திருமந்திரம் சொல்லும் சிவ மணம்

“திருமந்திரம் சொல்லும் சிவ மணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-03-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்

“திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 1-03-2022 சிவராத்திரி அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

தர்மதாரா லிங்கம்

32 பட்டைகளுடன் உள்ள இந்த சிவ லிங்கம் 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த மிகப்பழமையான லிங்கமாகும். இவர் முன்பு அமர்ந்திருக்கும் நந்தி இறைவனை நேராக பார்க்காமல் தனக்கு வலது பக்கமாக சிறிது திருப்பி இருக்கிறார். இவர் காஞ்சிபுரம் ராமநாதர் கோவிலில் இருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 220

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

உலகரீதியாக ஒரு மனிதனின் செயல்பாட்டை பார்ப்பதை விட கர்மரீதியாக பார்க்கும் பொழுது ஒரு அமைதி கிட்டும். நியாயம் நியாயம் இல்லை என்பது அடுத்த நிலை. இந்த நிலையிலே விதி என் மகனை தவறான வழிக்கு அழைத்து செல்கிறது. விதி என் மகனை தவறு செய்ய தூண்டுகிறது என்று நியாயம் கற்பித்து விட்டு அமைதியாக இருந்து விடலாமா? இருந்து விடக்கூடாது. விதி ஒரு மனிதனை இறை வழியில் அழைத்து சென்றால் விட்டுவிடலாம். விதி ஒரு மனிதனை துறவு நிலைக்கு அழைத்துச் சென்றால் விட்டுவிடலாம். விதி ஒரு மனிதனை தர்மம் செய்ய தூண்டினால் விட்டுவிடலாம். ஆனால் விதி ஒரு மனிதனை தவறு செய்ய தூண்டும் பொழுது கூடுமானவரை நேர் வழியில் சாத்வீக வழியில் ஆன்மீக வழியில் அதனை திருத்த மாற்ற முயல வேண்டும். அப்பொழுதும் நன்றாக கவனிக்க வேண்டும். தவறு செய்யும் மனிதனை உலக ரீதியாக தண்டிக்கின்ற முறைகளோ கண்டிக்கின்ற முறைகளோ சித்தர்களுக்கு ஏற்புடையது அல்ல. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பழுது வராத கருவிகள் உலகில் ஏதும் இல்லை. கருவி என்று இருக்குமானால் பழுது என்பது வந்து கொண்டே இருக்கும். மனிதன் ஒருவன் இருக்கும் வரையில் அவனிடம் குறைகளும் குற்றங்களும் இருந்து கொண்டே இருக்கும். எப்படி செம்பை எத்தனை துலக்கி வைத்தாலும் மீண்டும் களங்கம் வந்து விடுகிறதோ மனிதன் தன்னை அன்றாடம் சுத்தி படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அன்றாடம் சுத்திபடுத்த தவறினால் செம்பிலே ஒரு களிம்பு ஏறுவது போல மனிதனிடம் மாசு ஏறிவிடும். எனவே அதிகம் மாசு ஏறிவிட்டால் ஏறிவிட்டால் ஏறிவிட்டால் அதனை தூய்மைபடுத்துவது கடினமாகிவிடும். எனவே அன்றாடம் செம்பை துலக்குவது போல அன்றாடம் ஆடையை தூய்மை செய்வது போல அன்றாடம் மனிதன் தன் மனதை தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தன்னைத்தான் நீதிபதியாக தன்னைத்தான் குற்றவாளியாக வைத்துக் கொண்டு மனிதன் என்றுமே அன்றாடம் செய்கின்ற செயல்களையெல்லாம் சீர்தூக்கி பார்த்து ஒரே தீர்ப்பை அவன் எழுத வேண்டும். நாம் செய்த இந்த செயலை எல்லாம் மற்றவர்கள் செய்தால் நாம் ஏற்றுக் கொள்வோமா? நாம் செய்கின்ற இந்த செயலை நாளை நமது மகன் செய்தால் ஆதரிப்போமா? கட்டாயம் ஆதரிப்போம் அதற்கு வழி வகுப்போம் உதவியும் செய்வோம் என்றால் அந்த செயலை தொடரலாம். தன் மகன் செய்யக் கூடாத செயலை அல்லது செய்ய வேண்டாத ஒரு செயலை கட்டாயம் தகப்பனும் தாயும் செய்யக்கூடாது. இது தான் ஒரே வழி தவறிலிருந்து தப்பிக்க. இப்படி மனதை நன்றாக ஆய்ந்து ஆய்ந்து ஆய்ந்து பார்த்து மனிதன் சோதனை செய்து சோதனை செய்து தன்னை நன்றாக உயர்த்திக் கொள்ள பாடுபட வேண்டும்.

இறைவனின் கருணையால் இதனை யார் கேட்டார்? இந்த போதனைகள் எதற்கு போதனைகள் கேட்டு கேட்டு சலித்து விட்டது எமக்கு. தத்துவார்த்த விளக்கங்கள் கேட்டு கேட்டு புத்தி பேதலித்து விட்டது. இவையெல்லாம் தேவையில்லை. இவைகளை தாண்டி அதிசயங்களை எதிர்பார்க்கிறோம். அதிசயங்களை எதிர்பார்த்து மனித சக்திக்கு மீறிய ஒரு செயல் இக்குடிலில் (அகத்தியர் அருட்குடில் தஞ்சாவூர்) நடந்தால் தான் இறை நம்பிக்கையும் சித்தர்களின் மீது நம்பிக்கையும் பலருக்கு ஏற்படும். அப்படி ஏற்படும் பொழுது அதை எப்பொழுதும் சத்சங்கமாக கூடிப்பேசி புளங்காகிதம் அடையலாம் என்று ஒருவன் இருக்கிறான். இறைவன் அருளால் அதனை நடத்த ஞானியர் நிலையில் எப்பொழுதுமே ஒப்பிதம் இல்லை என்றாலும் அது தப்பிதம் இல்லை என்ற நிலையில் இறை அனுமதிக்கும் தருணம் அப்படி வெளிப்படையாக ஒரு வித்தையை சுருக்கமாக கூற போனால் அது ஒரு வித்தை தான். அந்த வித்தையை காட்டலாம். அது ஒருபுறம் இருக்க அன்றாடம் அதிசயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனை சுற்றியும் மனிதன் விழிப்புணர்வோடு கண்டு அதனை உணரத் தவறினால் அதற்கு சித்தர்களோ மகான்களோ ஞானியர்களொ பொறுப்பில்லை. அன்றாடம் இக்குடிலிலும் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல தூய பக்திமானின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டே இருக்கிறது. அவன் ஆய்ந்து பார்க்கவேண்டும். அதை புரிந்து கொள்ளும் தகுதியை அவனே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சுலோகம் -116

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-69

அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவு போல இருக்கிறதோ அப்போது மன உறுதியுடையவன் விழித்துக் கொண்டிருக்கிறான். போகங்களை அனுபவிக்க பகலில் எப்போது உயிரினங்கள் விழித்திருக்கின்றனவோ அப்போது மன உறுதியுடையவன் அந்த நேரத்தை இரவு நேரமாக எடுத்துக் கொள்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த சுலோகத்தில் இரவு பகல் என்று குறிப்பிடுவது சூரியன் இருக்கும் பகலையும் சூரியன் மறைந்தவுடன் வரும் இருட்டையோ அல்ல. ஐம்புலன்கள் மனிதனை ஆசையின் பக்கம் இழுத்துச் செல்லும் போது அவன் மாயை என்னும் இருட்டில் மயங்கி அதன் பின் செல்கிறான். ஆனால் மன உறுதியுடையவன் மாயை என்னும் இருட்டில் மயங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றான். அனைத்து உயிரினங்களும் தனது கர்மாக்களை அனுபவிக்கும் போது மகிழ்ச்சி வந்தால் மகிழ்ச்சி அடைந்து கொண்டும் துன்பம் வந்தால் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் மன உறுதியுடையவன் மகிழ்ச்சி துன்பம் எது வந்தாலும் இரவு நேரத்தில் தூங்கும் போது அமைதியாக இருப்பது போல் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 219

கேள்வி: உடல் என்ற கருவியை பராமரிப்பது எப்படி ஐயனே?

இறைவன் அருளால் பெற்ற உடலை பராமரிக்க பல மனிதர்களுக்கு தெரியுமப்பா. சில ஆயிரம் விலை கொடுத்து வாங்கிய ஒரு வாகனத்தை இயக்குவதற்கு திரவப் பொருளை நிரப்பாமல் தண்ணீரை விட்டு நிரப்பி ஓட்டு என்றால் யாராவது ஓட்டுவார்களா? அல்லது கல்லையும் மண்ணையும் அள்ளித் தெளித்து ஓட்டு என்றால் யாராவது ஓட்டுவார்களா? ஓட்டமாட்டார்கள். கருவி அந்த வாகனம் வீணாகி விடும் என்கிற அச்சம். ஆனால் இந்த உடலானது உடனடியாக வீணாகவில்லை என்பதால் எதையெல்லாம் உண்ணக் கூடாதோ அதையெல்லாம் உண்ணுவதும் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்வதும் இயல்பான விஷயமாகி விட்டது. பெரும்பாலான மனிதர்கள் உடலை நன்கு பராமரிக்க என்ன உண்ண வேண்டும்? என்பதை விட என்னவெல்லாம் உண்ணக் கூடாது என்று அறிந்து கொண்டால் போதுமப்பா. என்ன செய்ய வேண்டும்? என்பதை விட என்னவெல்லாம் செய்யக் கூடாது? என்பதை அறிந்து கொண்டால் போதுமப்பா.

கேள்வி: ஒருவர் பிறந்த நேரம் சரியாக கணிக்கப் படவில்லையென்றால் லக்னம் போன்ற விஷயங்கள் மாறிவிடும். இதற்கு என்ன செய்வது?

துல்லியமாக கணிக்க முடியாமல் ஜாதகம் தவறாக அமைய வேண்டும் என்ற விதி இருப்பதால்தான் அவ்வாறெல்லாம் நடக்கிறது. இதைப் போன்ற ஜாதக குறைபாடு உள்ளவர்கள் எல்லோருமே நவக்ரக பிராயச்சித்தம் செய்து கொள்வதும் வாய்ப்பு உள்ள பொழுதெல்லாம் நவக்கிரக ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் இல்லத்தில் அமர்ந்து நவக்கிரக அதிதெய்வ மந்திரங்களை உருவேற்றுவதும் கட்டாயம் ஜாதகத்தில் உள்ள குழப்பத்தை நீக்கி வழியைக் காட்டும்.

சுலோகம் -115

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-68

நீண்ட புஜங்கள் உடையவனே எந்த மனிதனுடைய புலன்கள் புலனுக்குரிய போகப் பொருட்களில் இருந்து எல்லா விதங்களிலும் மீட்கப்பட்டு விட்டானோ அவனுடைய புத்தி உறுதியானது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதன் தன்னுடைய பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் ஆகிய ஐந்து புலன்களுக்குரிய போகப் பொருட்களில் இருந்து எல்லா வகைகளில் இருந்தும் ஆசைகளை விட்டு விட வேண்டும். உதாரணமாக கண்ணால் பலவற்றை காணாலாம். ஆனால் எதனைக் கண்டாலும் அதன் மீது பற்று ஆசை மற்றும் எந்த விதமான சலனமும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இது போல் ஐந்து புலன்களினாலும் பற்று ஆசை மற்றும் எந்த விதமான சலனமும் ஏற்படாமல் இருந்தால் அவனுடைய புத்தி உறுதியானது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் விநாயகர்

திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா குமரி மாவட்டத்திலுள்ள தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள அரச மரத்தடியில் இந்த வினாயகரை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தொடங்கும் போது இவரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து கருப்பு நிறத்தை அடைவார். தை மாதம் தொடங்கும் போது மெல்ல மெல்ல வெண்மையாகத் தொடங்கும். தை முதல் ஆனி வரை உள்ள 6 மாதம் வெள்ளை நிறமாகவும் ஆடி முதல் மார்கழி வரை 6 மாதம் கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். விநாயகரின் நிறம் மாறும் போது இவர் அமர்ந்துள்ள அரசமரமும் நிறம் மாறுகிறது. இங்கு ஒரு கிணறும் உள்ளது. இந்த விநாயகர் ஆரம்பத்தில் அரை அடி உயரம் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 218

கேள்வி: சத்சங்கமாக அன்பர்களை அழைத்து வாக்கை அளிக்க வேண்டும். அப்படி இறை அனுமதிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஐயனே?

பலவற்றை செய்யாமல் இருந்தாலே போதுமப்பா. ஒருவனுக்கு ஒருவன் விதி மாறுபடுவது ஒருவனுக்கு ஒருவன் அவன் மதி அதனால் மாறுபடுகிறது. ஒருவனுக்கு ஒருவனின் மதி மாறுபடுவதால் சிந்தனையும் செயலும் மாறுபடுகிறது. இந்த இடத்தில் பொதுவாக நாங்கள்(சித்தர்கள்) ஒன்றை ஒருவனுக்கு கூறினால் அது இன்னொருவனுக்கு பொருந்தாது. நாங்கள் ஆதியிலிருந்து கூறுகின்ற விஷயம் இன்னமும் இங்கு சர்ச்சைக்குறிய விஷயமாகத்தான் இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். சிலரைப் பார்த்து ருணம் (கடன்) பெற்றாவது தர்மம் செய் என்று கூறுகிறோம். இந்த ஒரு கருத்தையே இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அடுத்த நிலைக்கு எவ்வாறு அழைத்து செல்வது?

தொடர்ச்சி கேள்வி: தாங்கள் உணர்த்தலாமல்லவா ஐயனே?

இறைவன் அருளால் யாம் உணர்த்துவதை விட விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரைந்து கேட்கும் பொழுது தராத மனிதனுக்கு இறைவன் கள்வனை (திருடனை) படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும் துயரப்படும் மனிதனைப் பார்த்து அங்கே நல்ல குணத்தை பயன்படுத்த வேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன? தேகம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும்? என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான். இவனுக்கென்ன? இவன் குடும்பத்தில் இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும் உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் செய்யட்டுமே? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு? நாம் ஏன் இதிலே ஈடுபட வேண்டும்? அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். இவனுக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்து விட்டால் அதற்கு நானா பொறுப்பு? நான் எதற்கு அதிலே தலையிட வேண்டும்? என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால் மிக தந்திரமாக சிந்தனை செய்வதில் சாமார்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும் தன் சாமார்த்தியத்தைத்தான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும் பொழுது மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்ல.

அரோகரா

முருகனை வணங்கும் போது அரோகரா என்ற சொல்லுக்கு விளக்கம் என்ன?

அரோகரன் என்பது முருகனின் தூய தமிழ்ப் பெயராகும். அரன் + ஓங்கரன் = அ(ர+ஓ)கரன் = அரோகரன். ஓங்கரனில் இருக்கின்ற “ங்” உச்சரிப்பே நாளடைவில் மழுவி ஓகரன் ஆகிவிட்டது. தமிழ் இலக்கணத்தின்படி ன் எழுத்து இருந்தால் அது விலகி ஆ சேரும். உதாரணமாக முருகன் கந்தன் என்ற அழைக்கும் போது முருகன் என்பதை முருகா என்றும் கந்தன் என்பதை கந்தா என்றும் அழைக்கிறோம். அதுபோலவே அரோகரன் என்பதை அரோகரா என்றும் அழைக்கிறோம்.

அரோகரன் என்றால் பொருள் என்ன?

அரன் என்றால் = சிவன்
ஓங்கரன் = ஓங்காரத்தின் உருவமாக இருப்பவன்

அரோகரன் என்றால் சிவனிடமிருந்து வெளிவந்த ஓங்காரத்தின் வடிவமானவன் என்று பொருள்.