கேள்வி: பல இடங்களில் பலர் சித்தர்களை நாடி அவர்களை பல கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர்கள் அளித்த விடை தெளிவாகப் புரிவதில்லையே ஏன்?
பொதுவாக சித்தர்களின் பரிபாஷை (பேசும் மொழி) என்பது வேறு ஒரு அகராதியாகின்றது (மொழி இலக்கணம்). பொதுவாக மக்களின் குறை தீர்க்கவோ தவம் செய்யவோ சித்தர்கள் கீழ் இறங்கவில்லை என்பதேயாகும். அவரவர் தம் சுய மார்க்கம் அதாவது இறைவனை அடைவது அவர் நோக்கமாகும். சித்தர்களைக் கண்டு குறை கூறுவோர் தங்களுக்குச் சாதகமாக விடைகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இத்தகைய நிலையில் தொட்டும் தொடாது பட்டும் படாத ஓர் பாஷையில் விடையளிக்கின்றனர். இவ்விடை புரிந்து கொள்கின்றவர்களின் திறமையை பொருத்ததாகின்றதால் இதனை யாம் நம்பிக் கெட்டோம் என்கின்ற மனப்பான்மை வேண்டாம் அன்பர்களே. ஏனெனில் இதில் ஓர் பெரிய அர்த்தம் அடங்கியுள்ளது. சித்தர்கள் கூறுகின்றதில் வருத்தம் காணாது சித்தர்களும் துறவிகளும் ஜோதிடர்கள் அல்ல என்கின்றதை நீங்கள் உணர வேண்டும். சித்தர்கள் ஜோதிடத்தை அறிந்தவர்கள் என்பதில் குழப்பம் வேண்டாம். அதற்கும் மேலான காரியங்களை அறிந்தவர்கள் என்பதிலும் குழப்பம் இல்லை. முற்பிறவி, கர்ம நிலைகள், கர்ம பாக்கிகள், ஜென்மாந்திர பாவங்கள், தோஷங்கள், சாபங்கள், என்பதெல்லாம் அறிந்தவர் ஆவர். இருப்பினும் அவர் அளிக்கக்கூடியது தகுந்த பாத்திரத்தினர்களுக்கே (தகுதி உள்ளவர்களுக்கே). இதுவே உண்மை நிலையாகும். இருப்பினும் விடாது அவர்களை வேண்டிவர தமது நிலைகளை உணர சக்தி உண்டாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அதன்வழி பல நல்காரியங்கள் நடைபெறும் என்பதிலும் குழப்பம் இல்லை. கற்றோர்கள் அருகாமையில் நாம் அமர்ந்திருக்க நாமும் சிறிது கற்றுக் கொள்ளலாம் அல்லவா? இத்தகைய நிலையில் சித்தர்களுடன் பழகும் காலத்தில் நாம் பெறுவது ஞானமாகும் அறிவாகும் அதன்வழி அமைதியும் முன்னேற்றமும் ஆகும்.