கேள்வி: நல்லதோர் விக்னம் தீர்ப்போனை (வினாயகர்) வினாயகர் சதுர்த்தி அன்று மண்ணில் பிம்பம் உண்டாக்கி இதனை பூஜை செய்தபின் சில நாட்கள் கழித்து நீரில் எறிவதும் தசரா காலங்களில் துர்க்கையை மண்ணில் உருவாக்கி பூஜை செய்த பின் நீரில் எறிந்து சமயங்களில் மனிதர்கள் கண்ணீரை விடுகின்றனரே இதன் பொருள் என்ன?
வீட்டில் ஓர் குழந்தை பிறக்க அக்குழந்தை வடிவம் எடுத்ததால் ஆத்மா உண்டு என்று உணர்கிறோம். இது வளர்ந்து படித்து திருமணம் குழந்தைகள் உண்டாகிய பின் இறக்க இதனை சடங்குகளுடன் அக்னியிலோ இல்லை பூமிக்கோ செலுத்துகிறோம். கண்ணீர் தழும்ப திருப்புகின்றோம். இதனை உணர்ந்தால் வினாவுக்கு விடை எளிதாக உணர முடியும். வணங்குவது மூர்த்தியை அல்ல அதைக்குறிக்கும் சக்தியை இதை உணர்த்திடும் வழியாக மூன்று நாள் நன்றாக அதனை பூசித்த பின் சில நாட்கள் கழித்து நீரில் கலந்து விடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றானது அப்பூதமோடு கலந்து விடுகிறது. மண் மண்ணாகி விடுகிறது. இருப்பினும் அச்சக்தி பொதுவாக அங்கு நிரம்பி நிற்கின்றது என அறிந்து கொள்ள வேண்டும். மனிதன் தற்காலிக நிலையை உணர்த்திடவே இச்சடங்குகளை செய்து வருகின்றோம். பஞ்ச பூதங்களில் உருவானது அப்பூதங்களில் கலந்து விடும் என்றும் அதனை ஆட்டுவிக்கின்ற சக்தியானது என்றும் இருக்கும் என்பதை உணர்த்திடவே இத்தகைய ஓர் சிறு நாடகம் நடத்தப்படுகின்றது.