ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 111

கேள்வி: பெரம்பலூர் அருகில் உள்ள பிரம்மரிஷி மலையில் 210 சித்தர்கள் வாழ்வதாக சொல்லப்படுவது பற்றி?

மலைகளில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? ஆலயத்தில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? பழனியில் போகர் இருக்கிறாரா? இல்லையா? கோரக்கர் பொய்கை நல்லூரில் இருக்கிறாரா? இல்லையா? இதுபோன்ற விவாதங்கள் காலகாலம் இருந்து கொண்டுதான் இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு சென்று வழிபடக்கூடிய மனித மனதில் பக்தி இருக்கவேண்டுமப்பா. பக்தியோடு ஒருவன் தன் இல்லத்திலிருந்து வழிபட்டாலும் சித்தர்கள் அங்கே வந்து காட்சி தருவார்கள். இதற்காக வனத்திற்கு (காட்டிற்கு) செல்ல வேண்டும் மலைக்கு செல்ல வேண்டும் என்பதல்ல. ஆனால் தேகம் நலமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு மூலிகைகளின் காற்று அவசியம். அதனால்தான் இது போன்ற மலை பிரயாணத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். எனவே நீ கூறிய இடத்தில் மட்டுமல்ல சித்தர்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மனிதன் மனதிலே களங்கமில்லாமல் தூய எண்ணத்தோடு பிராத்தனை செய்தால் சித்தர்களின் அருளாசி கட்டாயம் கிட்டும்.

கேள்வி: மாயன் காலண்டர்படி 2012 இல் அழிவு ஏற்படும் என்ற செய்தி பற்றி

எந்த பாதிப்பும் ஏற்படாதப்பா. இது போன்ற வானியல் நிகழ்வுகள் மனித கண்களுக்குப் புலப்படாமல் அன்றாடம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அண்ட பிரபஞ்சங்கள் இயங்கும் போது அந்த இயக்கத்தின் காரணமாக சில எதிர் விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதற்கும் அழிவற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 110

கேள்வி: ஸ்ரீவித்யா உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் ஸ்ரீசக்ரமகா மேருவின் சிறப்பையும் விளக்குங்கள்

இறைவன் அருளால் இன்னவன் கூறிய பூஜைக்கு மட்டுமல்ல எல்லா வகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம். பூஜைகளே செய்யாவிட்டாலும் போதும் ஒரு மனிதன் ஒழுக்கமாக நேர்மையாக வாழ்ந்தாலே அதுவே ஒரு பூஜைதானப்பா. பூஜை செய்கிறேன் என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதோ தன்னை இடர்படுத்திக் கொள்வதோ அல்ல. எனவே மனோரீதியாக ஒருவன் மனித நேயத்தை வளர்த்துக் கொண்டு மனதை செம்மைபடுத்த மனதை வைராக்யப்படுத்த மனதை வைரம் போல் உறுதிப்படுத்தத்தான் பூஜைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அந்த பூஜையை செய்து அதனால் மனசோர்வு என்றால் அவன் அந்த பூஜையையே செய்யத் தேவையில்லை. எனவே சரியான வழிமுறை என்பதைவிட ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே முக்கியம்.

இந்த ஸ்ரீசக்ர மந்திரங்களை முறையாக உபதேசமாக தக்க மனிதரிடம் பெற்று முறையாக ஒருவன் அந்த பூஜையை செய்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதை நாங்கள் ஒரு பொழுதும் மறுக்கவில்லை. ஆனால் அங்கே வெறும் பூஜை என்ற அளவில் மட்டும் மனித நேயம் புறக்கணிக்கப்பட்டால் அந்த பூஜையால் எந்த பலனும் இராது என்பதை கூறிக்கொள்கிறோம். இந்த பூஜைகள் (ஸ்ரீவித்யா மார்க்க பூஜைகள் – அன்னை ஸ்ரீலலிதாம்பிகையின் தச மகாவித்தை) ஒரு மனிதனின் பல்வேறு பிறவிகளின் பாவங்களைப் போக்கும். போக்குவதோடு குண்டலினி சக்தியையும் மேலே எழுப்பும். முறையாக ஸ்ரீசக்ர உபதேசம் பெற்று தன் வாழ்நாள் முழுவதும் நித்ய ஸ்ரீசக்ர பூஜையை ஒருவன் செய்தால் பரிபூரண தவத்திற்கு சமமப்பா.

கேள்வி: புறசடங்குகள் பற்றி

ஆத்மார்த்தமான பக்திதான் முக்கியம். இயன்ற தர்மங்கள் பிராத்தனைகள் தாம் முக்கியம். பரிகாரங்களை விட மனம் ஒன்றிய பிராத்தனைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 109

கேள்வி: யுத்தம் என்றால் என்ன?

ஒரு மனிதனை அவனுடைய மன எண்ணங்கள் தாறுமாறாக அழைத்துச் செல்கிறது. பஞ்ச புலன்களும் மனதிற்கு கட்டுப்படாமல் விருப்பம் போல் அலைகிறது. ஒரு மனிதன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கருதினால் முதலில் தன்னுடன்தான் யுத்தம் செய்ய வேண்டும். தன்னைத்தான் யுத்தம் செய்து எவன் வெல்கிறானோ அவனுக்குத்தான் பிறரை வெல்லக்கூடிய யோக்யதை வருகிறது. தன்னையே வெல்லமுடியாத ஒருவன் எப்படி பிறரை வெல்ல முடியும்? எனவே மனிதர்கள் செய்கின்ற போர் அல்லது யுத்தம் என்பதெல்லாம் எம் போன்ற ஞானிகளால் ஏற்கப்படக்கூடிய நிலையில் என்றுமே இல்லை. ஆனால் விதி அப்படித்தான் நடக்க வேண்டும் என்றால் அது நடந்துவிட்டுப் போகட்டும் என்று நாங்கள் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருப்போம். அதே சமயம் பகவான் கிருஷ்ண பரமாத்மா யுத்தம் என்று கூறும் பொழுது இந்த யுத்த தர்மத்தை அப்படி வகுத்ததன் காரணம் யுத்தமே செய்யக்கூடாது. செய்யக்கூடிய நிலை வந்தால் எதற்காக செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? அந்த யுத்தத்தில் யார் யார் என்ன விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்? என்றெல்லாம் அவர் போதித்தது உண்மை. ஆனால் யுத்தமே வேண்டாம் என்ற நிலையிலே இதுபோன்ற விதிமுறைகளே தேவையில்லை. அடுத்ததாக யுத்தமே வேண்டாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினாலும் ஆதியிலிருந்தே கூறி வந்திருக்கிறார். அதை யாரும் கேட்பதாக இல்லை. முதலில் பாண்டவர்களே கேட்பதாக இல்லை. எனவே விதி வழி மதி செல்கிறது. அதை இறைவனாலும் தடுக்க முடியாது என்பது போல அங்கே கிருஷ்ண பரமாத்மாவும் எம் போல் பார்வையாரகத்தான் இருந்திருக்கிறார்.

அடுத்ததாக தர்மத்திற்காக யுத்தம் செய்தால் யுத்தமே வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்குகின்ற மனிதரிடம் தேவையில்லாமல் யுத்தம் திணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அதை கர்மயோகமாக ஏற்று அவன் யுத்தம் செய்யும் பட்சத்தில் உடலை விட நேர்ந்தால் அவன் சொர்க்கம் செல்வான் என்பது வெறும் அந்த யுத்த நிகழ்வைப் பொறுத்ததல்ல. வாழ்க்கையின் அடிப்படையையும் சேர்த்துதான். வெறும் யுத்தத்தில் ஒருவன் வீரமரணம் அடைந்தால் வீர சொர்க்கம் அடைவான் என்பதெல்லாம் எதற்காக கூறப்பட்டது தெரியுமா? இல்லையென்றால் போர் என்றால் யாராவது துணிந்து வருவார்களா? தர்மம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்குமப்பா. உனக்கு பிணி வராது என்று கூறுகிறார்களே அதைப் போல் இந்த போரிலே கலந்து கொண்டால் இது நேர்மையான யுத்தம். நம் தேசத்தின் மீது எந்த தவறும் இல்லை. நீ நேர்மையாக யுத்தத்தில் ஈடுபடு. புறமுதுகிட்டு ஓடாதே. யார் வந்தாலும் எதிர்த்து நில். அதை மீறி உன் உயிர் போனால் உனக்கு மேலே சொர்க்கம் காத்திருக்கிறது என்று கூறி யுத்த பயத்தை நீக்குவதற்காக கூறப்பட்ட வாசகங்கள். இவை எங்களால் (சித்தர்களால்) ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாழ்க்கை முழுவதும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு யுத்தத்திலே ஒருவன் வீரமரணம் எய்தினால் அவன் தன் நாட்டிற்காக வீரமரணம் எய்தினாலும் அதற்காக அவனுக்கு இறைவன் சொர்க்கமெல்லாம் தரமாட்டார் இதை நன்றாக புரிந்துகொள்.

அப்படியென்றால் துரியோதனனுக்கு வீர் சொர்க்கம் கிடைத்தது என்பது பற்றி:

ஏற்கனவே கூறியிருக்கிறோம். அனைத்தும் நாடக கதாபாத்திரங்கள். அந்தக் கூத்தில் நடப்பதையெல்லாம் நிஜம் என்று எண்ணக்கூடாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 108

கேள்வி: முன்னோர்கள் கடனை எப்படி கொடுப்பதென்று மீண்டும் எங்களுக்கு நினைவூட்ட வேண்டும்?

இறைவன் கருணையைக் கொண்டு சுருக்கமாக இத்தருணம் கூறுகிறோம். எத்தனையோ விதிமுறைகளும் விளக்கமான முறைகளும் இருக்கிறது. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் எல்லாக் காலங்களிலும் பின்பற்றுவது மிக மிகக் கடினமப்பா. குறைந்தபட்சம் ஒரு தினம் ஒரு ஏழைக்காவது அன்னமிடுதல் வேறு தக்க உதவிகள் செய்தல் அன்றாடம் ஒரு ஆலயம் சென்று வழிபாடு குறிப்பாக பைரவர் வழிபாடு. அந்த நிலையிலே நிறைமதி (பெளர்ணமி) காலம் போன்றவற்றில் ஒரு சிறப்பான வழிபாடு இயன்றவரை தர்ம காரியங்கள் அதோடு மட்டுமல்லாமல் ஆ (பசு) கோட்டம் வைத்து நல்ல முறையிலே பராமரிக்கும் ஆலயங்களிலே ஆவினங்களுக்கு (பசுவினங்களுக்கு) இயன்ற உதவிகள் செய்தல் இங்கே ஆவினம் (பசு இனம்) என்று கூறுவது ஒரு குறிப்பாக. அதற்காக வேறு உயிர்களையெல்லாம் கவனிக்கக் கூடாது என்று பொருள் அல்ல. இறைவன் கருணையைக் கொண்டு இதோடு மட்டுமல்லாமல் வருடம் ஒரு முறையாவது தெய்வத்தீவு எனப்படும் இராமேஸ்வரம் சென்று வழிபாடும் இயன்ற வரையில் அங்கு தற்காலத்தில் 100 க்கு 100 புனிதமான முறையிலே திலயாகம் செய்யப்படாவிட்டாலும் அந்த மண்ணிலே பூஜை செய்வதால் சில நன்மைகள் வரும் என்பதால் யாங்கள் கூறுகிறோம். இயன்றவரை கூடுமானவரை அங்கு ஒரு தில யாகத்தை செய்து வருவதும் ஒரு முறை செய்துவிட்டால் போதும் மீண்டும் செய்ய வேண்டாம் என்ற கருத்தையெல்லாம் விட்டுவிட்டு வாய்ப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ அங்கு எல்லா வகையான யாகங்களோடும் தில யாகத்தை செய்வதும் அப்படியில்லாதவர்கள் அங்கு மூன்று தினங்கள் குறைந்தபட்சம் தங்கி இறை வழிபாடும் இயன்ற தர்ம காரியங்களை செய்வதும் ஏற்புடையதாகும். இவை எதுவுமே செய்ய இயலாதவர்கள் அன்றாடம் ஆலயம் சென்று பைரவரை வணங்குவதும் அதுவும் இயலாதவர்கள் இல்லத்திலே அமைதியாக அமர்ந்து 108 முறை பைரவர் காயத்ரி மந்திரத்தை உருவேற்றுவதும் அதுவும் இயலாதவர்கள் பைரவர் திருவடி போற்றி என்று கூறுவதும் இப்படி ஏதாவது ஒன்றை பின்பற்றினால் நல்ல பலன் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 107

கேள்வி: ஜாகத்தின்படி ஒரு தோஷத்தைக் கொடுத்த இறைவன் அதில் ஏதாவது ஒரு நன்மையையும் வைத்திருப்பாரே? அது குறித்து?

இறைவன் அருளால் நன்றாய் கவனிக்க வேண்டும். இறைவன் யாருக்கும் தோஷத்தையும் பாவத்தையும் கொடுப்பதில்லை. மனிதனின் செயல்தான் அவனுக்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக மாம்பழத்தை உண்டால் வயிற்றுவலி வருவது போல ஒருவன் செய்கின்ற பாவங்கள்தான் தோஷமாக பாவமாக திசா புத்தி அந்தரமா ஏழரையாண்டு சனியாக வருகிறது. இறைவன் இதில் சாட்சியாகத்தான் இருக்கிறார். இருந்தாலும் இந்த கேள்வியின் மறைபொருளாக ஒவ்வொரு பாவ விளைவிற்குப் பின்னால் ஏதாவது ஒரு நன்மை இருக்குமே? என்று இன்னவன் கேட்கிறான் இருக்கிறது. சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும். ஒருவனுக்கு ஏராளமான செல்வம் உயர்ந்த பதவி அழகான தோற்றம் நல்லதொரு உறவு சுகமான வாழ்வு நிலை இருந்தால் அப்படி இருக்கக்கூடிய எத்தனை மனிதர்கள் இறைவனை நோக்கி வருவார்கள்? நாடியை நோக்கி வருவார்கள். அதிகமாக தாகம் எடுப்பவர்கள் நீர்நிலையை நாடுகிறார்கள். அதிகமாக பசி உணர்வு வந்தால் உணவைத் தேடுகிற நிலை வந்து விடுகிறது. அதிகமாக துன்பப்படுகின்றவர்கள் கட்டாயம் ஏதாவது ஒரு நிலையிலே இறைவனை வெறுத்தாலும்கூட இறை வழிபாட்டை நோக்கி தள்ளப்படுகிறார்கள். எனவே துன்பங்களில் ஒரு மனிதன் பெறக்கூடிய மிகப்பெரிய பாக்கியம் இறை பக்தி வளர்வதுதான். ஒரு வகையில் மனிதனுக்கு வரக்கூடிய இன்பத்தைவிட துன்பம்தான் அவனை இறைவனை நோக்கி தள்ளுகிறது என்பதால் இறை பக்தி வளர்வதற்கு தர்மம் வளர்வதற்கு தன்முனைப்பு குறைவதற்கு கர்வம் குறைவதற்கு கட்டாயம் ஒரு மனிதனுக்கு அவன் ஜாதகத்தில் உள்ள தோஷம் மறைமுகமாக உதவி செய்கிறது.

கேள்வி : கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் வெளிபிரகாரத்தில் தாங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது குறித்து:

இறைவன் அருளால் அங்கு மட்டும் என்று நாங்கள் இல்லையப்பா. எங்கெல்லாம் உள்ளன்போடு நினைக்கிறார்களோ அங்கெல்லாம் நாங்களும் ஏனைய மகான்களும் இருக்கிறோம்.

சுலோகம் -74

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #27

இதன்படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம். இறந்தவனுக்கு பிறப்பு நிச்சயம். இந்த நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது ஆகும் இதற்காக நீ வருந்துதல் தகாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மண்ணை வைத்து பானை செய்து உபயோகப்படுத்தலாம். பானை உடைந்தால் மீண்டும் அது மண்ணோடு மண் ஆகிறது. அந்த மண்ணில் மீண்டும் புதிய பானை செய்யலாம். அது போல் இறப்பு பிறப்பு என்பது எப்போதும் இருக்கும் ஒரு பொருளின் நிலை மாறுபாடே ஆகும். இந்த உலகத்தில் பிறந்தவைகள் அனைத்தும் இறப்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். அதே போன்று இறந்தவைகள் அனைத்தும் மீண்டும் பிறப்பது உறுதி. இறப்பு பிறப்பு என்ற சுழற்சி தவிர்க்க முடியாதது இது இயற்கையாகும். ஆகவே அர்ஜூனா நீ வருத்தப்படாதே என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 106

கேள்வி: புற்று நோய் எதனால் வருகிறது? இதற்கு சித்த மருவத்தில் தீர்வு இருக்கிறதா?

இறைவன் அருளால் இது குறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம். பாவத்தின் தன்மை இதுதான். இதனால்தான் இந்த நோய் வருகிறது. இந்த துன்பம் வருகிறது என்று கூற இயலாது. ஒட்டு மொத்த பாவங்களின் விளைவுதான் கடுமையான நோய் கடுமையான பிணி. இருந்தாலும் பிறவி தோறும் புற்று மனிதன் மீது பற்று வைக்கிறது என்றால் அந்த அளவிற்கு அவன் பாவம் தொடர்கிறது என்பது பொருளாகும். புற்று மட்டுமல்ல எல்லா வகையான நோய்களுக்கும் மனித ரீதியான காரணங்கள் வேறு. மகான்கள் ரீதியான காரணங்கள் வேறு. வெளிப்படையாக ஒரு கிருமியால் அல்லது வெள்ளை அணுக்கள் அளவிற்கு அதிகமாக உற்பத்தியாவதால் இந்த நோய் வருவதாகக் கூறினாலும் கூட இந்த பல்வேறு பிறவிகள் பிறந்து பல்வேறு மனிதர்களின் குடும்பத்தை நிர்கதியாக்கி நிர்மலமாக்கி பல குடும்பங்களை வாழவிடாமல் அவர்களை மிகவும் இடர்படுத்தி பல மனிதர்களின் வயிற்றெரிச்சலை யார் ஒருவன் வாங்கிக் கொள்கிறானோ அவனுக்கு புற்று (நோய்) பிறவி தோறும் பற்று வைக்கும். இதற்கு மட்டுமல்ல எல்லா பிணிகளுக்கும் மருந்து இருக்கிறதப்பா கொல்லி மலையிலும் சதுரகிரி மலையிலும். ஆனால் புண்ணியமும் இறைவன் அருளும் இருப்பவனுக்கு மட்டும்தான் அந்த மருந்து கிடைக்கும். அந்த மருந்து கிடைத்தாலும் அவனுக்கு நல்லதொரு வேலையை செய்யும். இருந்தாலும்கூட பிராத்தனை எந்தளவிற்கு ஒரு மனிதன் மனம் நெகிழ்ந்து செய்கிறானோ அந்தளவிற்கு நலம் நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 105

கேள்வி: போக மகரிஷி அறிந்த ரகசியங்களில் ஒரு சிறிதேனும் அன்பர்கள் அறிந்து கொள்ள உபாயம் அருளுங்கள்

இறை அனுமதித்தால் தக்க காலத்தில் கூறுவோம். அதற்குள் அவரவர்கள் பிரச்சனைகளுக்கு அவரவர்களே அறிந்து கொள்ள பழனியம்பதிக்கு சென்று முருகப் பெருமானையும் போகனையும் வணங்கிவிட்டு அவரவர் இல்லத்திலே போகரின் உருவத்தை வைத்து முருகப் பெருமானின் உருவத்தை வைத்து அன்றாடம் பூஜித்து வணங்குவதும் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து அதிகாலையிலே போகனை நினைத்து நினைத்து நினைத்து துதி செய்தால் அவன் உள்ளிருந்து பலவற்றைக் காட்டித் தருவான். இன்னென்ன பிணிக்கு இன்னென்ன செய்தால் நன்மை உண்டு. உன் பிணிக்கு இதை செய்தால் போதும் என்று உள் உணர்வாகவே உணர்த்தி வழிகாட்டுவான்.

கேள்வி: எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் வேலைக்கு சென்று விட்டால் வீட்டுப் பணிகள் என்ன ஆவது?

இறைவன் அருளால் அப்படியெல்லாம் நீ கலக்கம் கொண்டிட வேண்டாமப்பா. ஏனென்றால் எல்லோரும் படித்து வேலைக்கு சென்று விடலாம் என்கிற நிலை வந்தாலும்கூட அப்பொழுதும் கலைமகள் (அன்னை சரஸ்வதிதேவி) அருள் கிட்டாமல் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு பணி வேண்டாமா? அவர்களெல்லாம் வீட்டுப் பணிகளை ஏற்க முன்வருவார்கள். இல்லப் பணிகளை என்னதான் பிறரை வைத்து செய்தாலும் கூட எத்தனைதான் வெளியில் சென்று பணியாற்றினாலும் கூட ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து செய்வதுதான் சிறப்பிலும் சிறப்பைத் தரும். நல்ல ஆக்கப்பூர்வமான அதிர்வெண்களைத் தரும்.

சுலோகம் -73

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #26

ஆத்மா பிறக்கிறது ஆத்மா இறக்கிறது என்று நினைக்காதே அப்படி நினைத்தால் வலிமையுடைய தோள்களை உடையவனே அதனை நினைத்து நீ வருத்தப்படாதே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உடல் பிறக்கும் போது அதனுடன் புதிதாக ஆத்மாவும் பிறக்கிறது என்று எண்ணினால் அந்த உடல் அழியும் போது ஆத்மாவும் அழிகிறது என்று நினைக்க வேண்டியது வரும். உடல் தான் பிறக்கிறதே தவிர ஆத்மா எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கின்றது அதனால் அது புதிதாக உடலுடன் பிறப்பதில்லை. ஏற்கனவே இறைவனை விட்டுப் பிரிந்து வந்த ஆன்மாவனது புதிதாகக் கிடைத்த உடலுக்குள் புகுகின்றது அவ்வளவே. அதுபோலவே உடல் அழிந்த பிறகும் ஆன்மா அழிவதில்லை அது உடலை விட்டுப் பிரிந்து அடுத்த உடலுக்காக காத்திருக்கின்றது. எனவே ஆன்மா பிறக்கிறது இறக்கிறது என்று தவறாக நீ நினைத்தாலும் அதைப் பற்றி நீ வருத்தப்படத் தேவையில்லை. காரணம் இந்த உடலுக்கு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே உடலுக்கு பிறப்பு இறப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 104

கேள்வி: வால்மீகி இராமாயணத்தில் ராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இடைசெருகலா?

மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா? (பதில் : ஆமாம்). அப்படியென்றால் மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா? மான்கள் முயல் இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும் எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள் பொழுது போக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கதான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில்தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும் பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீ ராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா? கட்டாயம் செய்திருக்கமாட்டார். அப்படி விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய அளவில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒரு வேளை அது உண்மை என்றால் அப்பேற்ப்பட்ட ஸ்ரீ ராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா? யோசித்துப் பார்க்க வேண்டும். என்ன காரணம்? பின்னால் மனிதனுக்கு வசதியாக இருக்க வேண்டும். ராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன? என்று பேசுவற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா?

பலம் என்பது உடலில் இல்லை மனதில் இருக்கிறது. சுவாசத்தை எவனொருவன் சரியாக கட்டுப்படுத்தி சிறு வயதிலிருந்து முறையான பிராணாயாமத்தை கடைபிடிக்கிறானோ அவனுக்கு 72000 நாடி நரம்புகள் பலம் பெறும் திடம் பெறும். அவனுடைய சுவாசம் தேவையற்ற அளவிலே வெளியேறாது. நன்றாக புரிந்து கொள். எவனொருவன் வாய் வழியாக சுவாசம் விடுகிறானோ அவனுக்கு தேகத்தில் (உடலில்) அத்தனை வியாதிகளும் வரும்.