கேள்வி: அழிவற்ற பொருள் எது? பஞ்ச பூதங்களுக்கு அழிவில்லையா?
முதலில் பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்வோம். பஞ்ச பூதங்கள் அனைத்தும் உள்ளடங்கியிருக்கும் வரை அப்பொருள் நிலைக்கிறது. பஞ்சபூதங்கள் மனித உடலில் இருக்கும் வரை உயிர் இருக்கின்றது. இவ்வைந்தும் பிரிந்திட அங்கிருக்கும் பொருள் அழிகின்றது. இருப்பினும் பஞ்ச பூதங்கள் ஒன்றை மற்றொன்று அழிக்கும் தன்மையும் கொண்டுள்ளது. குறிப்பாக நீர் அக்னியை அழிக்கின்றது. நீரை அக்னி வற்ற வைக்கின்றது. காற்றால் அக்னி பாதிக்கப்படுகின்றது. வளர்க்கப்படவும் செய்கின்றது. இவ்விதம் ஐந்தும் ஒன்றாக இருக்கும் போது நல் உயிராகவும் பிரிந்தவுடன் அழிவாகிறது. பஞ்சபூதங்கள் ஒன்றை ஒன்று அழிக்கும் தகுதி பெற்றுள்ளது. அழியாப்பொருள் எது என்றால் சந்தேகமின்றி பரம்பொருள் மட்டுமே. பரம்பொருளில் இருந்து எவ்விதம் உயிர்கள் பிரிந்து ஜீவாத்மாக்களாக இருக்கும் பொழுதும் எவ்வித குறையும் இல்லை மேலும் உயிர்கள் அதில் சேரும் பொழுதும் எவ்வதிகரிப்பும் இல்லை. விருப்பு வெருப்பற்ற பரம்பொருளுக்கு எக்காலத்திலும் அழிவில்லை என்பதால் சதாசிவத்தை பரம்பொருள் என்று அழைக்கின்றோம்.
