும். எனது தம்பியை என்னை போலவே அழகிலும் வலிமையிலும் பலசாலி. இன்னும் திருமணம் ஆகாமல் தனியாக இருக்கின்றான். உனக்கு தகுந்த கணவனாக இருப்பான் அவனிடம் சென்று கேட்டுப்பார் என்றார்.

ராமர் சொன்னபடி சூர்ப்பனகையும் லட்சுமனணிடம் தனது ஆசையை தெரிவித்தாள். தனது அண்ணன் தன்னுடன் விளையாடுவதை அறிந்த லட்சுமணன் தானும் விளையாட்டில் சேர்ந்து கொண்டான். சூர்ப்பனகையிடம் பைத்தியக்காரி நீ ஏமாந்து போகாதே. நான் எனது அண்ணனுக்கு அடிமையாக இருந்து பணி செய்து கொண்டிருக்கின்றேன். நீ என்னை திருமணம் செய்தால் நீயும் என்னுடன் அடிமையாக இருந்து பணி செய்ய வேண்டும். நீயோ ராஜகுமாரி என்னைப்போன்ற அடிமையுடன் சேர்ந்து நீ வாழலாமா? அண்ணன் மனைவியை பற்றி கவலைப்படாதே. எனது அண்ணனை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியாக மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்றான். சூர்ப்பனகை மீண்டும் ராமரிடம் வந்தாள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 9

பஞ்சவடியின் அழகைக் கண்ட மூவரும் மெய்சிலிர்த்தார்கள். ராமர் லட்சுமணனிடம் தங்குவதற்கு சரியான இடத்தில் குடிலை அமைக்க வேண்டும் என்று சொன்னார். அதன்படியே லட்சுமணனும் குடிலைக் கட்டுவதற்கு சிறப்பான இடத்தை தேர்வு செய்து குடில் அமைப்பதற்குத் தேவையான பொருட்களைக் காட்டிற்குள் தேடி எடுத்து வந்து குடிலைக் கட்டி முடித்தான். குடிலின் அழகைப் பார்த்த ராமர் இவ்வளவு அழகான குடிலை அமைத்த நீ எனக்கு நமது தந்தையைப் போல தெரிகிறாய் என்று கூறி ஆனந்தக் கண்ணீருடன் லட்சுமணனைக் கட்டி அனைத்தார்.

பஞ்சவடியில் சில காலம் சென்ற பிறகு பனிக்காலம் ஆரம்பித்தது. மூவரும் நதிக்கரையை நோக்கிச் சூரிய நமஸ்காரம் செய்வதற்கும் தண்ணீர் எடுத்து வருவதற்கும் சென்றார்கள். அப்போது ராமருக்கு பரதனைப் பற்றிய நினைவு வந்தது. ராமர் லட்சுமணனிடம் நாம் இந்தக் காட்டில் குளிரில் வாழ்வது போலவே பரதனும் அனுபவிக்க வேண்டிய சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு நம்மைப் போலவே தரையில் உறங்கி விரத வாழ்க்கையை வாழ்கின்றான் என்று கூறினார். அதைக் கேட்ட லட்சுமணன் ராமரிடம் பரதனின் குணங்களைப் பார்த்தால் நமது தந்தையாரின் குணங்களைப் போலவே இருக்கின்றது. மக்கள் தாயைப் போலவே மகன் இருப்பான் என்று சொல்வார்கள் ஆனால் பரதன் விஷயத்தில் தவறாக இருக்கின்றது. குரூரம் குணம் கொண்ட கைகேயிக்கு பரதன் எப்படிப் பிறந்தான் என்று கூறி வியந்தான். ராமர் லட்சுமணனிடம் கைகேயியைப் பற்றி குறை கூற வேண்டாம். பரதனைப் பற்றி நீ கூறிய அனைத்தும் உண்மையே எனக்கு பரதனின் ஞாபகமாகவே இருக்கிறது அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. எப்போது நாம் நால்வரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவோம் என்று காத்திருக்கிறேன். நாம் நால்வரும் ஏற்கனவே ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடியதில் பரதனின் அமிர்தம் போன்ற பேச்சு இன்னமும் என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றார்.

நதிக்கரையில் பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்துவிட்டு தெய்வீக ஒளிவீச மூவரும் குடிலுக்குத் திரும்பி வந்தார்கள். குடிலில் மூவரும் இதிகாச கதைகளைச் சொல்லி உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராமரின் முகம் பூரண சந்திரனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அந்த நேரத்தில் ராட்சசப் பெண் ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். தேவர்களைப் போன்ற அழகுடன் ஒருவர் இருக்கிறாரே என்று வியந்து ராமரின் மேல் மோகம் கொண்டு பேச ஆரம்பித்தாள். தவசிகளைப் போல உடை தரித்துக் கொண்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு வில்லும் அம்புமாக ராட்சசர்கள் வாழும் காட்டிற்குள் நீ எதற்காக வந்திருக்கிறாய்? யார் நீ? உண்மையைச் சொல் என்று கூறினாள். தசரத மகாராஜாவின் மூத்த குமாரன் நான். என்னை ராமன் என்று அழைப்பார்கள். அருகில் இருப்பது என் தம்பி லட்சுமணன். எனது மனைவியின் பெயர் சீதை. என் தாய் தந்தையரின் உத்தரவின் படி தர்மத்தைக் காப்பாற்ற இந்தக் காட்டில் வனவாசம் செய்ய வந்திருக்கின்றேன் என்று கூறினார்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 8

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அகத்தியர் சொன்ன வழியை பின்பற்றி பஞ்சவடி இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். பஞ்சவடிக்கு அருகில் செல்லும் போது பெரிய கழுகைக் கண்டார்கள். அதன் வடிவத்தைக் கண்டு அது ராட்சசனாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஆயுங்களை எடுத்தார் ராமர். மூவரையும் பார்த்த கழுகு வந்திருப்பவர்கள் தசரதரின் சாயலாகத் தெரிகிறதே என்று எண்ணி யார் நீங்கள் என்று கேள்வி கேட்டது. அதற்கு ராமர் நாங்கள் அயோத்தி ராஜகுமாரர்கள். எங்கள் தந்தை பெயர் தசரதர். நாங்கள் அகத்தியரின் வழிகாட்டுதலின் பெயரில் பஞ்சவடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். கழுகு வடிவத்தில் இருக்கும் நீ யார் என்றார். அதற்கு கழுகு கருட பகவானுடைய தம்பி அருணனின் மகன் நான். எனது பெயர் ஜடாயு. எனக்கு சம்பாதி என்ற தம்பி இருக்கின்றான். நான் உங்கள் தந்தை தசரதரின் நெருங்கிய நண்பர் என்றது ஜடாயு. தனது தந்தையின் நண்பர் என்ற சொல்லை கேட்ட ராமர் காட்டில் மிகப்பெரிய துணையாக ஜடாயு இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைந்து ஜடாயுவை கட்டி அணைத்தார்.

ஜடாயு ராமரிடம் எனது நண்பர் தசரச மன்னர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தது. சத்திய நெறியை விட்டு தவறக்கூடாது என்கின்ற உறுதியில் மிகவும் துன்பத்தின் உச்சியில் எனது தந்தை சொர்க்கம் சென்று விட்டார் என்று வருத்ததுடன் கூறினார் ராமர். இதனைக் கேட்ட ஜடாயு கண்களில் நீர் வழிய துயரப்பட்டு ராமரின் அருகில் அமர்ந்தது. தசரதர் உடலாகவும் நான் உயிராகவும் இருந்தோம். யமன் என் உயிரை விட்டுவிட்டு தசரதரின் உயிரை எப்படி கொண்டு சென்றான்? என்று ராமர் தந்தை இழந்த துயரத்தை மறுபடியும் ஞாபகமூட்டும்படி பேச ஆரம்பித்தது ஜடாயு. உங்களை எனது தந்தையின் உருவில் உங்களை காண்கின்றோம் என்று ராம லட்சுமணர்கள் இருவரும் ஜடாயுவுக்கு மரியாதை செலுத்தினார்கள். தசரதர் மேலுலகம் சென்றதும் நீங்கள் அயோத்தையை ஆட்சி செய்யாமல் இங்கு என் தபஸ்விகளை போல் உடை அணிந்து கொண்டு இக்காட்டில் வந்து கொண்டிருக்கின்றீர்கள் யார் உங்களை அயோத்தியில் இருந்து காட்டிற்கு துரத்தியது சொல்லுங்கள் அவனை இப்போதே ஒழித்து தள்ளுகிறேன் என்றது ஜடாயு.

லட்சுமணன் நடந்த அனைத்தையும் விவரமாக சொன்னான். அனைத்தையும் கேட்ட ஜடாயு தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற இத்தனை வருடங்கள் காட்டில் தபஸ்விகளை போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ராமா உன்னை சத்தியத்தின் உருவமாக காண்கின்றேன் என்று சொல்லிய ஜடாயு சீதையை பார்த்து யார் இந்த பெண் என்றது. இவள் ஜனகரின் மகள் பெயர் சீதை எனது மனைவி என்றார் ராமர். மகிழ்ந்த ஜடாயு பஞ்சவடியில் தங்கியிருக்கும் நீங்களும் லட்சுமணனும் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும் போது நான் சீதைக்கு துணையாக இருப்பேன் என்றது. ஜடாயுவிடம் விடைபெற்று மூவரும் அங்கிருந்து கிளம்பி பஞ்சவடி வந்து சேர்ந்தார்கள்.

வார்த்தைகள்

மகான் ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். அக்கிராமத்தில் ஒருவர் பலநாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க மகான் அவர் வீட்டிற்கு வந்தார். மகான் வந்ததை அறிந்த நோயாளியின் நண்பர்களும் உறவினர்களும் அவரது வீட்டிற்கு வந்தனர். வாடிய உடலோடும் மனமும் சோர்வுற்ற நிலையிலும் இருந்தார் நோயாளி. இதைப் பார்த்த மகான் நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும் உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். இறைவனின் அருளால் நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்று மகான் ஆசிர்வதித்தார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் அவரை எப்படி குணப்படுத்தும் வெறும் வார்த்தைகள் மாற்றத்தை ஏற்படுத்துமா? என கூறி சிரித்தான். அதற்கு அந்த மகான் இந்த கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள் மூடன் மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார். இதைக் கேட்டதும் அவன் நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்று அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த மகான் முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே. அவை உங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி உங்களை கோபம் கொண்டவராக மாற்றி விட்டது. இந்த சொற்கள் உங்களை எப்படி தூண்டி கோபம் கொள்ள வைக்கிறதோ அதேபோல் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்த நல்ல சொற்களால் இவரின் உடலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார். கோபம் கொண்ட நாத்திகன் மகானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 7

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அகத்தியரின் தம்பி இத்மவாஹர் ஆசிரமத்திற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு அகத்தியரின் ஆசிரமம் நோக்கி சென்றார்கள். தூரத்தில் மிருகங்களும் பறவைகளும் விளையாடிக்கொண்டும் நடுவில் முனிவர்கள் சிலர் பூஜைக்காக மலர்களை சேகரித்துக் கொண்டும் இருப்பதை பார்த்தார்கள். அகத்தியரின் ஆசிரமத்திற்கு அருகில் வந்துவிட்டோம் என்பதை உணர்ந்த ராமர் லட்சுமணனிடம் முதலில் நீ மட்டும் சென்று அகத்தியரிடம் உள்ளே வருவதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டு வா என்றார். லட்சுமணன் மட்டும் தனியாக ஆசிரமத்தின் அருகில் சென்று அங்கிருந்த அகத்தியரின் சீடர் ஒருவரிடம் தசரதரின் புதல்வர்கள் ராமர் லட்சுமணன் இருவரும் ஜனகரின் மகள் சீதையும் அகத்தியரை பார்த்து ஆசி பெற காத்திருக்கின்றார்கள் வரலாமா என்று கேட்டு செய்தி சொல்லி அனுப்பினான். சீடரும் அகத்தியரிடம் லட்சுமணன் சொன்னதை அப்படியே சொன்னார். இதனை கேட்ட அகத்தியர் வெகுகாலமாக அவர்களின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கின்றேன். நல்ல படியாக உபசரித்து அவர்களை விரைவாக அழைத்துவா அவர்களை பார்க்க ஆவலாக இருக்கின்றேன் என்று சீடரிடம் கூறினார். மூவரும் அகத்தியரை காண சென்றார்கள்.

ராமரை கண்டதும் அகத்தியர் தானே எழுந்து வந்து ராமரை கட்டி அணைத்து வரவேற்றார். நீங்கள் சித்திர கூடம் வந்த போதே எனக்கு தகவல் வந்தது. நீங்கள் எப்படியும் இங்கு வருவீர்கள் என்று தங்களின் வருகைக்காக காத்திருந்தேன். உங்கள் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற காட்டில் இத்தனை வருடங்கள் வனவாசம் இருந்தீர்கள். மீதி இருக்கும் சில வருடங்கள் உங்களின் விரதம் பூர்த்தியாகும் வரை நீங்கள் இங்கேயே தங்கலாம் என்றார் அகத்தியர். அதற்கு ராமர் நான் தண்டகாரண்ய முனிவர்களுக்கு அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்திருக்கின்றேன் எனவே தங்களிடம் ஆசி பெற்றவுடன் தண்டகாரண்யம் செல்ல வேண்டும் என்றார். ராமரின் கூற்றை ஏற்றுக்கொண்ட அகத்தியர் மூவருக்கும் சிறப்பான விருந்தளித்து உபசரித்தார்.

அகத்திய முனிவர் ராமரிடம் தங்கத்தால் செய்யப்பட்டு ரத்தினங்கள் பதிக்கப்பட்ட வில் எடுக்க எடுக்க குறையாத அம்புகள் உள்ள அம்பறாத்தூணி மற்றும் கத்தியை அளித்தார். இந்த ஆயுதங்கள் விஷ்ணுவுக்காக தேவலோகத்து விஸ்வகர்மா செய்திருந்தார். முற்காலத்தில் இந்த ஆயுதங்களை வைத்து விஷ்ணு பலமுறை அசுரர்களை அழித்தார். அதனை இப்போது உன்னிடம் தருகிறேன். இதனை வைத்து ராட்சசர்களை அழிப்பாயாக என்று ஆசி கூறினார். பின்பு ராமரிடம் தற்போது நீங்கள் தங்கியிருக்கும் குடிலுக்கு அருகில் இருக்கும் பஞ்சவடி என்னும் இடத்தில் குடில் அமைத்து மீதி இருக்கும் வனவாச நாட்களை கழியுங்கள் என்று ஆசி கூறினார். ராமரும் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்து கிளம்புவதறகு அனுமதி தருமாறு கேட்டுக்கொண்டார். அகத்தியர் ராம லட்சுமணனிடம் சீதை அரண்மனையில் சுகமாக வாழ்ந்து வந்தவள். காட்டில் கடினங்களுக்கு நடுவில் வசிக்காத ராஜகுமாரி. உங்களுக்காக கடினங்களை பொருட்படுத்தாமல் உங்களுடன் வசித்து வருகிறாள். பஞ்சவடியில் சீதையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு ஆசி கூறி அவர்கள் செல்ல அனுமதி கொடுத்தார். மூவரும் அங்கிருந்து கிளம்பி பஞ்சவடியை நோக்கி பயண்ம் செய்தார்கள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 6

ராமர் சீதையிடம் முனிவர்கள் ரிஷிகள் நேரில் வந்து உதவி கேட்காவிட்டாலும் அவர்களை காப்பாற்றுவது சத்ரிய குலத்தில் பிறந்தவர்களுடைய கடமை. இக்காட்டிற்கு நாம் வந்தவுடன் இங்கிருக்கும் ரிஷிகள் நம்மிடம் முதலில் சொன்னது உங்களை சரண்டைகின்றோம் அபயம் எங்களை ராட்சசர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். நாம் இப்போது தபஸ்விகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தபஸ்வியாக இருப்பவர்களிடம் யார் எதை கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்பது தருமம். எனவே காப்பாற்றுகின்றேன் என்று சொல்லிவிட்டேன். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக நம்மை எதிர்க்காத ராட்சசர்களை அழிப்பதில் தவறு ஒன்றுமில்லை. தபஸ்விகளுக்கான தருமத்திற்கு உட்பட்டு இதனை செய்யலாம். இரண்டாவதாக நாம் தபஸ்வியாக வாழ்ந்தாலும் வில் அம்புடன் ஆயுதம் ஏந்தி நிற்கின்றோம். துன்பப்படும் மக்களை காப்பாற்றுவது அரசனுடைய கடமையாக இருந்தாலும் சத்ரிய குலத்தில் பிறந்தவர்களுடைய பொது கடமை தஞ்சமடைந்தவர்களை காப்பாற்றுவதாகும். அதன்படி ராட்சசர்களை அழிப்பதில் தவறு ஒன்றுமில்லை. சத்ரிய தருமத்திற்கு உட்பட்டு இதனை செய்யலாம். என்னுடைய உயிர் இருக்கும் வரை கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன். இதற்காக உன்னையும் லட்சுமணனையும் கூட தியாகம் செய்ய தயங்க மாட்டேன் என்றார் ராமர். சீதை தனது சந்தேகம் தீர்ந்தது என்றாள்.

தண்டகாரண்ய காட்டில் நிறைய ரிஷிகள் குடில்கள் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மான் கூட்டங்கள், யானை கூட்டங்கள், பறவைகள், அழகிய பூக்களை உடைய செடிகள் தடாகங்கள் என அழகுடன் இருந்தது அந்த இடம். அங்கு ராமரும் லட்சுமணனும் தாங்கள் தங்குவதற்கு குடில் ஒன்று அமைத்துக்கொண்டார்கள். அங்கிருக்கும் ரிஷிகளின் குடிலில் மாதம் ஒரு குடிலுக்கு விருந்தினர்களாக சென்றும் தவ வாழ்க்கையை பத்து ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் கழித்தார்கள்.

அகத்திய முனிவரை சந்தித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்ற எண்ணம் ராமருக்கு வந்தது. சுதீட்சண முனிவரை சந்தித்த ராமர் அகத்திய முனிவரை காண ஆவலாக இருக்கிறது அவரின் இருப்பிடத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். சுதீட்சண முனிவர் நானே உன்னிடம் அகத்திரை சந்தித்து ஆசி பெற்று வா என்று சொல்ல எண்ணியிருந்தேன். நீயே கேட்டுவிட்டாய் மிக்க மகிழ்ச்சி. நாம் இருக்குமிடத்தில் இருந்து தென் திசையில் நான்கு யோசனை தூரத்தில் திப்பிலி மரங்களும் பழங்கள் வகை மரங்களும் நிறைந்த காட்டில் அகத்திய முனிவரின் தம்பி இத்மவாஹர் குடில் இருக்கிறது. அங்கு சென்று ஒர் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் தென் திசையில் ஒர் யோசனை தூரம் பயணித்தால் வரும் காட்டில் அகத்திய முனிவரின் குடில் இருக்கின்றது அங்கு சென்று அவரை சந்திக்கலாம். இன்றே புறப்படுவாய் என்று ராமருக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார் சுதீட்சண முனிவர்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 5

ராமர் சுதீட்சண முனிவரிடம் என் புண்ணியத்தை நானே தவம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது குலதர்மம். தங்களுடைய ஆசிர்வாதத்தால் அவ்வாறே செய்வேன். காட்டிலிருந்து வனவாசம் செய்ய விரும்புகின்றேன். சரபங்கர் முனிவரின் வழிகாட்டுதலின் படி வனத்தில் தங்கி வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தங்களின் ஆலோசனைகள் மூலம் கேட்டுப் பெற வந்தேன் என்றார். சுதீட்சணர் முனிவரின் முகம் மலர்ந்தது. இந்த ஆசிரமத்தையே உனது இருப்பிடமாக வைத்துக்கொள்ளலாம். ரிஷிகள் பலர் இங்கே தபஸ்விகளாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ரிஷிகளின் தவத்திற்கு இடையூராக கொடூரமான விலங்குகள் மிகவும் தொந்தரவு கொடுக்கின்றன. விலங்குகளின் தொந்தரவை தவிர்த்து இங்கு வேறு எந்த குறையும் இல்லை என்று கூறினார். சுதீட்சணர் முனிவர் சொன்ன வார்த்தையின் பொருளை புரிந்து கொண்ட ராமர் தன்னுடைய வில்லின் நாணில் சத்தத்தை எழுப்பி இந்த காட்டில் தொந்தரவு கொடுக்கும் விலங்குளை ஒழிப்பது எனது பணியாக ஏற்றுக்கொள்கிறேன். தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே நாங்களும் தங்கினால் அது தங்களின் தவத்திற்கு இடையூராக இருக்கும். ஆகவே இக்காட்டில் தனியாக குடில் அமைத்து தங்கிக்கொள்ள அனுமதி தாருங்கள் என்று ராமர் கேட்டுக்கொண்டார்.

சுதீட்சணர் முனிவர் ராமரிடம் அருகில் இருக்கும் தண்டகாரணியத்து ரிஷிகள் அனைவரும் தவம் செய்து சித்தி அடைந்தவர்கள். அவர்களை பார்த்து ஆசி பெற்றுக்கொள்ளுங்கள். அங்கு மிக ரம்யமான மலர்களும் தடாகங்களும் பறவைகளும் விலங்குகளும் இருக்கின்றது. அங்கு நீங்கள் தங்குவதற்கு குடில் அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான போது இங்கு வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்று ஆசிர்வதித்தார். சுதீட்சணர் முனிவரை மூவரும் வலம் வந்து வணங்கி அவரிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

சீதை ராமரிடம் தனக்கு ஒரு சந்தேகம் அதனை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டாள். நாதரே நான் தங்களை எதிர்த்து பேசுவதாக தாங்கள் எண்ண வேண்டாம். எனக்கு தோன்றுவதை சொல்கிறேன். எது தருமம் எது கடமை என்று தங்களுக்கு நன்றாக தெரியும். மக்கள் ஆசையினால் மூன்று பெரும் பாவங்களை செய்வார்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். 1. பொய் பேசுவது 2. தனக்கு சொந்தம் இல்லாத பெண்ணை தீண்டுவது 3. நம்மை எதிர்த்து தீங்கு செய்யாதவர்களை துன்புறுத்துவது. இந்த மூன்றில் பொய் என்ற ஒன்று தங்களிடம் இல்லவே இல்லை. மாற்ற பெண்களை மனதளவில் கூட நினைக்க மாட்டீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பொது நான் பயப்படுவது மூன்றாவது விஷயத்தை பற்றியது. காட்டில் இருக்கும் அசுரர்களை கொல்வதாக முனிவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டீர்கள். தீயவர்களை அழிப்பதும் மக்களை காப்பதும் சத்ரிய தருமம் தான். ஆனால் இப்போது நாம் தபஸ்விகளாய் இக்காட்டில் தவம் செய்ய வந்திருக்கின்றோம். தபஸ்விகளாய் இருக்கும் நம்மை எதிர்க்காத ஒருவனை நாம் ஏன் கொல்ல வேண்டும். அரச பதவிகளில் இருப்பவர்களின் கடமை அது. அக்கடமையை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் என்று கேட்டாள் சீதை.

நவகுஞ்சரம்

நவகுஞ்சரம் என்பது இந்தியாவின் காவியமான மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட உயிரினம் ஆகும். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது. சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு நவகுஞ்சரம். நவ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர். ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தான். அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றியது. தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார். பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார். அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது என்பதை உணர்ந்தார் அர்ஜுனன். வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தான். தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.

ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும் அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஒவிய பாணியான படா சித்ரா ஓவியத்தில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது. நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.