துர்காதேவி மகிஷாசுரமர்த்தினி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துர்காதேவி மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 388

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

ஆதியோடு அந்தமாய் அந்தமோடு சொந்தமாய் சொந்தமற்ற தன்மையாய் தன்மை கொண்ட தன்மையாய் தன்மையது தரும் நன்மையாய் நன்மை நல்கும் செழுமையாய் செழுமையோடு உயர் பண்பதாய் பண்பதோடு உயர் நலமதாய் நலமோடு உயிருக்கு உயிரான பலமனதாய் பலமோடு என்றென்றும் பரம்பொருளாய் எங்கும் நிறைந்ததாய் நிறைந்ததாய் அதே நிறைந்த தாய் நிறைந்ததாய் இருக்கின்ற அது உயர்ந்த தாய் அது உயர்ந்த தாய் என்றும் உள்ள தாய் உள்ளதாய் பெற்றதாய் யாரும் பெறாத தாய் இதுபோல் வந்ததாய் போனதாய் இருக்கின்ற உயிர்க் கூட்டம் அங்கு சென்று இருப்பதாய் இருப்பதை உணர்ந்ததாய் இருக்குங்கால் அத்தருணமே அத்தாய் எத்தாய் ? என நிறைவதாய் புரிந்துகொள்ளும் தன்மையதாய் இருக்குந்தாய் . எனவே கண்டதாய் காணாததாய் இருக்கின்ற அத்தாய் அதுவே என்றும் பெற்றாய் என்று உணரக்கூடிய ஒரு தாய் . இதுபோல் உளதாய் இலதாய் என்று அருணகிரி பாடினாலும் அது உள்ளதாய் அது நல்லதாய் அத்தாய் பரம்பொருள் தன்னை வணங்கி போற்றி இயம்புகிறோம் சில வாக்கு இத்தருணம்.

தருணமதில் நவமாய் அமர்ந்து நலமாய் வாக்கறிய வந்திருக்கும் அனைவருக்கும் நலமாய் வாழ்வு உயர யாம் இத்தருணம் இறையருள் கொண்டு நல்லாசி வழங்குகிறோம். இதுபோல் பல்வேறு தருணங்களில் மாந்தர்களுக்கு பல்வேறு ஐயங்கள் எது குறித்தும் எழுந்துகொண்டே இருக்கும்.இயம்பிடுவோம் ஒருவன் நல்லவனோ நல்லவன் அல்லாதவனோ அவன் மனதிலே ஒரு வினா இருந்துகொண்டே இருக்கும். நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஆண்டு கொண்டிருப்பது உண்மையென்றால் அதன் தன்மை பராக்கிரமம் கட்டாயம் உயர்ந்ததாக இருக்கும். அப்படி உயர்ந்ததாக இருக்கக்கூடிய அந்த பரம்பொருள் உண்மையில் உயர்ந்ததாகவும் இருக்கும்.

அப்படி உயர் உயர் உயர் பெருமைகளை உயர் உயர் உயர் பண்புகளையெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள அந்த பரம்பொருள் அதன் அளக்கவொட்டா பெரும் சக்தியைக் கொண்டு படைத்திட்ட உயிர்களில் மட்டும் ஏன் இத்தனை பேதங்கள்? இதோடு மட்டுமல்லாமல் இதுபோல் ஜீவ அருள் ஓலை மூலம் மகான்கள் வாக்கினை கூறுகின்ற தருணம் ஜீவ அருள் ஓலை மூலம் வாக்குகளை அறிந்து கொண்டே வருகின்ற மனிதர்கள் ஜீவ அருள் நாடியிலே சித்தர்களின் அருளாசியைப் பெற்றதாலோ அல்லது பூர்வ புண்ணியத்தாலோ மகான்களின் கருணை மிகுந்த வாக்குகளை பெற்றுக் கொண்டே வருகிறார்கள். மகான்களும் அதுபோல் மனிதன் வந்தால் வாக்குகளை கூறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் மனிதனின் அந்தரங்கம் என்பது பல்வேறு தருணங்களில் சராசரி மனிதராலோ ஏன்? நல்ல ஒழுக்கம் மிகுந்த மனிதராலோ ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அதாவது எம்முன்னே அமர்ந்து ஒருவன் வாக்கினை கேட்கிறான். கேட்கிறானோ நம்புகிறானோ ஆனால் தொடர்ந்து இங்கு வந்து கேட்கிறான். யாமும் கூறுகிறோம். ஆனால் இன்னொருவன் அதைப் பார்த்து இங்கு இருப்பது சித்தர்கள்தானா? வந்து அமர்ந்த மனிதன் என்னென்ன செய்கிறான்?ஏதேதோ செய்கிறான் ? இவையெல்லாம் மனிதனாகிய நமக்கே தெரிகிறதே? உண்மையில் மகான்கள் என்றால் அது தெரியாமல் இருக்குமா? இத்தனை தவறுகளை இத்தனை பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் மகான்களின் முன்னால் வந்து அமரும் பொழுது அந்த பாவங்களையும் தவறுகளையும் சுட்டிக் காட்டி அப்பனே நீ இன்னின்ன தவறுகளை செய்கிறாய். இன்னின்ன விதமான பாவங்களை தொடர்ந்து செய்கிறாய். இதையெல்லாம் விட்டுவிட்டு வா பிறகு வாக்கு உரைக்கிறோம் என்று மகான்கள் ஏன் கூறுவதில்லை? அப்படி அவர்கள் கூறும் பொழுது தான் பிறர் அறியாமல் செய்கின்ற தவறுகளையெல்லாம் சித்தர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்படியானால் இங்கு இருப்பது சித்தர்கள்தான்.

நாம் செய்யும் தவறுகளையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேட்கின்ற மனிதனுக்கு புரிய வரும். ஒருவேளை அவன் திருந்துவதற்குண்டான வாய்ப்புகள் ஏற்படலாம். ஆனால் அப்படியெல்லாம் சித்தர்கள் சுட்டிக் காட்டாமல் தொடர்ந்து யார் வந்தாலும் வாக்குகளை கூறுகிறார்கள். இது என்ன லீலை? என்பது புரியவில்லை என்று எண்ணுகின்ற மனித கூட்டம் ஒருபுறம்.இன்னொரு புறமோ நாங்கள் நூற்றுக்கு நூறு சித்தர்களை நம்புகிறோம் இறைவனை நம்புகிறோம். எங்களால் முடிந்த தர்மங்களை செய்கிறோம். பூஜைகளை செய்கிறோம். ஆனாலும் கூட வாழ்க்கையில் பெரிதாக மாற்றமில்லை முன்னேற்றமில்லை கஷ்டங்கள் தீரவில்லை. எல்லாம் போகட்டும். ஆறுதலாக சில வார்த்தைகளைக் கேட்கலாம் என்று இங்கு வந்தால் வாக்கில்லை என்ற பதில்தான் வருகிறது. இது என்ன நிலை? என்பது புரியவில்லை என்று எண்ணுகின்ற கூட்டம் ஒருபுறம். இன்னொரு புறமோ இந்த வாக்குகளில் எல்லாம் எமக்கு நம்பிக்கை இருந்தாலும் இதனையெல்லாம் நடைமுறைப் படுத்துவதற்கு உண்டான பொருளாதார சூழல் இல்லை. உடல் ஒத்துழைப்பதில்லை. நான் விரும்பினாலும் என் மனைவி விரும்பவில்லை. என் மனைவி விரும்பினாலும் என் பெற்றோர்கள் விரும்புவதில்லை. எல்லோரும் விரும்பினாலும் பொருளாதாரம் இடம் தருவதில்லை.

இப்படியெல்லாம் செய்தால்தான் பாவங்கள் போகுமா? அது ஏன் சித்தர்கள் தனத்தையே குறிவைக்கிறார்கள்? மானசீகமாக ஒருவன் வழிபாடு செய்துவிட்டு இறைவா என்னை காப்பாற்று என்று ஒற்றை வரியில் கூறினால் போதாதா? இருக்கும் இடத்திலேயே இறைவனை வணங்கினால் போதாதா? எங்கும் சிவன் ஆலயம் இருக்கிறது பெருமாள் ஆலயம் இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு திருப்பதி போ திருவண்ணாமலை போ சிதம்பரம் போ என்று கூறுவதும் பாழ்பட்ட ஆலயங்களுக்கு சென்று வணங்க சொல்வதும் ஏன்? இல்லத்திலேயே அமைதியாக அமர்ந்து பூஜை செய்தால் போதாதா? பிரார்த்தனை செய்தால் போதாதா? மனம் செம்மையாக வேண்டும் உயர்வடைய வேண்டும். அதுதானே உண்மை. அதற்கு ஏன் இதுபோன்ற புற செயல்களை எல்லாம் செய்யவேண்டும்? எதற்காக இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும்? என்று எண்ணுகின்ற கூட்டம் ஒருபுறம். இன்னொருபுறம் நானே கடினப்பட்டு உழைக்கிறேன். நான் நேர்மையாகத்தான் ஊதியம் பெறுகிறேன். அதையெல்லாம் என் தேவைக்கும் என் குடும்ப தேவைக்கும் வைத்துக் கொண்டிட வேண்டும். எதிர்காலத்திலே உழைக்க முடியாத நிலை வரும்பொழுது நான் யாரிடம் கையேந்த முடியும்? அப்போதைக்கு இப்போதே வங்கியிலே சேமித்து வைத்துக் கொண்டால்தான் ஒருவேளை ஏதாவது ஏற்பட்டால் கூட அந்த சேமிப்பினால் குடும்பம் நன்றாக இருக்கும் அல்லவா? அப்படியிருக்க இதுபோன்ற சேமிப்புகளையெல்லாம் ஒத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் தர்மம் செய் என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது என்ன நிலை என்றே புரியவில்லையே? என்று எண்ணுகின்ற கூட்டம் ஒருபுறம்.

இன்னொருபுறம் சித்தர்களும் ஞானிகளும் எதற்கு வழிகாட்டுகிறார்கள்? இல்லறத்திலே இருந்து கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்த வழிகாட்டக் கூறினால் இல்லறத்தை விட்டு ஒதுங்கத்தானே கூறுகிறார்கள்? பற்றற்று இரு பாசமற்று இரு என்று கூறுகிறார்களே? இது எவ்வாறு சாத்தியம்? பெற்று வளர்த்த தந்தைக்கும் தாய்க்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டாமா? மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டாமா? பற்றையெல்லாம் அறுத்துவிட்டு எங்காவது வனாந்திரத்தில் போய் அமர்ந்துவிட வேண்டுமா? செய்ய வேண்டியதை எல்லாம் செய்ய வேண்டாமா? அப்படி செய்தால் அவர்களையெல்லாம் நட்டாற்றிலே விட்ட பாவம் தொடராதா? ஏன் இப்படிக் கூறுகிறார்கள்? என்று எண்ணுகின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும் விட அறம் செய் என்று வரிக்கு வரி அரசனின் வரிபோல் கூறுகிறார்களே அதை செய்வதற்கு உண்டான தனத்தை தர வேண்டாமா? நிறைய தனமிருந்தால்தானே தர்மகாரியங்களை செய்யலாம். வருகின்ற தனம் வரவிற்கும் செலவிற்கும் கூட போதவில்லை. இல்லறம் நடத்தவே பற்றாக் குறையாக இருக்கின்ற நிலையிலே எவ்வாறு அறம் செய்வது? என்று எண்ணுகின்ற ஒரு கூட்டம் ஒருபுறம். இப்படி நாங்கள் கூறுகின்ற வாக்கையெல்லாம் கூறு கூறாகப் பிரித்து அவனவன் மனம் போகின்ற போக்கிலே பொருள் கொள்வது எப்படி? என்றால் நான்கு குருடர்கள் சேர்ந்து ஒரு யானையைப் பார்த்து யானை இவ்வாறுதான் இருக்கும் என்று ஒரு யூகமாகக் கூறுவது போல ஒட்டு மொத்தமாக இழையோடுகின்ற வாக்கின் பின்னணியில் என்ன இருக்கின்றது? என்பதை உள்ளுணர்ந்து பார்க்கின்ற ஒரு திறன் இல்லாததால்தான் எமது வாக்கைக் கேட்பவர்களுக்கு பல்வேறு தருணங்களில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே மனதை திடமாக உறுதியாக நம்பிக்கையாக இறை பக்தியாக வைத்துக் கொண்டிட வேண்டும். அவனவன் சக்திக்குட்பட்டு தர்மகாரியங்களை செய்யலாம்.

அடுத்ததாக இறை வழிபாடு அதிலும் அதிகாலை எழுந்து செய்ய வேண்டிய வழிபாடு என்ற ஒன்று இருக்கிறது. கால தே, வர்த்தமான சூழலால் மனிதனின் வாழ்க்கைமுறை மாறி அதிகாலை துயில் எழுதல் என்பதே மனிதனுக்கு மிகப் பெரிய பாரமாகி விட்டது. முதலிலே ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். காலம், நாழிகை, பருவம் எல்லாம் எதற்கு பொருந்தும் ? மனிதனுக்குப் பொருந்தும், மனிதன் வசிக்கின்ற இந்த பூமிக்குப் பொருந்தும். இந்தப் புவி மண்டலத்தைத் தாண்டிவிட்டால் அப்பொழுது ஏது இரவு? ஏது பகல்? அண்ட சராசரங்களையும் தாண்டி செல்லும் பொழுது அங்கே எல்லாம் ஒன்றுதான். இந்தப் புவியிலே இந்த வளிமண்டல அழுத்தத்திலே கீழே பார்க்கின்ற மனிதன் எவ்வாறு நீரின் அழுத்தத்திலே மீன் வாழ்கிறதோ மற்ற நீர்வாழ் உயிர்கள் வாழ்கிறதோ அதைப்போல் காற்று மண்டலத்தின் அழுத்தத்திலே மனிதனும் மற்ற உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அழுத்தம் மனித உடல் மீது எப்பொழுதும் ஒரே கதியில் இருப்பதில்லை. அந்த அழுத்தத்தின் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் மனித உடலை வினைக்கேற்ப பாதிக்கும். உயர்வைத் தரும். எனவே முதலில் பக்தியை விட்டுத் தள்ளினாலும் கூட ஒரு மனிதன் வாழும்வரை தேக நலத்துடன் வாழ வேண்டும். அதற்கு இந்தப் பகுதியிலே இந்த வளிமண்டலத்திற்குள் வாழ்கின்ற உயிர்கள் அனைத்தும் சூரியன் உதிக்கும் முன்னால் துயில் களைந்தால்தான் நல்ல பலன் கிட்டும். குறிப்பாக கடைவரையில் விழி கூர்மையாக இருக்க வேண்டும். சுலோச்சனம் போடக்கூடாது என்று எண்ணக் கூடியவர்கள் யாரும் சூரியன் விழித்த பிறகு விழிக்கக்கூடாது. ஒரு பிணி வந்துவிட்டால் போதும் உடலின் முக்கியத்துவம் மனிதனுக்குப் புரிந்து விடுகிறது. ஆரோக்யத்தின் அவசியம் புரிந்துவிடுகிறது.

எனவே ஒரு மனிதனுக்கு பக்தி இறை நம்பிக்கை ஒருபுறமிருந்தாலும் தன்னுடைய பொன்னான உடலை பாதுகாக்கும் வண்ணம் இருக்கும் வரை உடல் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்றால் மிக மிக அதிகாலையிலே எழுந்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரவேண்டும். வழிபாடு செய்யா விட்டாலும் உடலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலாவது அதிகாலை துயில் எழ பழக வேண்டும். இதற்காக ஒரு மனிதனானவன் முன் இரவிலே விரைந்து துயில் கொள்ளப் பழக வேண்டும். ஏனென்றால் ஒரு மனிதனின் ஆரோக்யத்தில் குறுக்கிட இன்னொரு மனிதனுக்கு அதிகாரமில்லை. இந்த ஆரோக்யத்தின் அடிப்படையில்தான் யாம் ஒத்த முனிவர்கள் எல்லோரும் அதிகாலை துயில் களைதல் முக்கியம் என்று வலியுறுத்துகிறோம். அதன் பிறகு பக்தி வழிபாடு தியானம் யோகாசனம் எல்லாம். முதலில் எழுதல் என்பதே முக்கியம். இதுபோல் நிலையிலே ஒரு மனிதனானவன் எழுந்து எழுந்து பழகிவிட்டால் அதிகாலை துயில் களைதல் என்பது எளிமையான விஷயம் ஆகிவிடும். அடுத்ததாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்கின்ற மனிதன் அதனால் சரியான துயில் இல்லாமல் உறக்கம் வராமல் இருக்கிறான். இந்த மன அழுத்தத்தை ஒரு மனிதன் எப்படி பார்க்கவேண்டும்? என்றால் ஆனது ஆகிவிட்டது.

இப்பொழுது சயனத்திலே படுத்துக் கொண்டு காலையில் என்ன நடக்குமோ? என்று கவலைப் படுவதாலோ அல்லது இன்று அதிகாலையில் இப்படி நடந்துவிட்டதே? என்று வருத்தப்படுவதாலோ இரண்டையும் அவனால் மாற்றி விடப் போவதில்லை. இப்பொழுது என்ன வேலை? சயனம் கொள்ள வேண்டிய வேலை. விழிகளை மூடி இறைவா உன் அருளால் இன்றைய தினம் ஓரளவு நன்றாக சென்று விட்டது. நாளைய தினம் நன்றாக இருக்க வேண்டும். நான் தரை மார்க்கத்தில் வெற்றி பெறுவதற்காக உழைக்கிறேனோ இல்லையோ இறை மார்க்கத்தில் வெற்றி பெற அன்றாடம் உழைக்க வேண்டும். அதற்கு வேண்டிய உந்து சக்தியை உத்வேகத்தை கொடு என்று எண்ணி இறை நாமாவளியை மனதிற்குள் மெல்ல மெல்ல சொன்னால் அந்த மன அழுத்தம் மன பாரம் குறைந்து உறக்கம் என்பது மெல்ல வரும். எனவே இதுபோல் நிலையிலே ஒரு மனிதன் மன அழுத்தமில்லாமல் வாழ அவன்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

ஒரு மனிதனின் இருதயமானது நான் இந்த கூட்டுக்குள் இருக்கிறேன். எனக்கு சத்துள்ள உணவை இந்த மனிதன் இன்று கொடுக்கவில்லை. எனவே நான் இயங்க மாட்டேன் என்று கூறினால் என்னவாகும்? ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் போராடி போராடி ஜீவித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறதா? சரியான உணவை இந்த மனிதன் தந்தாலும் தராவிட்டாலும் போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு இருக்கிறது. சிந்தனா சக்தியில்லாமல் வெறும் இயந்திரகதியில் இயங்குகின்ற உறுப்புகளே அவ்வாறு இயங்கும் போது சிந்தனையாற்றல் கொண்ட மனிதனானவன் இதனால் நான் இதனை செய்யவில்லை. இந்த பிரச்சினை இருப்பதால் நான் இன்று பூஜை செய்யவில்லை. இந்த கஷ்டம் வந்துவிட்டதால் நான் இன்று அதிகாலை எழவில்லை. இப்படியொரு சிக்கலான சூழல் இருப்பதால் நான் இன்று ஆலயம் செல்லவில்லை. இப்படியொரு கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால் நான் தர்மம் செய்யவில்லை என்று காரண காரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லாமல் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் அதி விரைவாக அவன் கடமைகளை செய்வதோடு யாங்கள் காட்டுகின்ற பாதையில் செல்லவேண்டும். எனவே ஒரு மனிதன் எந்தவொரு நிலையிலும் தன்னுடைய குடும்பக் கடமைகளை தவறவிடக்கூடாது. ஆனால் பற்றும் பாசமும் அற்ற நிலையில் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு நாங்கள் அடிக்கடி கூறுவதுபோல மிக விலை உயர்ந்த வாகனத்தை ஒரு தனவான் வாங்கி அதை அவன் இயக்கத் தெரியாமல் இன்னொரு மனிதனை ஊதியத்திற்கு அமர்த்தி இயக்கும் பொழுது விலையுயர்ந்த வாகனத்தை இயக்கும் பொறுப்பு மட்டும்தான் நமது. ஆனால் நம்முடைய கடமை அதோடு முடிந்து விட்டது. இந்த வாகனத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என்ற நிலை தெரிந்தே அந்த வாகனத்தை அவன் இயக்குகிறானோ அதைப்போல் குடும்ப பொறுப்புகளையும் மற்ற பொறுப்புகளையும் ஒரு மனிதன் ஏற்றுக் கொண்டு கடமையை ஆற்றுவது என்பது வேறு கடமையிலேயே ஆழ்ந்து கிடப்பது என்பது வேறு.எதிர்காலம் குறித்து திட்டமிடுதல் என்பது வேறு எதிர்காலம் குறித்து கவலைப்படுவது என்பது வேறு. கடந்த காலத்தை எண்ணி இனி சற்று விழிப்போடு இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொள்வது என்பது வேறு அதிலேயே உழன்று கிடப்பது என்பது வேறு. எனவே இந்தக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் அசைபோடு நன்மை உண்டு. நாழிகை பின்பு மீண்டும் வாக்கு உரைப்போம் ஆசிகள்.

குடந்தை இராமசாமி கோவில்

கண்ணனை ஒரு புறமிருந்து பார்த்தால் ருக்மிணியை மட்டும் அணைத்திருப்பதாய் தோன்றும். மறுபுறம் பார்த்தால் சத்யபாமாவை மட்டும் கைபிடித்திருப்பதாய் தோன்றும். தூணின் கோண பகுதியில் நின்று கண்டால் கண்ணன் இருவரையும் கைபிடித்திருப்பதை காணலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 387

கேள்வி: நமது பிரார்த்தனையை இன்னும் நேர்மையாகவும் துல்லியமாகவும் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

இறைவன் கருணையைக் கொண்டு இதுபோல் செயலை விட செயலற்ற தன்மைதான் மனிதர்களுக்கு என்றுமே ஏற்றதாகும். மௌனமும் செயலற்ற தன்மையும் என்றுமே தன்னை உணர வைக்கும். தன்னை நன்றாக உணர்ந்த பிறகு தன்னை உயர்த்திக் கொள்ளவும் தன்னை இன்னும் மேம்பாடு செய்து கொள்ளவும் யாது செய்ய வேண்டும்? என்பதை அந்த மௌன நிலையிலேயே பரம்பொருள் உணர்த்தி உணர்த்தி மெல்ல மெல்ல ஆத்மாவை மேலே சேர்க்கும். எனவே அதனால்தான் யாம் அடிக்கடி கூறுவது மௌனம் பழகு மௌனம் பழகு, மௌனம் பழகு. அந்த மௌனத்திலிருந்து அனைத்துமே ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வாய் பேசாதது மௌனமல்ல. மனம் பேசாமல் இருப்பதுதானப்பா மௌனம். அதையேதான் ஒட்டுமொத்த இவன் வினாவிற்கும் விடையாகக் கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 386

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் அருளைக்கொண்டு இயம்புகிறோம் இத்தருணம் இறைவன் அருளாலே நல்லாசி எம்முன்னே அமர்ந்துள்ள சேய்களுக்கு.

இயம்புங்கால் இறைவனை வணங்கி இறைவனை வணங்கி இறையை வணங்கி என்று யாம் துவங்குவதன் பொருள் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் வடிவம் இப்படித்தான் என்று வைத்துக் கொள்ள இயலாது. இதுபோல் வடிவத்தில் மனதை லயிக்க விட்டு பிறகு வடிவமற்ற பூரணத்தை உணர்தலே மெய்ஞானமாகும். இதுபோல் இறையென்றால் அதற்குள் பூரணம் அனைத்தும் அடங்கியது என்பதாலும் ஓர் ரூபம் ஓர் வடிவம் ஓர் நாமம் இல்லாதானே பரம்பொருள் என்றும் அந்தக் கருத்தினைக் கொண்டே யாம் பொதுவில் இறை வணங்கி என்று இயம்புகின்றோம். இத்தகு இறைதன்னை மூத்தோனாக இளையோனாக முக்கண்ணனாக மகாவிஷ்ணுவாக நான்முகனாக அன்னையர்களாக இன்னும் இன்னும் பலப்பல ரூபங்களாக மாந்தர்கள் வழிபடுவதும் வணங்குவதும் அந்தந்த மனிதனின் மனப்பான்மைக்கு ஏற்ப அவனவன் வணங்கி வருவதும் நன்றுதான்.

பின்பு என்றுதான் அனைத்தும் பூரணம் ஒன்று என்று உணர்வது? அந்த ஒன்றினை உள்ளுக்குள் உணர்ந்து அந்த ஒன்றுக்குள் மனதை ஒன்ற வைத்து அந்த ஒன்றையே ஒன்றி ஒன்றி ஒன்றி ஒன்றே ஒன்று என்று உணரும் வண்ணம் ஒரு நிலை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வரும் வரை மனிதன் அவனவன் வழியில் செல்ல அதுபோல் பரம்பொருளே வழிவிடுகிறது. அத்தகு இறைக்கு பரம்பொருளுக்கு பரிபூரண சரணத்தை மனம் வாக்கு காயத்தால் எந்த மனிதன் வைத்து விட்டானோ அவனே சாயுச்சம் சாரூபம் சாலோகம் சாமீபம் என்கிற இதுபோல் நிலைகளை அடைவான். இதுபோல் நிலைதாண்டியும் இறை இருக்கிறது என்பதால் இந்த நிலை நோக்கி இந்த சேய்கள் தொடர்ந்து வர இறைவன் அருளால் யாம் மீண்டும் நல்லாசிகள் கூறுகிறோம்.

இதுபோல் பொதுவில் வாக்கு என்றால் தனித்து என்று? என்பது ஏக ஏக மாந்தனின் வினாவாகும்.

ஆகுமப்பா பொதுவில் கூறுவதையும் அதுபோல் தனிமையில் கூறுவதையும் யாம் ஒரு பொழுதும் இறைவனருளால் பூர்த்தி என்று சொல்லவில்லை. என்றாலும் தக்க ஆத்மாக்களுக்கு புரிதலுள்ள ஆத்மாக்களுக்கு கடுகளவேனும் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை புரிந்து கொண்டு இதன் வழியில் நடக்க சித்தமாய் உள்ள ஆத்மாக்களுக்கு இதுபோல் ஓலை வாசிக்கப்பட்டாலும் வாசிக்கப் படாவிட்டாலும் யாம் இறைவன் அருளால் தோன்றாத் துணையாக இருந்து கொண்டே இருக்கிறோம் அப்பா. அப்பனே இதுபோல் இப்பிறவிக்கு தாய் தந்தை தெரிகிறது மாந்தனுக்கு. எப்பிறவிக்கும் தாய் தந்தை யார்? என்றால் அது இறைதான். அந்த இறையை உணர்வதற்கு அல்லது அந்த இறை உணர்த்துவதை உணர்வதற்கு வேண்டியது முழுக்க முழுக்க சத்தியமும் தர்மமும் மட்டுமே. இந்த சத்தியத்தையும் தர்மத்தையும் வைத்துக் கொண்டு அதன் பின்பு கடுகளவு பக்தி இருந்தால் அதுவே போதும் இறையை உணர்ந்து கொள்ள. எனவே இதுபோல் இறையை தரிசிப்பதும் இறையை தரிசித்து அதன் அருளை உணர்வதும் மிக எளிது.

இயம்பிடுவோம் மேலும். எளிது என்றால் ஏன் அது அனைவருக்கும் சாத்தியப்படவில்லை? என்று ஆய்ந்து பார்க்குங்கால் யாங்கள் அடிக்கடி கூறுவது போல மாந்தனுக்கு தான் உணர்ந்ததை தான் பார்த்ததை பிறர் நம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் கட்டாயம் இறை சார்ந்த பலன் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இல்லை என் அறிவு என் வித்தை என் உழைப்பு நான் முன்னேறுகிறேன். இறை எங்கே வந்தது? பிறவி எங்கே வந்தது? நவக்கிரகம் எங்கே வந்தது? இதையெல்லாம் நம்பாத மாந்தர்களும் நன்றாக வாழ்கிறார்களே? என்றால் இதுபோல் யாம் கூறியதைக் கூறுகிறோம். ஒவ்வொரு பிணி நீக்கும் மருந்து தொடர்பான அந்த விகிதத்திலே இன்ன இன்ன உட்பொருள்கள் கலக்கப்பட்டு இருக்கின்றன என்கிற குறிப்பு இருக்கும். ஆயினும் அதுபோல் வித்தை கல்லாத மனிதனுக்கு அந்த குறிப்பை வாசித்தாலும் புரியாது. பெரும்பாலும் யாரும் வாசிப்பதும் இல்லை. அதற்காக அந்த மருந்து உள்ளே சென்றால் இவனுக்கு என்னைப் பற்றித் தெரியாது. எனவே ஏன் என் கடமையை செய்ய வேண்டும்? என்று வாளாய் இருக்கிறதா? இல்லையே. மருந்தின் நுட்பம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மருந்து எப்படி வேலை செய்கிறதோ அதுபோல் பிறவி இருக்கிறது என்று நம்பினாலும் நம்பாவிட்டாலும் நவக்கிரகங்கள் வாயிலாக இறைவன் பரிபாலனம் செய்கிறார் என்பதை ஒரு மனிதன் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுபோல் நடந்து கொண்டேதான் இருக்கும் இறைவனின் விளையாடல். இதுபோல் நிலையிலே ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் கூட அவனவன் கர்ம பாவத்தைப் பொருத்தது.

இதுபோல் எம் சேய்களுக்கு நம்பும் சேய்களுக்கும் நம்பா சேய்களுக்கும் இனிவரும் சேய்களுக்கும், இனி எதிர்காலத்தில் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை நாடி வருகின்ற சேய்களுக்கும் இறைவனருளால் யாம் தற்சமயம் கயிலையில் இருந்தே நல்லாசிகளைக் கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.

அர்ஜூனனின் ஆர்வம்

அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரர் துரோணாச்சாரியரை அழைத்தார். அவர் வந்ததும் எனக்கு ஒரு சந்தேகம் என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல் வித்தைக்களை கற்பிப்பது தானே நல்ல ஆசானின் இலக்கணம்? என்று திருதராஷ்டிரன் கேட்டார். ஆம் மன்னா பதிலளித்தார் துரோணர். தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம். மன்னா என்ன கூறுகிறீர்கள்? திடுக்கிட்டார் துரோணர். துரோணரே பாண்டவர்களையும் கௌரவர்களையும் தாங்கள் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் திருதராஷ்டிரர்.

பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட கௌரவர்கள் தன்னைப் பற்றி தவறாக ஏதோ சொல்லி இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டார் துரோணர். பிறகு அவர் மன்னிக்க வேண்டும் மன்னா நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம் முயற்சி உத்வேகம் தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர வேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறினார். அதோடு கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று துரோணர் எண்ணினார். மறு நாள் காலை நேரத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக வந்து துரோணரை வணங்கி நின்றனர். அவர்களிடம் துரோணர் சீடர்களே இன்று நான் ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப் போகிறேன். அதற்காக நாம் காட்டுக்குச் செல்லலாம் என்றார். உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.

ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர் ஆற்று மணலில் தன் விரலால் ஒரு ஸ்லோகத்தை எழுதினார். சீடர்களே இன்று உங்களுக்குக் கற்பிக்கப் போகும் வித்தை மூலம் ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம். நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகிக்கிறேன் என்று கூர்ந்து கவனியுங்கள் என்றவர் அர்ஜுனனிடம் அர்ஜுனா கமண்டலத்தை எடுத்து வர மறந்து விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில் இருந்து அதை எடுத்து வா என்றார். குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு நழுவி விடுமோ? என்ற கவலையுடன் குருநாதரின் குடிலை நோக்கி விரைந்தான் அர்ஜுனன். கமண்டலத்துடன் திரும்பியவன் அவர்கள் ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தான். உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம் சென்றான். கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான். குருவே என்னை மன்னியுங்கள் சற்றுத் தாமதமாகி விட்டது என்றான் அர்ஜுனன். அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக் கொண்ட துரோணர் மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார் நல்லது சீடர்களே இன்று கற்பித்த வித்தையில் எவருக்காவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் என்றார். குருவே நான் வருவதற்குள் பாடம் முடிந்து விட்டதா? என்று ஏமாற்றமாகக் கேட்டான் அர்ஜுனன். ஆம் என்று அவனுக்கு பதிலளித்த துரோணர் மற்றவர்களை நோக்கி சரி ஒவ்வொருவராக வந்து ஸ்லோகம் சொல்லி அம்பைப் பிரயோகித்து அந்தக் காட்டுப் பகுதியை எரியுங்கள் பார்க்கலாம் என்றார்.

கௌரவர்கள் நூறு பேர் பாண்டவர்கள் நால்வர் (அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக வந்து ஸ்லோகத்தை உச்சரித்து அஸ்திரம் பிரயோகித்தனர். ஆனால் பலன் இல்லை. என் உழைப்பு மொத்தமும் வீண் என்று கோபத்தில் கத்தினார் துரோணர். குருவே தாங்கள் ஆணையிட்டால் அந்தக் காட்டை நான் எரித்துக் காட்டுகிறேன் என்று அர்ஜுனன் முன்வந்தான். உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும் கேலிக் கூக்குரல்களும் எழுந்தன. பாடம் நடத்தும் போது இவன் ஆளே இல்லை. பாடத்தைக் கவனித்த நம்மாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. இவன் எரித்துக் காட்டப் போகிறானாம். நல்ல வேடிக்கை என்று இகழ்ந்தனர். வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப் போகிறான் என்றான் கௌரவர்களில் ஒருவன். துரோணர் அர்ஜுனனிடம் எங்கே எரித்துக் காட்டு. பார்க்கலாம் என்றார். வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன் கண்களை மூடி ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகித்தான். உடனே காடு திகுதிகுவென தீப்பிடித்து எரிந்தது கௌரவர்கள் உட்பட அனைவருக்கும் பிரமிப்பு. அர்ஜுனா மந்திர உபதேசம் செய்யும் போது நீ இங்கு இல்லை. பிறகு எப்படி உன்னால் இதைச் சாதிக்க முடிந்தது? என்று துரோணர் கேட்டார். குருவே கமண்டலத்துடன் ஆற்றங்கரைக்கு வந்த போது அங்கு நீங்கள் மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன் படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன் அவ்வளவுதான் என்றான். துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. ஒரு சீடனிடம் ஆர்வம் இருந்தால் குருவின் போதனையை எப்படியும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அர்ஜுனனே சாட்சி என்ற துரோணர் கௌரவர்களைப் பார்த்தார். வெட்கித் தலை குனிந்தனர் கௌரவர்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 385

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணுகின்ற நன்மைகளை எண்ணுகின்ற நல்ல ஆத்மாக்களுக்கு இறைவன் அருள் என்றும் தொடரும். இறைவனின் கருணையைக்கொண்டு நாங்கள் சில ஆத்மாக்களை கடைத்தேற்ற என்றென்றும் ஒரு முயற்சியில் இறங்கிக் கொண்டே இதுபோல் இறைவன் இறைவன் என்று கூறிக்கொண்டே அந்த இறைவனின் கருணையை அந்த ஆத்மாக்கள் உணரும் பொருட்டு உய்யும் பொருட்டு ஒரு கருவியாக இருந்து செயல் பட்டுக் கொண்டே இருக்க அதே இறைவன் எம்மை படைத்த காரணம் என்று எண்ணி யாம் என்றென்றும் எம்வழி சென்று கொண்டிருக்கிறோம். இதுபோல் பலவிதமான ஆர்வம் எம்மீது கொண்ட பல்வேறு மனிதர்களை யாங்கள் அறிவோம். அதுபோல் மெய்யாக மெய்யாக மெய்யாக எம் மீதும் எம் வழிமுறை மீதும் ஆர்வம் கொண்ட அனைத்து ஆத்மாக்களுக்கும் நாங்கள் நல்லாசிகளை என்றுமே வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனாலும் மனிதர்கள் தாம் தாம் அறிந்த வகையிலே சிந்திப்பது யாதென்றால் தன்னை விட உயர் சக்தியின் துணை கிடைத்து விட்டால் தன்னை விட மேம்பட்ட சக்தியின் உதவி கிடைத்து விட்டால் குறிப்பாக இது போன்ற சித்தர்களின் அருளாசி கிடைத்து விட்டால் அல்லது சித்தர்களின் தொடர்பு இருந்து விட்டாலே எவ்வித துன்பங்களும் இல்லாமல் வாழ்க்கை சுகபோகமாக செல்ல வேண்டுமே ஆனால் அவ்வாறு செல்வதில்லையே? பிறகு எப்படி இது போன்ற விஷயங்களை நம்புவது? சித்தர்களை நம்பி ஓரளவு சித்தர்கள் வழியில் வருகின்ற மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. இதனை நம்பாத மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. என்ன பெரிய வேறுபாடு? என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுகின்ற எண்ண ஓட்டங்கள் அனைத்தையும் யாம் அறிவோம்.

பலமுறை யாங்கள் ஞானமார்க்கம் குறித்து விதவிதமான வார்த்தைகளை பயன்படுத்தி கூறினாலும் கூட அறியாமையும் மாயையும் பற்றும் பாசமும் மனிதனை ஒரு நிலைக்குமேல் சிந்திக்க விடுவதில்லை. இறைவனின் கருணையால் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டியது யாதென்றால் இதுபோல் ஆசையும் தீவிர ஆசையும் நிலையற்ற தன்மை மேல் வைக்கின்ற பற்றும் என்றுமே துன்பத்தை தந்து கொண்டுதான் இருக்கும். விழிப்புணர்வற்ற ஞானமற்ற ஒன்றின் மீது மனிதன் வைக்கின்ற விருப்பமோ ஆசையோ பற்றோ கட்டாயம் ஒரு நிலையில் அவனுக்கு இன்பத்தை தருவதுபோல் இருந்தாலும் மறுநிலையில் துன்பத்தைத் தரும். அதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வனாந்தரம் செல்ல வேண்டுமா? குகையிலே அமர்ந்து சதா சர்வகாலம் தவம் செய்ய வேண்டுமா? என்றெல்லாம் மனிதர்கள் வினவலாம். அது ஒரு நிலை.

இந்த சமூக வாழ்க்கையை நன்றாக நேர்மையாக மேற்கொள்வதோடு எந்த பந்தபாசத்திலும் பற்றிலும் ஆழ்ந்து விடாமல் வாழப்பழகுவதே மெய் ஞானத்தை நோக்கி நன்றாக வலுவாக செல்வதற்குண்டான வழிமுறையாகும். ஒன்று தீவிரமான நேர்மையான சிந்தனையை வளர்த்துக் கொண்டு அந்த நேர்மையான சிந்தனைக்கு பங்கம் வராமல் வாழக் கற்றுக் கொண்டிட வேண்டும். இல்லையென்றால் பரிபூரண சரணாகதி பக்தியிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அனைத்தும் இறைவனுக்குத் தெரியும். இறைவன் பார்த்துக்கொள்வார் என்று வாழ்ந்து விட வேண்டும். ஆனால் மனிதர்கள் சில சமயம் அப்படியும் சில சமயம் இப்படியும் வாழ்வதே பல்வேறு விதமான குழப்பங்களுக்கு வழி வகுக்கிறது. இப்படி வழி வகுத்திடாமல் மனிதன் தன்னையும் நிம்மதியாக வைத்துக் கொண்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் நிம்மதியாக வாழும்படி செய்வதற்குண்டான செயலை செய்வதே வாழ்க்கையை எமது வழியில் வாழ்வதற்கு ஒப்பாகும். தன்னை சுற்றியுள்ள எல்லா வகை உயிர்களுக்கும் எந்த வகையிலும் தீங்கை செய்யாமல் எண்ணுகின்ற எண்ணத்தில் கூட பிறரை இழிவாக தரக் குறைவாக எண்ணாமல் பிறரை பற்றி ஒரு தவறான விமர்சனத்தை உருவாக்கி விடாமல் வாழக் கற்றுக்கொள்ள அதே இறைவழியில் செல்வதற்குண்டான சரியான வழியாகும்.

சதுரகிரி

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை சதுரகிரியாகும். சதுர் என்றால் நான்கு. கிரி என்றால் மலை நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன. சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி குபேர கிரி சிவகிரி சக்தி கிரி மேற்கே விஷ்ணுகிரி சந்திர கிரி வடக்கே கும்ப கிரி மகேந்திர கிரி இந்திர கிரி சஞ்சீவி கிரி தெற்கே பிரம்ம கிரி சித்தி கிரி இராம கிரி உதய கிரி இருக்கிறது.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் தன் மாமனார் வீட்டிற்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார் இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால் மனம் திருந்தி சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் தரிசனம் கொடுக்க நினைத்த இறைவன் ஒருநாள் சிவன் ஒரு துறவியின் வேடத்தில் சிவ பூஜைக்கு பால் கொடுக்கும் காராம் பசுவின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்து விட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன் என்று தெரிவித்து மறைந்தார்.

சதுரகிரி மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன. 1. மகாலிங்கம் 2. சுந்தரமூர்த்தி லிங்கம் 3. சந்தன மகாலிங்கம் 4. இரட்டை லிங்கம் 5. காட்டு லிங்கம். சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகள் உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம் சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள் மூலிகைகள் இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

சதுரகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருக்கிறார். 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது.

கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குணம் கொண்ட மரம் செடி கொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கிய சுனைகளாக இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர் போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும் துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.