ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 699

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

எப்பொழுதுமே புராண கதைகளை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. சூரிய பகவான் ஆத்மகாரகன் என்று ஜாதகத்திலே கூறப்படுகின்ற ஒரு கிரகம் அதே சமயம் ஆத்மம் எனப்படும் ஞானத்தையும் தெய்வீக விஷயத்தையும் கூட அது மறைமுகமாக குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இடத்திலே மனம் ஓரிடத்தில் அடங்கினால்தான் எதையும் கற்க இயலும். அதே சமயம் மெய்ஞானம் ஆன்மீகம் போன்ற விஷயங்கள் எல்லாம் உலகியல் விஷயங்கள் போல உடனடியான நன்மைகளையும் சுகத்தையும் மனிதனுக்கு வெளிப்படையாக புரிவதுபோல் தராததால் அதை ஆர்வம் கொண்டு கற்க ஒரு மனிதன் முயன்றாலும் அவன் மனம் ஓரிடத்தில் அடங்காததால் அங்கும் இங்கும் அலையும். அல்லது அந்த ஆன்மீக விஷயங்கள் அவனை அலைக் கழிக்கும். அந்த அலைக் கழிக்கின்ற விஷயங்களுக்கு இடையே அலைகள் மேலே ஏறி கீழே விழுந்து என்னதான் நாவாயை தூக்கிவிட்டாலும் அந்த நாவாயானது திடமாக ஆழியில் செல்வதுபோல ஒரு ஆத்மஞான தத்துவத்தையும் மெய்யான வேதங்களையும் கற்க வேண்டுமென்றால் பல்வேறு விதமான நிலைக்கு தன்னை ஒரு மனிதன் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வழியில் சிந்தித்துப் பார்த்தால் குருவானவர் எதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் அந்த விஷயம் பின்னர். ஆனால் கற்றுக் கொள்வதற்கு உண்டான தளத்தை அவர் முதலில் எதிர்பார்ப்பார்.

முற்காலத்தில் குருவானவர் வேதங்கள் கற்க வருகின்ற மாணாக்கனிடம் விதவிதமான சோதனைகளையெல்லாம் தந்து அவற்றில் அவன் தேர்ந்த பிறகுதான் வேதம் கற்றுக் கொள்ளவோ அல்லது அவன் எந்த வித்தைக்காக வந்தானோ அந்த வித்தையை போதிக்க அனுமதிப்பார். அப்படியொரு சோதனைதான் ஒரு மாணாக்கனை அலைக்கழித்தல் என்பது. அப்படி அலைந்து திரிந்து சோர்ந்து போகாமல் எந்த நிலையிலும் விடாப்பிடியாக நான் வேதங்களை வேத சூத்திரங்களை அந்த நுட்பமான விஷயங்களை கற்றுக் கொண்டே தீருவேன் என்றால் நீ இங்கு வா நீ அங்கு வா நீ இந்த சூழலில் இன்று வராதே. நீ நாளை வா என்று கூறும்பொழுது அந்த அலைக்கழித்தலிலே மனம் சோர்ந்து போகாமல் மேலும் மேலும் ஆர்வம் அதிகரிக்கிறதா? என்று பார்த்து கற்றுக் கொடுப்பார். அப்படியொரு சோதனைதான் நான் ஓடிக்கொண்டே இருப்பேன். என் பின்னால் என் வேகத்திற்கு ஈடுகொடுத்து நீ வருவாயா? என்று ஒரு பொருள். அதற்காக இந்த சூரியன் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த சூரியன் பின்னால் வா என்று நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. அப்படிப் பார்த்தாலும் சூரியன் இருக்கும் இடத்தில்தானே இருக்கிறது. பூமிதானே சுற்றுகிறது என்று மனித விஞ்ஞானம் கூறுகிறது. எனவே இதை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் ஏற்புடையது அல்ல.

சட்டைநாதர்

பைரவர்களின் தலைமையை ஏற்றவர். இவருக்கு சட்டைநாதர் என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடது கரத்தில் கபத்தை வைத்திருக்கிறார். இடம் குற்றம்பொருத்தநாதர் கோவில் தலைஞாயிறு திருகருப்பறியலூர் நாகை மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 698

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையை பெறாத வரையில் ஒரு மனிதனால் மெய்யான மெய் இன்பத்தை பெற இயலாது. எமக்கு இறைவனின் கருணை தேவையில்லை. இந்த உலகில் வாழ வேண்டிய சகல வசதிகளும் இருந்தால் போதும் என்றுதான் பல மனிதர்கள் வாழ்கிறார்கள். இல்லையென்றால் இறைவனுக்கு பிடிக்காத அனைத்து குறுக்கு வழிகளையும் ஒரு மனிதன் கையாளுவானா? ஆலயம் செல்வதும் பாசுரங்களை ஓதுவதும் பக்திப் பழமாக தன்னைக் காட்டிக் கொள்வதும் மட்டும் இறைவனுக்கு பிடித்த விஷயமா? உண்மையான மனித நேயத்தை மறந்துவிட்ட பக்திக்கு என்றும் இறைவன் செவி சாய்க்க மாட்டான். பரோபகார சிந்தனை இல்லாத பக்தியை இறைவனோ மகான்களோ ஏற்றுக் கொள்வதில்லை. மெய்யான மெய் உணர்வு பாவங்கள் செய்யாத மன நிலை இவைகளை வளர்த்துக் கொள்ளாதவரை ஒரு மனிதனால் மெய்யான மெய் ஞானத்தை நோக்கி மெய்யாகவே நடைபோட இயலாது. எனவே விளக்கங்களை எத்தனை விதமான கோணங்களில் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் இல்லை.

இன்னும் கூறப்போனால் சித்தர்களை நாடுவதும் சித்தர்களிடம் வாக்குகளைக் கேட்பதும் கூட பெரும்பாலான மனிதர்கள் எப்படிப்பட்ட மன நிலையில் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் தன்னைப் புகழ வேண்டும் அல்லது தன் பெயரை நியாயப்படுத்தி தனக்கு ஆதரவாக சித்தர்கள் இருக்க வேண்டும். இன்னொன்று மனிதனிடம் இருக்கக் கூடிய உடனடியாக விலக்கப்பட வேண்டிய குணம் என்னவென்றால் உண்மையான ஒரு நல்ல செயலை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தே ஒவ்வொன்றையும் செய்யப் பழகுகிறான். இதை ஆரம்ப நிலையில் தவறு என்று கூற இயலாது. ஒரு குழந்தைத்தனமான ஆசை. எனவே அதை மன்னிக்கலாம். ஆனால் வளர வளர மற்றவர்கள் அங்கீகாரத்திற்காகவா ஒரு நல்ல செயலை செய்ய வேண்டும்? உண்மையாகவே வாஸ்தவமாகவே நல்ல செயலை செய்யக்கூடாதா?

இதுபோல் நிலையிலே தான் இறைவனை பார்த்திருக்கிறேன் தரிசித்திருக்கிறேன் என்பதல்ல பெருமை. மனிதனுக்கு தான் இறையை உணர்ந்ததையோ இறையை பார்த்ததையோ மற்றவர்கள் புரிந்துகொண்டு தன்னை மதிக்க வேண்டும் என்ற நிலையில்தான் மனிதனுக்கு குழப்பமே ஏற்படுகிறது. தனக்கு இறைவனின் பரிபூரண கருணை கடாட்சம் உண்டு என்பதை தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் உணர்ந்து தன்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பொழுது அல்லது அப்படி மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தன்னுடைய செயல் தன்னுடைய வாழ்க்கை நிலை இருக்க வேண்டும் என்றுதான் இறைவனிடம் மனிதன் எப்பொழுதுமே எதிர்பார்ப்பை வைத்திருக்கிறான். அப்படியில்லாத எந்தவொரு இறை தத்துவத்தையும் எந்த மெய்ஞான விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள மனிதன் தயாராக இல்லை.

ஒன்று ஆன்மீகமோ இறை வழிபாடோ உலகியல் ரீதியான வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் அல்லது இந்த மனிதன் இறையருளைப் பெற்றிருக்கிறான் என்று ஒரு குறிப்பிட்ட இனமோ சமுதாயமோ பல மனிதர்களோ அதற்கு பொறுப்பேற்று முன்னுரிமை தரவேண்டும். இப்படியில்லாத நிலையில் ஒருவன் இறை வழிபாட்டையோ வழிமுறைகளையோ விரும்புவதில்லை. உண்மையில் இறைவன் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் ஞானியர்கள் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் மனிதர்கள் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் நான் சத்தியத்தைதான் பேசுவேன். நான் என்னால் முடிந்த தர்மத்தை செய்து கொண்டேயிருப்பேன். நான் சுயநலம் இல்லாமல் வாழ்வேன். நான் யார் மனதையும் புண்படுத்த மாட்டேன். என் வரையில் என் கடமைகளை ஒழுங்காக செய்வேன் என் கஷ்டங்களுக்கு யாரையும் குறை கூறமாட்டேன். என்னுடைய இயலாமைக்கு என் வினைப்பயன் காரணம் அல்லது என்னிடம் இருக்கக்கூடிய குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் நானே பொறுப்பு என்று பலர் முன்னால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கக் கூடிய மன நிலை வராதவரை மனிதனுக்கு மெய் ஞானம் என்பது சித்திப்பது கடினம்.

எனவே உயர்ந்த கருத்துக்களையும் உயர்ந்த ஞான விஷயங்களையும் புரிந்து கொள்ள மனிதனுக்கு முதலில் பாவங்கள் குறைந்திருக்க வேண்டும். பாவங்கள் குறையாத நிலையில் ஒருவன் ஆன்மீகத்தில் இருக்கலாம். ஆனால் அது மூடத்தனமான ஆன்மீகமாகத்தான் இருக்குமே தவிர அறிவில் சிறந்த ஆன்மீகமாக இருக்க வாய்ப்பில்லை. அப்பேற்பட்ட மனிதனுக்கு போதனை என்பதைவிட முதலில் பாவத்தைக் குறைப்பதற்குண்டான பக்தி வழியையும் சத்திய வழியையும் தர்ம வழியையும்தான் காட்ட வேண்டும். தர்மத்தால் தல யாத்திரையால் அன்றாடம் செய்யும் பிரார்த்தனையால் ஒரு மனிதன்தான் பிறவிகள் தோறும் சேர்த்த பாவங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எங்கே பாவங்கள் குறைகிறதோ அங்குதான் மெய்யான மெய்யறிவு துளிர்விடும். இல்லையென்றால் அறியாமை தொடர்ந்து கொண்டே இருக்கும். அறியாமை மூடத்தனம் நிறைந்த ஆனால் இறைவனை வணங்கக் கூடிய மனிதனிடம் தொடர்பு வைத்துக் கொள்வதும் விவாதம் செய்வதும் அப்படி செய்கின்ற மனிதர்களுக்குதான் துன்பத்தைத் தருமேயன்றி வேறு எந்த நற்பலனையும் தராது. இது போன்ற மனிதர்களிடமிருந்து உண்மையாக மெய் ஞானத்தை தேடுகின்ற மற்ற மனிதர்கள் சற்றே விலகியிருக்க பழக வேண்டும். எதிர்வாதம் செய்யாமல் மௌனம் காக்க பழக வேண்டும். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் ஆன்மீகமும் புரியும். இதுபோல் உலகியலும் புரியும்.

சண்டேசர்

சிவபெருமான் சண்டேச அனுக்கிரக மூர்த்தியாக வந்து விசாரசருமருக்கு திருத்தொண்டர்களின் தலைவர் பதவியான சண்டேசுர பதவியை கொடுத்தருளி தனது திருமுடியிலுள்ள கொன்றை மலரை எடுத்து விசாரசருமருக்குச் சூடி அருளினார். சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர் சண்டிகேசுவர் என்றும் அழைக்கப்படுகிறார். இடம் ஸ்ரீராமேஸ்வர கோவில் நரசமங்கலம் சாமராஜ்நகர் தாலுக்கா கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 697

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் எத்தனைதான் விளக்கங்களை மனித மன நிலைக்கு ஏற்றாற்போல் நாங்கள் இறைவனின் அருளைக் கொண்டு இயம்பினாலும் இதுபோல் மனித மனம் பக்குவம் பெருந்தன்மை அடையாத வரையில் மனித மனம் சுயநலத்தை விடாத வரையில் மனித மனம் பிற மனிதர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத வரையில் நாங்கள் எத்தனை நுணுக்கமாக விளக்கங்களை எது குறித்து கூறினாலும் மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான் அல்லது ஏற்றுக் கொண்டாலும் அதனை புரிந்து கொள்ள மாட்டான். புரிந்து கொண்டாலும் அதை காட்டிக் கொள்ள மாட்டான். ஏன்? நல்லதை நல்ல செயல்களை நல்ல குணங்களை புரிந்து கொண்டதை போல் காட்டிக் கொண்டாலே அதற்கேற்றாற்போல் நல்லவனாக வாழ வேண்டும். நல்லவனாக வாழ்ந்தால் உடனடியாக நன்மை ஏதும் கிடையாது. நிறைய மன வேதனைகளை சந்திக்க வேண்டும். எனவே எதற்கும் குதர்க்கமாகவே எடுத்துக் கொண்டு பிறரை குற்றம் சாட்டியே பழகி விட்ட மனிதனுக்கு தன்னை போல் பிறர் தன் உணர்வு போல்தான் பிறருக்கும் என்ற பரந்த பெருநோக்கு என்று வருகிறதோ அன்றுதான் இறைவனின் அருள் கடாட்சமே கிட்டும் என்பது மறந்து போய் விடுகிறது. எனவே தான் என்கிற தன் உணர்வு தன்முனைப்பு ஆதிக்க உணர்வு இவையெல்லாம் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் வரையிலும் இறைவனின் பரிபூரண கடாட்சத்தை பெறுவது என்பது கடினம்.

சக்தி பீடம் 12. மங்களாம்பிகை – கும்பகோணம்

சக்தி பீடத்தில் 12 ஆவது கோயில் மங்களாம்பிகை கோயிலாகும். இக்கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மந்திரிணி சக்தி பீடமாகும். அம்பாளின் உடற்பாகம் 51 சக்தி வடிவ பாகங்களாக 51 தலங்களில் காட்சியளிக்கின்றன. இதில 50 தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள் 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள். கோயில் விமானம் மங்கள விமானம். இறைவி மங்களாம்பிகை. வினாயகர் மங்கள விநாயகர். தீர்த்தம் மங்கள தீர்த்தம். புராணபெயர் திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. ஆகவே இத்தலம் பஞ்ச மங்கள சேத்ரம் எனப்படுகிறது.

இறைவியின் பெயர் மங்களாம்பிகை ஆகும். மந்திரபீட நலத்தாள் என்ற பெயரும் உள்ளது. தேவி விஷ்ணுவைப் போல ஒரு கையை தொடையில் வைத்து மங்களத்தை பொழிகிறாள். மங்களாம்பிகை மந்திர சக்தி நிரம்பியவள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு மங்களத்தை அருளுகின்றாள் ஆகையால் மங்களநாயகி என்றும் சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும் தம் திருவடிகளை சரணடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர் பெற்றாள். திருஞானசம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப் போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால் மொத்தம் 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருநாமமும் பெறுகிறாள். மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். அம்பாளின் வலது கையில் சாத்திய தாலிக் கயிறுகளை பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஊர் கும்பகோணம். புராண பெயர் திருக்குடமூக்கு திருமங்களக்குடி. தலவிருட்சம் வன்னி.

தீர்த்தம் மகாமகம் குளம் பொற்றாமரை தீர்த்தம் வருண தீர்த்தம் காஸ்யப தீர்த்தம் சக்கர தீர்த்தம் மாதங்க தீர்த்தம் மற்றும் பகவத் தீர்த்தம் (காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்நானத் தலங்கள்) என கோயிலுக்கு வெளியே ஏழு தீர்த்தங்கள் உள்ளது. மங்கள குள தீர்த்தம் நாக தீர்த்தம் குர தீர்த்தம் ஆகிய மூன்று கிணறுகள் மற்றும் சந்திர தீர்த்தம் சூரிய தீர்த்தம் கௌதம தீர்த்தம் மற்றும் வராக தீர்த்தம் ஆகிய நான்கு குளங்களும் கோயிலுக்குள் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் சாரங்கபாணி கோவிலுக்கும் நடுவில் உள்ளது.

கும்பகோணம் ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது. இத்திருவிழாவின் போது கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி காவிரி குமரி பயோடினி சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுகின்றனர். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும் அவரைச் சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத் திருவிழாவும் சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கிமீ தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம் ஆனியில் திருமஞ்சனம் ஆடியில் பதினெட்டாம் பெருக்கு ஆடிப்பூரம் பங்குனித் திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கோயில் தெய்வங்களை ஏற்றிச் செல்வதற்காக வெள்ளி முலாம் பூசப்பட்ட ஐந்து தேர்கள் கோயிலில் உள்ளன.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 89 வது தேவாரத்தலம் இக்கோயில் ஆகும். மூலவர் சிவலிங்க வடிவில் ஆதிகும்பேசுவரர் அமுதேசுவரர் குழகர் கற்பகநாதேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். இங்கு மூலவருக்கு அபிசேகம் கிடையாது. பௌர்ணமி நாட்களில் மட்டும் புனுகு சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. உலகம் பிரளய காலத்தில் அழிந்த போது உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான் பிரம்மா மூலம் படைப்புக் கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். அந்த கும்பமானது பிரளய காலம் முடிந்ததும் உலகம் முழுவதும் நீரால் சூழ்ந்திருந்த போது கும்பமானது இத்தலத்தில் ஒதுங்கியதால் இந்த ஊருக்கு கும்பகோணம் என்று பெயர் ஏற்பட்டது. இறைவன் கும்பேஸ்வரர் என்று பெயர் பெற்றார். நவக்கிரகங்கள் எருக்க இலையில் தயிர்சாதம் படைத்து சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு படைக்கின்றனர்.

இராஜகோபுரம் வழியாக நுழைந்து நீண்ட மண்டபத்தை கடந்தால் பலி பீடம் கொடி மரம் தொடர்ந்து நந்தி தேவர் உள்ளார். முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சப்த மாதர்கள் காமதேனு பவலிங்கம் சர்வ லிங்கம் ஈசான லிங்கம் பசுபதி லிங்கம் ருத்ர லிங்கம் உக்ர லிங்கம் பீம லிங்கம் மகாலிங்கம் தட்சிணாமூர்த்தி சற்று தள்ளி வலஞ்சுழி விநாயகர் பிட்சாடனர் முருகன் அட்சயலிங்கம் சகஸ்ரலிங்கம் அன்னபூரணி கஜலட்சுமி மகாலட்சுமி கோஷ்டத்திலுள்ள பிரம்மா சரஸ்வதி அஷ்ட புஜ துர்கை நவநீத விநாயகர் கிராத மூர்த்தி பைரவர் கால பைரவர் ஜுரகேஸ்வரர் சாஸ்தா மகான் கோவிந்த தீட்சிதர் நாகாம்பாள் ஆகியோர் உள்ளனர். நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் ஆதி விநாயகர் எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகத்துடன் ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் சன்னதியிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.

கோயிலில் வேடமூர்த்திக்கு சன்னதி உள்ளது. சிவபெருமான் வேடர் வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இந்த சன்னதி உள்ளது. முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது பிரம்மா தனது படைப்புத் தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் இந்த இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே கும்பேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாஇலை தர்ப்பை உறி வில்வம் தேங்காய் பூணூல் முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக் கோயில்களாக விளங்குகின்றன. மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய கோயில் அமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டின் தஞ்சாவூர் நாயக்கர்களின் விஜயநகர ஆட்சியாளர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட பதினாறு தூண்கள் கொண்ட மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்தக் கோயில் பற்றிய புராண கதைச் செய்திகளை காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். இந்திரன் அஷ்டதிக்கு பாலகர்கள் காமதேனு கார்த்தவீரியன் சுவர்ணரோமன் காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்று பாடுகிறார். ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த நாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. புரந்தர தாசர் தனது சந்திரசூடா சிவசங்கர பார்வதி ரமணா பாடலில் கும்பேஸ்வரரைப் போற்றி ஒரு பாடலை இயற்றினார். அப்பாடலில் கும்பபுர வசனு நீனே என்று குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 696

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றென்றும் நலமே விளையும் என்பதனை யாம் இறைவனின் கருணையினாலே எப்பொழுதும் இயம்பிக் கொண்டே இருக்கிறோம். இதுபோல் மனிதர்களோ அறியாமையால் மாயையில் சிக்குண்டு எப்பொழுதுமே பாவங்கள் செய்தே வாழ வேண்டிய நிலையில் இருப்பதனால் பாவங்கள் குறித்து எச்சரிக்கை செய்வதும் இதுவரை எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களில் பலவற்றை நுகர்ந்தும் சிலவற்றை பக்தியினாலும் பரிகாரங்களினாலும் தீர்த்துக் கொள்வதோ குறைத்துக் கொள்வதோ மாற்றிக் கொள்வதோ இதுபோல் முந்தைய பாவங்கள் எது என்று தெரியா விட்டாலும் விளைந்து வரும் துன்பங்களினால் இது பாவங்களின் எதிரொலி என்று மனிதன் சரியாக புரிந்து கொண்டு நிகழ் பிறப்பிலே விழிப்புணர்வோடு வாழ்ந்து பாவங்களை செய்யாமல் இருக்க கடும் பிரயத்தனம் செய்துதான் ஆக வேண்டும். ஒருபுறம் ஆலயம் சென்று இறைவனை வணங்குவதோடு மறுபுறம் வாழ்வியலில் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் சில தவறுகளை செய்துதான் ஆக வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு மனிதர்கள் தவறு மேல் தவறு செய்வதால்தான் பிராயச்சித்தங்கள் கூட பலனளிக்காமல் போய் விடுகிறது. ஒரு பாவத்தை செய்துதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் வந்து விட்டால் அதனை விட அதனை செய்யாமல் எத்தனை இடர் வந்தாலும் மனிதன் தாங்கிக் கொள்ளலாம். இதற்கு வேண்டியது வைராக்யம். பலகீனமான மனது உடையவர்கள்தான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு தவறுகள் செய்து விடுகிறார்கள்,

நாங்கள் ஏன் ஜீவ அருள் ஓலையிலே பெரும்பாலும் மௌனத்தைக் கடைபிடிக்கிறோம்? எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் எம்முன்னே அமர்கின்ற மனிதனின் விதி இடம் தர வேண்டும். வாக்கைக் கூற இறைவன் அனுமதி தரவேண்டும். இதுபோல் சுவடியை ஓதுகின்றவன் நிகழ் பிறப்பிலே எத்தனை உலகியல் துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடம் சுவடிக்கென்று செய்ய வேண்டிய கடமைகளை நாள் தவறாது ஆற்ற வேண்டும். எல்லாவற்றையும் விட வருகின்ற மனிதனுக்கு அவன் விதி இடம் தர வேண்டும் அல்லது மனித ரீதியாக கூற வேண்டுமென்றால் இந்த சுவடி மீது நம்பிக்கையும் ஈடுபாடும் ஈர்ப்பும் இயல்பாகவே இருக்க வேண்டும். எண்ணியது நடந்தால் நம்புவேன் என்பதும் நான் எண்ணியது போல் எதுவும் நடக்கவில்லை என்றால் நம்பமாட்டேன் என்பதும் ஒரு குழந்தைத்தனமான முடிவாகும். எம்மை அணுகினால் தர்மம் செய் ஆலயம் செல் பிரார்த்தனை செய் என்றுதான் எப்பொழுதுமே கூறுவோம். அதைவிட்டு உலகியல் ரீதியாக வெற்றிக்கு வழிகாட்டுவதோ அல்லது உலகியல் ரீதியாக சொத்துக்களை சேர்க்க வழிகாட்டுவதோ அல்லது தனத்தை எவ்வாறெல்லாம் பெருக்குவது என்று வழிகாட்டுவதோ எமது பணியல்ல.

இது பக்குவமில்லாத மனிதர்களுக்கு கயப்பாக (கசப்பாக) இருக்கும். அதனால்தான் பெரும்பாலான மனிதர்களை விதியே அழைத்து சென்றுவிடும். விதி வழி வாழ்வதே மனிதனுக்கு எளிமையாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தான் நேர்மையாக ஈட்டிய பொருளால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் செய்து கொள்ளும் செலவு அனைத்துமே புண்ணியத்தின் கழிவாகும். பொது நலத்திற்காக செலவு செய்யும் அனைத்துமே அது காலமாக இருந்தாலும் தன் உழைப்பாக இருந்தாலும் தன் அறிவாக இருந்தாலும் அறிவால் பெறப்பட்ட செல்வமாக இருந்தாலும் அனைத்தும் புண்ணிய வரவாக இருக்கும்.

பண்டரிபுரம் விட்டலன் ருக்மணி தாயார்

கிருஷ்ணர் இங்கு விட்டலர் விதோபர் பாண்டுரங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்ப்பூர் என்று அழைக்கப்படும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது

மகாராட்டிராவில் புண்டரீகபுரத்தில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். பெற்றோர்க்குச் சேவை செய்யும் புண்டரீகனை ருக்மணிக்கு காட்ட எண்ணிய கிருஷ்ணர் புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றான். அதன்படியே தனது பெற்றோர் சேவையை முடித்துக் கொண்டு புண்டரீகன் அவர்களை வரவேற்று தாங்கள் யார் என்று கேட்டான். அப்போது ருக்மிணி வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைக் கூறினாள்.

புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணர் புன்னகைத்து உன் மாதா பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள் என்றார். நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலமான புண்டரீகபுரம் புண்ணியத் தலமாக விளங்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினான் புண்டரீகன். அவ்வாறே கிருஷ்ணன் இத்தலத்தில் செங்கல் மீது நின்று கொண்டு விட்டலராக காட்சி அளிக்கிறார். மராத்திய மொழியில் விட் என்றால் செங்கல் என்று பொருள். செங்கல் மீது நின்று அருளுகின்றபடியால் கிருஷ்ணருக்கு இத்தலத்தில் விட்டலர் எனப்பெயர் உண்டானது.

கங்காளமூர்த்தி

அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக கங்காள மூர்த்தி வடிவம் வணங்கப்படுகிறது. கங்காளம் என்றால் எலும்பு என்று பொருள். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி ஆகும். கங்காளர் வடிவமும் பிச்சாண்டவர் வடிவமும் சில இடங்களில் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும் அவை வெவ்வேறான வடிவங்களாகும். இடம் கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.

ஊர்த்துவ தாண்டவம்

தில்லைவனத்தில் ஆடல்வல்லான் தமது ஆனந்த தாண்டவத்தினை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திட எண்ணினார். இந்நிலையில் பார்வதி தேவி தமது தற்பெருமையினால் சிவனை நாட்டியப் போட்டிக்கு அழைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆடல்வல்லான் இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தில்லையை விட்டு விலகி அதன் புறப்பகுதியில் வாழ்ந்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையுடன் முனிவர்கள் தேவர்கள் முன்னிலையில் இருவருக்குமிடையே நாட்டியப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓர் கர்ண அமைப்பில் சிவன் தமது காலினை விண்ணை நோக்கி உயர்த்தினார். அந்நிலையில் அது போன்ற ஓர் கர்ணத்தைப் பெண் என்ற நிலையில் பார்வதி தேவியினால் நிறைவேற்ற முடியாததால் தலை குனிந்தார். நிபந்தனைபடி பார்வதி தேவி தில்லையின் புறப்பகுதியில் குடியேறினார் என்பது ஊர்த்துவ தாண்டவம் நடைபெற்ற புராண நிகழ்வாகும். இடம் சௌந்தரராஜப்பெருமாள் கோயில். தாடிக்கொம்பு திண்டுக்கல்.