ஆனந்த விநாயகர்

உலகம் முழுவதும் உள்ள கோவில்களில் முதற் கடவுளாக அருள்பாலிக்கும் ஆனைமுகன் சில இடங்களில் அபூர்வ கோலத்தில் தரிசனம் தருவதுண்டு. ஊர் தகடி. திருக்கோயிலூர் வட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அழகிய பொன்னாம்பிகை உடனுறை அழகிய நாதீஸ்வரர் ஆலயத்தில் வேத கோஷத்தை கேட்கும் ஆனந்த விநாயகராக தரிசனம் தருகிறார். நான்கு திருகரங்களுடன் இடதுகாலை மடித்து வலதுகாலை ஊன்றி ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் கண்மூடி தலையை சாய்த்து ஊன்றிக் கேட்கும் தோற்றத்தில் அருளுகிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 508

கேள்வி: எண்களில் 9 இன் சிறப்பை கூறுங்கள் ஐயனே.

9 என்ற இலக்கம் மட்டும்தான் சிறப்பா? எட்டு சிறப்பு இல்லையா? 11 சிறப்பு இல்லையா? எண்கள் என்றால் என்ன இறைவனின் கருணையைக் கொண்டு எண்கள் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தால் மனிதன் குறிப்புக்காக வைத்துக் கொள்வது என்று கொள்ளலாம். இதை மனித ரீதியாகவே பார்ப்போம். ஒன்பதை இப்படித்தான் கீர (எழுத) வேண்டும் என்ற வழக்கு இருக்கிறது. இதே ஒன்பதை ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமாக கீறும் பொழுது அது மற்றவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது. மனிதன் தனக்காக வைத்துக் கொண்ட அடையாளங்களில் எப்பொழுதுமே மாட்டிக் கொள்ளக் கூடாது. இன்னொரு வகையில் நவம் என்பது புதியது என்ற பொருளைக் குறிக்கும். எல்லா வரி வடிவங்களும் அது எண்களாக இருந்தாலும் அட்சரங்களாக இருந்தாலும் சிறந்ததே. இந்த வரிவடிவங்களை ஒரு மனிதன் ஒலிப்புக் குறிப்புகளாக வாய் வழியே கூறும் பொழுது பிறருக்கு உணர்த்த கீரல் (எழுத்து) வடிவங்களை கையாண்டான். அவைகள் தான் அட்சரங்கள் ஆகின்றன. இந்த அட்சரங்களுக்கு நாளாவட்டத்தில் ஒழுங்கு வந்தது. பிறகு இலக்கணம் வகுக்கப்பட்டது. பிறகு அது இலக்கியமாக வளர்ந்தது. இவைகளை எல்லாம் தாண்டி நிலை ஒன்று இருக்கிறது அது எந்த விதமான வடிவங்களும் இல்லாத வரிகளும் இல்லாத எண்களும் இல்லாத எந்த விதமான வாத பிரதிவாதங்களும் இல்லாத ஒரு நிலை. அங்கு சுத்த பரவளி ஓங்கார நாதம் ஒன்றுதான். அந்த நாதமும் ஒரு நிலையில் மறைந்து போய்விடும். இவை தத்துவார்த்தமாக புரியவில்லை என்றாலும் கூட உன்னுடைய வினாவை வைத்து பார்க்கும் பொழுது ஒன்பதும் சிறப்பு என்று வைத்துக்கொள்.

மகிஷாசுரமர்தினி

துர்கா தேவி தனது எட்டுக் கரங்களுடன் மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை தனது திரிசூலத்தால் குத்துவது போல் அற்புதமான சிற்பம். 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் முன்பு ஒடிசாவின் கோனார்க்கில் உள்ள சூரியன் கோவிலின் கோயில் சுவரில் இருந்தது. தற்போது பிரிட்ஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

மானசாதேவி

நாகங்களின் தெய்வமான நாகதேவதையின் சிற்பம். தாமரை பீடத்தில் லலிதாசனத்தில் அமர்ந்துள்ள இவரது பெயர் மானசாதேவி. இடது கையில் பாம்பை ஏந்தியவாறு கீழே உள்ள பீடத்தில் செதுக்கப்பட்ட கலசத்தின் மீது அவளது பதக்கமான வலது பாதம் நிற்கிறது. ஒரு ஏழு தலை நாகம் எழுந்து அவளுக்கு மேலே தன் பேட்டை விரிக்கிறது. மானசாவின் கணவரான ஜரத்காரு முனிவர் ஒரு மெலிந்த சந்நியாசியாக சித்தரிக்கப்படுகிறார். அவரது மகன் அஸ்திகா இருவரும் அவரது சிம்மாசனத்தின் இருபுறமும் உள்ள இரண்டு சிறிய பீடங்களில் அமர்ந்துள்ளனர். தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 11 – 12 ஆம் நூற்றாண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 507

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 507

கேள்வி: நவக்கிரகம் என்று நாம் வழிபடுவது மொத்தமும் கிரகங்கள் தானே? அதனால் நமக்கு எப்படி நன்மையோ தீமையோ வர முடியும் அறிவியல் படி பார்த்தால்? அப்படியே ஜாதகம் என்பது ஒரு வகையான அறிவியல் கணிப்பு இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கிரகத்தால் தோஷம் இருக்கு அல்லது கெட்டது நடக்கும் என்று சொன்னாலோ ஒரு எள் தீபம் ஏற்றுவதனாலோ அல்லது ஒரு விளக்கு ஏற்றுவதனாலோ அது எப்படி மாறும்? சரி நவக்கிரக கோயிலுக்கு போறோம் அப்படி என்றால் அந்த இடத்தில் அந்த கிரகத்தின் கதிர் வீச்சு ஜாஸ்தியா இருக்கு சரி அந்த மனிதருக்கு அந்த கிரகத்தால் இருக்கின்ற தோஷம் விலகும் அப்படி என்றாலும் ஏதோ ஒரு கோயிலில் நவகிரகத்தில் போய் ஒரு எள் தீபம் ஏற்றுவதனாலோ ஒரு ஆடை சாத்துவதாலோ ஒரு பூ போடுவதாலோ எப்படி அந்த கிரகத்தால் வருகின்ற கெடுதல் மூழ்கும்?

இறைவனின் கருணையைக் கொண்டு இது போன்ற வினாக்கள் எல்லாம் கால காலம் மனிதனால் எழுப்பப்பட்டு வருகின்ற வினாக்கள் தான். வினாக்கள் எழுப்பி எழுப்பி தன்னை மேம்படுத்திக் கொள்வது தவறு அல்ல. ஆயினும் கூட சிலருக்கு விடையை ஏற்கனவே புரிந்து கொண்ட மனிதன் இந்த வினாவை பார்த்தால் ஒரு பாமரத் தனமான வினா என்று தான் எண்ணுவான். இருந்தாலும் இந்த குழந்தை வினவிய வினாவிற்கு நாங்கள் கூறுவது இந்த குழந்தைக்கு மட்டும் அல்ல வளர்ந்த குழந்தையும் புரிந்து கொள்ளத்தான். இது போலவே நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். விண்ணுலகிலே சஞ்சரிக்கும் கிரகங்கள் ஜடப் பொருள் போலும் அந்த கிரகங்கள் மண் பொன் இரும்பு பொன்ற உலோகக் கலவையால் ஆன ஒரு நிலையிலும் அந்த கிரகங்கள் எதற்காக அல்லது எப்படி மனிதனைத் தாக்குகின்றன என்பது போலவும் மனிதனுக்கு தோன்றுகிறது குழப்பம் ஏற்படுகின்றது.

இங்கே நன்றாக கவனிக்க வேண்டும். ஒரு அரசாங்கம் இருப்பதாக கொள்வோம். அந்த அரசாங்கத்திற்கு முன்பெல்லாம் மன்னர்கள் இருந்தால் மன்னர்களுக்கு என்று ஒரு இலச்சினை (குறியீடு / அடையாளம்) இருக்கும். சோழனுக்கு புலி என்றும் சேரனுக்கு வில் என்றும் அது போலவே பாண்டியனுக்கு மீன் என்றும் இப்படி பல்லவனுக்கு சிம்மம் (சிங்கம்) என்றெல்லாம் வைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ஒன்று எங்கும் மனிதனை மனிதன் இலச்சினையாக (குறியீடாக / அடையாளமாக) வைத்தது இல்லை. அவனுக்கே தெரியும் தன்னை விட விலங்குகள் தான் மேல் என்று. இது போன்) நிலையிலே நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது கூட ஒவ்வொரு அரசாங்கமும் இது இந்த தேசத்தின் அரசாங்கம் என்பதை உணர்த்துவதற்காக ஒரு குறியீட்டை (அடையாளத்தை) பயன்படுத்துகிறார்கள். அந்த குறியீடே (அடையாளமே) அரசாங்கம் எனலாமா (என்று சொல்லலாமா)? அல்லது அந்த குறியீடே (அடையாளமே) தேசம் என்று கூறலாமா? அந்த குறியீடு (அடையாளம்) எப்படி அந்த அரசாங்கத்தை புரிந்து கொள்ள உதவுகிறதோ அப்படித்தான் மேலே இருக்கின்ற மனிதன் பார்க்கின்ற கிரகங்கள். அந்த கிரகங்களே அந்த கிரகங்களுக்கு உரிய அந்த தேவர்கள் என்று எண்ணுதல் (நினைப்பது) கூடாது.

சூரிய பகவான் என்று பார்க்கும் பொழுது சூரிய பகவான் என்கிற நிலையில் இருக்கக் கூடிய தேவன் தனித்து ஒரு இடத்தில் இருந்து தவம் செய்து கொண்டு இருப்பான். அவனுடைய இலச்சினை (குறியீடு / அடையாளம்) தான் மனிதன் பார்க்கின்ற சூரியன். அங்கே சோமன் எனப்படும் சந்திர பகவான் ஒரிடத்தில் இருந்து தனித்து தவத்தில் இருக்கின்றான். அந்த சந்திரனின் இலச்சினை (குறியீடு / அடையாளம்) தான் வானிலே உலா வரும் நிலவு ஆகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மனிதன் செய்கின்ற பாவ புண்ணியத்தின் அடிப்படையிலே அவன் வாழ்க்கையில் இவை இவை நடக்க வேண்டும், இப்படியெல்லாம் சம்பவம் நிகழ வேண்டும் என்பதை இறைவன் தீர்மானித்து அதற்கு ஏற்ற ஒரு சூழலில் அந்த ஆத்மாவை மறு பிறவியில் பிறக்க வைக்கின்றான். அப்போது எந்தெந்த கிரகங்கள் எப்படியெப்படி இருந்தால் அந்த வாழ்க்கையில் அந்த மனிதன் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப அந்த நிலைகள் ஏற்படும் என்பதற்கு இணங்க அந்த கிரக நிலையிலே அங்கு அந்த குழந்தை பிறக்கிறது. அடுத்ததாக விதி விதித்தது விதித்ததுதான் அதிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது (முடியாது) என்பது நிரந்தரமான உண்மை. ஆனால் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் தானே? எனவே இறைவனே அந்த விதிக்குள் விதியை வைத்து ஓரளவு தன்னை உணர்ந்து இனி நல்லதை எண்ணுவேன் நல்லதை செய்வேன் என்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வேன் என்று சாத்வீகமாக (சாந்தமாக / அமைதியாக) வாழக்கூடிய மனிதர்களுக்கு சில சலுகைகளை காட்டுகின்றான்.

எப்படி என்றால் இந்த பூவுலகிலே (பூமியிலே) தவறு செய்பவர்களை தண்டிக்க சிறைக்கூடம் இருக்கிறது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு ஒருவன் ஒரு தவறு செய்து விடுகிறான் அவனுக்கு சிறைச் சாலையிலே சில ஆண்டுகள் இருக்கும் படியான தண்டனை கிடைக்கிறது. ஆனால் அங்கு சென்று அவன் மனம் வருந்தி இனி ஒழுங்காக வாழ வேண்டும் என்று திருந்தி அவன் அங்கு இட்ட பணிகளை நேர்மையாக செய்கிறான். அமைதியாக வாழ்கிறான் என்றால் அவனின் நன்னடத்தை காரணமாக அவனுக்கு விதிக்கப்பட்ட அந்த அத்தனை ஆண்டு காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யப் படுகிறான் அல்லவா? வெறும் சுய நலம் அதிகம் உள்ள மனிதனே இவ்வாறெல்லாம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் பொழுது இறைவன் எப்படி நடந்து கொள்வார்? எனவே தான் அறிந்தோ அறியாமலோ சேர்த்த பாவத்தை நீக்கிக் கொள்ள சில வாய்ப்புகளை மனிதனுக்கு தருகிறான். அந்த வாய்ப்புகளின் அடிப்படை தான் தர்மம் அடுத்ததாக பக்தி. ஒரு மனிதனைப் பார்த்து நீ முடியாத ஏழைக்கு உதவி செய் என்றால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனம் பலருக்கு இருக்காது. ஆனால் இறைவனுக்கு அபிஷேகம் செய் என்றால் அவன் சந்தோஷமாக செய்வான். இறைவனுக்கு தீபம் ஏற்று என்றால் செய்வான். ஏனென்றால் அவன் வளர்ந்த விதம் வளர்ந்த சூழல் அவன் வாசித்த புத்தகங்கள் அவ்வாறு அவனுக்கு போதிக்கப் (சொல்லிக் கொடுக்கப்) பட்டு இருக்கிறது. இல்லை என்றால் அவன் விதி அவ்வாறு இருக்கின்றது. அவன் எண்ணுகிறான் இறைவனுக்கு நேரடியாக நம் பிரார்த்தனை செல்கிறது நம் கஷ்டம் நீங்கும் என்று. எனவே உற்சாகமாக தீபம் ஏற்றுகிறான். எப்படியாவது ஒரு மனிதனை பண்படுத்த (பக்குவப் படுத்த) வேண்டும் என்பதற்காகத் தான் பல்வேறு விதமான வழிபாடுகள் ஆரம்ப நிலையில் மகான்களால் கூறப்படுகின்றன. உண்மையில் பக்குவப்பட்டு விட்டால் புற (வெளியில் செய்கிற) சடங்குகள் எதுவும் அவசியம் இல்லை. ஆனால் பக்குவப்படும் வரை எல்லா சடங்குகளும் தேவை.

ஆரம்ப நிலை குழந்தைக்கு விரல் விட்டு தான் கணிதம் (கணக்கு) சொல்லித் தர வேண்டும். வளர்ந்த பிறகு அது மனக் கணக்காக கூட போடலாம். எடுத்த எடுப்பிலேயே மனக் கணக்கை போதிக்க (சொல்லித் தர) இயலாது. எனவே நீ தீபம் ஏற்று. நீ அபிஷேகம் செய் என்றெல்லாம் போதி (சொல்லிக் கொடுத்து) ஒருத்தன் செய்து செய்து மெல்ல மெல்ல அவனுக்குள் சில மன முதிர்ச்சியை ஏற்படுத்தி பிறகு தான் தத்துவ ரீதியான (சார்ந்த) ஆன்மீக விஷயங்களை போதிக்க (சொல்லிக் கொடுக்க) வேண்டும். எனவே இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருக்கிறது. இவை எல்லாம் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. கூடுமான வரை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் குழப்பங்கள் அகன்று (நீங்கி) விடும். ஒரு தீபம் ஏற்ற ஒரு மனிதன் எண்ணுகிறான். அப்பொழுது அவன் என்னென்ன செய்ய வேண்டும்? தீபத்திற்கு உண்டான மண் அகல் விளக்கை வாங்க வேண்டும். அதன் மூலம் அந்த விளக்கை தயாரிக்கின்ற குடும்பம் பிழைக்கிறது. பிறகு அதில் எண்ணையோ நெய்யோ வாங்க வேண்டும். அதன் மூலம் ஒரு குடும்பம் பிழைக்கிறது. பிறகு அதிலே திரி பிறகு அதிலே அனலை (நெருப்பை) உற்பத்தி செய்யும் செவ்வகம் (தீப்பெட்டி) இது தொடர்பான தொழில்கள் எல்லாம் நன்றாக வளர்கிறது. ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறையோடு தான் எல்லா சமுதாய இணைப்புகளும் மறைமுகமாக முற்காலத்தில் பிணைக்கப் பட்டு இருக்கின்றன.

நன்றாக கவனிக்க வேண்டும் அனல் (வெப்பம்) தகிக்கும் கோடை (வெயில்) காலத்தில் தான் இங்கே தென் பகுதியில் குறிப்பாக தமிழகத்திலே நிறைய திருவிழாக்கள் எல்லாம் நடக்கும். ஏனென்றால் விவசாயம் இராது (இருக்காது). அக்காலத்திலே மனிதர்கள் இல்லத்திலே (வீட்டிலேயே) முடங்கி கிடப்பார்கள். எனவே அவர்களை அந்த பகுதியை விட்டு வேறு பகுதிக்கு அழைப்பதற்கு இருக்கின்ற ஒரே வழி இறை இறை தொடர்பான விஷயங்கள் தான். எனவே தான் அது போன்ற விழாக்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன. இதிலே இடை செருகல்களும் (பின்னால் சேர்க்கப் பட்ட மூட நம்பிக்கைகளும்) மனிதனின் சுய நலமும் மரணங்களும் புகுந்து விட்டன என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதற்காக ஏற்படுத்தப்பட்ட முறையே தவறு என்று எண்ணி விடக் கூடாது. எனவே எதை செய்தாலும் அதை அர்த்தமுள்ள சடங்காக பார்க்க கற்றுக் கொண்டு விட்டால் கட்டாயம் அதன் மூலம் நல்ல பலன் உண்டு. எடுத்த எடுப்பிலேயே பத்மாசனம் இட்டு (போட்டு) அமர் (உட்கார்). புருவ மத்தியை (நடுவை) கவனி. மூலாதாரத்தில் முடங்கி கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பு என்றால் அது எத்தனை பேருக்கு சாத்தியம் (கை வரும்)? எனவே மிக எளிய வழி இறை நாமத்தை ஜெபிப்பது. ஆலயம் (கோவில்) தோறும் செல்வது. தான் பாடுபட்டு நேர்மையாக சேர்த்த செல்வத்தை தனக்காக மட்டும் வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் பயன்படும் வண்ணம் (முறையில்) நற் செயலை ஆற்றுவது (நல்ல செயல்களை செய்வது) இதன் மூலம் ஒரு மனிதனின் பாவ கர்மாக்கள் படிப்படியாக குறைகிறது. பாவம் குறைய குறைய முதலில் மனிதனை விட்டு ஐயம் (சந்தேகம்) அகலும் (நீங்கும்). எல்லாம் ஒன்று தான் என்கிற நிலை வரும். இறைவன் என்பது என்ன எப்படி அதைப் புரிந்து கொள்ளக் கூடிய சூழல் என்ன எப்படி என்பது எல்லாம் விளங்கும். அதன் மூலம் இறைவனை அறிந்து கொண்டு அவனை அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆகவே இதையெல்லாம் செய்வது நம்மை நல் வழிப் படுத்தி இறைவனிடம் சென்று சேர்க்கும்.

சிவனின் ஜடாமுடி

மல்லிகைப்பூ வச்சு முல்லைப்பூ செவ்வந்திப்பூ கொன்றை அப்புறம் தாழம்பூ பட்டை என்று பல பூக்களால் சிவனுக்கு சிகை அலங்காராம் இருக்கும் இங்கு நாகத்தை ஜடையா வைத்து சிகை அலங்காரம் பின்னப்பட்டிருக்கிறது. இடம்: விழுப்புரம் மாவட்டம்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 506

கேள்வி: தக்க குருவை அடைவதற்கான வழியை தெரிவிக்க வேண்டும்?

இறைவன் அருளால் தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். சிலர் வந்து கேட்பார்கள் என் குரு யார்? எங்கிருக்கிறார்? எந்த குருவை நான் பின்பற்ற வேண்டும்? என்றெல்லாம் கூட கேட்பதுண்டு. நாங்கள் கூறுவது என்னவென்றால் ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களை போதிக்கின்ற எல்லோருமே குருமார்களே. ஒவ்வொரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ள உதவினால் அதுவும் குருதான். எனவே நாங்கள் போதுவாகக் கூறுவது என்னவென்றால் குருவைத் தேடி நல்ல சீடர்கள் அலையக்கூடாது. சீடனை தேடித்தான் குரு வரவேண்டு்ம். அந்த அளவிற்கு அந்த சிஷ்யன் நடந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ஆழ்வார்களின் கதையை நினைவூட்டிக் கொண்டால் நன்றாகவே புரியும். அந்த புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் கொண்டால் மற்றவை தானாக விளங்கும்.

பாரிஜாத மலர்

தேவேந்திரன் ஆட்சி செய்யும் தேவலோகத்தில் இருக்கும் சிறப்புமிக்க மலர்களில் ஒன்று பாரிஜாதம். இதனை பவளமல்லி என்றும் அழைப்பார்கள். இந்த மரத்தில் இருந்து கிடைத்த ஒரு மலரை நாரதர் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக துவாரகைக்கு வந்தார். அங்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணரிடம் தான் கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கொடுத்தார் நாரதர். அதனை பெற்றுக் கொண்ட கிருஷ்ணர் அந்த மலரை தன்னுடைய மனைவியரில் ஒருவரான சத்தியபாமா கேட்டுக் கொண்டதினால் அவரிடம் அளித்தார். இதைக் கண்ட நாரதர் உடனடியாக அரண்மனையின் மற்றொரு பாகத்தில் இருந்த ருக்மணியிடம் சென்று சத்தியபாமாவிற்கு தேவலோக மலரான பாரிஜாதத்தை கிருஷ்ணர் கொடுத்த விவரத்தை சொன்னார். இதனால் கோபம் கொண்ட ருக்மணி அரண்மனை காவலர்கள் மூலமாக தன்னை வந்து சந்திக்கும்படி கிருஷ்ணருக்கு தகவல் அனுப்பினார். ருக்மணி இருக்கும் இடத்திற்கு வந்த கிருஷ்ணரிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார் ருக்மணி.

நாரதர் கொண்டு வந்த பாரிஜாத மலரால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி வருந்தினார். கிருஷ்ணர். அவர் எவ்வளவு சமாதானம் செய்தும் ருக்மணி கோபம் குறைய வில்லை. சத்தியபாமாவிற்கு பாரிஜாத மலரைக் கொடுத்தீர்கள். எனக்கு அந்த மரமே வேண்டும் என்று கேட்டாள். இதையடுத்து பாரிஜாத மரத்தை கிருஷ்ணர் இந்திரனிடம் கேட்டார். ஆனால் இந்திரன் தரவில்லை. இதனால் போர் புரிந்து பாரிஜாத மரத்தை துவாரகைக்கு கொண்டு வந்தார் கிருஷ்ணர். பின்னர் அந்த மரத்தை ருக்மணியின் இல்லத்தின் நட்டுவைத்தார். ஆனால் அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் அருகில் இருந்த சத்தியபாமாவின் வீட்டிற்குள்தான் உதிர்ந்து விழுந்தன. இதனைக் கண்ட ருக்மணி கிருஷ்ணரிடம் பூ ஏன் இங்கு விழவில்லை என்று காரணம் கேட்டார். அதற்கு கிருஷ்ணர் நீ கேட்டது பாரிஜாத மரத்தைத்தான். பூக்களை அல்ல. சத்தியபாமா கேட்டது பூ மட்டும் தான். பூ கேட்ட அவளுக்கு பூவும் மரம் கேட்ட உனக்கு மரமும் கிடைத்தது என்றார்.

பாரிஜாத மரத்தின் கீழ் கிருஷ்ணரும் சத்தியபாமாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வு சிற்பம் தாய்லாந்தில் உள்ள சத்திய சரணாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிம்மவாகினி

பாலா வம்சத்தைச் சேர்ந்த துர்காதேவி சிம்மவாகினியாக அருள்பாலிக்கும் கற்சிலை தற்போது நேபாளத்தில் உள்ள காத்மாண்டில் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.