கேள்வி: ஏகன் என்றால் என்ன? ஏகனை அடைய என்ன வழி? அதாவது ஏகனுக்குள் செல்ல என்ன வழி?
இதற்கு விடையானது வினாவைப் போல் எளிதாகவும் கடினமாகவும் உள்ளதாம். ஏனெனில் ஏகன் என்னவென வினாவிட்டால் அதற்கு விடை எளிதாக ஒன்று கூறுவோம். இவ்வொன்று என்பது என்னவென்றால் இது கடினமான விடையும் ஆகின்றது. ஒன்று ஏகம் என்பது பரம்பொருள் பரம்பொருள் என்பது என்னவென வினாவிட்டால் அது சத்தியம் அதுவே தூய்மை அதுவே மாசற்றது என்பதெல்லாம் விளக்கிக் கொண்டே போக இயலும். இருப்பினும் கேள்வி இதல்ல. ஏகனை அடைய என்ன வழி என்பதேயாகின்றது.
ஏகன் எங்கு இருக்கின்றான் என்பதை முதன்மையில் உணர்தல் வேண்டும். ஏகன் அனைத்திலும் உள்ளான் என்பதை உணர்ந்து அத்தகைய ஏகன் நமக்குள்ளும் உள்ளான் என்பதை உறுதியாக நம்புதல் வேண்டும் என்பதே முதல் படியாகின்றது. அந்த உள்ளிருக்கும் ஏகனை அடைதல் வேண்டுமென்றால் நாம் எங்கு செல்ல வேண்டுமென சிந்தித்தால் உள்ளுக்குள் செல்லுதல் வேண்டும் என விடையும் எளிதாக கிடைக்கின்றது. இதுவரைக்கும் எளிதாகவே உள்ளது இதற்கும் மேலாகவே கடினம் எவ்விதம் அடைகின்றது என்பது இதற்கு எளிதான வழிகள் இல்லை என்பதும் இங்கு யாம் எடுத்துரைக்கின்றோம். உள் செல்லுதல் வேண்டும் மனம் முழுமையாக உள்தனில் நிலைத்தல் வேண்டுமென்றல் நம் எண்ணம் வெளியாக செல்லுதலாகாது என்பதே இதற்கு விளக்கமாகின்றது. எண்ணம் வெளியாக செல்லுதல் வேண்டாம் என்றால் கட்டுப்பாடு வேண்டும் என்றும் வெளியாக நாம் கண்பது அநித்யமானது (உண்மையில்லாதது) என்றும் நித்யமாக நிலைப்பது ஏகன் மட்டுமே என்றும் மனதில் உறுதியாக நிறுத்தி இயன்ற அளவிற்கு மனமதை உள் நிறுத்தல் வேண்டும் என்றும் விளக்கமாக இங்கு அளித்தோம்.