குருநாதர் கருத்துக்கள் #6

மார்க்கங்கள் பல உண்டு இதில் இரண்டு மார்க்கங்களை சேர்த்து செய்தால் ஆகாதா?

ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், யோக மார்க்கம் என்பதெல்லாம் உண்டு. இவையாவும் கலந்தும் சாதனைகள் செய்ய முடியும். இருப்பினும் பக்தி மார்க்கத்துடன் யோக மார்க்கத்தை எப்படி இணைப்பது என்பதெல்லாம் ஓர் பெரும் சர்ச்சை ஆகிறது. பொதுவாக ஓர் மனிதனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு என்னவென ஆராய்தல் வேண்டும். ஒருவன் ஜீவனுடன் (உயிருடன்) இருக்க பிரதானமாக நாம் காண்பது சுவாசமே. சுவாசம் நிற்க மாண்டு (இறந்து) விட்டான் என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இச்சுவாசமே இவ்வுடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இணைப்பு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இது இப்படியிருக்க சுவாசத்தை கவனித்தல் வேண்டும். பொதுவாக சுவாசத்தை உள்ளிழுத்தும் வெளிவிடும் காலத்தில் அதை நிதானமாக உள்ளிழுக்க வேண்டும். இதை விட நிதானமாக வெளிவிடுதல் வேண்டும். சுவாசம் உள்ளிழுக்கும் காலத்தில் ஓர் மந்திரம் சொல்ல காற்றுடன் மந்திரமும் உள் செல்ல பெரும் நன்மைகள் உண்டாகும். இவ்விதமே காற்று வெளி செல்லும் காலத்தில் அம்மந்திரத்தின் மறுபகுதி சொல்ல நன்மை தரும். ஏனெனில் உள் சென்ற காற்று மந்திரத்துடன் வெளிவந்து வியாபிக்கும் (பரவும்). உள்சென்ற காற்று தனக்கு மட்டும் உபயோகமாகியும் வெளி செல்வது மற்றவர்களுக்கும் பயன் கொடுக்கும் என்கின்ற தத்துவம் இதில் பூர்த்தியாகின்றது. இந்நிலையில் சுவாசம் உள்ளிழுக்கும் காலத்தில் ஓங்காரத்தை (ஓம்) மனதிற்குள் உச்சரித்தும் வெளிவிடும் காலத்தில் தன் இஷ்ட தெய்வத்தை கூறுவதும் பெரும் நன்மை அளிக்கும். இதன் வழியாக யோக நிலைகளும் பக்தி மார்க்கமும் ஒன்று கூடும். இதனை கடைபிடித்து வர இச்சுவாசமானது பின்பு அனுநிலையில் நரம்பு நாடிகளில் ஊடுருவ இது பிராணன் என்று அழைக்கப்படுகிறது. படிப்படியாக சுவாசம் வாய் மூக்கு வழியாக மட்டும் அல்லாது சருமத்தில் உள்ள துவாரங்கள் வழியாகவும் பிராணன் (காற்று) உள் சென்று வெளியாகும். இதன் வழியாக கோஷங்கள் உணர்ந்து அதன் பிறகு ஆன்மாவை உணர இயலும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.