ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 375

குருநாதர் அருளிய பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இறைவனின் துணையைக் கொண்டு இறைவனின் அளப்பரியாத அந்த ஆற்றலைக் கொண்டு இதுபோல் இயம்புகிறோம் சிலவாக்கு அன்பு செய்தல் நல்ல பண்பை வளர்த்தல் வேறு தப்பு குறும்பு செய்யாமல் இருப்பதே நல்ல பண்பு அப்பா. அன்பு என்பதின் விரிவாக்கமே பூஜையாகும். பூ செய்தல் அன்பு செய்தல் நல்ல பண்பு செய்தல் அதன் மூலம். மனிதன் தமக்குள் இருக்கின்ற அசுரத்தனங்களை விலங்கு குணங்களை விட்டொழிக்க தன்னைத்தான் மேம்படுத்திக் கொள்ள தன்னைத்தான் இன்னமும் பண்படுத்திக் கொள்ள இருக்கின்ற எத்தனையோ வழிமுறைகளில் பூஜையும் ஒன்று. ஆத்மார்த்தமாக அமர்ந்து நீக்கமற நிறைந்துள்ள இறைவனை ஏதாவது ஒரு வடிவத்தில் பிடித்து வைத்து அதற்குரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது மனம் திடமாகி மனமெங்கும் இறையாற்றல் இவன் எந்த வடிவத்தில் வணங்குகிறானோ அந்த வடிவத்தில் வியாபிக்கும். அப்படி வியாபிக்கின்ற இறை சக்தி இவன் என்ன எண்ணத்தோடு பூஜை செய்கிறானோ அந்த எண்ணத்திற்கு அவனை அழைத்து செல்கிறது. என்ன நோக்கத்தோடு பூஜை செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் சற்றும் பழுதற நிறைவேறுகிறது. எனவே ஒரு வகையில் பூஜை என்பது ஒவ்வொரு மனித மனமும் பண்பட உயர்வு பெற திடம் பெற மனதிலே எந்த குழப்பமும் இல்லாமல் அவன் கம்பீரமாக செயல்பட உதவக் கூடிய ஒருவகையான மனோதத்துவ சிகிச்சை என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் இதுபோல் பூஜையில் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. பூஜையிலே புற சடங்குகள் விதவிதமானவை. அதிலே நடை வண்டிகள்தான் பூஜைகள் வழிபாடுகள். இது பிடிக்காமல் எடுத்த எடுப்பிலேயே நடக்கவேண்டும் என்றுதான் சிலர் தியானம் செய்கிறேன். தியானத்தில் எனக்கு அந்த காட்சி தெரிகிறது. இந்த காட்சி தெரிகிறது என்றெல்லாம் பேசி திரிகிறார்கள். இவையெல்லாம் வெறும் மாயா வார்த்தைகள். எம்முன்னே அமர்ந்து கூட நான் சித்தர்களைப் பார்த்தேன் தெய்வத்தை பார்த்தேன் அது பற்றி உங்கள் கருத்து என்ன குருதேவா? என்று கேட்கும் பொழுது பேதைத்தனமாக அவர்கள் கேட்கிறார்கள் என்று தெரிந்தும்கூட அவர்கள் மனம் மகிழ்ந்துவிட்டுப் போகட்டும் என்பதற்காக ஆமாமப்பா காட்சி தெரிந்தது யாம்தான் வந்தோம் என்று கூறி யாமும் மனிதர்களைப் போலவே பேசக் கற்றுக் கொண்டு விட்டோம்.

இந்த பூஜையை முறையாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த பூஜையை எதற்கு முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? இந்த பூஜையிலே சோடசம் என்ற சொல் எதற்காக பயன்படுகிறது? எந்த அர்த்தத்தில் இந்த ஈரெட்டு என்பது பயன் படுத்தப்படுகிறது? பொதுவாக இந்த நிலவுலகிலே ஒரு மனிதனுக்கு தேவையான பேறுகள் 16. அந்த 16 பேற்றையும் ஒரு மனிதன் பெற வேண்டும். அப்போதுதான் அவன் பரிபூரணமான மனிதனாக கருதப்படுவான் இருக்கவும் முடியும். அந்த 16 வகை பேறுகளை தருவதே இந்த பூஜை. இந்த பூஜையின் உச்சகட்ட நிலையிலே விக்கிரக ஆராதனை செய்கின்ற ஒரு இல்லமாகவோ அதற்கு வாய்ப்புள்ள இடமாகவோ இருக்கும் பட்சத்திலே ஐம்பொன்னால் ஆன அன்னை மகாலட்சுமியின் திருவுருவத்தை நல்லதொரு பத்மாசனத்திலே இட்டு அற்புதமான முறையில் அபிஷேகம் செய்யும் பட்சத்திலே வாழை இலையிட்டு அதன் மீது அரிசியிட்டு அதன் மீது நவதானியமும் இட்டு அதன் மீது தேவலோக பொருளான வெற்றிலையை அழகாக இட்டு அதன் மீது வலம்புரி சங்கும் வைத்து அந்த வலம்புரி சங்கத்திலே தூய்மையான நீர் பால் போன்ற 16 வகையான திரவியங்களையும் வைத்து இந்த வலம்புரி சங்கத்தையும் 108 ஆக வைத்து எல்லா வகை பூர்த்திக்குப் பிறகு இந்த சங்கினை எடுத்து அன்னையின் திருவுருவிற்கு அபிஷேகம் செய்தால் அது அபூர்வமான பலனப்பா.

இதுபோல் செய்யும் பொழுது தரித்திரம் போகிறது. தன (செல்வம்) சிக்கல் போகிறது. அச்சமற்ற வாழ்க்கை முறையும் அவனுக்கு கிட்டுகிறது. அதோடு நன்றாக வார்த்தையை கவனிக்க வேண்டும் வலம்புரி சங்கே 108 வைக்க வேண்டும். விலை அதிகம் என்பதால் ஒரு வலம்புரி சங்கமும் ஏனையவை எல்லாம் இடம்புரி சங்காக வைக்கும் பழக்கம் பல இடங்களில் இன்று இருக்கிறது. இதை குற்றம் என்று நாங்கள் கூறவில்லை. மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்களுக்கு அனைத்தும் வலம்புரியாக இருக்கவேண்டும். இந்த வலம்புரியை ஏன் குறிப்பிடுகிறோம் என்று தெரிகிறதா? ஒரு புராணக் கதையை நினைவூட்டுகிறோம் அப்பா.

திருப்பாற்கடலில் இருந்து என்னென்ன வந்தது? உச்சைசிரவஸ் காமதேனு கற்பக விருட்சம் வலம்புரி சங்கு. இவற்றிலே மகாலட்சுமி எங்கே சென்றார்? (மகாவிஷ்ணுவிடம் சென்றார்). ஏன் சென்றார்? (அவரிடம்தான் பாஞ்சஜன்யம் என்ற வலம்புரி சங்கு இருக்கிறது) அதனால்தான் மகாலட்சுமி பூஜையில் வலம்புரி சங்கு வைக்க வேண்டும் என்று கூறுகிறோம். எனவே முக்கண்ணனாகிய சிவ பெருமானுக்குத்தான் பொருத்தம் என்று எண்ணக் கூடாது. எந்த தெய்வமாக இருந்தாலும் வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்ய வேண்டும் இது ஒன்று. ஆனால் இதையே நாங்கள் வேறொரு வாக்கிலே சங்கு வைத்து பூஜை செய்வதைகூட நாங்கள் அசைவ பூஜை என்று கூறியிருக்கிறோம். அது தெரியுமா? ஏனென்றால் இயல்பாக உயிரை விட்ட சங்கு கடலிலே மிதக்கும். அவற்றை எடுத்து வந்துதான் சித்தர்களும் முனிவர்களும் பயன்படுத்துவார்கள். ஆனால் இயல்பாக ஒரு சங்கு எப்போது இறப்பது? அது எப்போது கிடைப்பது? என்று மீனவர்கள் வலை வீசும் போது உயிருள்ள சங்கும் சிக்கி விடுகிறது. அதை எடுத்து வந்து கொடிய திராவகத்திலே இட்டு அதை துடிக்க வைத்து கொன்று பிறகுதான் விற்கிறார்கள். எனவே தோஷமுள்ள சங்குகள்தான் இங்கு பெரும்பாலும் கிட்டுகிறது. இருந்தாலும் ஆத்மார்த்தமான பூஜையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவர்களுக்கு வலம்புரி சங்கு என்பது தேடி வரும். அப்படி தேடி வருகின்ற வலம்புரி சங்கானது கட்டாயம் தூய்மையான சங்காகத்தான் இருக்கும். இருந்தாலும் அதன் பூர்வீகம் தெரியாததால் அது இங்கு வந்த பிறகு ஒரு மண்டலம் கங்கா ஜலம் கொண்டு அபிஷேகம் செய்வதும் ஒரு மண்டலம் பூர்த்தியடைந்த பிறகு சகல அபிஷேகமும் செய்து அதன் பிறகு அதனை பூஜைக்கு பயன்படுத்தினால் அந்த தோஷம் குறையும்.

108 இயலாத பொழுது ஒன்றையாவது வைத்து சிறப்பாக செய்யலாம். இது சிறப்பிலும் சிறப்பாக இருக்கும். இதுபோல் பூஜை செய்வதால் என்ன நன்மை ஏற்படும்? வெறும் செல்வம் என்று கருதக் கூடாது. இங்கே அறிவில் குறையுடையோர் பலருண்டு. எனவே அறிவு செல்வம் உண்டு. திருமணம் என்பதும் ஒருவகையான செல்வம்தான். திருமண தடை உள்ளவர்களுக்கு திருமண பாக்கியம் ஏற்படும். திருமணமாகி கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு இந்த பூஜை உதவும். குழந்தை பாக்கியம் உண்டு. இந்த நிலவுலகில் மனிதனாக பிறவியெடுத்தவனுக்கு வேண்டிய சகலத்தையும் ஒருங்கே ஒருசேர தருகின்ற பூஜைகளில் தலையாய பூஜை இதுபோல் சோடச மகா அன்னை திரு பூஜையாகும்.

பத்துக் கரங்களில் ஆயுதமேந்தியபடி நடனமாடும் சிவன்

இரவனபாடி குடைவரைக் கோயில் ஐஹோளே கர்நாடக மாநிலத்தில் இந்த சிலை உள்ளது. வலது முன்கை மார்பை அணைத்தபடி இருக்க இடது முன்கை பக்கவாட்டில் விரிந்துள்ளது. உயரமான தலையலங்காரம் இடையில் மடிப்புடன் அமைந்த ஆடை அணிந்து சிவன் ஆடும் நடனத்தை பார்வதி கணபதி முருகன் (முகம் சிதைக்கப் பட்டுள்ளது) தேவலோகப் பெண்கள் மற்றும் சப்த_மாதர்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்கு சிவன் காட்டும் ஆடல் அந்தகாசுரனை அழித்த பின்பு வெற்றிக்களிப்புடன் ஆடும் நடனம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 374

கேள்வி: நடைமுறையில் புலன்களை எவ்வாறு வெல்வது ?

சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் வென்று விடலாம் அல்லது கோடானு கோடி பிறவிகள் எடுத்தும் வெல்லலாம். நீ (முன்பு) கூறினாயே திண்ணியம் (உறுதி) அது மனிதன் மனதிலே வந்து விட்டால் உடனே கூட இது நடக்கலாம். எப்படியென்றால் காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்ற வாசகம் ஒரு பட்டினத்தானை இல்லறவாசியிலிருந்து துறவறம் ஆக்கிவிட்டது. ஆனால் அந்த வாசகம் எத்தனை பேரை அவ்வாறு துறவறம் ஆக்கும்? அந்த வாசகத்தின் பொருள் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் எல்லோராலும் சட்டென்று எல்லாவற்றையும் மனதளவிலே விட்டுவிட்டு வெளியே வரமுடிகிறதா? எனவே பற்றும் பாசமும் தீவிர ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் புலன்களை வெல்லுவது என்பது கடினம். பற்றையும் பாசத்தையும் மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே வரவேண்டும். பற்றையும் விடுகிறேன் பாசத்தையும் விடுகிறேன் என்பதற்காக குடும்ப அங்கத்தினர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்தால் அது ஒரு தோஷமாக மாறும் என்பதை மனிதர்கள் மறந்து விடக்கூடாது.

இதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு மனிதன் ஒரு பணிபுரியும் இடத்திலே பணியாற்றுகிறான். அவனுக்கென்று சில பொருள்கள் அங்கே தரப்படுகின்றன. அமர்கின்ற ஆசனம், எழுதுகின்ற எழுது பலகை இன்னும் பல பல பல. அவனுக்கு நன்றாகத் தெரியும், இவையெல்லாம் நம் பொருள்கள் அல்ல. இந்த பணி புரியும் நிர்வாகத்திற்கு சொந்தமானது. இங்கே ( நான் ) பணியாற்றுவதற்காக இவையெல்லாம் ( எனக்கு ) கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு அந்தப் பணி முடிந்தவுடன் அதனையெல்லாம் விட்டுவிட்டு இல்லம் திரும்புகிறானே? அதைப்போல இல்லமும் ஒரு பணிபுரியும் இடம். கர்மவினையால் இந்த பணிபுரியும் இடத்திற்கு வந்திருக்கிறோம். நம் வினைக்கு ஏற்ப உறவுகள் அமைந்திருக்கின்றன. இங்கே செய்யவேண்டிய பணிகளை செய்யவேண்டும். ஆனால் தீவிர பற்றையோ பாசத்தையோ வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற அளவிலே மனதிலே எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அதனை முறையாக ஒரு பயிற்சியாக விதவிதமாக ஒரு மனிதன் கையாண்டு பார்க்க வேண்டும்.

இந்த உணவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இந்த உணவுதான் என் நாவிற்கு பிடித்திருக்கிறது. இந்த பானம்தான் எனக்குத் தேவை. இந்த விதமான படுக்கைதான் எனக்குத் தேவை என்று எதையெல்லாம் ஒரு மனிதன் வேண்டும் வேண்டும் என்று எண்ணுகிறானோ அவையெல்லாம் இல்லாவிட்டால் என்ன? என்று ஒவ்வொரு முயற்சியாக செய்து பார்த்தால் கட்டாயம் எண்ணியது நிறைவேறும். ஆனாலும்கூட இதற்கு முன்னால் அவனைப் பற்றியுள்ள கர்ம வினைகளிலிருந்து வெளியே வரவேண்டும். எனவே எளிய வழி பக்தி மார்க்கம். பலவிதமான ஸ்தலங்களுக்கு சென்று மானசீகமாக பிரார்த்தனைகளை செய்து கொண்டே வர மெல்ல மெல்ல அதீத பற்றும் பாசமும் குறைய கட்டாயம் நீ எண்ணுவது போல புலன்களை முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும் மெல்ல மெல்ல வெல்லக்கூடிய நிலை வரும். பற்றையெல்லாம் விடு பாசத்தையெல்லாம் விடு என்றால் கட்டிய கணவன் எங்காவது சென்று விடுவானோ? என்று மனைவியும் அல்லது தாரம் தன்னைவிட்டு எங்காவது சென்று விடுவாளோ? என்று கணவனும் அல்லது தாயும் தந்தையும் இப்படி ஆன்மீகம் பார்த்துக் கொண்டு தங்களையெல்லாம் விட்டுவிடுவார்களோ? என்று சேய்களும் எண்ணலாம்.

நாங்கள் அதனைக் கூற வரவில்லை. எல்லாம் செய்ய வேண்டும். அதே சமயம் எதற்குள்ளும் ஆழ்ந்து விடக்கூடாது. கப்பல் பயணம் செய்ய பரந்த நீர்பரப்பு தேவை. நீர்பரப்பின் உதவியில்லாமல் கப்பல் செல்வது கடினம். நீர்தான் தனக்கு உதவி செய்கிறது என்பதற்காக கப்பல் நீரே நீ உள்ளே வா என்று கப்பலுக்குள் நீரை அனுமதித்தால் அந்தக் கப்பல் மூழ்கிவிடும் அல்லவா? அதைப்போல இந்த உலகம் இந்த உலகில் உள்ள விஷயங்கள் எல்லாம் ஓரளவு மனிதர்களுக்குத் தேவை கர்மாவை நுகர்வதற்கு. அதற்காக அதற்குள் ஆழ்ந்து விடாமல் இறை சிந்தனை கவனம் எங்கும் சிதறாமல் இருக்க வேண்டும். வேடிக்கையை சிலர் பார்த்திருக்கலாம் வீதியிலே. இரண்டு முனையிலே நீண்ட கயிற்றை கட்டி அதன் மேல் ஒரு பெண் லாவகமாக நடந்து வருவாள். கையிலே நீண்ட கோல் இருக்கும். அப்படி நடந்து வரும் தருணம் அந்த அதிசய திறமையைப் பார்த்து அனைவரும் ஆர்பரிப்பார்கள். பயங்கர கரகோஷம் செய்வார்கள். அதிலே கவனம் செலுத்தினால் அந்தப் பெண் மேலிருந்து கீழே விழுந்து விடுவாள். கீழே என்ன கூச்சல் என்ன குழப்பம் நேர்ந்தாலும் அந்தக் கயிற்றின் நுனியிலிருந்து கால் பிசகாமல் நடப்பது போல என்ன வேண்டுமானாலும் இந்த உலகில் நடந்துவிட்டுப் போகட்டும். என்ன வேண்டுமானாலும் குடும்பத்தில் நடந்துவிட்டுப் போகட்டும். அதற்கு நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துவிட்டு இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு மனது இறைவனை நோக்கியே இருக்க வேண்டும்.

இப்படியொரு பழக்கத்தை மனிதன் மெல்ல மெல்ல பழகிக் கொண்டால் கட்டாயம் நீ எண்ணுவது போல புலன்களை வெல்லக்கூடிய ஆற்றல் எல்லோருக்கும் சித்திக்கும். நீரிலே இறங்காமல் நீச்சல் பழகுவது கடினம். ஒரு வாகனத்தில் அமர்ந்து அந்த வாகனத்தை இயக்க பயந்தால் வாகனத்தை கடைவரையில் இயக்க முடியாது. அதைப் போல இந்த மனித தேகம் எடுத்து, இந்த மனித தேகத்திற்குள்ளாகவே வாழ்ந்து விடாமல் இந்த அழியக் கூடிய தேகத்தை வைத்துக் கொண்டு அழியக் கூடிய உறவுகளை வைத்துக் கொண்டு அழியக் கூடிய அற்ப சுகங்களை வைத்துக் கொண்டே அழியாத பேரின்பத்தை அடைய மனிதன் முயற்சி செய்யவேண்டும்.

ஒரு வங்கியின் மூலம் அதிக அளவு தனத்தையெல்லாம் வரை ஓலையாகக் கீறி அத்தாட்சி சான்றும் வைத்து அதனை வாங்கி வரும் மனிதன் அதனை தூரத்தில் உள்ள மனிதனுக்கு அனுப்ப எண்ணுகிறான். கவசம்போல் ஒரு உறையை தயார் செய்து அதற்குள்ளே பாதுகாப்பாக வைத்து அனுப்புகிறான். இப்பொழுது உள்ளே இருக்கும் வரை ஓலை முக்கியமா? அல்லது அதனை பாதுகாக்கும் கவசம் முக்கியமா? என்று பார்த்தால் அது போய் சேரவேண்டிய இடம் வரை இரண்டும் முக்கியம்தான். போய் சேர்ந்த பிறகு உள்ளே இருக்கும் வரை ஓலையை எடுத்து விட்டு பாதுகாப்பு கவசமாக இருந்ததை தூக்கி எறிவதில்லையா? அதைப் போல இந்த உலகமும் இந்த தேகமும் போய் சேர வேண்டிய இறைவனின் திருவடியை நோக்கி சென்று அதனை உணர்ந்து அதற்குள் பரிபூரணமாகக் கரையும்வரை இதனைக் கவசம் போல் வைத்துக் கொண்டு அந்த கவசத்திற்கு என்ன மதிப்பு தர வேண்டுமோ அந்த மதிப்பைத் தந்து பிறகு உள்ளேயிருக்கும் அந்த விஷயத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அந்த உள்ளேயிருக்கும் ஆத்மாவிற்கு முக்கியத்துவம் தந்தால் கட்டாயம் புலனை வெல்லலாம்.

பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர்

விநாயகருக்கு உள்ள மிகப்பெரிய குடைவறைக்கோயில். மூலவரான விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார். தேசிவிநாயகப் பிள்ளையார் என்ற வேறு பெயரும் உள்ளது. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க அழகுள்ள விநாயகர் என்று பொருள். ஆறு அடி உயரத்தில் கம்பீரம்மாக வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். கோவில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் குடைந்து கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு இருக்கிறது. அர்ஜுனம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மருத மரம் என்று அர்த்தம். அதில் தமிழ் நாட்டில் மூன்றும் ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலும் ஒன்று. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. இக்கோவில் இருக்கும் பிள்ளையார்பட்டியின் புராண பெயர்கள் எருகாட்டூர் அல்லது எக்காட்டுர் மருதங்குடி திருவீங்கைகுடி திருவீங்கைச்வரம் இராசநாராயணபுரம் மருதங்கூர் தென்மருதூர் கணேசபுரம் கணேசமாநகரம் பிள்ளை நகர் ஆகும். முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் போல் விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும்.

கோவிலில் இரண்டு பெரிய ராஜகோபுரங்கள் உள்ளது. ஒன்று கிழக்கு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.

தெற்கு நோக்கியபடி சங்கர நராயணர் அருளுகிறார். சண்டீசன் கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள். மலையைக் கடைந்து செதுக்கிய பெரிய மகாலிங்கம் உள்ளது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார். இங்கு திருமணம் நடைபெற வைக்கும் கார்த்தியாயினி அம்மன் சன்னதியும் பிள்ளை வரமளிக்கும் நாகலிங்கம் சுவாமி சன்னதியும் அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் பசுபதீசுவரர் சன்னதியும் உள்ளது. இக்குகைக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மாள் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது.

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும் மற்றொரு பகுதி கற்றளி ஆகவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால் வினாயகர் சன்னதியை வலம் வர இயலாது.

குடைவரை கோயில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும் சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

விநாயகரின் சிறப்புகள்:

  1. இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருக்கிறார்.
  2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.
  3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குகிறார்.
  4. வயிறு ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திருக்கிறார்.
  5. வலத்தந்தம் நீண்டும் இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறார்.
  6. வலக்கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கியருள்கிறார்.

கோவில் திருவிழாக்களில் விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேஸ்வரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும். 9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மகா அபிஷேகமும் நடத்தப்படும்.

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஞ்ஞூரு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிராகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும் உமாதேவி உடனுறை சந்திரசேகரப் பெருமானும் திருவீதி உலா வருவார். பிள்ளையார் மருதங்குடி நாயனார் சந்நதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமான் திருவீதி உலா வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி கொடியேற்றம் நடக்கும். பிள்ளையார்பட்டி கோயிலின் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும் பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும் உச்சிகால பூசையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும் இரவு ஐம்பெருங்கடவுளரும் தங்க வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 373

குரு நாதர் அருளிய பொதுவாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் நலம் நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே மனிதர்களின் வாழ்விலே பின்னிப்படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள் பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று அறியாத நிலையிலும் அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப்பெற்ற மனிதன் கூட பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும் பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது? அதோடு உணர்ச்சி நிலை மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும் இன்றும் என்றும். எனவேதான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறைபக்தியோடு சத்தியத்தை விடாது மனசாட்சியோடு தொடர்ந்து தர்மசிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல மெல்ல விலகும்.

அறியாமை விலக விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அதுபோல் நிலையிலே மனிதன் தன்னையும் தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாசவலைக்குள் வைத்து பார்க்கும் பொழுதுதான் என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே என்றெல்லாம் எண்ணி எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக் கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அதே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கிவிழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும் பொழுது இரத்த சம்பந்தமில்லாத நட்போ உறவோ இல்லாத மனிதனிடம் பார்க்கும் பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால் அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப் பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி ? சொந்த உறவுகளுக்கும், சொந்த நட்புகளுக்கும், பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக்கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்தப் பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்து விட்டால் அதனை துடைக்கும் வழியை மேற்கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும் ஆசையும் அறியாமையும் வைத்துக் கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப்பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் வாழ்வு நலமாகும் சுகமாகும் சாந்தியாகும்.

தெய்வங்கள் பேசும் ஆலயம்

பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம். இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள். இக்கோவிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சப்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இன்று வரை இருந்து வருகிறது. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தாந்திரிக் பவானி மிஸ்ரா என்பவரால் நிறுவப்பட்டது. அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இந்த கோவிலில் நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோவிலில் 1. திரிபுரா பைரவி 2. துமாவதி 3. பகுளாமுகி 4. தாரா 5. காளி சின்னமஸ்தா 6.ஷோடசி 7. மாதங்கி 8. கமலா 9.உக்ரதாரா 10, புவனேஸ்வரி ஆகிய பத்து மகாவித்யாக்களின் சிலைகள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இது தவிர 1. பங்களாமுகி மாதா 2. தத்தாத்ரேய பைரவ் 3. படுக் பைரவ் 4. அன்னபூர்ண பைரவ் 5. கால பைரவ் 6. மாதங்கி பைரவ் ஆகிய பைரவர்களின் சிலைகளும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

இக்கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சப்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர். வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை. இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சப்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சப்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 372

குரு நாதர் அருளிய பொதுவாக்கு.

யாங்கள் அடிக்கடி கூறுவது போல இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும் லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக் கடமை அல்லது தசக்கடமை அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு எதாவது புதிதாக ஒரு பிரச்சினை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக பொழுதை போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் செய்வதுமான ஒரு அசுரத்தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைபடுத்தி பயிர்களுக்கு அந்த மனோ சக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது. உடல் வேறு உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு.

ஆத்மா எத்தனையோ உடல்களுக்குள் இருந்து கொண்டு புகுந்து கொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து மடிந்து வாழ்ந்து மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான் அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆத்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்தப் பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும் புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும் நனவிலும் ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக் கொண்டே உள்ளத்தில் சதாசர்வ காலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக் கொண்டு எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கும்.

திருநீறு

திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:

  1. கல்பம்
  2. அணுகல்பம்
  3. உபகல்பம்
  4. அகல்பம்

கல்பம்: கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாமல் தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி மந்திரங்களைச் சொல்லி சிவாக்கினியில் இட்டு எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்: காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்: மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத் தீயில் எரித்து பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்: அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 371

கேள்வி: மோட்ச உலகம் என்பது எங்கே இருக்கிறது?

உன்னுடைய மனம்தான் மோட்சம். உன்னுடைய மனம்தான் சொர்க்கம். உன் மனம்தான் நரகம் என்று வைத்துக் கொள். ஏன்? என்றால் எது யாருக்கு எப்படி நடந்தாலும் அது அவனுக்கு கவலையை அளிக்கவில்லையோ எது எவனுக்கு எக்காலம் எந்த தருணத்தில் எல்லா நிலைகளிலும் திருப்தியை தருகிறதோ எது எவனுக்கு எந்த சூழலிலும் எந்தவித கஷ்டத்தையும் தரவில்லையோ அவன் வாஸ்தவமாகவே சொர்க்கத்தில் இருக்கின்றான். மோட்சத்தில் இருக்கிறான் என்பதுதான் பொருள். அப்படியானால் இத்தருணம் முதல் நீ மௌனத்தை கடைபடி. மௌனம்தான் அப்பா நீ இறையோடு கலக்கவும் இறையோடு பேசவும் உதவும். செவியிலே விழும் வார்த்தைகளுக்கெல்லாம் வாய் திறந்து பதில் கூற வேண்டும் என்று துடிக்காதே. அப்படி துடிக்க துடிக்க உனது சக்தி விரயமாகிக் கொண்டே போகும். உன்னை சுற்றி முட்டாள்கள் நின்றால் உனக்கென்ன? ஞானவான்கள் நின்றால் உனக்கென்ன? உன்னை பொறுத்தவரை மௌனத்தில் இரு. மௌனம்தான் உயர்ந்த ஞானம். மௌனத்தில் இருக்க பழக வேண்டும். எப்படி பழக வேண்டும் ? வாய் பேசாமல் இருப்பது மௌனமல்ல. உன் மனமும் எது குறித்தும் பேசாமல் இருக்க வேண்டும். மனம் சூன்யமாக இருக்க வேண்டும். எண்ணங்கள் அற்ற நிலையில் இருக்க வேண்டும். மனதிலே இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் என்று மூன்று காலமும் இருக்கக் கூடாது. அப்படி ஒரு பயிற்சியை பெறுவதுதான் நீ இங்கிருந்தே மோட்சத்தை பெறும் வழியாகும்.

கமண்டல கணபதி கோவில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோப்பா என்பது கடல் மட்டத்திலிருந்து 763 மீட்டர் உயரத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தில் உள்ள சிறிய கிராமம் கேசவே. இங்கு கமண்டல கணபதி திருக்கோவில் இருக்கிறது. இந்த இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக தரையில் ஒரு துளை இருக்கும். அதன் வழியே தண்ணீர் பெருக்கெடுத்தபடியே இருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மழைக் காலங்களில் அதிக அளவிலும் வெயில் காலங்களில் குறைவாகவும் இந்த துளையில் இருந்து நீரூற்று வந்துகொண்டே இருக்கும். ஒருபோதும் இதில் நீர் வராமல் இருந்ததில்லை. இந்த அதிசயம் 1000 வருடங்களாக நடைபெற்று வருவதாக வரலாறு உள்ளது.

புராண வரலாற்றின்படி சனி பகவானின் கிரக நிலை ஆதிக்கத்தில் சில காலம் பார்வதி தேவி இருந்தாள். ஆகையால் அவர் துன்பத்தில் சிக்கினார். இதற்குத் தீர்வு காணும் வகையில் பூலோகம் வந்த பார்வதிதேவி தவம் செய்ய பூமியில் சிறந்த இடத்தைத் தேடி தவம் செய்ய முடிவு செய்தாள். தனது தவத்தில் உள்ள தடைகளைத் தவிர்ப்பதற்காகவும் சனி தோஷத்திலிருந்து விடுபடவும் விநாயகரை வழிபட விரும்பிய பார்திதேவி இங்கு கணபதியை ஸ்தாபித்தாள். விநாயகர் சுகாசனம் என்ற ஆசனத்தில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார். ஒரு கையில் மோதகமும் மறு கையில் அபயஹஸ்தா வும் ஏந்தியபடி இருக்கிறார். வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் தவித்த போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தன் ஆன கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில் வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

விநாயகர் முன்பாக உள்ள இந்த துளையில் இருந்து வரும் நீரைத்தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் பொங்கியும் சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது. விநாயகரின் காலடியில் வெளிப்படும் இந்த நீரானது இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி அங்குள்ள துங்கா நதியில் கலக்கிறது.