ஒரு ஊர் ஒரே நாமம் மூன்று ஆலயங்கள்

ஒரு ஊர் ஒரே நாமம் மூன்று ஆலயங்கள்

கீழச்செவல் கிராமத்திற்கும் சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதி சித்தர் காட்டில் உள்ளது. இங்கு அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்த மழையால் தாமிரபரணி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத் சித்தர் காடு பகுதி நீருக்குள் மூழ்கியது. அப்போது கரையில் இருந்த சித்தீஸ்வரமுடையார் என்ற அங்குண்டீஸ்வரர் கோவில் மணலில் புதைந்தது. அந்த இடத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக சுத்தமல்லி பகுதியில் இருந்த தாமிரபரணி தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து அங்கு மணல் அள்ளப்பட்டதால் சுமார் 8 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த சித்தீஸ்வரர் கோவில் 2013 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தென்பட்டது. அந்த பகுதி மக்கள் அடியார்களின் நடவடிக்கையால் மணல் குவியல் அகற்றப்பட்டு ஆலயத்தின் முழு வடிவமும் வெளியே தெரிந்தது. ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. அதைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த நிலை எப்போதுமே கயிலாய மலையில் சிவன் குளிர்ச்சியாக இருப்பது போலவே விளங்குகிறது. இங்கு அம்பாள் இல்லை. ஆற்றில் வெள்ளத்தில் சிலை அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது சுவாமிக்கு மட்டும் தினமும் பூஜை நடக்கிறது. தாமிரபரணி ஆற்றின் உள்ளே இருக்கும் சிவாலயம் ஆதி தலம் ஆகும். இந்த ஆலயம் தண்ணீருக்குள் மூழ்கிய வேளையில் தென் புறத்தில் ஒரு ஆலயம் அமைத்து சிவனை பூஜித்து வந்துள்ளார்கள். அந்த ஆலயம் தற்போதும் உள்ளது. அதே போல் கந்தர்வன் வழிபட்ட ஆலயம் வடகரையில் உள்ளது. ஒரே இடத்தில் ஆற்றின் நடுவிலும் ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கிறது.

கோமதி அம்பாள் சமேத என்ற அங்குண்டீசுரமுடைய நயினார் ஆலயம் தாமிரபரணி ஆற்றங் கரையில் கீழச்செவல் கிராமத்திற்கும் சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதி சித்தர் காட்டில் உள்ளது. இறைவனுக்கு கந்தவேஸ்வரர் சித்தீஸ்வரர் அங்குண்டீஸ்வரர் என்ற பெயரும் உள்ளது. பரசுராமர் பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. சித்தபுரி வேதபுரி ரிஷிபுரி சித்தர்காடு சித்தவல்லி சித்தமல்லி சுத்தமல்லி என்று பல பெயர்களைக் கொண்டது இந்த இடம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலத்தில் பல சித்தர்கள் முனிவர்கள் தேவர்கள் வழிபட்டுள்ளார்கள். பதினெண் சித்தர்களும் இதற்கு முன் வாழ்ந்த ஸ்ரீசந்தானு மகானு பாவுலு சித்தரும் தங்களது மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பாக சித்தீஸ்வரரை வணங்கி அந்த சக்தி முழுவதையும் இந்த ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இந்த இறைவன் ஆதி மருந்தீஸ்வரர் என்ற பெயரும் கொண்டுள்ளார். தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது கருவூர் சித்தர் பல சிவன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு சித்தீஸ்வரரை தரிசிக்க வந்தார். சுத்தமல்லியில் உள்ள தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்றபடியே சிவனை பார்த்தார். இறைவனோ வெள்ளத்துக்குள் மூழ்கி இருக்கிறார். தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்று கொண்டு நான் உம்மை எப்படி வழிபடுவது? என வேண்டினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. வடகரையில் கந்தர்வன் அமைத்த ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கி செல். அங்கு (தாமிரபரணி நதிக்குள்) நான் உண்டெனில் இங்கும் (வடகரையில்) நான் உண்டு என்று அந்த அசரீரி சொன்னது. எனவே தான் வடகரையில் உள்ள சிவனும் அங்குண்டீஸ்ரமுடையார் என பெயர் பெற்றார்.

கந்தர்வன் ஒருவன் துர்வாசரின் சாபத்தால் நாரையாக மாறினான். தனக்கு சுய உருவம் கிடைக்க சிவபெருமானை நினைத்து தவம் செய்தான். அசையாமல் சமாதி நிலைக்கு சென்றான். பிரம்மா மலை மேல் இருந்து கசாலிகா தேவியை நதியாக ஓடிவரச் செய்தார். அந்த நதி சமாதி நிலையில் இருந்த கந்தர்வனை வெகு தூரம் அடித்து வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் விட்டது. கந்தர்வன் கண் விழித்த போது ரிஷி பத்தினியான அக்னிசிகாவின் ஆசிரமம் தென்பட்டது. ரிஷிபத்தினி கற்கள் நிறைந்த ஒரு கலசத்தை கந்தர்வனிடம் கொடுத்தார். அதை வைத்து அவன் பூஜித்து வந்தான். சில நாட்களில் கலசத்தில் இருந்த கற்கள் அனைத்தும் சேர்ந்து சிவலிங்கமாக மாறியது. அதை பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி அங்கே பிரதிஷ்டை செய்து வணங்கினான் கந்தர்வன். அப்போது ஈசன் சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் தோன்றி காட்சி தந்தார். அந்த இறைவன் கந்தவேஸ்வரர் என்று பெயர் பெற்றார். கந்தர்வன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான். ஆனாலும் வருடம் தோறும் மீன ராசி பரணி நட்சத்திரம் அன்று தேவர்கள் புடைசூழ இங்கு வந்து சிவபூஜை செய்கிறான்.

ஒரு சமயம் சரஸ்வதி தேவிக்கு துர்வாச முனிவரால் சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க பிரம்மனுடன் சரஸ்வதி தேவி சித்தர் காட்டிற்கு தவம் செய்ய வந்தாள். அவள் பூஜிப்பதற்காக மாணிக்க லிங்கம் ஒன்றை தேவ சிற்பியான விஸ்வகர்மா வடிவமைத்தார். சித்தர் காட்டில் உருவான அந்த லிங்கத்திற்கு சித்தீஸ்வரர் என்று பெயர். ஆரம்ப காலத்தில் இந்த ஈசனை அகத்தியர் வழிபட்டு வந்துள்ளார். அவர் உலகை சமன் செய்ய பொதிகை மலை வந்தார். அங்கு கயிலை நாதனான சிவபெருமானை வணங்க ஆவலாய் இருந்தார். ஒவ்வொரு நாளும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்து நின்றபடி ஈசனே நான் உம்மை கயிலாய மலையில் உள்ள படியே பூஜிக்க வேண்டும் என்று வேண்டினார். அப்போது சரஸ்வதிதேவி பூஜை செய்த இறைவன் அகத்தியருக்கு காட்சியளித்தார். உடனே அகத்தியர் இறைவா தாங்கள் கயிலாயநாதர். பனி படர்ந்த மலையில் குளர்ச்சியாக வாழ்பவர். இங்கேயும் அதே போல் நீங்கள் தான் தோன்றினீர்களா? என்று கேட்டார். அப்போது அங்கும் நான் உண்டு இங்கும் நான் உண்டு ஒரு அசரீரி வாக்கு கேட்டது. எனவே இந்த இறைவனுக்கு அங்குண்டீஸ்வரர் என்று அகத்தியர் பெயரிட்டு வணங்கினார்.

ஹயக்ரீவரின் சாபத்தால் குதிரை முகம் கொண்ட பெண் இக்கோவிலில் வழிபட்டு சாப விமோசனமும் ஞானமும் பெற்றதால் குரு சாப நிவர்த்தி தலமாகவும் இது திகழ்கிறது. இந்த ஆலயம் திருநெல்வேலில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாளையங் கோட்டை சேரன் மகாதேவி சாலையில் மேலச்செவல் என்னும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நயினார் குளம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரின் தாமிர பரணி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் உள்ளது.

சுலோகம் -142

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-23

ஏனெனில் பார்த்தா நான் கர்மங்களில் ஈடுபடாமல் இருந்தால் பெரிய தீங்கு விளையும். மனிதர்கள் எல்லா விதங்களிலும் என்னுடைய வழியை பின் பற்றுவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நான் எந்த விதமான கர்மங்களும் செய்யாமல் இருந்தால் இதனை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களும் என் வழியை பின்பற்றி ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவார்கள். உலகம் இயங்குவதை கர்மமே நிர்ணயிக்கிறது. மக்கள் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டால் உலக இயக்கம் சீராக நடைபெறாது.

சாயா சோமேஸ்வரர் ஆலயம்

மூலவர் சோமேஸ்வரர் லிங்க வடிவில் இருக்கிறார். இங்கு மூன்று கருவறைகள் ஃ வடிவில் அமைந்துள்ளன. சிவன் விஷ்ணு சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம் இது. இக்கோவிலின் மூன்று கருவறைகளில் ஒன்றுக்கு பிரம்ம கருவறை என்றும் மீதி இரண்டுக்கு லங்க கருவறை என்றும் பெயர் என்று கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது. பிரதான கோவிலில் உள்ள சோமேஸ்வரர் லிங்கத்தின் மீது நாள் முழுவதும் ஒரு நித்திய நிழல் இருப்பதால் இந்த கோவிலுக்கு சாயா சோமேஸ்வரர் கோயில் என்று பெயர் வந்தது. சாயா என்பது நிழலை குறிக்கும். இந்த கோயிலுக்கு எதிரில் ரங்க மண்டபம் என்ற அர்த்த மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தூண்களை கொண்ட ஆச்சர்யமான சிற்ப வேலைப் பாடுகள் உள்ளன. இது நேரடியாக சூரிய ஒளி படுமாறு அமைந்துள்ளது. இது திரிகூடலாயம் (மூன்று சன்னதி வளாகம்) என்று அழைக்கப்படுகிறது. மூன்று ஆலயங்களும் சிக்கலான செதுக்கப்பட்ட தூண்களுடன் ஒரு பொதுவான மண்டபத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த சிற்பங்கள் மகாபாரதம் இராமாயணம் போன்ற புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன. இந்தக் கோயிலின் விமானம் பிரமிடுகளை ஒத்துள்ளது. இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. சாயா என்பதற்கு நிழல் என்று பொருள். அதன் படியே சூரியனுக்கான சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை.

அறிவியலின் படி எந்த ஒரு பொருளின் மீது சூரிய ஒளி பட்டாலும் அந்த பொருளின் நிழல் அதற்கு முன்பு விழும் பின் சூரியன் நகர நகர அந்த நிழலும் நகரும். ஆனால் இந்த கோயிலில் லிங்க கருவறையில் லிங்கத்தின் பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. ஆனால் காலையில் எந்த இடத்தில் இந்த நிழல் இருந்ததோ சூரியன் மறையும் வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த நிழல் சூரியனின் நகர்விற்கேற்ப நகர்வதில்லை. இந்த கருவறைக்கு முன் நான்கு தூண்கள் உள்ளன இதில் எந்த தூணின் நிழல் கருவறைக்குள் விழுகிறது என்றும் தெரியவில்லை. எந்த தூணின் பின் நின்றாலும் நம் நிழல் விழாமல் தூணின் நிழலே விழுகிறது. ஆனால் பிரம்ம கருவறைக்கு முன் நின்று பார்த்தால் பிரம்மனுக்கு நான்கு தலை என்பதை சொல்லும் விதமாக நம் நிழல் நான்காக விழுகிறது அதுவும் எதிர் திசையில் விழுகிறது. இது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

கோவிலின் கிழக்கே வற்றாத திருக்குளம் உள்ளது. கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும் தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியபடி சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. இவ்வாலயத்தில் அமைந்திருந்த விஷ்ணு சூரியன் நந்திகள் அம்பாள் சிலைகள் டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பின் சிதைவால் அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கருவறை முன்புறம் விநாயகர் முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார். சிவன் விஷ்ணு சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம் ராமாயணம் சிற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் விநாயகர் குமாரசுவாமி சாயா சோமேஸ்வரர் மகாவிஷ்ணு சூரியன் யோகினி மாதா நடராஜர் பைரவர் காளிக்கா மாதா ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தனியே சிறிய சிவாலயம் ஒன்றும் உள்ளது. தல மரமாக அவதம்பர் என்ற அபூர்வ மரம் உள்ளது. இதில் தத்தாத்ரேயர் தவமியற்றி உள்ளார்.

கோவில் ஆலய வளாகத்தில் 7 நந்திகள் முகலாயர்களால் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றன. அதில் முதல் நந்தியை கழுத்தில் கைகளால் தடவிப் பார்த்தால் உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்று இருக்கும். இது முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கோயில் முக்கோன வடிவிலும் கருவறை விமானம் பிரமிடு அமைப்பிலும் கட்டப்பட்டு உள்ளது. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் பனகால் பிராந்தியத்தில் தெலுங்குச் சோடர்களும் குண்டூரு சோழர்களும் காக்கத்தியப் பேரரசின் முதலாம் பிரதாபருத்திரன் ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டது. ஐதராபாத்திலிருந்து 100 கிமீ தொலைவில் தெலுங்கானா மாநிலம் நல் கொண்டா அருகில் அமைந்துள்ளது சாயா சோமேஸ்வரர் கோயில். பனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 255

கேள்வி: ஜேஷ்டா தேவியைப் பற்றி முழுமையாக சொல்லுங்கள்:

இறைவனின் கருணையால் யாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல பரம் பொருளின் வெவ்வேறு வடிவங்கள் விதவிதமான தெய்வ நாமத்தில் விளங்கி மனிதர்களின் தேவைக்கு ஏற்ப அருளைத் தருகிறது. ஒரே மனிதன் தந்தையாக சகோதரனாக கணவனாக அலுவலகத்தில் அதிகாரியாக எப்படியெல்லாம் உருமாற்றம் அடைகிறானோ அப்படிதான் பரம் பொருள் விதவிதமான வடிவங்களில் மனிதர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. இதுபோல் நிலையிலே துயில் (தூக்கம்) தொடர்பான பிரச்சனைகள் அமைதியற்ற மனம் கொண்டவர்கள் நல்ல முறையிலே வழிபட வேண்டிய தெய்வ வடிவம் இன்னவன் வினவிய (கேள்வி கேட்டவர்) தேவியின் வடிவமாகும். இந்த அளவிற்கு இதனைப் புரிந்து கொண்டு இந்த வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மையைத் தரும்.

கேள்வி: அயல்நாடு (செல்லும்) ஆசை நிறைவேற வேண்டும்:

கேது பகவானை வணங்கலாம். நவகிரக வழிபாட்டை செய்யலாம். கருடாழ்வாரை வணங்கலாம். அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கலாம். இயல்பாகவே ஜாதகத்தில் ஆழி (கடல்) தாண்ட வேண்டும் என்ற நிலை இருக்கும் மனிதர்களுக்கு சிறிய முயற்சியினால் வெற்றி வந்து விடுகிறது. இல்லையென்றால் சற்று அதிகமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிதான் வேண்டும் என்பதை விட இறைவா கடல் தாண்டி செல்ல வேண்டும். அதுபோல தேசம் பார்க்க வேண்டும். அங்கும் சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. இது எனக்கு ஏற்றதென்றால் நிறைவேற்றித் தா. இதனால் நன்மையை விட தீமை அதிகம் விளையும் என்றால் நீயே தடுத்து விடு என்று இறையிடமே இந்த பிரச்சனையை ஒப்படைத்து பிராத்தனை செய்வதே ஏற்புடையது.

சுலோகம் -141

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-22

அர்ஜூனா எனக்கு மூவுலங்களில் செய்ய வேண்டிய கடமை என்பது ஏதும் கிடையாது. நான் அடையாதது ஏதும் இல்லை. நான் அடையக் கூடியதும் ஏதும் இல்லை. இப்படி இருந்தாலும் எனது கர்மங்களை நான் தொடர்ந்து இயற்றி வருகிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மூன்று உலகங்களான மேலோகம் பூலோகம் பாதாளலோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் நான் செய்தே ஆக வேண்டும் என்ற எனக்கான கடமைகள் என்று எதுவும் இல்லை. ஆசைப்பட்டும் ஆசைப்படாமலும் அடைய வேண்டியது அனைத்தையும் நான் அடைந்து விட்டேன். இனிமேல் நானாக சென்று அடைய வேண்டியது என்றும் எதுவும் இல்லை. ஆனாலும் உலகத்தின் நன்மைக்காக நான் செய்ய வேண்டிய செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 254

அகத்திய மாமுனிவர் கூறும் கதை:

இறைவன் அருளால் ஒரு சிறிய காதையை (கதை) கூறுகிறோம் புரிந்து கொள்ளப்பா. உங்களில் பலருக்கு இராமாயணம் தெரிந்திருக்கும். அதிலே குகன் எனப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அந்த குகன் யார் தெரியுமா? அதற்கு முந்தைய முந்தைய பிறவி ஒன்றில் ஒரு மிகப் பெரிய ஞானியின் சீமந்த புத்திரன் செல்ல புத்திரன். மிகப்பெரிய ஞானியின் பிள்ளையான இவனும் பால்ய வயதிலேயே பரிபூரண ஞானத்தை பெற்றவன். முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவன். ஒரு முறை ஒரு முக்கியமான பிரச்சனைக்காக அந்த ஆசிரமத்தை அடுத்துள்ள தேசத்து மன்னன் தன் பரிவாரங்களுடன் அந்த முனிவரை பார்க்க வருகிறான். அச்சமயம் ஆசிரமத்தில் முனிவர் இல்லை. வெளியே ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார். பால்ய வயது முனிகுமாரன் மட்டும் அங்கே அமர்ந்திருக்கிறான். வந்த மன்னன் (உன்) தந்தையில்லையா? என்று வினவுகிறான். அமருங்கள் என்று கூறி முனிகுமாரன் (அந்த மன்னனுக்கு) உபசரணை செய்த பிறகு தந்தை இங்கு இல்லை வெளியே சென்றுவிட்டார் என்று கூறுகிறான். சரி நான் பல்வேறு குழப்பத்திற்காக (இங்கு) வந்தேன். உன் தந்தை வந்தவுடன் (மீண்டும்) வந்துக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அரசன் எழ தவறாக எண்ண வேண்டாம் அரசே என்னிடம் உங்கள் ஐயத்தைக் கூறுங்கள். முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன். என் தந்தையின் உபதேசம் ஓரளவு எனக்கு இருக்கிறது. இறைவன் அருளைக் கொண்டு நான் தீர்த்து வைக்கிறேன் என்றான் முனிகுமாரன்.

அரசன் தனக்கும் தன் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சனைகளையும் தன் எதிரிகளின் தொல்லைகளையும் தன் உடல் உபாதைகள் குறித்தும் சிலவற்றை கூறுகிறான். என்ன பிராத்தனை செய்தும் எத்தனையோ யாகங்கள் வழிபாடுகள் செய்தும் இந்த பிரச்சனைகள் தீரவில்லை என்றுதான் இங்கு வந்தேன். மிக எளிதான பிரச்சனை மன்னா நீ தேவையில்லாமல் குழப்பம் கொண்டிருக்கிறாய். நாளை அதிகாலையிலே எழுந்து குடும்பத்தோடு ஏனைய மந்திரி பிரதானிகளோடு நீராடி வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்று மூன்று முறை கூறு. அனைத்தும் சரியாகிவிடும் என்று முனிகுமாரன் கூற மிக்க மகிழ்ச்சி என்று அரசன் சென்று விடுகிறான். அவனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் முனி குமாரனாயிற்றே (அவர் சொன்னபடியே) சொல்லுவோம் என்று அதிகாலை எழுந்து அவ்வாறே செய்கிறான். என்ன ஆச்சர்யம் அந்த நாட்டிலே சுபீக்ஷம் வந்து விடுகிறது. மழை பொழிகிறது. அனைத்தும் சரியாகி விடுகிறது. மன்னனுக்கு ஒரே ஆச்சர்யம் சந்தோஷம். எத்தனையோ பெரிய பெரிய பூஜைகள் செய்தும் நடக்கவில்லையே? இந்த இளம் பிள்ளை கூறியது நடந்து விட்டதே? அவருக்கு நன்றி கூறுவோம் என்று எண்ணி உடனடியாக தன் படை பரிவாரங்களோடு அந்த ஆசிரமத்திற்கு மீண்டும் வருகிறான். அப்பொழுது அந்த முனிகுமாரனின் தந்தை அங்கு இருக்கிறார். இந்த மன்னனைக் கண்டவுடன் அந்த முனிகுமாரன் தந்தையே நேற்றைய தினம் இவர்தான் வந்திருந்தார் என்று கூற தன் ஞான திருஷ்டியின் மூலமாக அங்கு நடந்த அனைத்தையும் புரிந்து கொண்டு நலமாய் வாழ்வாய் என்று அரசனை வாழ்த்தி அனுப்பி விட்டு கடும் சினத்தோடு அந்த பிள்ளையைப் பார்த்து நீ முழு மூடன். உனக்கு அந்த இறைவனின் பெருமை தெரியவில்லை. முருகப் பெருமானின் அருமை புரியவில்லை. நீ பூமிக்கு சென்று மிக மிக தாழ்ந்த நிலையிலே பிறந்து அந்த முருகனின் பெயரைக் கொண்டு மகாவிஷ்ணு என்று இராமாவதாரம் எடுக்கிறாரோ அப்பொழுது அவருக்கு சேவை செய்து பிறகு மேலே வா என்று சபித்து விடுகிறார். முனிகுமாரன் அஞ்சி விடுகிறான்.

தந்தையே நான் பிழை ஏதும் செய்யவில்லையே? (எதற்கு இந்த தண்டனை?) என்ன குற்றம் செய்தேன்? மகா பெரிய பாவத்தை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாயே? என்று ஞானி கூற என்ன? என்று அந்த சேயவன் (மகன்) கேட்க அரசன் வந்தானா? வந்தார் தந்தையே (தன்) பிரச்சனைகளை கூறினானா? கூறினார் தந்தையே (அதற்கு) நீ என்ன கூறினாய்? அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்று மூன்று முறை கூறும்படி கூறினேன். இங்குதான் நீ மகா பெரிய பாவத்தை செய்துஙவிட்டாய். உனக்கு முருகன் மீது நம்பிக்கையே இல்லையே? ஏன்? ஒரு முறை சொன்னால் முருகன் தீர்க்க மாட்டாரா? பாவத்தை போக்க மாட்டாரா? ஒரு குளிகை தின்றால் தீரக்கூடிய வியாதிக்கு தேவையில்லாமல் மூன்று குளிகைகள் கொடுத்திருக்கிறாயே? நீ முருகப்பெருமானின் அருமையை உணராததால் மாபெரும் தவறு செய்துவிட்டாய் என்று கடிந்து கொண்டார். சற்று இந்த காதையை (கதை) நினைவூட்டப்பா. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஜபத்தை விட உள்ளன்போடு ஆத்மார்த்தமாக பரிசுத்த இதயத்தோடு ஒரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் இறை தரிசனம் வேண்டும் என்கிற அந்த எண்ணம் தீவிரமடைந்து லோகாயம் எல்லாம் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜபித்தால் கட்டாயம் இறை துவாபர யுகத்தில் மட்டுமல்ல த்ரேதா யுகத்தில் மட்டுமல்ல இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் யாமும் லகரம் (லட்சம்) ககரம் (கோடி) மந்திரங்களை ஜெபி என்று கூறுவதன் காரணமே மனித மனம் ஒரு ஒழுங்குக்கு கட்டுபடாததால் (அப்படி) கூறிக் கொண்டே இருந்தால் என்றாவது ஒரு நாள் அந்த திருவின் நாமத்தை மனம் வாக்கு காயம் (உடல்) 72000 நாடி நரம்புகள் பரவ கூறுவான் என்று தானப்பா நாங்களும் கூறுகிறோம். எனவே கூறிக் கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நிலையில் சித்திக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 253

கேள்வி: பிரம்மஹத்தி தோஷம் என்ற ஒன்று இருக்கிறதா? இருக்கிறது என்றால் அதற்கு என்ன பரிகாரம்?

இறைவன் கருணையாலே பொதுவாக பிராம்மணர்களைக் கொல்வதால் ஏற்படும் தோஷம் பசுக்களை கொல்வதால் ஏற்படும் பாவம் அல்லது தோஷம் பிரம்மஹத்தி தோஷம் என்று வழங்கப்பட்டாலும் கூட அது ஒரு குறியீடு. தவறே செய்யாத அப்பாவிகளுக்கு செய்த இடர் துன்பம் உச்சக்கட்ட பாவமாக பாவம் மீண்டும் தோஷமாகத் தொடர்வதுதான் பிரம்மஹத்தி தோஷம் எனப்படுவது. பிரம்மாவை ஹத்தி செய்தால் என்ன பாவம் வருமோ அத்தனை பாவம் வரும் என்று ஒரு குறியீடாகக் கூறப்படுவது. எனவே இது உடலுக்கு மட்டும் செய்த தீங்கல்ல. பிறர் மனதை புண்படுத்தியிருந்தாலும் அதனாலும் இது போன்ற தோஷங்கள் ஒரு மனிதனைத் தொடரும். தொடர்ந்து இறை வழிபாடும் இடைமருதூர் (திருவிடைமருதூர்) போன்ற ஆலயங்களுக்குச் சென்று இயன்ற வழிபாடுகள் செய்வதும் தொடர்ந்து அறக்காரியங்களில் ஈடுபடுவதும்தான் இதற்குத் தக்க பிராயச்சித்தமாகும்.

கேள்வி: தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக என்றாவது சாத்தியக் கூறுகள் உண்டா?

ஏன் அப்படி வரவேண்டும் என்று உன்னொத்து பலர் அப்படி எதிர்பார்க்கிறார்கள்? (அனைவரும் அந்த அருள் மொழியால் இறையருளைப் பெறுவதற்காக ஆட்சி மொழியாக வரவேண்டும் என்பதால்). ஏனைய மொழிகள் அவ்வாறு வந்தால் என்ன நட்டம் வந்து விடப் போகிறது?

சுலோகம் -140

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-21

உயர்ந்த மனிதன் எதைச் செய்கிறானோ ஏனையோரும் அதனையே செய்வார்கள். அவன் எதனைச் சிறந்தது என்று கூறுகிறானோ மனித சமுதாயம் அனைத்தும் அதையே பின்பற்றி நடக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 136 இல் சொல்லப்பட்டபடி குறிப்பிட்டு சொல்லப்படும் உயர்ந்த மனிதர் எதனை செய்கிறாறோ அது சிறந்தது நன்மையானது என்று அவரை நம்பும் மக்களும் அப்படியே செய்வார்கள். அவர் சிறப்பானது இதனை செய்யுங்கள் என்று சொல்லும் கருத்தையும் அப்படியே பின்பற்றி நடப்பார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 252

கேள்வி: எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட குலதெய்வம் தெரியவில்லை. அவர்களின் தலைமுறைக்கு பிறகு வந்தவர்கள் பழனி முருகனை குலதெய்வமாக சில காலம் கழித்து சப்த கன்னிமார்களை குலதெய்வமாக வழிபட்டிருக்கிறார்கள். இப்பொழுது நாங்கள் எந்த குலதெய்வத்தை வழிபடுவது? மேலும் வழிபாடு செய்துவிட்டு நேராக வீட்டிற்குதான் வரவேண்டுமா?

இறைவனின் அருளைக் கொண்டு யாம் கூறுவது யாதென்றால் கும்பிடும் தெய்வமெல்லாம் குலதெய்வம் என்று வைத்துக் கொள்ளலாம். தவறொன்றுமில்லை. எப்படியாவது தெய்வ நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்குதான் முன்னோர்கள் குலதெய்வம் என்ற ஒன்றை வகுத்து வைத்தார்கள். குலதெய்வத்தை வணங்கு என்று நாங்களும் கூட சில சமயம் கூறுவோம். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்குப் பிறகு மாறிப் போவது என்பது இயல்பு. இது மிகப்பெரிய குற்றமோ தோஷமோ அல்ல. இருந்தாலும் இன்னவளைப் (கேள்வி கேட்ட பெண்மணி) பொருத்தவரை சப்த மாதர்கள் சப்த கன்னியர்களை குல தெய்வங்களாக வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். அதற்காக பழனி முருகனை வணங்க வேண்டாம் என்பது பொருளல்ல.

இன்னொன்று பொதுவாக மனிதரிடம் ஒரு தவறான நம்பிக்கை இருக்கிறது. ஒரு தவறு என்றில்லை. எத்தனையோ தவறுகளில் ஒரு தவறு ஏதாவது ஆலயம் அல்லது குலதெய்வ ஆலயம் சென்று விட்டால் நேரடியாக இல்லம்தான் வர வேண்டும் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று. அப்படியெல்லாம் ஏதுமில்லை. தாராளமாக ஆலயம் சென்றுவிட்டு வேறு சில பணிகளையும் பார்க்கலாம். தவறொன்றும் இல்லை. ஆனால் உள்ளூரிலே ஒரு பிராய்ச்சித்தம் என்று செல்லும் பொழுது வேறெங்கும் செல்லாமல் நேரடியாக ஆலயம் சென்று விட்டு பிறகு மற்ற பணிகளைப் பார்ப்பது நல்ல பலனைத் தரும். அதாவது ஆலயத்தை நோக்கி செல்லும் பொழுது முதலில் ஆலயம் என்ற ஒரு நியதியை வகுத்துக் கொண்டால் அது மிக சிறப்பான பலனைத் தரும்.

கேள்வி: மனிதர்களாக வகுத்துக் கொண்டதுதான் ஜாதி மதம் என்று சொன்னீர்கள். ஆனால் சில ஜாதகத்தை ஜோதிடர்கள் பார்த்து இந்த ஜாதகர் இந்த ஜாதியை சேர்ந்தவரைதான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். அது எப்படி?

இறைவன் அருளால் ஜாதகத்தைப் பார்த்து ஜாதியைக் கூறுவது என்பது அல்ல. அதுபோல கூறுவது என்னவென்றால் இது போன்ற குணங்களைக் கொண்ட சமூகத்தை சேர்ந்த வரன் தான் கிடைக்கும் என்று கூறலாமே தவிர மற்றபடி ஜாதியை நாங்கள் கூறவில்லை. ஜாதியையும் ஜாதகம் குறிப்பதில்லை.

சுலோகம் -139

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-20

ஐனகர் முதலிய ஞானிகளும் பற்றில்லாமல் கர்மங்களை செய்ததின் மூலமாக சிறந்த பேற்றை அடைந்தார்கள். அவ்விதமே உலகத்தின் நலனை நன்கு மனதில் கொண்டு நீயும் கர்மங்களை செய்வது தான் உனக்கு உரிய செயலாகும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பற்றில்லாமல் தனக்குண்டான கடமையை செய்ததற்காக ஜனகர் போன்றவர்கள் இவ்வுலகத்திலும் மேலுலகத்தில் சிறந்த பேற்றை அடைந்தார்கள். இவர்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டும் உலகத்தின் நன்மை கருதியும் நீ பற்றில்லாமல் கர்மங்களை செய்வது உனக்கு உரிய செயலாகும்.