சுலோகம் -140

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-21

உயர்ந்த மனிதன் எதைச் செய்கிறானோ ஏனையோரும் அதனையே செய்வார்கள். அவன் எதனைச் சிறந்தது என்று கூறுகிறானோ மனித சமுதாயம் அனைத்தும் அதையே பின்பற்றி நடக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 136 இல் சொல்லப்பட்டபடி குறிப்பிட்டு சொல்லப்படும் உயர்ந்த மனிதர் எதனை செய்கிறாறோ அது சிறந்தது நன்மையானது என்று அவரை நம்பும் மக்களும் அப்படியே செய்வார்கள். அவர் சிறப்பானது இதனை செய்யுங்கள் என்று சொல்லும் கருத்தையும் அப்படியே பின்பற்றி நடப்பார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 252

கேள்வி: எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட குலதெய்வம் தெரியவில்லை. அவர்களின் தலைமுறைக்கு பிறகு வந்தவர்கள் பழனி முருகனை குலதெய்வமாக சில காலம் கழித்து சப்த கன்னிமார்களை குலதெய்வமாக வழிபட்டிருக்கிறார்கள். இப்பொழுது நாங்கள் எந்த குலதெய்வத்தை வழிபடுவது? மேலும் வழிபாடு செய்துவிட்டு நேராக வீட்டிற்குதான் வரவேண்டுமா?

இறைவனின் அருளைக் கொண்டு யாம் கூறுவது யாதென்றால் கும்பிடும் தெய்வமெல்லாம் குலதெய்வம் என்று வைத்துக் கொள்ளலாம். தவறொன்றுமில்லை. எப்படியாவது தெய்வ நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்குதான் முன்னோர்கள் குலதெய்வம் என்ற ஒன்றை வகுத்து வைத்தார்கள். குலதெய்வத்தை வணங்கு என்று நாங்களும் கூட சில சமயம் கூறுவோம். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்குப் பிறகு மாறிப் போவது என்பது இயல்பு. இது மிகப்பெரிய குற்றமோ தோஷமோ அல்ல. இருந்தாலும் இன்னவளைப் (கேள்வி கேட்ட பெண்மணி) பொருத்தவரை சப்த மாதர்கள் சப்த கன்னியர்களை குல தெய்வங்களாக வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். அதற்காக பழனி முருகனை வணங்க வேண்டாம் என்பது பொருளல்ல.

இன்னொன்று பொதுவாக மனிதரிடம் ஒரு தவறான நம்பிக்கை இருக்கிறது. ஒரு தவறு என்றில்லை. எத்தனையோ தவறுகளில் ஒரு தவறு ஏதாவது ஆலயம் அல்லது குலதெய்வ ஆலயம் சென்று விட்டால் நேரடியாக இல்லம்தான் வர வேண்டும் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று. அப்படியெல்லாம் ஏதுமில்லை. தாராளமாக ஆலயம் சென்றுவிட்டு வேறு சில பணிகளையும் பார்க்கலாம். தவறொன்றும் இல்லை. ஆனால் உள்ளூரிலே ஒரு பிராய்ச்சித்தம் என்று செல்லும் பொழுது வேறெங்கும் செல்லாமல் நேரடியாக ஆலயம் சென்று விட்டு பிறகு மற்ற பணிகளைப் பார்ப்பது நல்ல பலனைத் தரும். அதாவது ஆலயத்தை நோக்கி செல்லும் பொழுது முதலில் ஆலயம் என்ற ஒரு நியதியை வகுத்துக் கொண்டால் அது மிக சிறப்பான பலனைத் தரும்.

கேள்வி: மனிதர்களாக வகுத்துக் கொண்டதுதான் ஜாதி மதம் என்று சொன்னீர்கள். ஆனால் சில ஜாதகத்தை ஜோதிடர்கள் பார்த்து இந்த ஜாதகர் இந்த ஜாதியை சேர்ந்தவரைதான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். அது எப்படி?

இறைவன் அருளால் ஜாதகத்தைப் பார்த்து ஜாதியைக் கூறுவது என்பது அல்ல. அதுபோல கூறுவது என்னவென்றால் இது போன்ற குணங்களைக் கொண்ட சமூகத்தை சேர்ந்த வரன் தான் கிடைக்கும் என்று கூறலாமே தவிர மற்றபடி ஜாதியை நாங்கள் கூறவில்லை. ஜாதியையும் ஜாதகம் குறிப்பதில்லை.

சுலோகம் -139

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-20

ஐனகர் முதலிய ஞானிகளும் பற்றில்லாமல் கர்மங்களை செய்ததின் மூலமாக சிறந்த பேற்றை அடைந்தார்கள். அவ்விதமே உலகத்தின் நலனை நன்கு மனதில் கொண்டு நீயும் கர்மங்களை செய்வது தான் உனக்கு உரிய செயலாகும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பற்றில்லாமல் தனக்குண்டான கடமையை செய்ததற்காக ஜனகர் போன்றவர்கள் இவ்வுலகத்திலும் மேலுலகத்தில் சிறந்த பேற்றை அடைந்தார்கள். இவர்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டும் உலகத்தின் நன்மை கருதியும் நீ பற்றில்லாமல் கர்மங்களை செய்வது உனக்கு உரிய செயலாகும்.

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில்.

சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.

சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார். உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். நாயக்கர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டனார்கள்.

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக வரலாறு சொல்லப் படுகிறது.

நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். இங்கு தானம் தர்மம் செய்வது கயிலையில் தானம் தர்மம் செய்வதற்கு சமமானது. இந்தக்குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. பராங்குச சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய வரலாறுகள் உள்ளது. நம்மாழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந்நாத முனிகளும் மணவாள மாமுணியும் ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

அமைதி

வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – மந்திரம்.
செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – தந்திரம்.
ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – இசை.
பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – கடாக்ஷம்.
அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – யோகா.
மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- தியானம்.
சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – பிராணாயாமம்.
சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – குண்டலினி.
இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் கோவில்.
உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் – குடும்பம்.
தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – அன்பு.
இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – பக்தி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 251

கேள்வி: நிகழ்காலத்தை கவனித்தாலே போதும் என்று மகான்கள் கூறுகிறார்களே. அது பற்றி:

கடந்த காலத்தை எண்ணி தொடர்ந்து விசனப்படுவதை விட எதிர்காலத்தை எண்ணி அச்சப்படுவதை விட நிகழ்காலத்தில் செய்ய வேண்டியதை நேர்பட ஒழுங்காக செய்தால் நலம் என்ற கூற்றில் இது கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் கடந்த காலத்தை மீண்டும் அந்தத் தவறுகள் செய்யாமல் இருப்பதற்கு திரும்பி பார்ப்பது தவறல்ல. கடந்த காலத்தில் செய்த தவறுகள்தான் பாவமாக மாறுகிறது என்பதால் அதை நினைவில் வைத்துக் கொண்டு விழிப்புணர்வோடு வாழ அந்தக் கடந்த கால அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தைப் பொறுத்தவரை நிகழ்காலத்தில் கூடுமானவரை தெளிவாக இருக்கிறோம். நல்லதை எண்ணி நல்லதை செய்கிறோம். இருந்தாலும் சிலவற்றை செய்யத் தவறி விட்டோம். இதையாவது இனி எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்கிற ஒரு உணர்வு வருவதற்கு சற்று அவகாசம் எடுத்து எதிர்காலத்தை நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்காக சதா சர்வகாலம் கடந்த காலக் கவலையிலும் எதிர்கால அச்சத்திலும் இருந்து கொண்டு நிகழ்காலத்தை கோட்டை விடக்கூடாது என்பதுதான் எம்போன்ற ஞானிகளின் வாக்காகும்.

கேள்வி: ரமண மகரிஷியின் நான் யார்? என்ற விசாரமே வேதத்தின் முடிவா?

அது ஒரு உச்ச நிலை. அதை நோக்கி செல்வதற்கு ஏற்கனவே ஏற்கனவே பல பிறவிகளில் அன்னவன் (ரமண மகரிஷி) முயற்சி செய்தது போல் செய்திருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே உச்ச நிலையை நோக்கி சென்றால் ஒரு மனிதனுக்கு சோர்வு தட்டும். எனவே தான் எளிய பக்தி மார்க்கமும் வேறு பல செயல்களும் செய்து கொண்டே சென்றால் ஒரு கட்டத்திலே அவனவன் ஆத்மாவிற்கே அந்த விசாரம் செய்வது எப்படி? என்பது இறைவனால் உணர்த்தப்படும்.

சுலோகம் -138

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-19

ஆகவே பற்றில்லாமல் எப்போதும் ஆற்ற வேண்டிய உனது கடமைகளை செய்து கொண்டிரு. ஏனெனில் பற்றில்லாமல் கடமைகளை செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா நீ இறைவனை உணர்ந்த ஞானி இல்லை. ஆகவே நீ எதன் மீதும் பற்றில்லாமல் உனக்கான கடமைகளை தொடர்ந்து செய்து கொண்டே இரு. தனக்குண்டான கடமைகளை பற்றில்லாமல் செய்பவன் இறைவனை அடைகிறான்.

பாண்டவர் மலை பைரவேசுவரர்

கர்நாடகாவில் சக்லேஷ்பூர் அருகே உள்ள மேகனகட்டேவில் உள்ள பைரவேஸ்வரா கோவில் பழமையான கோவில். இந்த கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று புராண கதைகள் கூறுகின்றன. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் விளிம்பில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கெம்புஹோல் மற்றும் குமாரதாரா என்ற இரண்டு ஆறுகள் இங்கிருந்து தோன்றுகின்றன. இரண்டு ஆறுகளும் நேத்ராவதி ஆற்றில் இணைகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவில் மலை மீது உள்ள மலை என பல மலைகளால் சூழப்பட்டுள்ளது 2.5 கிமீ மலையேற்றம் மூலம் கோயிலை அடையலாம். வருடத்திற்கு ஒரு முறை ஜனவரி மாதம் அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. அப்போது அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு கூடுகிறார்கள். துரியோதனனுடனான பகடை விளையாட்டில் தோற்ற பிறகு பாண்டவர்கள் 12 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டனர்.
தலை மறைவாக வாழும் அங்ஞாதவாசத்தில் ஒரு வருடம் வாழ்ந்தார்கள். அந்த இறுதி ஆண்டில் பாண்டவர்கள் இங்கு சில காலம் தங்கியிருந்தார்கள். அப்போது சிவபெருமானை வழிபடுவதற்காக இங்கு ஒரு கோவிலைக் கட்டினார்கள். இந்த கோவிலை சுற்றிலும் இருள் சூழ்ந்ததும் காட்டு விலங்குகள் இங்கு சுற்றித் திரிகின்றன. ஆகையால் கோவிலில் வழிபட செல்பவர்கள் மாலை 5 மணிக்குள் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆதிசங்கரர் இங்கு வழிபட்டிருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 250

கேள்வி: கொங்கண சித்தரின் ஜீவ சமாதி திருப்பதியில் எந்த இடத்தில் அமைந்திருக்கிறது?

ஜீவ அருட் பீடங்கள் என்று நாங்கள் கூறுகின்ற முறை வேறு. மனிதர்கள் அறிந்த முறை வேறு. பெரும்பாலும் புராண கால ரிஷிகளுக்கெல்லாம் இந்த ஜீவ அருட் பீடங்கள் அதாவது மனிதர்களால் கூறப்படும் ஜீவ சமாதிகள் என்றுமே கிடையாது. ஆண் பெண் கலப்பிலே யோனிப் பிறப்பாக வந்தவர்களில் சிலருக்கு மட்டும்தான் இந்த ஜீவ சமாதி என்பது அதுவும் அந்தந்த சித்தன் நினைத்தால் இறைவன் அருளினால் கிடைக்கிறது. மற்றவை எல்லாம் அந்தந்த சித்தர்கள் அங்கு வந்து சிலகாலம் தங்கி வழிபாடு நடத்திய ஆலயங்கள் என்ற அளவிலே பொருள் கொள்ள வேண்டும். எனவே இந்தக் கருத்தை அவரவர்கள் சொந்தக் கருத்தோடு சேர்த்து வைத்து குழப்பம் அடையாமல் அப்படி இந்த இடத்தில்தான் இருக்கிறார்கள் என்று கூறினால் தாராளமாக வணங்கி விட்டு செல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இதுதான். முன்னர் முன்னர் புராண கால ரிஷிகள் யாருமே ஜீவ சமாதி என்பது அடைந்தது கிடையாது. அவர்கள் நித்திய சொரூபிகள். இறை போல் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள் இனியும் இருப்பார்கள்.

கேள்வி: ஒரு புறம் பசு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் மறுபுறம் கொலைக் களத்திற்கு பசுமாடுகளை அனுப்புவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படி தடுப்பது?

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் நன்மையும் தீமையும் கலந்தேதான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இப்படி தீமையை செய்கின்ற மனிதன் எப்படி யார் சொன்னாலும் கேட்காமல் தீமையை செய்கிறானோ அதைப் போல நன்மையை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த மனிதனும் யார் சொன்னாலும் அந்த நன்மையை விட்டுவிடாமல் எத்தனை சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது? தீமை செய்கின்ற எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அது கண்டு அஞ்சாமல் தொடர்ந்து தீமையை செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் நன்மையை எண்ணி இறங்குகின்ற மனிதன் சிறு எதிர்ப்பு வந்தாலும் சோர்ந்து விடுகிறான். எனவே இது போன்ற தீமைகள் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். கூட்டு வழிபாடும் தொடர்ந்து அவரவர்களால் முடிந்த நன்மையான தர்ம காரியங்களை செய்வதன் மூலம்தான் இதனை தடுக்க அல்லது குறைக்க இயலும்.

சுலோகம் -136

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-17

எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும் ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாகவும் ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கிறானோ அவனுக்குச் செய்ய வேண்டிய செயல் எதுவும் இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எவனொருவன் பேரொளியாக இருக்கும் இறைவன் தான் தனக்குள் ஆத்மாவாக இருக்கிறான் என்பதையும் தான் வேறு இல்லை இறைவன் வேறு இல்லை என்பதை உணர்ந்து ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாகவும் பேரின்பத்தில் சமாதி நிலையில் இருக்கிறானோ அவன் ஆற்ற வேண்டிய கடமைகள் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை.