8-1-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
மனித ஜென்மங்கள் ஏழு என்றும் ஏழு ஜென்மங்கள் முடித்திட பின்பு மனிதனின் நிலை என்ன?
மனித பிறவியை எண்ண இயலாது என்கின்றதை நன்கு உணர்தல் வேண்டும் மண்ணாகி கல்லாகி புல்லாகி என பல பல பிறவிகள் எடுத்து ஜட பொருட்களாக இருக்கும் நிலைகளை தாண்டி மிருக உயிருள்ள அசையும் பிறவிகள் பல எடுத்து பின்பே மானிட நிலை கிடைக்கிறது. பின்பு ஏன் ஏழு ஜென்மங்கள் என்று கூறுகிறார்கள் என்றால் பொதுவாக இது ஏழு நிலைகளை கூறிக்கின்றது. மனிதன் பிறவியிலிருந்து ஓர் நல்ல நிலை அடையும் வரை ஏழு நிலைகளை தாண்டுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதில் பொதுவாக விழிப்பு நிலை, தூக்க நிலை, ஆழ்தூக்க நிலை, இதற்கு மேலான நான்கு நிலைகளும் தாண்டி செல்கின்றோம். இந்நிலைகளை அன்று உள்ள மகான்கள் ஏழு ஜென்மங்கள் என எடுத்துரைத்தனர். ஏழு நிலைகளும் நாம் தாண்டிட ஓர் நல்ல ஆன்மீக ஞான நிலை அடைவோம் என்பதேயாகும். மற்றொரு கருத்தாக சூரியன் பூமி என்கின்ற கோள்கள் அனைத்தும் இருப்பது போல் ஏழு பிரபஞ்சங்கள் உள்ளன. இந்த ஏழு பிரபஞ்சங்களிலும் நாம் பிறவி எடுப்போம் என்கின்ற ஓர் நிலையும் உண்டு. இந்த ஏழும் கடந்த பின்பே முக்தி நிலை கிடைக்கும். எத்தனை பிறவிகள் என நீங்களே கணக்கிட புரிந்து விடும்.